Friday, April 27, 2012

ரஜினி சாரும் , சாருவும் - ஓர் அலசல்

அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் எழுத்தாற்றல் குறித்து நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை .ஆனால் அவரிடம் இருக்கும் இன்னொரு முக்கிய பண்பு, தவறு இன்றி எழுதுவதில் அவர் காட்டும் அக்கறைதான். வெளி நாட்டு பெயர்களை எழுதும்போதெல்லாம் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். இலக்கணப் பிழைகளும் இருக்காது.’’

ஆனால் பல எழுத்தாளர்கள் தவறின்றி எழுத்து வெளி வருவது ப்ரூஃப் ரீடர் பொறுப்பு என நினைத்து விடுகிறார்கள். இதன் விளைவாக தினத்தாள்கள், சஞ்சிகைகள் என எங்கும் பிழைகள் இருக்கின்றன.. இலக்கண பிழைகள் தவிர , பயன்பாட்டு பிழைகளும் அதிகம்.

அடிக்கடி தவறுகள் நடக்கும் சில வார்த்தைகளை , வாக்கியங்களை பார்க்கலாமா?

**********************************************************

கடந்த 1998ல் அமெரிக்கா சென்று இருந்தேன்.

செய்தி தாள்களில் இது போன்ற வாக்கியங்களை பார்க்கலாம். இது அழகற்ற வாக்கியம்.

வெள்ளிகிழமை தலைவர் படம் ரிலீஸ் என சொல்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். குழப்பம் ஏற்படும் . அடுத்த வெள்ளி கிழமையா , சென்ற வெள்ளி கிழமையா , போன மாத வெள்ளி கிழ்மையா என புரியாது.

எனவே கடந்த வெள்ளி கிழமையன்று அவனை பார்த்தேன், சென்ற வாரம் போனேன் என்றெல்லாம் எழுதலாம். ஆனால் ”கடந்த 1998ல் ” என்று சொல்வது அவசியமற்றது. 1998 இனி மேல் வரபோவதில்லை. 1998 என்றாலே அது கடந்த 1998தான்..

கோயிலுக்கு போனேன்.


கோயில் என்பது தவறு. கோவில் என்பதே சரியானது ( நாகர்கோவில், கோவில் பட்டி )

கோ என்றால் கடவுள் . கோ இருக்கும் இல். கோ + இல்..

இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்  என்பது இலக்கணம். 




அதாவது ஒரு சொல் இ , ஈ அல்லது ஐ என்பது முடிந்து , அடுத்து வரும் சொல் உயிர் எழுத்தில் தொடங்கினால் , இரண்டும் இணையும் இடத்தில் “ ய “ வரிசை எழுத்து தோன்றும். ”இ , ஈ அல்லது ஐ ” தவிர மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் , “ வ “ வரிசை எழுத்து புதிதாக தோன்றும்.


உதாரணம் - பாரியை பார்த்தேன் ( பாரி என்ற சொல்  “ இ “ ஓசையில் முடிகிறது. எனவே “ யை “ வருகிறது  )


                         ராஜாவை பார்த்தேன் ( ராஜா என்பது “ ஆ” ஓசையில் முடிவதால் “ வை “




ராஜாவின் பார்வை, கூஜாவை கவிழ்த்தேன் , கோபியின் பதிவு, டீயில் ஈ ..


அந்த அடிப்படையில் பார்த்தால், கோ + இல் = கோவில் ( கோ என்பது ஓ ஓசையில் முடிவதால் ” வ “ தான் வரும் ) 




பெங்களூரில் அரசியல் குழப்பம் 

பெங்களூரில் என்பது தவறு. 

வேலூர் என்பது ஊர் பெயர். எனவே வேலூரில் என்பது சரி.

பெங்களூரு என்பது ஊர் பெயர் . இங்கு பெங்களூரில்  என்பது தவறு. பெங்களூருவில் என்பதே சரி.

சார்-   ரஜினி சாரை சந்தித்தேன்.

சாரு - அல்ட்டிமேட் ரைட்டர் சாருவை சந்த்தித்தேன். 

 நானும் அவளும் ஒரே இள நீரில் இரண்டு ஸ்ட்ராக்கள் போட்டு இளனீர் பருகினோம் 


இந்த இடத்தில் பருகினோம் என்று வர கூடாது.

பருகுதல் என்றால் நேரடியாக வாய் வைத்து பருகுதல். மேற்கண்ட ரொமாண்டிக் சிச்சுவேஷனை கொஞ்சம் மாற்ரினால், பருகினேன் என்ற சொல்லை பயன்படுத்த முடியும். எப்படி என யோசியுங்கள். அதற்கு முன் பருகுதல் , குடித்தல் ,  அருந்துதல் என்றால் என்ன என பார்க்கலாம்.

குடித்தல் - திரவ பொருட்களை உட்கொள்ளும் எல்லா செயலுமே குடித்தல்தான். மேற்கண்ட வரியில்கூட குடித்தல் என்பதை பயன்படுத்தலாம்.

பருகுதல் - வாய் வைத்து நேரடியாக குடித்தல். ( மான் குளத்தில் நீர் பருகியது )

அருந்துதல் - கொஞ்சம் கொஞ்சமாக குடித்தல் ( உணவு அருந்தினேன், தேனீர் அருந்தினேன் , உணவு அருந்தினேன் )


மெள்ள பேசுங்கள்

மெல்ல பேசுங்கள் என்பதே சரி. மெல்ல , மெள்ள என இரண்டுமே ஒன்று போல தோன்றினாலும் வித்தியாசம் இருக்கிறது.

மெல்ல என்பது மெல்லிய , மெலிந்த என்பது போன்றது. மெல்லிய குரலில் பேசு என்பது மெல்ல பேசு.

மெள்ள என்பது காலம் சார்ந்தது. ஒன்றும் அவசரம் இல்லை. மெள்ள செய்தால் போதும்.





Thursday, April 26, 2012

பாப்பாத்தி என சொல்லாதே- வாலியை கண்டித்த அறிஞர் அண்ணா

தமிழக வரலாற்றில் முக்கியமான தலைவர் அண்ணா அவர்கள். அவரைப்போன்ற ஒருவர் இனி வரப்போவது இல்லை. ஆனால் அவர் ஒரு கட்சிக்காரர் என்ற அளவில்தான் அவர் நினைவுகூரப்படுகிறாரே தவிர , அவரது அருங்குணங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டே வருகின்றன.

  கட்சியில் தனக்கு கீழ் இருப்பவர்களை வளர வைத்து அழகு பார்த்த பெருந்தன்மை யாருக்கும் வரவே வராது. எத்தனை எத்தனை தலைவர்களை அவர் உருவாக்கினார் !! ரியல்லி கிரேட்.

அரசியல் தவிர்த்து விட்டு பார்த்தாலும் , அவர் பண்பில் சிறந்து விளங்கியவர். காங்கிரஸ்காரரான சின்ன அண்ணாமலை தன் புத்தகம் ஒன்றில், அண்ணாவை ஒரு முறை பார்த்து பேசியதும் , அண்ணா மீதான மரியாதை வெகுவாக உயர்ந்ததை சொல்லி இருப்பார்.

துக்ளக் இதழில் கவிஞர் வாலி கட்டுரை தொடர் ஒன்று எழுதி வருகிறார். அதில் அண்ணாவை பற்றி  இரு சம்பவங்களை குறிப்பிட்டு இருக்கிறார். சுருக்கமாக தருகிறேன். படித்து பாருங்கள்..

**************************************************

அண்ணா என்னும் பெருமகனார் - வாலி 

 ஒரு முறை தலை மொட்டை அடித்து இருந்தேன். “ இது என்ன மொட்டை “ என வினவினார் அண்ணா.

“ திருப்பதி “ என்றேன்.

“ திருப்பதி போய்ட்டு வந்து ச்மாராதனையை முடிச்சாச்சா ? “ என்றார் அண்ணா

“ சமராதானையா ? :” கேட்டேன் நான்.

“ ஆமாம்யா. இது எப்படி தெரியாம போச்சு . திருப்பதிக்கு போய்ட்டு வந்தால் மட்டும் பிரார்த்தனை முடிஞ்சதுனு அர்த்தம் இல்லை. வந்த கையோடு அஞ்சாறு பேருக்கு சாப்பாடு  போடணும். அதுக்கு பேர்தான் சமாராதனை. உமக்கு , நான் சொல்ல வேண்டி இருக்கு . இதை பண்ணாதான் அந்த சர்க்கிள் பூர்த்தி ஆகும் “

அண்ணா சொன்னதும் அயர்ந்து போனேன். சடங்குகளை , சாக்கியங்களை , சம்பிராதாயங்களை , தன் பேனாவையே பேனா கத்தியாக்கி கிழித்து போடுபவரா இப்படி பேசுகிறார்?

அதுதான் அண்ணா. அடுத்தவர் உணர்வுகளுக்கு அவர் போல மதிப்பளிக்க வல்லாரை மண்மிசை நான் இதுகாறும் கண்டதில்லை.

______________________________


பெற்றால்தான் பிள்ளையா படத்துக்கு நான் தான் பாடல் எழுதினேன். டூயட் பாடல் ஒன்று எழுதி அண்ணாவிடமும் , எம் ஜி ஆரிடமும் பாடி காட்டினேன்.

அந்த பாடல்...

” சக்கரைக்கட்டி பாப்பாத்தி

என் மனசெ வசுக்க காப்பாத்தி “

என்று தொடங்கும்.

இருவரும் வெகுவாக ரசித்தார்கள்.

“பாட்டை கம்போசிங்கிற்கு கொடுத்துடலாமா “ என்றேன்.

“ தாரளமா. வாழ்க “ என்றார் எம் ஜி ஆர்.

அவர் தன் மகிழ்ச்சியை வாழ்க மூலம்தான் தெரிவிப்பார்.

திடீரென அண்ணா மீண்டும் பாடலை பாட சொன்னார். பாடி காட்டினேன்.

“ வாலி , பாப்பாத்தி என்ற வார்த்தையை மாற்றுங்க “ என்றார்.

” அதில் என்ன தப்பு? பாப்பாத்தி- காப்பாத்தி என அழகா இருக்கே “ என வாதிட்டேன்.

ஆனால் அண்ணா ஏற்கவில்லை.

உடனே நான் ,

சக்கரைக்கட்டி ராஜாத்தி, என் மனச வச்சுக்கோ காப்பாத்தி “ என மாற்றினேன்.

அண்ணா முகம் மலர்ந்தார்.

“ தேவை இல்லாமல் நாம் யார் மீதும் கல்லெறிய வேண்டாமே “ என்றார்.

அதுதான் அண்ணா.

*********************************************************




Sunday, April 22, 2012

மிர்தாதின் புத்தகம் - வாசிப்பு அனுபவம்

புத்தக கண்காட்சிக்கு போனால் , நமக்கு பிடித்த புத்தகத்தை செலக்ட் செய்து காசு கொடுத்தால் வாங்கி விடலாம். அல்லது நெட் இருக்கிறது. ஜஸ்ட் ஒரு க்ளிக் செய்தால் தேவையான புத்தகம் வீடு தேடி  வந்து விடும்.

இவ்வளவு எளிதாக புத்தகங்கள் வாங்கி நம் அறிவு பசியை தீர்க்க , அல்லது இனிமையாக பொழுது போக வாய்ப்புகள் பல இருக்கின்றன. இந்த வாய்ப்பு முந்தைய தலை முறைக்கு இல்லை.

ஆனால் நாம் புத்தகங்களை தேர்ந்தெடுப்பதை விட , புத்தகங்கள்தான்  நம்மை தேர்ந்தெடுக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது வரும். சில புத்தகங்களை படிக்கவே நினைத்து இருக்க மாட்டோம். தற்செயலாக படித்து பிரமித்து போவோம். இது ஒரு வகை.

சில புத்தகங்களை நீண்ட நாட்களாக படிக்க நினைத்து இருப்போம். ஆனால் புத்தகம் கிடைக்காமல் போய் இருக்கும். அல்லது நேரம் கிடைக்காமல் போய் இருக்கும். தகுந்த சூழ் நிலை அமைந்து படிக்கும்போது, அடடா.இத்தனை காலம் படிக்காமல் போய் விட்டொமே என வருத்தமாக இருக்கும்.. இப்போதாவது படித்தோமே என மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இந்த புத்தகத்தை இப்போது இவன் படித்தால் நன்றாக இருக்கும் என வேறு யாரோ முடிவு செய்வது போல சில சமயம் தோன்றும்.

அப்படி சமீபத்தில் மகிழ்ச்சி அடைய வைத்த புத்தகம் “ The book of Mirdad "

ஆனால் ஒரு விதத்தில் வருத்தம் அடையவும் வைத்து விட்டது. இந்த புத்தகத்தை எனக்கு ரெகமண்ட் செய்தவருடன் , என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இயலாது. காரணம் அவர் இன்று இந்த உலகில் இல்லை...

இந்த புத்தகத்தை அவ்வளவு உயர்வாக அவர் பேசினார். ரசித்து பாராட்டினார். படித்தே ஆக  வேண்டும் என்றார். ஏனோ என்னால் அதை படிக்க முடியவில்லை..  நேரம் இன்மை காரணமல்ல.. இந்த கால கட்டத்தில் எத்தனையோ குப்பை படங்கள் பார்த்து இருக்கிறேன். பல்ப் ஃபிக்‌ஷன்கள் படித்து இருக்கிறேன்.. ( அவர் ரெகமண்ட் செய்து சில வருடங்கள் இருக்கும் )


சென்ற தற்செயலாக படித்த நான் பிரமித்து போனேன். அதே நேரத்தில் அந்த நண்பர் நினைவும் வந்தது. அவருடன் இதைப்பற்றி பேச முடியாதே என்ற ஏக்கம்..

ஆனால் இதற்கான ஆறுதலையும் இந்த புத்தகமே அளித்தது .

இது நான் படித்த புத்தகங்களின் சாராம்சமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.ஆனால் இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ’மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது... நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்லர், எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர்.நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது   என்கிறார் ஓஷோ.


கலீல் கிப்ரானின் உயிர் தோழனாக விளங்கிய, மிகைல் நைமி எழுதிய நூல்தான் 'மிர்தாதின் புத்தகம்’

இது இரண்டு பாகங்களாக உள்ளது.  புனைவு போன்ற சாயலுடன், ஒருவன் மேற்கொள்ளும் தேடலுடன் கூடிய பயணம் முதல் பாகம் இது அறிமுகம் போன்றது  , அடுத்து வருவதுதான் மெயின்    இரண்டாம் பாகத்தில் ஞான புதையல். ஆனால் நேரடியாக இரண்டாம் பாகத்துக்கு வந்து விட்டால் , முக்கியமான சிலவற்றை இழக்க வேண்டி இருக்கும். இது வெறும் கதை அன்று. ஒவ்வொரு பக்கமும் குறியீடுகளால் ஆனது. எனவே ஒரு வர்யையும் விட்டு விடாமல் படித்தால்தான் முழு பயன் கிட்டும்.




ஒன்பது பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய மலை உச்சியில் ஒரு மடலாயம். ஒன்பதில் ஒருவர் இறந்து விட்டால் , கடவுள் புதிதாக ஒருவரை அனுப்பி வைப்பார் என்பது கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரகஷன். அந்த ஒன்பதில் ஒருவர் இறக்க , புதிதாக ஒருவன் மடத்துக்கு வருகிறான். ஆனால் அவனை தலைவர் ஏற்கவில்லை. கடைச்யில் வேலையாளாக சேர்கிறான். இதன் தொடர் நிகழ்சிகளால் அந்த தலைவர் சபிக்கப்பட்டு அங்கேயே சுற்றி வருவதாக தெரிந்த ஒருவன், அந்த பாழடைந்த மண்டபத்தை தேடி மலை உச்சியை நோக்கி பயணம் செல்கிறான். பல சோதனைக்கு பிறகு மலை உச்சியை அடைகிறான், அந்த துறவி இவனுக்காகவே காத்து இருக்கிறார். மிர்தாதின் புத்தகத்தை கொடுத்து விட்டு மறைகிறார்.


அடுத்து வருவது மிர்தாதின் புத்தகம் என்ற ஞான களஞ்சியம். ஆர்வ கோளாறின் விளைவாக இந்த இரண்டாம் பாகத்துக்கு நேரடியாக வருவது தவ்று.


அந்த மலை உச்சி பயணமே அபாரமான குறியீடுதான் . அதை இழந்து விடக்கூடாது.




அந்த பயணதின் போது கிடைக்கும் அனுபவங்களும் உரையாடல்களும் முக்கியமானவை.


“ நம்பிக்கை மீது எப்போதும் நம்பிக்கை இழக்காதே “


நான் முட்டாளா? “


“ ஏழு பிறவி நீள பயணத்துக்கு , ஏழு ரொட்டி துண்டுகளை கொண்டு வந்தவனல்லவா நீ “

“ ஏன் , 7000 கொண்டு வந்து இருக்க வேண்டுமா ? “


“ ஒன்று கூட கொண்டு வந்து இருக்க கூடாது “


” ஊன்றுகோல் இல்லாதவர்கள் மகிழ்சி கொண்டவர்கள். அவர்கள் தடுமாறுவதில்லை. வீடற்றவர்கள் மகிழ்ச்சி கொண்டவர்கள். அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள் “:


” வாழ்வதற்காக செத்து போ, சாவதற்காக வாழ்”






இப்படியெல்லாம் அபாரமாக அறிமுகப்பகுதி இருப்பதால் , அடுத்த பகுதியில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் இருக்கும் என்பது இயல்பு. ஆனால் மெயின் பார்ட் நம்மை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. பாதை அற்ற ஓர் உலகத்துக்கு சென்று விடுகிறோம்.


முக்கியமான வாழ்வியல் விஷ்யங்களை எளிய சுருக்கமாக சொல்கிறார் மிர்தாத். அளவுக்கு அதிக்மாக ஒரு வார்த்தை கூட இல்லை. முழு பிரசங்கம் போல இல்லாமல் , ஒரு நடையை அமைத்து கொண்டது சிறப்பு.


நியாயத்தீர்ப்பு நாள் என்ன ஆயிற்று ?


“ ஒவ்வொரு நாளும் நியாய தீர்ப்பு நாள்தான்.ஒவ்வொரு கண் சிமிட்டலிலும் , எல்லா உயிர்களும் கணக்கிடப்படுகின்றன “


ஒரே ஒரு ஆளை நீங்கள் பகையாக நினைக்கும் வரை உங்களுக்கு நண்பர்களே இல்லை “


“ அன்புக்கு பரிசுகள் தேவை இல்லை. அன்பே அன்பின் பரிசு ”




பிரார்த்தனை குறித்து


நீங்கள் சொல்லியா கடவுள் சூரியனை உதிக்கவும் , மறைக்கவும் செய்கிறார்? “


வழிபாடு செய்ய ஆலயங்கள் தேவை இல்லை..உங்கள் இதயத்தில் ஆலயத்தை காண முடியவில்லை என்றால், எந்த ஆலயத்திலும் உங்கள் இதயத்தை காண முடியாது “:




:உன் தந்தை இறக்கவில்லை.உருவம் கூட இறக்கவில்லை.மாறி விட்ட அவர் உருவம் குறித்த உன் உணர்வுகள்தான் இறந்தவை”


இப்படி படித்த பின்பும் மனதில் ரீங்காரமிடும் வார்த்தைகள் ஏராளம்.


புத்தக வடிவமைப்பு அருமை.. கண்ணதாசன் பதிப்பகம்.
மொழி பெயர்ப்பு புவியரசு..




வெர்டிக்ட் - மிர்தாதின் புத்தகம் -     மிஸ் செய்ய கூடாத புத்தகம் 

















Friday, April 20, 2012

பள்ளிவாசலை இடிக்க சொல்லி இலங்கையில் அட்டூழியம்- விழித்தெழுமா உலக சமுதாயம்.?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதி உலக வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக என்றென்றும் இருக்கும். இந்த அட்டூழியங்கள் நடந்து வரும்போது நாம் கையாலாகாத நிலையில் ஒன்றும் செய்யாமல் இருந்தோம் என்ற இழிவான பெயர் , நம் தலைமுறைக்கு கண்டிப்பாக உண்டு.

அங்கு நடக்கும் கொடூரங்களை நாம் சரியான வகையில் உலக அரங்குக்கு எடுத்து செல்ல வில்லை என்பது வரலாற்று சோகம்.

அங்கு நடப்பது சிறுபான்மை மொழிக்கு எதிரான செயல் மட்டும் அன்று. மத அடிப்படையிலும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர். இதையெல்லாம் சரியான படி வெளி உலகுக்கு எடுத்து செல்லவில்லை..


சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் தர்காவொன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றால் தகர்க்கப்பட்டது..

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை  பெளத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில்  , இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரத்தில் பௌத்தக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்ற வேண்டும் என கோசமிட்டார்கள்.
முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை  3.30 மணிளவில் பெட்ரொல்ல் குண்டைப் போன்ற ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

 தொழுகையில் ஈடுபட தயாராகியிருந்த போது, சுமார் 50 பிக்குகள் அடங்கலாக 500க்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து கலகத்தில் ஈடுபட்டதாகவும், பள்ளிவாசலை இடிக்க வேண்டுமென்று கோசம் போட்டு, கற்களை வீசியெறிந்ததாகவும் பள்ளிவாசல் தரப்பினர் கூறுகின்றனர்.
அந்த இடத்துக்கு அருகில் ஊடகவியலாளர்கள் எவரும் சென்று படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இது எங்கள் சிங்கள நாடு, எங்கள் நாடு பௌத்த நாடு, அதனை காப்பாற்றுங்கள்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமி்ட்டிருக்கிறார்கள்.

'பௌத்த பூமியை பாதுகாப்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.


தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற பட்சத்தில் தம்மை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ரத்து செய்யப்பட்டது. 
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் மற்ற பகுதிகளிலிருந்து பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர்





Wednesday, April 18, 2012

இஸ்லாமிய பின்னணியில் இணையற்ற நாவல் - சாய்வு நாற்காலி

எத்தனையோ நாவல்கள் படிக்கிறோம். அவற்றில் சில மட்டுமே நம் மனதில் ஆழ்ந்து பதிந்து நம்மில் ஒரு பகுதியாக மாறி விடும்.

இப்படி நடக்க வேண்டும் என்றால் அந்த எழுத்தில் விறுவிறுப்பு இருக்க வேண்டும், மொழி ஆளுமை இருக்க வேண்டும். வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும்.

இந்த அனைத்து அம்சங்களையும் கொண்ட நாவல்தான், தோப்பில் முஹமது மீரானின் சாய்வு நாற்காலி.
1997ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல் என்றாலும், அதை சமீப காலம் வரை படிக்கவில்லை. அஞ்சு வண்ணம் தெருதான் மீரான் எழுத்துகளில் நான் படித்த முதலாவது. முதல் நாவலே என்னை அசத்தி விட்டது.

அந்த நாவலை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளம் கவர்ந்து விட்டது சா. நா.

இஸ்லாம் மதத்தில் இருக்க கூடிய இறை நேசர்களை வணங்க கூடியவன் நான். தர்க்கா வழிபாடுகளை விரும்ப கூடியவன். குணங்குடி மஸ்தான் பாடல்களின் அடிமை . இந்த காரணங்களால் அஞ்சு வண்ணம் தெரு நாவலை என்னால் உணர்வு பூர்வமாக படிக்க முடிந்தது. அந்த நாவலின் கதை போக்கு அப்படிப்பட்டது.

என் போன்ற பின்னணி இல்லாதவர்களுக்கு அந்த நாவல் எப்படி பட்ட பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கொஞ்சம் கேள்விக்குரியது.. ஆனால் சா. நா அப்படி அல்ல. இது இஸ்லாமிய பின்னணியை கொண்ட நாவல் என்றாலும் , இது மதம் சார்ந்த நூல் அன்று. ஒட்டு மொத்த வாழ்க்கையை , மனிதனின் உயர்வை , மனிதனின் இழிவை , இருளான பக்கத்தை , ஒளி மிகுந்த பக்கத்தை பேசக் கூடியது.

இந்த நாவலின் கரு என்ன ?

காலத்தின் பிரமாண்டம்.. அதன் முன் நாமெல்லாம் தூசு....

காலம்தான் ஒருவரை தூக்கி வைக்கிறது. பின்பு தூக்கியும் எறிகிறது. இதில் நன் என்ற அகங்காரமெல்லாம் கேலி கூத்துதான்.

மீரான் எழுத்து நம்மை அழைத்து செல்லும் மாய உலகில் வாழ்ந்து விட்டு , வெளியே வந்து யோசித்து பார்த்தால் நமக்கு தோன்றுவது இதுதான். வட்டார பேச்சு வழக்கு , அழகு கொஞ்சும் இஸ்லாமிய கலை சொற்கள் , செதுக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்ட பாத்திர படைப்புகள் - இவை எல்லாம் சேர்ந்து , தென்பத்தன் என்ற கிராமத்திற்கே நம்மை அழைத்து சென்று விடுகிறோம்..

பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த முஸ்தபாகண்ணு , அந்த பாரம்பரியத்துக்கு தகுதி இல்லாதவர். ஆனால் அந்த தகுதியின்மையை ஏற்கும் துணிச்சலோ , த்ன்னை உயர்த்தி கொள்ளும் விருப்பமோ இல்லாமல் இருப்பவன். சுடும் யதார்த்தத்தை வெற்று ஆர்ப்பாடங்கள் மூலமும், காமம் மூலமும் மறக்க விரும்புபவர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. அதே போல முஸ்தாகண்ணுவும்  ஒரு கட்டத்தில் யதார்த்ததை சந்த்திக்க வேண்டி வருகிறது. 


வரலாறு , பாரம்பரிய பெருமை , தான் என்ற அகங்காரம் என எல்லாம் , பிரமாண்டமான காலத்திற்கு முன் அர்த்தம் இழந்து போகின்றன. 


குளிக்காமல் , வேறு எந்த வேலையும் செய்யாமல் தூங்கியே காலம் கழிக்கும் , தங்கை ஆசியா , பிரம்படி வாங்குவதை மட்டுமே வாழ்க்கையாக கொண்ட , ஆனால் கணவனை விட்டு செல்லாமல் அவன் கனிவுக்கு ஏங்கும் மரியம் , பழம்பெருமை மீது பெருமிதம் கொண்ட , ஆனால் அதற்குள் சிறைப்பட விரும்பாத சாகுல் ஹமீது , அழகு சிலை ரைஹானத் , மீனாட்சி , வலிய அங்கத்தை,வரலாற்று சிறப்பு மிக்க சவ்தா மன்ஸில், குத்தூஸ் லப்பை அப்பா , பவுரீன் பிள்ளை ,பப்பு தம்பி , ராஜன் தம்பி ஆகியோர் மட்டும் அல்ல. பிரம்பு , எலிகள், கிணறு என ஒவ்வொன்றும் மனதில் பதிந்து விடுகின்றன .




400 பக்கங்களில் இத்தனை கேரக்டர்களை எஸ்டாபிலிஷ் செய்கிறார் என்றால் எழுத்தாற்றலின் வலிமை ஆச்சர்யமாக இருக்கிறது. 

பாரம்பிய பெருமை மிக்க பொருட்களை பட்டினிக்காக விற்கும் அவலம் நெஞ்சை சுடுகிறது , விற்கப்பட்ட பொருட்கள் போய் சேரும் இடம் poetic justice .

அவ்வளவு பிரச்சினை நடக்க்கும்போது, நிதானமாக மிக்சர் சாப்பிடும் கணவனாக காட்சி அளிக்கும் செய்தகமது கேரக்டருக்குள் இருக்கும் கிளைக்கதை சுவாரஸ்யம்.

ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுபவன் இஸ்ராயில். முதலாளியை அண்டி பிழைப்பவன் தான் இவன். ஆனால் மரியம் அட் வாங்குவதை கண்டு கொள்ளாமல் செல்வதில் இவனுக்கு உடன்பாடு கிடையாது. அவளுக்கு ஆதரவாக பேசும் ஒரே ஜீவன் இவன் தான். 

ஒவ்வொன்றாக விற்ரு , கடைசியில் சிறப்பு வாய்ந்த சாய்வு நாற்காலியும் விற்கப்பட்டுகிறது. 

 நாற்காலி விற்றதில் கூட முஸ்தபா  கண்ணுக்கு வருத்தம் இல்லை. அந்த நாற்காலி நலிவடைந்த பிரிவை சேர்ந்த ஒருவர்க்கு சென்றதைத்தான் அவரால் தாங்க முடியவில்லை..

அதை தொடர்ந்து இஸ்ராயில் பேசுவது நாவலுக்கு வேறு ஓர் அர்த்தம் தருகிறது.

“ அப்படி சொல்லாதீங்க. இப்ப காலம் அவங்க கையிலயாக்கும். ஒரு காலத்தில் நம் கையில், இப்ப அவங்க கையில்.. காலம் இப்படி சைக்க்கிள் வீலு போல சுத்தீட்டே வருது ” 

ஒரு காலத்தில் பெண்களை மிரட்டியும் , காசு காட்டியும் , அழகால் மயக்கியும் , வீழ்த்தி வந்த வம்சத்தில் வந்த அவர், பெண் கேட்டு போய் ஒரு பெண்ணால் காறி உமிழப்படுகிறார். அவர் வீழ்ச்சி முழுமை அடைகிறது.

தற்காலத்திற்கும் , பழங்காலத்துக்கும் நாவல் முன்னும் பின்னும் அலைந்தாலும் , வாசிப்பிற்கு அது சுவை கூட்டவே செய்கிறது.  தன்க்கு உண்ண தராமல் தான் மட்டும் சாப்பிட விரும்பும் முதலாளியை ஏமாற்றி சாப்பிடுதல், தேங்காய் திருட்டு , யானை மருத்துவம் , இறை நேசர்களின் அற்புதம் என சுவையான சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி, ஒவ்வொரு பக்கத்தையும் சுவையாக்குகிறது.

அதே நேரத்தில் மனதை கனமாக்கும் பகுதிக்ளும் ஏராளம். கல்யாண ஆசையால் ஏமாந்த பெண்ணையே, குற்றவாளி என தீர்ப்பளித்தல், பெண்களை கொன்று விட்டு, மந்திரவாதிகளை கைக்குள் போட்டு ,அவர்களை வைத்து , அந்த பெண்கள் வசதியாக இருப்பதாகவும் , ஒரு நாள் வருவார்கள் என்றும் பொய் ஆருடம் சொல்ல வைத்தல் ,  ஆள்வோருக்கு எதிராக கலக்ம் செய்த தலைவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை இழிவு படுத்துதல் போன்ற இருளான பக்கங்களும் உண்டு.


இஸ்லாமிய பாத்திரங்களை கொண்ட நாவல் என்றாலும் , அனைத்து தரப்பு மக்களையும் பதிவு செய்து இருப்பது நாவலாசிரியரின் நேர்மைக்கு சான்று.

கதாபாத்திரங்கள் பேசும்போது , வட்டார வழக்கை அப்படியே பயன் படுத்தி இருப்பது சிறப்பு. இஸ்லாமிய பதிவர்கள்கூட இந்த அளவுக்கு இஸ்லாமிய சொற்களை பயன்படுத்துவதில்லை. மற்றவர்களுக்கு புரியாதோ என்ற தயக்கமே காரணம். ஆனால் இந்த நூலில், கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்யாமல் , வட்டார பேச்சை அப்படியே பயன்படுத்தி இருப்பதும் நாவலின் வெற்றுக்கு முக்கிய காரணமாகும்.
ஆனால் ஆசிரியர் கூற்றில் வரும் பகுதிகளில் அழகு தமிழிலும் எழுதி இருக்கிறார்.

படித்த பின்பும் நாவல் மனதில் நிற்கிறது. மறக்க முடியாத நாவல்..

வெர்டிக்ட்

சாய்வு நாற்காலி - சாதனை படைப்பு 

 நாவல் ஆசிரியர் ; தோப்பில் முகமது மீரான்

பக்கங்கள்:  408




Sunday, April 15, 2012

கொள்கைகள் முட்டாள்தனமானவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சற்றே வித்தியாசமானவர். ஆத்திகம் , நாத்திகம் என எல்லா சித்தாத்தங்களையும் விமர்சிப்பவர். கன்சிஸ்டென்சி புனிதமானதல்ல என அதிரடியாக பேசுபவர். அவர் பொன்மொழிகளில் சில , உங்கள் பார்வைக்கு


************************************************
 ஜே கே பொன்மொழிகள் 

  • ஒருவர் தன் சிந்தனையில் ஒரே மாதிரியாக இருந்தால் , அவருக்கு  சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம். குறிப்ப்பிட்ட சிந்தனை வட்டத்திற்குள் அவர் சிக்கி கொண்டுள்ளார். ஒரே மாதிரியாக வாழ்க்கை முழுதும் பேசுகிறார்.








  • பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறையோ ஆக்கிரமிப்பு எண்ணமோ இருக்க முடியாது. எந்த வடிவிலும் அச்சம் இல்லாதவன் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பான் .





  • மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த  எந்த வகையாக இருந்தாலும் , கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களை பிரிக்கின்றன. 

  • ஒரு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டுமானால், பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்ற பதட்டம் நம்மிடம் இருக்க கூடாது. 

  • அனைவரிடமுமே ஆதிக்க எண்ணமும், அதிகாரத்துக்கான ஆவலும் மறைந்து இருக்கின்றன. ஹிட்லரிடமும் , முசோலினியிடமும் இது வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இந்த வித்து அகற்றப்படாவிட்டால் , வெறுப்பு , யுத்தம் , பகைமை போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

  • உண்மையை அடைவதற்கு பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ , எந்த இயக்கமோ உண்மையை அடைய உங்களுக்கு உதவாது. 

  • பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு விட்டால் , தீர்வு அதில் இருந்தே கிடைத்து விடும். ஏனென்றால் பிரச்சினையும்  , தீர்வும் வெவ்வேறு அல்ல. 

  • உலகம் ஒவ்வொருவரிடமும் உறைந்துள்ளது. எப்படி கற்பது என தெரிந்து விட்டால், கதவுக்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். உங்களை தவிர வேறு யாரும் அந்த சாவியை உங்களுக்கு தர முடியாது. கதவை உங்களுக்காக யாரும் திறந்து விட முடியாது. 


  • ஒரு நம்பிக்கை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தி கொள்வது, உங்கள் மனதில் இருக்கும் அச்சத்தின் அடையாளம். 

  •  நாம் அனைவருமே பிரபலமாக விரும்புகிறோம்.  ஏதோ ஒன்றை அடைய விரும்பும் அந்த கணமே நம் சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். 




Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு - பாரதிதாசன் கருத்தும் , மாற்று கருத்தும்


புத்தாண்டு பிரச்சினை பரபரப்பாக அலசப்ப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், நானும் எந்த முன் முடிவும் இல்லாமல் தரவுகளை தேடினேன்.. என்னால் எந்த முடிவுக்கும் வர இயல்லவில்லை..

ஆனால் திராவிட நாடுகள் என அழைக்கப்படும் ஆந்திரா , கர்னாடகா போன்றவற்றில் எல்லாம் ஏப்ரல்வாக்கில்தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என அறிந்து கொள்ள முடிந்தது..  ஜனவரிலொ மேலை நாடுகளில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.. மேலை நாடுகளுடன் சமரச முய்றசியாக தமிழ் ஆண்டு தொடக்கமாக ஜனவரியை வைத்து கொள்ள அன்றைய தமிழ் அறிஞர்கள் முயன்ரார்களா என தெரியவில்லை.. 
விபரம் தெரிந்ததும் எழுதுகிறேன்..
இப்போதைக்கு இரு வேறு கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன்.. 

********************************************************************************************
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்; நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

***************************************************************************************************************

பாரதிதாசன் சொன்னால் போதுமா ? - பழ கருப்பையா 

தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாண்டு காலமாய் சித்திரையிலேதான் தொடங்கியது. இடையில் சிறிது குழப்பம்; இந்தக் குழப்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உண்டானது! இப்போது மீண்டும் வண்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிட்டது!
 கருணாநிதி தையில்தான் தமிழாண்டு தொடங்குகிறது என்று போட்ட சட்டம் தலைமைச் செயலகத்தைத் தாண்டி தலையை நீட்ட முடியவில்லை.
 சட்டமன்றம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை போதாமையை ஈடுகட்டுவதற்கு குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்; ஒரு சட்டம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் கடல்கூட நூறு அடி உள்வாங்கி விடும் என்று நம்பியவர் கருணாநிதி! அதிகாரத்தின் தன்மை அதுதான்! அது மெல்ல மெல்ல ஒரு மனிதனைக் கடவுளாக்கிவிடும்; இரணியர்கள் இப்படித்தான் உண்டானார்கள்!
 ஆனால், மக்கள் வழக்கம்போல் தை முதல்நாளை அறுவடை நாள் மற்றும் தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகவும் தொடர்ந்து கொண்டாடி வருவதில் உள்நுழைந்து கருணாநிதியின் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!
 சித்திரைப் புத்தாண்டு அன்று இரவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழுடைத் தெய்வமான அம்மனோ சாமியோ குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அருள்பாலிப்பது வழக்கம். இரவு முழுவதும் நாகசுரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்று ஊரைத் தூங்க விடாமல் கிறங்க அடிக்கும்!
 இதில் போய் குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அவ்வாறு குறுக்குசால் ஓட்டுவதற்கு அவர் மறைமலை அடிகளையும் உழவர் குழுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.
 "தமிழ் விடுதலைதான் தமிழரின் விடுதலை' என்பதைப் புரிய வைத்தவர்கள் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரையிலானவர்கள்! மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் உழவர்கள் மட்டத்திலேயே தேங்கி விடாமல், அண்ணா அதை மக்கள் இயக்கமாக்கினார்.
 1920-ல் தொடங்கி 1970 வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலம்! ஒவ்வொரு இளையோனும் இளையோளும் தங்கள் பெயர்களை இளம்வழுதி, இளவழகன், செழியன், செங்குட்டுவன்,தேன்மொழி, கயல்விழி என்றெல்லாம் மாற்றிக்கொண்ட காலம்! சங்க இலக்கியம் போற்றப்பட்ட காலம்; சிலப்பதிகாரம் முன்னிறுத்தப்பட்ட காலம்; வள்ளுவன்தான் தமிழரின் முகம் என்று வலியுறுத்தப்பட்ட காலம்! அது தமிழரின் பொற்காலம்! பொற்காலத்தைச் சமைக்க ஓர் இயக்கம் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. பக்தி இயக்கம், சித்தர்களின் கழகம் என்று தமிழ்நாட்டு வரலாற்றில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் தோற்றுவித்தவர்கள் ஆளும்தரப்பினர்களாக இருந்ததில்லை.
 "அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் எம்.ஜி.ஆரின் இனஉணர்வுப் பாடல் 1970-க்கு முந்தியது.
 "முஸ்தபா முஸ்தபா; டோன்ட் ஒர்ரி முஸ்தபா' என்பது 1970-க்குப் பிந்தியது.
 நரேஷ், சுரேஷ், சந்தோஷ், ப்ரியா, அனுஷா என்பவைதாம் இன்றைய தமிழர்களின் பெயர்கள்!
 காங்கிரஸ் தலையாட்டி பொம்மைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு நாடாண்ட கருணாநிதி இவர்களை ஒழுங்காகப் பெயர் வைத்துக்கொள்ளச் சொல்லியும் ஒரு சட்டம் போட்டிருக்கலாம். மறைமலை அடிகளின் பெயரால் இதையும் செய்திருக்கலாம்!
 இவை அனைத்துமே அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடுகள்.
 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க., க. சுப்பிரமணிய பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் தமிழருக்கென ஒரு "தனி ஆண்டு' தேவை என்று திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்வது என்றும், ஆண்டின் தொடக்கமாக தை முதல்நாளைக் கொள்வது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் அந்த அறிஞர் குழு எடுத்த முடிவுக்குத்தான் தான் சட்டவடிவம் கொடுத்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.
 தமிழர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் வடமொழி ஆண்டுமுறை அவர்களுக்குரியது இல்லை. வடமொழி ஆண்டுமுறை மிகவும் குழப்பமானது. சித்திரபானு ஆண்டு ஒரு மன்னன் பிறந்தான் என்று சொன்னால் எந்த சித்திரபானு என்று கண்டறிய முடியாது. 3000 ஆண்டுகளில் 50 சித்திரபானு வந்து சென்றிருக்கும்.
 ஆகவே, அந்த ஆண்டு முறை குழப்பமானது என்பதாலும் அது தமிழர்க்கு உரியது அன்று என்பதாலும் அந்த ஆண்டு முறையை ஒழித்துக்கட்ட அறிஞர் குழு எண்ணியது என்பது சரியானதே!
 வள்ளுவன்தான் தமிழர்களை அடையாளப்படுத்தவந்த முகம் என்பதனால் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான அந்த வள்ளுவன் பெயரில் ஒரு தொடர் ஆண்டு முறையை அமைப்பதென அறிஞர் குழு முடிவெடுத்ததும் மிகச்சரியானதே.
 ஆனால், அதே மறைமலை அடிகள் தலைமையிலான குழுதானே தை முதல்நாள் தான் வள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லியிருக்கிறது; அதுமட்டும் கசக்கிறதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்பார்!
 500 புலவர்கள் கூடியெடுத்த முடிவு என்னும் ஒன்றே கருணாநிதி தான் எடுத்த நிலைப்பாட்டுக்குப் போதுமானது என்று கருதுகிறார்.
 500 புலவர்களும் நிகரற்றவர்கள்தாம்; ஆனாலும் 6 கோடித் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று கொண்டிருப்பதை புலவர்கள் கருத்தில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியவில்லை.
 சித்திரபானு, சுபானு, பார்த்திப என்பவை வடமொழி ஆண்டுகள்தாம்; ஆனால், சித்திரையும், வைகாசியும் வடமொழி மாதங்களா? அவை தமிழ் மாதங்கள் இல்லையா?
 ஆண்டு முறை தமிழர்க்கு இருந்ததை நம்மால் அறிய முடியவில்லை. ஆனி, ஆடி என்று மாதமுறையும் ஞாயிறு, திங்கள் என்னும் கிழமை முறையுமா தமிழர்க்கு இல்லாமல் போய்விட்டது?
 திருவள்ளுவர் ஆண்டு சித்திரையில் தொடங்குகிறது என்று பழைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் பழக்கத்தைக் கருத்தில்கொண்டும் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும்!
 ஆனால், அந்த அறிஞர் குழு அறிவார்ந்த மக்களை உள்ளடக்கியதுதான்! வடமொழி ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை என்று அன்றுவரை நம்பப்பட்டது!
 காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்த ஆறாச்சினத்தின் காரணமாக, வடமொழியோடு சேர்த்துச் சித்திரையையும் புறந்தள்ளிவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.
 மறைமலை அடிகள் தலைமையிலான அந்த அறிஞர் குழு தொன்றுதொட்ட நடைமுறையையும் மக்களிடையே ஆழமாக வேரோடி இருக்கும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று அறிவித்ததால் திருவள்ளுவராண்டு மக்களிடையே புழக்கத்திற்கு வராமலேயே போய்விட்டது!
 கருணாநிதிதான் இதற்குச் சட்டம்போட்டுப் பார்த்தாரே; கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தச் சட்டத்திற்குப் பயந்து எந்த மக்களாவது திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்களா? அது மக்கள் நினைப்பிலாவது இருக்கிறதா? குறைந்தது அவர் போட்ட சட்டத்திற்கு எ.வ. வேலுவாவது, பேரன் உதயநிதியாவது பயந்ததாகக் காட்டிக்கொண்டாவது கடைப்பிடித்ததுண்டா?
 மறைமலை அடிகள் தொடங்கிய தமிழ் இயக்கம் வெல்ல முடிந்தது; திருவள்ளுவர் ஆண்டு முறை மட்டும் வெல்லவில்லையே, ஏன்? சித்திரையை மாற்றித் தை என்று அறிவித்த நெருடல்தான் அதற்குக் காரணம்.
 கதிரவன் மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அதனின்று வெளியேறும் வரையிலான காலத்தை பழந்தமிழர்கள் சித்திரை மாதமாகக் கொண்டார்கள் என்று தெளிவான காலக்கணிதத்தை முன்வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!
 கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள்.
 இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது!
 பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.
 சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே?
 "பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே?
 பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது!
 ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்!
 ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்!
 தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும்.
 ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.
 திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்?
 ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு?
 திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்!
 சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்!
 நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்!
 "காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!


Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு - என் நிலைப்பாடு


புத்தாண்டு விடுமுறை என சந்தோஷமாக இருந்தேன். காலையில் சீக்கிரம் எழ தேவையில்லை, ஏதாவது படிக்கலாம் என நினைத்து கொண்டு இருந்த போது , நண்பர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் .. “  புத்தாண்டு சித்திரையா ? ”தை” யா ? உன்  நிலைப்பாடு என்ன ? “

கொஞ்ச நேரத்தில் இன்னொரு கால், வெளி மானிலத்தில் பணி புரியும் நண்பர் வேறொரு விஷ்யமாக பேசினான்.. பேச்சு முடிவடையும் நிலையில், சும்மா இருக்காமல், புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லி தொலைத்து விட்டேன். உனக்கு தமிழ் வரலாறு தெரியவில்லை என ஆரம்பித்து கொத்து பரோட்டா போட்டு விட்டான்..

காலம் என்பது எல்லை அற்றது. ஒரு வசதிக்காக நாட்களாக , ஆண்டுகளாக பிரித்து வைத்து இருக்கிறோம். 

ஒரு காலத்தில் ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு காலண்டர் வைத்து புத்தாண்டி கொண்டாடி வந்தனர்.,  ஆனால் உலக நாடுகளுடையே தொடர்பு அதிகரித்த நிலையில், பொதுவான கால வரையரை தேவைப்பட்டது.

எனவெ இப்போது கிட்டத்தட்ட பொதுவான காலண்டர் உருவாகி இப்போது 2012ல் இருப்பதை அனைவரும் ஒத்துகொண்டு விட்டோம்..

ஆனாலும் பழமையை விட்டு விடக்கூடாது என்பதும் உண்மையே..

முன்பு அனைவருமே ஏப்ரலில்தான் புத்தாண்டு கொண்டாடினார்களாம்.. அப்புறம் ஜனவரிக்கு புத்தாண்டு மாற்றப்பட்டாலும், சிலர் ஏப்ரலிலேயே கொண்டாடவே , அவர்கள் ஏப்ரல் ஃபூல் என அழைக்கப்பட்டார்களாம்..

அனைத்துமே மாறக்கூடியது.. இன்று நாம் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினாலும் , தை மாதத்தில் கொண்டாடினாலும் , இன்னும் 500 வருடங்கள் கழித்து இவைவும் மாறி விடும் என்பதே யதார்த்தம்..

சில வருடங்கள் முன்பு தமிழர்கள் ஒன்று கூடி , இனி தை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவோம் என முடிவு எடுத்தார்களாம். 
நல்லதுதான்..

ஆனால் அதை அண்ணா , காமராஜ் போன்றவர்கள் இதை நிறைவேற்றி இருந்தால் , ஏதோ நல்லது நடக்கிறது என எடுத்து கொள்ளலாம். ஆனால் இன்றைய அரசியல்வாதிகளுக்கு , இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் தகுதி இருக்கிறதா எனப்து சரியாக தெரியவில்லை..

தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடினால், பொங்கல் தினத்திற்கு இருக்கும் பெருமையும் போய் விடும், சித்திரைக்கு இருக்கும் பெருமையும் போய் விடும் என்ற கவலையும் இருக்கிறது..

ஆனால் யதார்த்தமாக யோசித்தால் , எதிலும் வெளி நாட்டை காப்பி அடிக்கும் நாம், ஜனவரியுடன் இணைந்து வரும் வகையில், தமிழ் ஆண்டு  துவக்கத்தை மாற்றி கொள்வது பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது..


ஆனால் இப்போதைக்கு , சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுபவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தை மாதம் கொண்டாடுபவர்க்ளுக்கு, அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள் 



Sunday, April 8, 2012

ஹாரி பாட்டர் பாணியில் ஜான் கிரிஷாம் நாவல்- வாசிப்பு அனுபவம்

போரும் அமைதியும் , One Hundred Years of Solitude   போன்ற சில புத்தகங்கள் படிப்பதற்காக எடுத்தேன்.. ஆனால் அவற்றை ஆரம்பிக்கு முன் , பொழுது போக்கு புத்தகம் ஒன்றை படித்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள படித்ததுதான் ஜான் கிரிஷாமின் Theodore Boone :half the man, twice the lawyer எனும் நாவல்..




பொழுது போக்கு நாவல்களுக்கு நான் எதிரி அல்ல. பொழுது போக்கு நாவல் என்ற பிரிவில் அந்த நாவல் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

பல தமிழ் நாவல்கள் என்னை ஏமாற்றி உள்ளன. எனவேதான் சற்று ஆங்கிலம் பக்கம் திரும்பினேன்..

இது போன்ற நாவல்களில்  நாம் இலக்கியத்தையோ, சிந்தனை தூண்டலையோ எதிர்பார்ப்பதில்லை.. வாசிக்க சுவையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்...

இந்த எதிர்பார்ப்பை நாவல் நிறைவேற்றியதா?

அவரது முந்தைய  நாவல்களுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இது ஒரு பதிமூன்று வயது சிறுவனை கதா நாயகனாகக் கொண்ட  நாவல் என்பது முக்கிய வித்தியாசம், ஹாரி பாட்டர் பாணியில் நான் எழுதக்கூடாதா என ஜான் கிரிஷாம் நகைச்சுவையாக இதைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 

அதற்காக அப் நார்மலாகவோ, சூப்பர் மேன் போலவோ அவன் எதுவும் செயவதில்லை. லாஜிக்கிற்கு உட்பட்டுதான் செயல்படுகிறான். 

அவரின் மற்ற நாவல்களை போல , இதுவும் கோர்ட் , வழக்கு என்றுதான் நாவல் செல்கிறது.  சொற்சிக்கனம் , நகைச்சுவை , கோர்ட் நடவடிக்கைகளை கண் முன் நிறுத்துதல் என பரபரவென நாவல் செல்கிறது..


 நம் கதா நாயகன் பள்ளி மாணவன். கோர்ட் நடவடிக்கைகளில் பெரிய ஈடுபாடு கொண்டவன். அந்த வயதில்யே தன்னை வழக்கறிஞராக நினைத்து கொண்டு பலருக்கு சட்ட ஆலோசனைகள் சொல்பவன். அவன் தோழியின் பெயர் ஏப்ரல்.

ஒரு கொலை வழக்கை வேடிக்கை பார்க்க செல்லும் அவன் , அந்த வழக்கின் போக்கையே மாற்றக்க்கூடிய  நிலை ஏற்படுவதே கதை..


கதையை விட , ஜான் கிரிஷாமின் எழுத்துதான் அதிகம் ஈர்க்கிறது. 
மனைவியை கொன்று விட்டதாக குற்றவாளி கூண்டில் நிற்பவனை , குற்றவாளி என நிரூபிக்கவும் காப்பாற்றவும் நடக்கும் வாதங்கள் அருமை. மனைவி  இறந்தால்  இன்ஸுரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதால்தான் கொலை நடந்தது என்ற வாதததை , எதிர் தரப்பு வழக்கறிஞர் கையாளும் ம் முறை அட என சொல்ல வைக்கிறது.. 

அவரது வாதம், பேச்சு , பாடி லாங்குவேஜ் என செமையாக கொண்டு செல்கிறார் ஜான் கிரிஷாம்..


அதே போல , 13 வயது கதானாயகன் விஷ்ய ஞானத்துடன் பேசுவதும், அதே நேரத்தில் சிறுவர்களுக்கு உரிய இயல்புடன் சித்திரிக்கப்பட்டு இருப்பதும் நல்ல பாத்திரப் படைப்பு.

 நிரபராதியை மாட்டி விடும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கப்போகிறார்களா அல்லது உண்மையான குற்றவாளி தப்பிக்க முயல்கிறானா என்ற சஸ்பென்ஸ்தான் நாவலின் முற்பாதி. அதன் பின் ஹீரோ எடுக்கும்  நடவடிக்கைகள் இரண்டாம் பாதி. 

பெரிய மைனஸ் என்றால், முக்கால் பங்கு நாவல் முடிந்தவுடன், முடிவு தெரிந்து விடுகிறது. அதன் பின் நாவலின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது.ஆனாலும் அவர் எழுத்தாற்றல் முழுதும் படிக்க வைத்து விடுகிறது..

ஏப்ரலின் அண்ணன் மற்றும் அக்காவின் பெயர்கள் ,  அதே சமயம் வயதை மீறாத லைட்டான ரொமான்ஸ் , நண்பர்களுக்கு அளிக்கும் சட்ட ஆலோசனை, வழக்கை பார்வையிட சக மாணவர்களுக்கு அனுமதி கேட்டு நீதிபதியுடன் பேசுதல், கோர்ட் நடவடிக்கைகளை வகுப்பில் விவரித்தல், மிருகங்கள் கோர்ட் , வழக்கின் முக்கிய சாட்சி முகம் காட்ட முடியாது என்ற ட்விஸ்ட்  என ரசிப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன..

263 பக்கங்களில் நல்ல எண்டர்டைனர்..


வெர்டிக்ட்

Theodore Boone :half the man, twice the lawyer - half suspense:  full entertainment 






Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா