கே.குணா, ஆம்பூர்.
''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உங்களை விசாரித்தார்களா?''
''ஆம்; கிரீன்வேஸ் சாலையில் உள்ள 'மல்லிகை’ என்ற அரசுக் கட்டடத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஐந்து நாட்கள் என்னை விசாரித்தனர். பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 250-வது சாட்சியாக, கூண்டில் ஏற்றி என்னை விசாரித்தார்கள்.
பத்தாவது நிமிடத்திலேயே என்னைப் பிறழ் சாட்சி என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குப் பின்னரும், என்னை மூன்று நாட்கள் விசாரித்தார்கள். அந்த விசாரணையில் என்னிடம் கேட்ட கேள்விகளையும் நான் அளித்த பதில்களையும் தொகுத்து, ஒரு புத்தகமாகவே வெளியிட இருக்கிறேன்!''
எம்.பார்வதி, சுவாமிமலை.
''நீங்கள் கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவரா?''
''இல்லை. என் மூத்த சகோதரி, என் இளைய மருமகன் ஆகியோர் கிறித்துவ மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். என் தாயும் என் மருமகளும் இந்துக் கடவுள்கள் மீது பக்தி மிக்கவர்கள். எங்கள் கிராமத்தில், இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடு இன்றி, அவர்கள் வழிபாடுகளுக்கு உதவியாக இருக்கின்றோம். நான் பகுத்தறிவுவாதி.
தலைசிறந்த புரட்சியாளரும் பொது உடைமையாளருமான ஃபிடல் கேஸ்ட்ரோ, தான் படித்த நூல்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்தது பைபிளின் புதிய ஏற்பாடு என்றும், அதிலும் குறிப்பாக, இயேசுவின் மலைப் பிரசங்கம் என்றும் கூறினார். ஆனால், அவர் கிறித்துவர் அல்ல.
திருக்குறள், விவிலியம், திருக்குர்ஆன், மகாபாரத, இராமாயண இதிகாசங்கள், சைவத் திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், அண்ணல் அம்பேத்கர், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நூல்கள் என அனைத்திலும் என் மனம் கவர்கின்ற பகுதிகளை விரும்பிப் படிப்பேன்!''
சி.நாகமணி, சென்னை-18.
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.
'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.
அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''
இ.கிரி, பவானி.
''கரடுமுரடான சங்கத் தமிழ்ப் பாடல்களைக்கூட நீங்கள் கடகடவெனச் சொல்லுகிறீர்களே, இந்த மனப்பாட சக்தி உங்களுக்கு எப்படி வந்தது?''
''சின்ன வயதில் மேடைப் பேச்சுக்கு ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால், பாடல்களை மனனம் செய்தேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்போது, தேர்வுகளில் குறிப்பாக தமிழில் முதல் மதிப்பெண்ணும் பரிசும் பெறுவேன். தமிழ்ப் பாடத்துக்கு உரிய பாடல்களை, சங்க இலக்கியம் முதல் பாரதி வரை முழுமையாக மனனம் செய்யும் பழக்கம் பள்ளிப் பருவத்திலேயே ஏற்பட்டது. பின்னர், பாரதிதாசன் பாடல்கள், மனம் கவர்ந்த ஆங்கில இலக்கியப் பாடல்களை மனனம் செய்தேன். என் தந்தையார் திருக்குறளையும் நாலடியாரையும் முழுமையாக மனனம் செய்தவர். அதுவும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தது.
சின்ன வயதிலேயே மனனம் செய்தவைதான், பசுமரத்து ஆணியாகப் பதிந்துவிட்டது. நடு வயதில் மனனம் செய்ததை, அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளாவிட்டால், மறந்துபோகும்!''
எ.ராம்மோகன், கருங்குழி.
''உங்களுக்கு பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டத் தெரியுமா?''
''தரையில் ஓடும் சக்கரம் பூட்டிய அனைத்து வாகனங்களையும் ஓட்டத் தெரியும்! இளம் பருவத்தில், இரட்டைக் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியை, வில் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்வதில், எனக்கு மிகவும் விருப்பம். சொந்தமாக ராஜ்தூத் மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தேன். 73-ம் ஆண்டு, சென்னையில் இருந்து காரை ஓட்டிச் செல்லும் போது, திண்டிவனத்துக்கு அருகில், மழையில் டயர்கள் சறுக்கி, தலை குப்புறக் கவிழ்ந்து, எதிரில் வந்த லாரியிலும் மரத்திலும் மோதாமல் பள்ளத்தில் விழுந்து, கையில் மட்டும் காயத்துடன் தப்பித்தேன். அதற்குப் பின்னர் கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன்!''
கு.இராமதாசு, கொடுங்காலூர்.
''விடுதலைப் புலிகளை விமர்சனமே இல்லாமல் ஆதரிப்பவரா நீங்கள்?''
''ஆம்; வீரத்தாலும் தியாகத்தாலும் அவர்களுக்கு நிகராக விடுதலைப் போர் நடத்தியவர்கள் வேறு எவரும் இல்லை. தங்களைவிடப் பல்லாயிரம் மடங்கு பலத்தைப் பல நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட கொடிய பகைவர்களை எதிர்த்து, உலகில் வேறு எந்த விடுதலை இயக்கமும் இப்படிக் களம் கண்டது இல்லை. ஈடு இணை சொல்ல முடியாத ஒழுக்கமும் அணு அளவும் தன்னலம் அற்ற தலைமைப் பண்பும்கொண்ட மாவீரர் திலகம் பிரபாகரனை என் இதயம் நிரம்ப நேசிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டாலும், அது அங்கு உள்ள கள நிலையைப் பொறுத்துத்தான் எடுக்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து!''
லலிதா, காஞ்சிபுரம்.
''மொரார்ஜி, இந்திரா, ராஜீவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவ கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் என எல்லோரும் உங்களுக்கு அறிமுகம் உண்டு. ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரிகளில் சொல்லுங்கள்?''
''மொரார்ஜி தேசாய்: மனதில் பட்டதை ஒளித்துப் பேசத் தெரியாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத, வீண்பிடிவாதக் காரர். இந்தியில் எனக்கு வந்த கடிதத்தை, நாடாளுமன்றத்தில் அவர் முகத்துக்கு நேராகக் கிழித்து எறிந்தபோதும், என் மீது கோபப்படவில்லை.
இந்திரா காந்தி: நெருக்கடி நிலையை அறிவித்த சர்வாதிகாரி என விமர்சிக்கப்பட்டாலும், நாடாளுமன்ற விவாதங்களில் விமர்சனங்களைப் பொறுமையோடு கேட்பார். 1984 ஆகஸ்ட் திங்களில், ஈழத் தமிழர்களைப் பற்றி, நான் மிக உணர்ச்சிவசப்பட்டு உரை ஆற்றிய பின் அவர் பேசும்போது, 'உறுப்பினரின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்; இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள்தாம், அம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்’ என்று பேசினார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அதுதான் அவர் ஆற்றிய கடைசி உரை. அவரது மறைவு, தமிழ் ஈழத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
ராஜீவ் காந்தி: நாடாளுமன்ற விவாதங்களில் பல முறை அவருடன் கடுமையாக வாதிட்டு உள்ளேன். ஒரு முறை நான் பேசிய பின்னர், அவர் அவையைவிட்டு வெளியேற முயன்றார். 'பதில் சொல்லாமல் எங்கே ஓடுகின்றீர்கள்?’ என்று கேட்டேன். மீண்டும் திரும்பி வந்து, 'எனக்கு அடுத்த அவையில் வேலை இருக்கின்றது’ என்று கோபப்படாமல் சொல்லிவிட்டுச் சென்றார். என்னிடம் பிரியத்துடனும் நேசத்துடனும் பழகினார்.
வி.பி.சிங்: 'விதுரனை இழந்த துரியோதனனைப் போல், வி.பி.சிங்கை இழந்த காங்கிரஸ் தோற்கப்போகின்றது’ என்று எச்சரித்தேன். பின்னர், அவர் பிரதமரானபோது, நான் பேசியதை நினைவுகூர்ந்த அவர், தொழிலாளர்கள் தினமாகிய மே முதல் நாள் அன்று, மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று அன்றே அதை அறிவித்தார்.
நரசிம்ம ராவ்: பல மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர். நிதானமாகப் பதில் சொல்வார். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்தினார்.
ஐ.கே.குஜ்ரால்: எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும், ஆத்திரப்படாமல் விளக்கம் தருவார். இலங்கைக் கடற்படையின் ஹெலிகாப்டர், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் குண்டுகளை வீசி, ஆறு தமிழக மீனவர்களைப் படுகொலைசெய்ததை இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்துக்கொண்டு, நொண்டி வாத்தைப் போல உட்கார்ந்து இருக்கின்றது என்று குற்றம்சாட்டி ஒரு கடிதத்தை, அவரிடமே நேரில் தந்தபோது, அவருக்கு என் மீது வருத்தம்.
தேவ கவுடா: எல்லோரையும் மதித்துப் பழகுவார். விவசாயிகள் பிரச்னைகளைப் பற்றி சபையில் அழுத்தமாகப் பேசுவார். என்னிடம், மிக்க அன்பு காட்டுவார்.
அடல் பிஹாரி வாஜ்பாய்: அற்புதமான நாடாளுமன்றவாதி. என்னைத் தன் செல்லப் பிள்ளையாகவே பாவித்தார். ஒன்றா? இரண்டா? எத்தனை எத்தனையோ சம்பவங்கள். என் நெஞ்சம் மறக்குமா அந்த நேசம்?
98, 99 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், குடியரசுத் தலைவர் மீதான நாடாளுமன்ற விவாதத்தை, நானே வழிமொழிந்து பேச வேண்டும் என்ற அவரது விருப்பப்படியே வழிமொழிந்தேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவ்வாறு வழிமொழிந்து பேசியது நானாகத்தான் இருப்பேன். அவரது அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போதும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களை அடுத்து, நானே விவாதத்தில் பேச வேண்டும் என்றார். நான் உரை ஆற்றும் வேளைகளில், அவர் அறையில் இருந்து அவைக்கு வந்து என் பேச்சைக் கேட்டு, மேசையைத் தட்டி வரவேற்றுவிட்டுத்தான் செல்வார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்து, அதற்கான அறிவிப்பைச் செய்ய இருந்த வேளையில், நான் அவரை இல்லத்தில் நேரில் சந்தித்து, அது தமிழ்நாட்டுக்குக் கேடாய் அமையும் என்றபோது, என் வேண்டுகோளை ஏற்று, முடிவையே மாற்றினார்.
டாக்டர் மன்மோகன் சிங்: சிறந்த பொருளாதார மேதை. மிகவும் எளிமையானவர். நான் டாக்டர் மன்மோகன் சிங் என்ற மனிதரை மதிக்கின்றேன். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை எதிர்க்கின்றேன் என்று அவரிடமே நேரில் சொன்னபோது, 'உங்கள் அணுகுமுறையை மெச்சுகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
நான் எழுதிய 'சிறையில் விரிந்த மடல்கள்’ நூலின் ஆங்கில மொழியாக்கமான 'ஃப்ரம் தி போர்டல்ஸ் ஆஃப் எ ப்ரிசன்’ ( From the Portals of a Prison) என்ற நூலை, சென்னையில் வெளியிட்டுப் பேசியபோது, 'வைகோ பொதுநலனுக்காக மட்டுமே என்னை வந்து சந்திப்பார். ஐ சல்யூட் ஹிம் (I Salute him)’ என்றார்!''
பி.மாரி, தஞ்சாவூர். 2009 நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் என் தோல்விச் செய்தி வந்துகொண்டு இருந்தபோது, அதற்காக வருந்தித் தீக்குளித்த தலித் சகோதரன் அய்யனாரைக் காப்பாற்ற, வத்திராயிருப்புக்கு விரைந்து சென்று, அவரை மதுரை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்து, உடன் சிகிச்சை தந்து காப்பாற்றியபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது!''
அ.குணசேகரன், புவனகிரி.
''வாழ்க்கையில் தாங்கள் எடுத்த முடிவுகளுள், நல்ல முடிவு எது? தவறான முடிவு எது?''
''அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அவரது அமைச்சரவையில் என்னை இடம் பெறச் சொல்லி வற்புறுத்தியபோது, அதனை ஏற்க மறுத்தது நல்ல முடிவு!
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தவிர்த்தது, தவறான முடிவு!''
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
''நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பாரா? நீங்கள் வரவேற்பீர்களா?''
''சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அட்டைப்படங்களில், எட்டுக் காலங்களில் ஏடுகள் பலமாக ஆரூடம் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், 1996 மார்ச் 8-ம் நாள், பிற்பகல் 2.30 மணி முதல் 6.00 மணி வரை அவரிடம் நான் தனியாக உரையாடினேன். 'நீங்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இருந்தால் வரவேற்கிறேன். ஆனால், உங்கள் பெயரை வேறு சிலர் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது சரி அல்ல. எங்கள் இயக்கத்திலும், வேறு பல இயக்கங்களிலும் உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, ஒரு சிலரின் சுயநல அரசியலுக்கு உங்கள் பெயரைப் பயன் படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்றேன்.
அதற்கு அவர், 'நான் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை; என்னுடைய ரசிகர்களை அல்லது என் பெயரை, தங்கள் கட்சிக்கு ஆதரவு என்று எவரும் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார்.
அத்துடன், இன்னும் 10 நாட்களில் அமெரிக்கா செல்லப்போகிறேன்; அதற்கு முன்பு, யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டுத்தான் செல்வேன் என்று என்னிடம் சொன்னார். அதே போல, அறிவித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.
ஆனால், மதிப்புக்குரிய மூப்பனார் அவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக் கட்சி தொடங்கியதை ஒட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிலர், அவருக்கு நிர்பந்தம் கொடுத்தனர். அதனால், அவர் அமெரிக்காவில் இருந்து ஓர் அறிக்கை தந்தார். அதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. தமிழ் மாநில காங்கிரஸ், தங்கள் பிரசாரத்தில் முழுக்க முழுக்க ரஜினியின் பெயரையும் படத்தையும் மட்டுமே பயன்படுத்தினர்.
தற்போது நீங்கள் கேட்டு இருக்கின்ற கேள்விக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தமிழ்நாட்டின் கலைத் துறைக்கு, அவர் விலை மதிக்க முடியாத பொக்கிஷம்!''
சத்தியநாராயணன், சென்னை.
''ஜெயலலிதாவின் மூளையாகச் செயல்படும் சோ பற்றி..?''
''ஜெயலலிதா அவராகவே முடிவு எடுத்து, அவராகவே செயல்படுகின்றார். பிறரது யோசனைகளை எல்லாம் கேட்டு அதன்படி முடிவு எடுக்கும் இயல்பு, அவரிடம் இல்லை. சோ, தன்னுடைய ஆலோசனைகளை முடிந்த மட்டும் சொல்லிப்பார்க்கிறார். ஆனால், அந்த யோசனைகள் எல்லாமே நல்லவை என்றும் சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகள் கேட்டு இருந்த இடங்களையும் சேர்த்து, 160 தொகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தபோது, அது ஜெயலலிதா எடுத்த முடிவு அல்ல என்றும் மற்றவர்கள்தாம் காரணம் என்றும் சிலர் சப்பைக்கட்டுக் கட்டினார்கள்.
இப்போது, உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிரண்டு கட்சிகளை அழைத்துப் பேசியும் மற்றவர்களை அழைக்காமலேயும் தன்னிச்சையாக, அனைத்து மாநகராட்சி மேயர் வேட்பாளர்களையும் நகர்மன்றத் தலைவர் வேட்பாளர்களையும் அறிவித்த போது, இது ஜெயலலிதாவே அறிவித்த முடிவு என்றனர்!''
எம்.ஆதி, திருவண்ணாமலை.
''இதுவரை எத்தனை தடவை நடைப் பயணம் போயிருக்கின்றீர்கள். எத்தனை கிலோ மீட்டர் நடந்து இருக்கின்றீர்கள்?''
''இதுவரையிலும், ஆறு தடவைகள் நடைப்பயணம் சென்று உள்ளேன்.
முதலாவது நடைப்பயணம்:
1986-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில், மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில் நகைகளைக் கொள்ளை அடித்த குற்றவாளிகளைக் கைதுசெய்து, நகைகளை மீட்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, தென்திருப்பேரையில் இருந்து புறப்பட்டு, கிராமங்கள் வழியாகப் பிரசாரம் செய்துகொண்டே, திருநெல்வேலி வரையிலும், மூன்று நாட்கள் 60 கிலோ மீட்டர்கள் நடந்தேன்.
இரண்டாவது நடைப்பயணம்:
1994 ஜூலை 27-ம் நாள், மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, ஒட்டுமொத்தமாக அந்தப் பயணத்தில் மட்டும், 1,600 கிலோ மீட்டர்கள் நடந்து உள்ளேன். ஒரு நாளைக்கு சராசரி யாக 32 கிலோ மீட்டர்கள் நடந்தேன். இதில் ஒன்பது நாட்கள், முழுக்க முழுக்க மழையில் நனைந்து உள்ளோம். அப்போதும், குடை களைப் பிடித்தது இல்லை.
அப்போதைய அண்ணா தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கையும் கடுமையான ஊழலையும் எதிர்த்து, விழிப்பு உணர்வுப் பிரசாரப் பயணமாகவே நடத்தினேன். செப்டம்பர் 15-ம் நாள், சென்னை அண்ணா நகரில், அந்த எழுச்சி நடைப்பயணத்தை நிறைவு செய்தேன். மொத்தத்தில், கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து ஏற்படுத்திய தாக்கம், 1996-ல் ஆட்சி மாற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மூன்றாவது நடைப்பயணம்:
காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து, மக்கள் சக்தி யைத் திரட்ட, பூம்புகாரில் இருந்து புறப் பட்டு, கல்லணை வரையிலும், ஏழு நாட்கள், 180 கிலோ மீட்டர்கள் நடந்தேன்.
நான்காவது நடைப்பயணம்:
1997-ம் ஆண்டு, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, திருவைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றுவழியாகக் கிராமங்கள் ஊடாகச் சென்று, நான்கு நாட்கள் நடந்து பிரசாரம் செய்து, தூத்துக்குடிக்கு வந்தோம். நான்கு நாட்களில், சுமார் 120 கிலோ மீட்டர்கள் நடந்தோம்.
ஐந்தாவது நடைப்பயணம்:
2004 ஆகஸ்ட் 5-ம் நாள் திருநெல்வேலியில், தாமிரபரணியில் நீராடிவிட்டு, மறுமலர்ச்சி நடைப்பயணத்தைத் தொடங்கினேன்.
சென்னைக்கு, 42 நாள்களில் 1,200 கிலோ மீட்டர்கள் நடந்தேன். என்னுடன் சீருடை அணிந்த 3,000 தொண்டர் படை இளைஞர்களும் கொடி பிடித்து நடந்து வந்தனர். இரவுகளில், கைகளில் தீபச் சுடர்களை ஏந்தி வந்தனர்.
தென்னக நதிகள் இணைப்பின் தேவையை மக்கள் உணரச் செய்யவும், மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தவும், சாதி மத வேற்றுமைகளை அகற்றி, சகோதரத்துவ எண்ணத்தை அனைத்துத் தரப்பிலும் ஏற்படுத்தவும், மது, போதைப் பொருள் பழக்கத்துக்கு இரையாகிவிடாமல், இளம் தலைமுறைக்கு விழிப்பு உணர்வை உருவாக்கவும், தாய் - தந்தையை மதிக்கும் மனநிலையை இளைஞர்களிடம் ஏற்படுத்த வுமே இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டேன். எந்த இடத்திலும், கட்சி அரசியல் பேசவே இல்லை.
ஆறாவது நடைப்பயணம்:
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ கத்தின் உரிமையை நிலைநாட்டவும், தென் மாவட்டங்களில் விழிப்பு உணர்வை ஏற் படுத்தவும், 2008 டிசம்பர் 18-ம் நாள், மதுரையில் இருந்து புறப்பட்டு 23 வரையிலும் - ஆறு நாட்கள் - உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம் வழியாக கூடலூர் வரையிலும், 150 கிலோ மீட்டர்கள் நடந்தோம்.
இது தவிர, 1986-ம் ஆண்டு, தி.மு.க. இளைஞர் அணி சைக்கிள் பயணப் பிரசாரத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 33 நாட்கள் மேற்கொண்டேன். ஆடி மாதப் பெருங்காற்றிலும் வெயிலிலும் ஒரு நாளைக்குச் சராசரியாக 60 கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்தேன். ஒவ்வொரு நாளும், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த 500 இளைஞர்கள் உடன் வந்தார்கள். மறு நாள் வேறு ஒன்றியத்தில், வேறு 500 இளைஞர்களுடன் சைக்கிள் மிதிப்பேன். அனல் கொதிக்கும் வெயிலில் பயணித்ததால், மேனி முழுவதும் கறுத்து, கொப்புளங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்தப் பயணம் முடிந்து சென்னைக்கு நான் வந்தபோது, என் மகள் கண்ணகி என்னைப் பார்த்து, 'அப்பா கறுப்பர் ஆகிவிட்டார்!’ என்றாள்.
கடந்த 40 ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர் களுக்கும் மேல் பயணித்து, சுமார் 80 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் சென்றிருப்பேன். இன்றைக்கும் அப்படித்தான் பயணித்துக் கொண்டே இருக்கின்றேன். தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணங்கள், கட்சிப் பிரசாரங்களுக் காகப் பயணித்து, தமிழகத்தில் 25,000 கிராமங்களுக்கு உள்ளே சென்று வந்து இருக்கின்றேன். 1995-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில், முதல் நாள் தொடங்கிய பயணத்தில், மறு நாள் விடிகாலை வரையி லும் இடைவிடாமல், 118 கிராமங்களில் கொடி ஏற்றி உள்ளேன்.
உழைக்கும் மக்கள், விவசாயிகள், குடிசை வாழ் அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களை, நேரில் சந்தித்து எனக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதினால், பல தொகுப்புகள் வரும். 'மக்களிடம் செல்’ என்றார் அண்ணா. இந்த ஒரு விஷயத்தில் யாரும் என்னுடன் போட்டி போட முடியாது என நினைக்கின்றேன்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா, அரசியல் செயல்பாடுகளை ஒப்பிடுங் கள்..?''
''பிடிவாதத்தில் மூவரும் ஒன்றுதான். எளிமை, மம்தா பானர்ஜியின் உடன்பிறந்த இயல்பு. எவரும் அணுக முடியும் என்பது, மாயாவதியின் நடைமுறை. இந்த இரண்டும் ஜெயலலிதாவிடம் இல்லை!''
ரேவதிப்ரியன், ஈரோடு.
''நீங்கள் படித்து ரசித்த புத்தகம்... புதிதாகக் கேட்டு ரசித்த பாடல்...''
''டாக்டர் சைடுபாட்டம் என்பவர் எழுதிய லயன் ஆஃப் தி சன் (lion of the sun). ரோமாபுரி வரலாறு குறித்த புதினம். யுத்தகளக் காட்சிகளை, அரண்மனைச் சதிகளை, பாலிஸ்டா என்ற கதாநாயகனின் வீரத்தை, அருமையாக வருணித்து இருக்கின்றார்.
பழைய பாடல்களையே திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
கே.ரங்கநாதன், புதுச்சேரி.
''கருணாநிதி 1960; 1980; 2010. உங்கள் கருத்து?''
''60-களில் அனல் பொங்கும் பேச்சு, எழுத்து, போராட்டக் களங்கள்.
80-களில் எதிர் நீச்சல்.
2010-ல், குடும்ப அரசியலால் பழி சுமந்து நிற்கும் பரிதாபம்!''
என்.பாலகிருஷ்ணன், மதுரை.
''உங்களுக்கு மிகவும் பிடித்த திருக்குறள் எது? ஏன்?''
'' 'தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு.’
இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர் ஆட்சிக் காலத்தில் சொன்னது. இன்றைக்குப் பொது வாழ்வில் இருப்போர்க் குத் தேவையானது!''
விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடு கள் எப்படி இருக்கின்றன?''
''காலம்தான் உரைகல்லாக இருக்கும்!''
கருப்பம்புலம் சித்திரவேலு, நெய்விளக்கு.
''உண்மையைச் சொல்லுங்கள். கோபாலபுரத்தில் சுதந்திரமாக உலவியது போல, போயஸ் தோட்டத்தில் உலவ முடிந்ததா?''
''தி.மு.க-வில் கடுமையாக உழைத்த வன் என்ற முறையில், நினைத்த நேரங்களில் கோபாலபுரத்துக்குச் சென்று இருக்கிறேன்.
ஆனால், ஒரு கட்சியின் பொதுச் செயலா ளர் என்ற முறையில்தான் நான் போயஸ் தோட்டத்துக்குச் சென்று இருக்கிறேன். அப்போது, உரிய மரியாதையோடு நடத்தப்பட்டு இருக்கிறேன்!''
த.சத்தியநாராயணன், சென்னை.
''இன்றைய இளம் நடிக, நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர் யார்?''
''ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட விரும்பவில்லை!''
வி.சிஜேன் மாதவன், மயிலாடுதுறை.
''தங்களின் உடனடி இலக்கு... தமிழ் ஈழமா? சேது சமுத்திரத் திட்டமா? ஆட்சியைப் பிடிப்பதா?''
''அறமும் நெறியும் ஓங்கிய தொல் பழங்காலத் தமிழகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் இன்றைய சிதைவில்இருந்து மீட்டு எடுப்பது; தமிழகத்தின் வாழ்வாதாரங் களைக் காப்பது; ஊழல் அற்ற அரசியலை வென்றெடுப்பது; சாதி, மதப் பூசல் அற்ற மனிதநேயம் ஓங்கிட, மறுமலர்ச்சி பெறும் தமிழகம்; சுதந்திரத் தமிழ் ஈழ நாடு... இவையே என் இலக்குகள்!''
ஆ.பிரபு, சென்னை.
''எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்?''
''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது; சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது; இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்றுஎதை யும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கும் தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும்.
மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும்!''
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
''திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுவது, உங்கள் பலவீனம் என்கிறார்களே?''
''வேறு எதுவும் சொல்ல முடியாதவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம் இது.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்’
என்று வான்மறையில் வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பிறரது துன்பத்தை, துயரைக் காண்கையில், எண்ணுகையில், என் கண்களில் நீர். ஆபத்துகளுக்கோ, மரணமே வந்திடுமோ என்ற அச்சத்துக்கோ, கலங்கியதும் இல்லை, கண்கள் கசிந்ததும் இல்லை!''
ஆ.பிரபு, சென்னை.
''அரசியலுக்கு வந்தது தவறு என்று எப்போதாவது வருத்தப்பட்டதுஉண்டா?''
1993 அக்டோபர் 3-ல், கொலைப் பழி சுமத்தப்பட்டபோது வருந்தினேன்!''
கே.ஆண்டனி, நாகப்பட்டினம்.
''கூட்டணியைவிட்டு உங்களை ஜெயலலிதா வெளியேற்ற, உண்மையான காரணம் என்ன?''
''1998-ல் அண்ணா தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த வேளையில், அவருடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது, 'யூ ஆர் மை காம்பெட்டிடர்’ (நீங்கள்தான் எனக்குப் போட்டியாளர்) என்று சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து, 'நீங்கள் ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். நானோ, அரும்பி மலர்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். என்னை ஏன் போட்டியாளராகக் கருதுகின்றீர்கள்?’ என்றேன். 'உங்களுக்குத் தகுதி இருக்கின்றது. ஏன் வரக் கூடாது?’ என்றார். அத்தோடு நான் அதை மறந்துவிட்டேன்.
2006 முதல் ஐந்து ஆண்டுகள், மிக உறுதியாக, நல்ல தோழமை வளர்ந்திட நான் செயல்பட்டும், ஆறு இடங்கள் என்று தொடங்கி, எட்டு இடங்கள் வரை சொல்லி அனுப்பியவர், அதற்கு மறுநாளே, திரு.ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட் டையன் ஆகியோரை என் இல்லத்துக்கு அனுப்பிவைத்து, அந்த எட்டு இடங்களும் தர முடியாது; அதைவிடக் குறைவாகத்தான் தர முடியும் என்று தெரிவித்தபோது, என்னைப் புண்படுத்தி, அ.தி.மு.க-வுக்கு எதிராக அறிக்கைவிட வைப்பதற்கு அவர் முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குப் பின்னரும் ஒரு வார காலம் அமைதி காத்தேன்.
கூட்டணியைவிட்டு என்னை வெளியேற்று வதற்கு, உலகக் கோடீசுவரர்களுள் ஒருவர் நடத்துகின்ற தொழில் நிறுவனம் காரணம் என்று சில ஏடுகள் செய்தி வெளியிட்டன. தவறு செய்தால், தவறுகளையும், அநீதி களையும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் எதிர்த்துப் போராடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று தவிர்க்க நினைத்து இருக்கலாம்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''உங்களுக்குப் பிடித்த பேச்சாளர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்?''
''அண்ணாவின் பேச்சு, கல்கியின் எழுத்து; விஸ்வநாதன் - இராமமூர்த்தி, இளையராஜாவின் இசை; சுசீலா, ஜிக்கி, ஜானகி, டி.எம்.எஸ்., சீர்காழி, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல்; பத்மினியின் நாட்டியம்!''
வி.மருதவாணன், தஞ்சாவூர்.
''நாடாளுமன்றத்தில் முதன்முதலாக கன்னிப் பேச்சு பேசும்போது உங்களுக்கு நடுக்கம் இருந்ததா?''
''சட்ட மன்ற அனுபவம் ஏதும் இன்றி, நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு நிகழ்த்தியபோது, மனதில் ஒரு பரபரப்பும், எவ்விதத்திலாவது முத்திரைப் பதித்துவிட வேண்டுமே என்ற துடிப்பும் உள்ளத்தில் இருந்தது.
1978 ஏப்ரல் 26-ம் தேதி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாநிலங்களின் சுயாட்சி உரிமை குறித்துப் பேச, மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்த தனிநபர் மசோதா மீது பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமாகப் பாதித்து, வட மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டு இருந்த, குழந்தைகளின் உயிர் குடித்த மூளைக் காய்ச்சல் (என்செபாலிடீஸ்) நோய்க் கொடுமையைத் தடுக்க, மத்திய அரசு போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல், அந்நோய் நாடு முழுவதும் பரவும் ஆபத்து உள்ளது என்று பேசினேன். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை முன்னிறுத்தி, ஆங்கில இலக்கியத்தில் வீரச் சிறுவன் கசாபியங்கா வெளிப்படுத்திய துணிச்சலையும், மரணத்தை எதிர்கொண்ட அவனுடைய தியாகத்தையும் சுட்டிக்காட்டி, நான் ஏற்றுக்கொண்ட கொள் கைக்காக, அவனைப் போல போராடுவேன் என்று பேசினேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் மனதாரப் பாராட்டியதும், இந்த உரையைத் தயாரிப்பதற்கு ஊக்கம் அளித்தவர் முரசொலி மாறன் என்பதும் மறக்க முடியாதவை!''
த.சத்தியநாராயணன், சென்னை.
நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் என்று கேள்விப்பட்டேன். அவர் நடித்த படங்களில், தங்களால் மறக்க முடியாத படம் எது?''
''பாசமலர்!''
க.ராமலிங்கம், பாபநாசம்.
''உங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான தகுதியே, உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன?''
''அளவுக்கு அதிகமான தகுதி எனக்கு இல்லை. பள்ளியிலும் கல்லூரியிலும், படிப்பில் முதல் இடம் பெற்றேன். பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசு வென்றேன். கைப்பந்து, கூடைப்பந்து, கல்லூரி அணிகளில் இடம் பெற்றேன்.
தி.மு.கழகத்தில் உழைப்பதில், தொண்டு செய்வதில், மேடைக் கலையில் முத்திரை பதிப்பதில், சிறைச்சாலைக்கு முதல் ஆளாகச் செல்வதில், தொண்டர்களை நேசித்து அரவணைப்பதில், கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட காலத்திலும் வெற்றிபுரிக்குக் கொண்டுசெல்லத் துடிப்பதில் என் சக்திக்கு மீறி அர்ப்பணிப்புடன் இருந்தது என் இயல்பு.
1975 சேலம் தி.மு.க. மாநாடு; 78 திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாடு; 85 கடலூர் தி.மு.க. மாநாடு; இவற்றில் நான் ஆற்றிய உரைகள், மிகுந்த பாராட்டையும் தொண்டர்களிடம் எனக்கு ஈடற்ற ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
1987 வரை, எனது நாடாளுமன்றப் பணிகள் பாராட்டப் பட்டன. அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவுக்குத் தீயிட்டதற்காக, 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்று மிரட்டிப் பார்த்தார்கள். எனினும், கட்சியின் நலன் மதிப்பைக் கருதி, அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினேன். நீதிமன்றத்திலும் அரசியல் சட்டத்தைத்தான் கொளுத்தினேன் என்று தனியாக, பிரமாண வாக்குமூலம் கொடுத்தேன்.
1990 பிப்ரவரியில், திருச்சி தி.மு.க. மாநாட்டில், 'உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில், பிற்பகல் 2 மணி அளவில் நான் உரை ஆற்றியதும், 1993 மார்ச் மாதத்தில், கோவை தி.மு.க. மாநில மாநாட்டில், 'மத வெறியும் மக்கள் சீரழிவும்’ என்ற தலைப்பில் நண்பகல் உணவு வேளையில் உரை ஆற்றி யதும் மிகச் சிறந்தவை என்று, தி.மு.கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்கள் மெச்சினர். அதுவே, அரசியல் வாழ்வில் என்னைத் தாக்கிய இடிகளுக்கும் காரணமாக அமைந்தன.
1998 ஜனவரியில், திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. மாநாட்டில், நண்பகலில் நான் ஆற்றிய உரை, எவரும் எதிர் பாராத வரவேற்பைத் தொண்டர்களிடம் ஏற்படுத்தியபோது, அதை அக்கட்சியின் தலைமை ரசிக்கவே இல்லை என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.
எதிலும் சராசரியாக இருந்திருந்தால், பிரச்னைகளே வராமல்கூடப் போயிருக்கலாம். தடைகள்தாம், சாதனைக்கான படிக்கட்டுகள். மலையளவு பலம்கொண்ட சக்திகளோடு மோதும்போதுதான், போராடும் உரமும் மனதுக்கு நிறைவும் கிடைக்கின்றது!''
செ.பாரி, திருவாரூர்.
''ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரித்தது தவறு என்று, இப்போதாவது உணர்கின்றீர்களா?''
'' 'சமரசம் ஒரு தேவையான ஆயுதம்; நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வலுப்படுத்திக்கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க, சமரசம் தேவைப்படுகின்றது’ என்றார் பகத்சிங்.
அடிப்படைக் கொள்கைகளைப் பலியிட்டுவிடாமல், சுயநலத்துக்குத் துளியும் இடம் இன்றிச் செயல்படும்போது, சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் சில முடிவுகளை மேற்கொள்ள நேரிடுகின்றது. வரலாற்றில் அதனை உணர்த்துகின்ற பாடங்கள் ஏராளம்.
நேதாஜி, ஹிட்லரோடு கரம் குலுக்கவில்லையா?
மா சே துங், சியாங்கே ஷேக் படையினரோடு தோள் கொடுக்கவில்லையா?
சோவியத், அக்டோபர் புரட்சிக்குப் பின், புதிய பொருளாதாரக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லையா?
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கூட்டணிகள் அமைந்ததையும் எதிரும் புதிருமானவர்கள் கரம் கோர்த்ததையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
எனவே, சூழ்நிலையும் இயக்கத்தைக் காக்க வேண்டிய அவசியமும் தவிர்க்க முடியாத புறச்சூழல் நடவடிக்கைகளுமே ம.தி.மு.க. மேற்கொண்ட கூட்டணி முடிவுகளுக்குக் காரணம்.
98 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொண்டது சரியான முடிவுதான். ஆனால், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, எங்கள் இயக்கத்தில் 90 விழுக்காட்டினர் தி.மு.க-வோடு உடன்பாடு வேண்டாம் என்று வெறுக்கின்ற சூழ்நிலையை தி.மு.க-தான் ஏற்படுத்தியது. எனவே, என் மனதில் விருப்பம் இன்றியே, அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால், பணத்துக்காகக் கூட்டணிவைத்தேன் என்று அபாண்டமான பழியும் தூற்றலும் என் மீது வீசப்பட்டது.
அது ஒரு தவறான முடிவுதான் என்பதை உணர்கிறேன். கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய 'அரங்கேற்றம்’ திரைப்படத்தில், கதாநாயகிக்கு ஏற்பட்ட நிலைமையை ஒப்புமை காட்டி, அதுபோலதான் இன்று என் நிலைமை என்பதை, அப்போதே தோழர்களிடம் சொல்லி இருக்கின்றேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் ஐந்து ஆண்டுகள் உறுதியாக இருந்தோம். 2011 சட்டமன்றத் தேர்தலில், நாங்கள் எடுத்த முடிவால், எங்கள் மீது சுமத்தப்பட்ட பழி தானாக நீங்கிவிட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தபோதிலும், விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டிலோ, தமிழ் ஈழ விடுதலை நிலைப்பாட்டிலோ, இம்மி அளவும் எங்கள் இயக்கம் விலகியதும் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கோபித்துக்கொள்வாரோ என்று கருதி, பேசாமல் இருந்ததும் இல்லை!''
பா.மோகன், திருப்பூர்.
''விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு, மிக மிக முக்கியமான காரணம் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்கள்?''
''ஈழத் தமிழர் இனப் படுகொலை நடத்திட, சிங்கள அரசுக்கு ஆயிரமாயிரம் கோடிப் பணத்தையும், சக்திவாய்ந்த ஆயுதங்களையும் வழங்கியதோடு, நிலத்திலும், கடலிலும், வான்வெளியிலும் சிங்களவனின் முப்படைகள், விடுதலைப் புலிகளை யுத்த காலத்தில் வீழ்த்துவதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்தது இந்தியா. அத்துடன் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், இரான் ஆகிய அணு ஆயுத நாடுகளின் அபரிமிதமான ஆயுத உதவிகளும்தான் யுத்த களத்தில் விடு தலைப் புலிகளின் தோல்விக்குக் காரணம் ஆகும்.
பிரபாகரன் அவர்கள் மிகவும் நேசித்த மாத்தையா, தலைவரையே கொலை செய்யத் திட்டமிட்ட துரோகத்தைப் போலவே, பிரபாகரன் அவர்கள் மிகவும் பாசம்கொண்டு இருந்த கருணா, சிங்க ளவர்களின் கைக்கூலியாக மாறித் துரோகம் இழைத்ததால், கிழக்கில் புலிகளின் படை அணிவகுப்பில் சேதம் ஏற்படுத்த சிங்கள அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதுவே, வடக்கிலும் அவர்கள் ஊடுருவு வதற்குக் காரணம் ஆயிற்று!''
வீ.மலர், பொள்ளாச்சி.
''உங்கள் வீட்டில் யாருடைய படங் களை வைத்து இருக்கின்றீர்கள்?''
''சென்னை வீட்டில், திருவள்ளுவர் படம், தந்தை பெரியார் படம், அறிஞர் அண்ணா படம்; தி.மு..க-வில் இருந்து என் மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்த தி.மு.கழகக் கண்மணிகளாம் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐவரின் படங்கள்; 89-ல், வன்னிக் காடுகளுக்குச் சென்று, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைச் சந்தித்துத் திரும்பியபோது, இந்திய ராணுவத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் சுற்றி வளைக்கப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டபோது, என் உயிரைக் காப்பதற்காகப் படகைச் செலுத்த முனைந்து, ராணு வத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சரத் என்ற பீட்டர் கென்னடியின் படம் ஆகிய வற்றைத்தான் வரவேற்பு அறையில் வைத்து இருக்கிறேன்.
என் பாட்டனார், 1923-ம் ஆண்டு கலிங்கப்பட்டியில் கட்டிய மூன்று மாடி வீட்டில், என் தந்தையார் ஒரேயரு படத்தைத்தான் வைத்து இருந்தார். அது திருவள்ளுவர் படம் மட்டும்தான். கடவுள் படமோ, வேறு எந்தத் தலைவர்களுடைய படங்களோ கிடையாது.
நான் கல்லூரிக்குச் சென்று, பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் இணைந்த பிறகு, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் படங்களை வைத்தேன். நாடாளுமன்ற உறுப்பினரானதற்குப் பின்னர், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகியோருடன் ஸ்ரீநகரில் அவர்களுடைய இல்லத்தில் எடுத்துக்கொண்ட படம்; வன்னிக் காட்டில் பிரபாகரனோடு எடுத்துக்கொண்ட படங்கள் இடம்பெற்றன. இப்போது, எங்கள் குடும்பத்தினரின் படங்களும் உள்ளன!''
எல்.கருப்பசாமி, விருதுநகர்.
''ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன?''
''ஒற்றுமை: பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை, வெள்ளித்தட்டில் வைத்த பொற்பழமாகக் காலம் வழங்கிவிட்டதால், கலைஞர் கருணாநிதி அதற்குத் தலைமை ஏற்று நடத்துவதும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காலச் சூழ்நிலை வாரி வழங்கிவிட்டதால், ஜெயலலிதா அதற்குத் தலைமை தாங்கி நடத்துவதும்!
வேற்றுமை: 1949-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் இயக்கத்தைத் தொடங்கிய நாளில் இருந்து, அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பக்கபலத்தோடு, கட்சித் தலைவர் ஆனார் கலைஞர் கருணாநிதி. ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள், அண்ணா தி.மு.கழகத்தைத் தொடங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், அந்தக் கட்சியில் ஜெயலலிதா சேர்ந்தார்!''
கி.மனோகரன், தஞ்சாவூர்.
''தி.மு.க-வில் இருந்து உங்களோடு விலகி வந்த பலரும், பின்னர் உங்களை விட்டு விலகியது எதனால்?''
''1993-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் நாள், திட்டவட்டமாகச் சொன்னேன்... 'என் னோடு வந்தால், போராட்டக் களங்களைச் சந்திக்க நேரிடும்; துன்ப, துயரங்களைச் சுமக்க நேரிடும். பட்டம், பதவிகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். இதற்குச் சித்தமானவர்கள் மட்டும் என்னோடு வாருங்கள்!’ என்று. ஆனால், இயக்கத்தில் அமைச்சர் பதவி வாய்ப்புகள் வந்தபோது, சகாக்களுக்குத்தான் கிடைக்கச் செய்தேன். போராட்டங்களே நிறைந்த எனது பயணத்தில், தொடக்கத்தில் புறப்பட்டவர்கள் தொடர்ந்து வர இயலாது என்பதுதான் உலகம் முழுவதும் வரலாறு தரும் பாடம். அப்படித்தான், இங்கும் சிலர் விலகிச் சென்றனர். அவர்களை நான் பழித்தது இல்லை. என்னோடு பயணித்தவரையிலும் அவர்களுக்கு என் நன்றி!''
எஸ்.கதிரேசன், துறையூர்.
''வரலாறு மீதுதான் உங்களுக்கு அதிகமான விருப்பமா?''
''ஆமாம். வரலாறுதானே படிப்பினை தருகின்றது; வரலாறுதானே மீண்டும் திரும்புகிறது. என்னை மிகவும் கவர்ந்த வரலாற்றுப் புத்தகம், பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதிய, உலக சரித்திரக் கடிதங்கள்தாம்!''
வான்மதி, தண்டையார்பேட்டை.
''நீங்கள் இதுவரை எத்தனை முறை சிறைக்குச் சென்று உள்ளீர்கள். எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளீர்கள்?''
''28 முறை சிறைக்குச் சென்று உள்ளேன். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா கைதியாக பாளையங்கோட்டை, சேலம் என இரு சிறைகளில் 12 மாதங்கள். பொடா கைதியாக, வேலூர் சிறையில் 19 மாதங்கள். அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில், பாளைச் சிறை யில் 3 மாதங்கள். தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, ஒவ்வொரு முறை கைது செய்யப்படும்போதும், 15 நாள்கள் முதல் இரண்டு மாதங்கள் வரையிலும் சிறையில் இருந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியிலும் கைதுசெய்யப்பட்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக, நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளேன்!''
கு.சிங்காரவேலு, ராமநாதபுரம்.
''உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்?''
''எனக்கு ஒரு மகன், இரண்டு புதல்வியர். மகன் துரை வையாபுரிதான் மூத்தவர். சிறிய அளவில், சொந்த வணிகத்தில் ஈடுபட்டு உள்ளார்.
மூத்த மகள் இராஜலெட்சுமி, மருமகன் இராஜசேகர், தேனியில் வசிக்கின்றனர். என் மருமகனின் குடும்பத்தினர், 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவரும் பருத்தி வணிகம் மற்றும் நூற்பு ஆலைப் பணிகளில், மருமகன் ஈடுபட்டு இருக்கிறார்.
இரண்டாவது மகள் கண்ணகி, மருமகன் ஜான் புஷ்பராஜ், அமெரிக்காவில் சிகாகோவில் வசிக்கின்றனர். மருமகன், தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகின்றார். என் பிள்ளைகள் மூவருமே நன்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள்!''
சிந்தாமணி, சென்னை-29.
''அண்மையில் நீங்கள் பார்த்த திரைப்படம் எது? அந்தப் படம் பிடித்து இருந்ததா?''
''முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவு நாளுக்குப் பிறகு, திரை அரங்கங்களுக்குச் சென்று படம் பார்ப்பது இல்லை என்று முடிவு எடுத்தேன். விதிவிலக்குகள் தவிர்க்க முடியாதவைதானே? இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், நார்வே நண்பர்களோடு சேர்ந்து தயாரித்த, 'உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். தமிழ் ஈழச் சோக வரலாற்றை நெஞ்சில் வரையும் காவியம் அது!''