Friday, March 25, 2011

வைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை, பல பதிவர்கள்


வைகோ ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தாலும் அளித்தார்.. நம் பதிவர்கள் கிளை கேள்விகளை எழுப்பி அவரை திக்குமுக்காட வைத்து விட்டனர்..

அவர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்போவதில்லை..  யாராவது பொது நலன் கருதி வேறு யாராவது பதில் அளித்தால்தான் உண்டு... 
பிச்சைகாரன் டாட் பிளாக்ஸ்பாட் காமை விட்டால் வேறு யார் இதை செய்யப்போகிறார்கள்..

இதோ, அவர் பத்திரிக்கை கேள்விக்கு அளித்த பதிலும், பதிவர்களின் கேள்விக்கு ( அவர் சார்பாக நாம் )  அளித்த பதில்களும்  
***************************************************************



1. ''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.


ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.


'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

பதிவர்கள் :

அது எதற்கு படிப்படியாக இத்தனை சுற்று பேச்சு... ஆரம்பத்திலேயே பேச்சை முறித்து இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உங்களுக்கு நேரம் கிடைத்து இருக்குமே?

வைகோ

மதிமுக என்றுமே கூட்டணி தர்மத்தை மீறியதில்லை.. ஒரு கூட்டணியில் இருக்கும்வரை அதற்கு உண்மையாக இருந்து வந்துள்ளது.உதாரணாமாக பிஜெபி கூட்டணியில் அதிமுக, மதிமுக, பாமக எல்லாம் சேர்ந்து இருந்தன வென்றன.. ஒரு கட்டத்தில் அதிமுக பிஜேபி அரசுக்கு ஆதரவை விலக்கிகொண்டது. ஆனால் மதிமுக பாஜகவுடனேயே இருக்க தீர்மானித்தது

எனவே இப்போதும் கூட்டணியை உடைக்க விரும்பாமல் , அதிமுகவுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.. இதனால் இரு கட்சிகளையும் மதிப்பிட மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது..




 
2. ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!


அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். 

அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை.

ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.


சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

பதிவர்கள் கேள்வி :

ஜெ யை பற்றி சிறு குழந்தையும் அறியுமே... நீங்கள் அவருடன் சேரும்போதே இப்படி நேரும் என தெரியாதா?

வைகோ

கட்சியினர் வேண்டுகோளுக்கு இணங்க அந்த முடிவு ஏற்கப்பட்டது... அப்போது இருந்த நிலையில் திமுகவுக்கு செக் வைப்பதே இலக்காக இருந்தது..அந்த இலக்கு நிறைவேற்றப்பட்டது..அப்படி இல்லை என்றால் மதிமுக அன்றே அழிந்திருக்கும் . அப்போது திமுக , மதிமுகவை விழுங்க நினைத்து இருந்தது, விரைவிலேயே நிரூபனம் ஆனதை மறந்து விட கூடாது . 

3. ''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 


''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!


48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. 

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 

'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

பதிவர்கள் கேள்வி

இப்போது இப்படி சொல்லும் நீங்கள், உரிய சீட்டுக்கள் குடுத்து இருந்தால் ஜெ யை பாராட்டி இருப்பீர்கள்.. ஆக, இப்போது சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அர்த்தம் இழக்கின்றனவே?

வைகோ

அந்த அளவுக்கு பக்குவம் பெற்ற தலைவராக , வெற்றி பெறும் நிலையிலும் நிலை மாறாத தலைவராக இருந்து இருந்தால், அவர் கண்டிப்பாக அவர் நல்ல முதல்வராக திகழ்ந்து இருப்பார்... 
ஆனால் அவர் செமி ஃபைனலில்யே தோற்று விட்டார். இதை சீட் பிரச்சினையாக பார்க்க கூடாது.. அவர் தலைமை பண்புக்கு வைக்கப்பட்ட சோதனையாக பார்க்க வேண்டும்..அந்த சோதனையில் அவர் தோற்று விட்டார். 


4. ''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 


''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


பதிவர்கள் கேள்வி : அப்படி சொல்ல முடியாது.. தி மு க வின் நிரந்தர ஓட்டு கொஞ்சம் உண்டு , அதே போல அதிமுகவுக்கும் உண்டு ... மீதி இருக்கற எல்லா எதிர்க்கட்சியும் ஒண்ணு சேர்ந்து ஓட்டே போடாத, போடப்பிடிக்காத அனைவரும் ஒன்று சேர்ந்தா மாற்றம் நிகழுமே?

வைகோ :

அப்படி என்று நிகழ்ந்து இருக்கிறது? எத்தனையோ முறை மூன்றாவது அணி முயற்சிகள் நடந்து, அது ஓட்டு பிளவில்தான் முடிந்து இருக்கிறது என்பதுதானே வரலாறு? 


5. ''தனியாக நிற்பது..?'' 


''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

பதிவர்கள் கேள்வி :

தேர்தலை சந்திக்க துணிவு இல்லாமல், கட்சியில் போட்டியிட ஆள் கிடைக்காமல் இந்த முடிவு எடுத்ததாக சொல்கிறார்களே?

வைகோ : 
தேர்தலை சந்திக்காமல் இருப்பதற்குதான் துணிச்சல் தேவை.. ஓர் அரசியல் கட்சி தேர்தலில் நிற்காமல் இருப்பது ஒரு முக்கிய நிகழ்வு. கட்சி தேர்தலில் நிற்காமல் இருந்தாலும், சுயேட்சையாக களம் இறங்க கூட பலர் தயராக இருக்கின்றனர். அவர்களை தடுப்பதுதான் பெரிய வேலையாக இருக்கிறதே தவிர , ஆள் இல்லாமல் இல்லை 

 
6. ''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.


ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

பதிவர்கள் கேள்வி

தன்மானம் பற்றி பேசும் நீங்கள் எப்படி இத்தனை காலம் அதிமுக கூட்டணியில் இருந்தீர்கள் ?

வைகோ 
தன்மானம் பாதிக்கப்படுகிறது என்ற நிலையில்தான் திமுகவிலும் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டது... அதே போலத்தான் அதிமுகவில் இருந்தும் ...

மரியாதை இருக்கும்வரைதான் அந்தந்த கூட்டணிகளில் மதிமுக இருந்து வந்து இருகிறது 



7. ''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

\

பதிவர்கள் கேள்வி

உரிய சன்மானம் கிடைக்காததால்தான் அவர்கள் செல்லவில்லை என்கிறார்களே?

வைகோ:

சன்மானம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கும் அளவுக்கு எதிர் தரப்பு இருக்கும் நிலையில், இந்த குற்றச்சாட்டில் லாஜிக்கே இல்லையே? 


8. ''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 


''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

பதிவர்கள் கேள்வி : இப்படி சொன்னாலும்,  தொண்டர்கள் அம்மாவுக்கு எதிராத்தான் போடுவாங்க.. அது எதிர்தரப்புக்கு  போகும்.. கலைஞருக்கு செம லாபம்...

வைகோ : 

ஈழ பிரச்சினையில் எதிர் கருத்து கொண்ட காங்கிரசுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்..? அல்லது ஸ்டாலினுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்?

எனவே பொத்தாம் பொதுவாக சொல்ல கூடாது 



9. ''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். 

ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

பதிவர்கள் கேள்வி :
நீங்கள் சொலவதை பார்த்தால் அடுத்து திமுக கூட்டணியா?

வைகோ 

அடுத்த தேர்தலில், கலைஞரோ ஜெ வோ முக்கிய அரசியல் சக்திகளாக இருக்க போவதில்லை.. எனவே அவர்களுடன் கூட்டு என்ற பேச்சுக்கு இடம் இல்லை 


10. '' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

பதிவர்கள் கேள்வி

ஜெ இப்படி இறங்கி வரும் நிலையில், அதை சாமர்த்தியமாக பயன்படுத்த தவறி விட்டீர்களே?

வைகோ

இந்த தேர்தல் அதிமுகவுக்குதான் வாழ்வா சாவா பிரச்சினை.. எனவே கூட்டணி அவர்களுக்குத்தான் முக்கியம் .  சாமர்தியம் அவர்களுக்குத்தான் போதவில்லை.. தவிர, ஜோசிய அடிப்படையிலும், சிலரின் உத்தரவின் அடிப்படையிலும், கூட்டு தேவையில்லை என அவர் முடிவு செய்த பிறகு என்ன பேசியும் பயன் இல்லை 



4 comments:

  1. இந்த தேர்தல் அதிமுகவுக்குதான் வாழ்வா சாவா பிரச்சினை.. எனவே கூட்டணி அவர்களுக்குத்தான் முக்கியம் . சாமர்தியம் அவர்களுக்குத்தான் போதவில்லை.. தவிர, ஜோசிய அடிப்படையிலும், சிலரின் உத்தரவின் அடிப்படையிலும், கூட்டு தேவையில்லை என அவர் முடிவு செய்த பிறகு என்ன பேசியும் பயன் இல்லை



    .......சரியா போச்சு.... இதுக்கு மேல என்ன சொல்ல?


    ...கலக்கல் பதிவுங்க!

    ReplyDelete
  2. இதை பற்றி உங்கள் அல்டிமேட் ரைட்டர் என்ன சொரியுறார் ச்சே நினைக்கிறார் ??

    ReplyDelete
  3. கலக்கல் பதில்கள்..தொடர்ந்து அரசியல் பதிவுகளில் கலக்குறீங்க பாஸ்.

    ReplyDelete
  4. //தன்மானம் பற்றி பேசும் நீங்கள் எப்படி இத்தனை காலம் அதிமுக கூட்டணியில் இருந்தீர்கள் ?//

    நம்ம இன்னும் தமிழ் நாட்ல இருக்கமே..தன்மானத்தோட (??????).........அதே மாதிரிதான்!!!!!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா