Pages

Monday, December 26, 2011

சசிகலா நீக்கம் - சோ பேட்டி


கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.
 
பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில்தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.  
 
தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.
 
எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்  
 
கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?
 
ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.  
 
கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?
 
ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.  
 
கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?
 
ப:- இன்னொரு அதி காரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால்தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.
 
கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?
 
ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.  
 
கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?
 
ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

1 comment:

  1. எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் உண்டு

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]