மருத்துவர்கள், ஓவியர்கள், மன்னர்கள் என பலரைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.. இப்படி இன்னொருவராக மாறி அவரவர்கள் கோணத்தில் எழுதுவது ஒரு கலை. அவ்வளவு ஏன் .. பெண்ணாக மாறி அவள் உணர்வுகளை சிறப்பாக எழுதும் ஆண்கள் உண்டு,
இருந்தாலும் ஒரு பெண்ணே அவள் உணர்வுகளை எழுதினால் கலைச்செல்வத்துக்கு அது ஒரு கூடுதல் சேர்க்கை.. ஒரு டாக்டர் அல்லது படைவீரர் அல்லது முதல்வர் எழுத்தாளர்களாக இருந்து அவரவர்கள் கேரக்டர்களை எழுதில் புதிதாக ஒரு கோணம் கிடைக்கலாம்.
அந்த வகையில் இணையப் புரட்சியின் விளைவாக புதிதாக எழுத்தாளர்கள் உருவானபோது பெரியதொரு எதிர்பார்ப்பு இருந்தது.
மென்பொருள், மெக்கானிக்கல், மின்னியல், மின்னணுவியல், வியாபாரம் என நூற்றுக்கணக்கான துறைகளில் இருந்து பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், தேசங்களில் வாழும் எழுத்தாளர்கள் உருவானபோது, பல்வேறு களங்கள் பதிவாகும் என்றொரு இனிய எதிர்பார்ப்பு இருந்தது..
அது 20% நிறைவேறியது என்றாலும் பலர் வழக்கமான உருட்டுகள்தான்.
அண்டார்டிக்காவில் வாழ்ந்தாலும் தமிழக அரசியலும், தமிழக பிரச்சனைகளும்தான் கருப்பொருள். சிலர் இந்த எல்லைகளில் சிக்காமல் மானுடம் நோக்கிப் பேசுவதும் உண்டு
இதில் தவறு கிடையாது, ஆனால் பிரத்தியேக அடையாளம் மிஸ் ஆனது.
மஞ்சுநாத் அவர்களின் உடனுறை இடாகினி சிறுகதைத் தொகுப்பு இந்த விதத்தில் ஓர் அற்புதம்
அவரால் மட்டுமே எழுத முடியக்கூடிய களங்கள்.. மருத்துவம், இமயலைப்பயணம் என அவரது பிரத்தியேக அனுபவங்கள் கதைகளாகியுள்ள என்பதால், வேறு யாரையும் நினைவூட்டாத அற்புதமான வாசிப்பு அனுபவம்..
இதில் பின்வரும் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
உதிரும் உடல்
சுயத்தின் மாயப்பிம்பம்
திருவுருத்தி
ஹெப்பாவு
கடைசி நூலகம்
பிரம்ம கமலம்
உயிர் - உடல் - உணர்வு
கரிக்குருவி நூறு
இசிவு
உடனுறை இடாகினி
நிரல் நிறை
உயர்வு நவிற்சி
இவற்றில் உதிரும் உடல் மற்றும் உயிர் - உடல் - உணர்வு ஆகிய கதைகள் யதார்த்தவாதக் கதைகள் எனலாம். இசிவு கதை ஓரளவு இயல்புவாதத்தன்மை கொண்டது. மற்ற அனைத்துக் கதைகளும் குறியீடுகளால் நிரம்பு நம்மை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து ஒரு வித தியான அனுபவத்தை தருகின்றன.
ஒரு ஜென் குரு மரணப் படுக்கையில் இருந்தார். அவரது இறுதி வாசகம் என்னவாக இருக்கும் என பலரும் ஆர்வமாய்க் காத்திருந்தனர்
அவர் கடைசியாக ஒரு ரொட்டித் துண்டு உண்டு கொண்டிருந்தார்.. “ ரொட்டி வெகு இனிமை” என்றார். அவர் உயிர் பிரிந்தது.. அதுதான் அவரது கடைசி வார்த்தை.
அது போன்ற ஒரு அதிர்வை ஏற்படுத்தியது ஒரு கதையின் இந்தக் கடைசி வரி.
திருலோக்கி வெண்ணிறப் பொத்தானைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டான். செவிலியரிடம் “இங்க லெமன் டீ எங்க கிடைக்கும் சிஸ்டர்?" என்றான்.
கதையின் கடைசி வரி என்றல்ல... ஒரு பத்தியின் கடைசி வரிகூட ஒரு ஹைக்கூ கடைசி வரி ட்விஸ்ட்டுடன் இருப்பது இத்தொகுப்பு முழுக்க ரசிக்க வைக்கிறது
உதாரணமாக..
இமயமலை சிதடிப்பூச்சிகள் வித்தியாசமானவை. ஆனந்தக் கூக்குரல் தனது இணைக்கான அழைப்பொலி என்றாலும் கூடவே தனது பதினேழு ஆண்டுகால மௌனத்தின் அனுபவங்களையும் சேர்த்தே கட்டுடைக்கின்றன. பெண் சிதடிப்பூச்சி வெளியிடும் முட்டைகள் யாவும் ஒன்றரை மாதத்தில் பொரிந்துவிடுகின்றன. ஆனாலும் தரையில் விழும் இளம் பூச்சிகள் மண்ணுக்குள் நுழைந்து மரத்தின் வேர் முனைகளில் தங்கி தனக்கான உணவை உண்டபடி வெளியே வராமல் கிட்டத்தட்ட பதிமூன்றிலிருந்து பதினெழு ஆண்டுகள் வரை மௌனத்தில் வாழ்கின்றன.
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மௌனவிரதம் களையும் சிதடிப்பூச்சிகள் தங்களது சக்திகள் முழுவதையும் திரட்டி ஒரு வாரம் முழுவதும் ஆத்ம கானத்தை இடைவிடாது இசைப்பதில் மும்முரமாகின்றன. கூடவே சந்ததிகள் உருவாக்கத்திற்கான செயல்களிலும் வேகமாக ஈடுபடுகின்றன. வாரத்தின் இறுதியில் புகார்கள் இன்றி இறந்தும் போகின்றன.
என்னிடம் ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா?
இதில் உள்ள கதைகள் சில ஒன்றையொன்று நிரப்புவதாக முழுமை செய்வதாக இருப்பது சிறப்பு
உதாரணமாக பாலியல் வன்முறை குறித்துப்பேசும் ஹெப்பாவு
, கரிக்குருவி நூறு ஆகிய கதைகள் வாழ்வின் முழுமையையும் காதலையும் பேசும் நிரல் நிறை உயர்வு நவிற்சி ஆகியவை என சொல்லலாம். அதுபோல கண்ணுக்குத் தெரியாத விசைகளைப் பற்றிப் பேசும் இரு கதைகள் திருவுருத்தி மற்றும் உடனுறை இடாகினி ஆகியவற்றை சென்ற ஆண்டு ( 2024) நான் படித்த கதைகளில் டாப் டென் என்ற இடத்தில் வைப்பேன். அந்த அளவுக்கு ஆழமான கதைகள். நம்முள் உடன் உறைவது எது அதனால் ஏற்படும் விளைவுகள் என இரண்டு கதைகளும் முற்றிலும் வேறுபட்ட நடைகளில் கருப்பொருள்களில் சொல்லிச் செல்வதை அற்புதம் என்றுதான் சொல்ல முடியும்.
கடைசி நூலகம் கதையைப் படிக்கும்போது முரகாமி கதை போல இருந்தது.. என்ன ஒன்று முரகாமி கதைகள் உள்ளீடற்று இருக்கும்.. இக்கதை முரகாமி அளிக்கும் விசித்திர அனுபவத்தை ஆழமான மனித உணர்வுகளுடன் சேர்த்து அளிக்கிறது.
சுயத்தின் மாயப்பிம்பம் மற்றும் பிரம்ம கமலம் ஆகிய கதைகளையும் சேர்த்துப் படிக்கும்போது அதுதரும் திறப்பு அற்புதம்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்
ரசித்த சில வரிகள்
தனஸ்ரீ ராகம்போல் சுயத்தின் ஆழத்திற்கும் விளிம்பிற்கும் மாறி மாறிப் பயணித்துக்கொண்டிருந்தன.
இன்றைக்கு நாள் முழுவதும் சூரியனைக் காணமுடியவில்லை என்றாலும் மங்கிய வெளிச்சம் சித்திரத்தில் உறைந்திருக்கும் வண்ணம்போல் அசைவில்லாத தியானத்திலிருந்தது. காற்றில் கடுங்குளிர் அதிகம் என்பதை மூக்கிலும் கண்களிலும் வழியும் நீர் அறிவுறுத்திக்கொண்டிருந்தது. சிகரங்களில் இருள் கவிழ நேரமாகலாம்
"உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரைப் பார்க்கப்போ பிரம்மச்சரியம் தீட்சையை அங்கதான் வாங்கப்போறேன்.
"வேணாம் தம்பி, வீட்டுக்குப் போ. கங்கா தண் கொடுத்துட்டு சந்தோஷமா வேலையைத் தேடு. ஏதோ ஒன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். நிதானமாயி நிச்சயம் ஏதொவொன்னைக் கத்துக்கலாம். உனக்குக் கொஞ் விபரம் தெரியுது. இருந்தாலும் நீ நினைக்கிற மாதிரி சாதார கிடையாது. உஜ்ஜயினி பக்கம் மட்டும் போயிடாதே. ஒருமு உள்ள நுழைஞ்சிட்ட நீ வெளியே போகவே முடியாது. விடமாட்டாங்க. நீ எங்க தப்பிச்சுப் போனாலும் தே தூக்கிடுவாங்க."