Thursday, May 17, 2012

இளைப்பாறுதல் தரும் இணையற்ற இஸ்லாம் மகான் - தேடலில் கிடைத்த பொக்கிஷம்

கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என ஒரு முடிவுக்கு வந்து விட்டால் பிரச்சினை இல்லை. தேடலும் இல்லை.
நிம்மதியாக எரிந்த கட்சி எரியாத கட்சி விவாதம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கலாம்.

என்னை பொருத்தவரை எந்த முடிவுக்கும் நான் இது வரவில்லை. கடவுள் எனும் அனுபவத்தை பெற்றதில்லை. கடவுளை பார்த்ததில்லை. அதே சமயம் , கடவுள் என்பவர் இல்லை என அறுதி இட்டு சொல்லும் அளவுக்கும் ஆதாரங்களை சேகரிக்கவில்லை.

தேடல் தொடர்கிறது.

இந்த தேடலில் நான் அவதானித்த விஷ்யங்களில் ஒன்று, ” எம்மதமும் சம்மதம் , எல்லா மதங்களும் ஒரே விஷயத்தை சொல்கின்றன ” போன்ற கருத்துகள் வெறும் பிதற்றல்கள் என்பதே.

எல்லாமும் படிப்புதான் என்றாலும் , எஞ்சினியரிங் என்பது வேறு. மெடிக்கல் என்பது வேறு. எல்லாம் ஒன்றாக முடியாது.

அதே போல எல்லா மதங்களும் ஒன்று கிடையாது. ஒவ்வொன்றும் ஒரு பாதையை காட்டுகின்றன. நமக்கு பிடித்த பாதையை நாம் தீர்மானித்து கொள்ள வேண்டும்.  நடை முரையில் அப்படி செய்வதில்லை. நமக்கு பொருத்தமான பாதையை அறிவு பூர்வமாக யோசித்து தீர்மானிப்பதில்லை. எந்த மதத்தில் பிறக்கிறோமோ எந்த மதத்தை பின்பற்றுகிறோம். கடவுள் இல்லை என நம்பக்க்கூடிய குடும்பத்தில் பிறந்தால் , மத நம்பிக்கை இல்லாமல் வளர்கிறோம்.

என்னை பொருத்தவரை , எந்த முன் தீர்மானமும் இன்றி , தேடலில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த தேடலில் ஒரு பகுதியாக இஸ்லாமிய நூல்களை படிக்கும்போது வியப்பாக இருந்தது . ஒரு தொலைக்காட்சி வாங்கினால் , manual கொடுக்கிறார்கள் அல்லவா.. அதே போல வாழ்க்கைக்கு தேவையான செயல்முறை குறிப்பேடு போல , அத்தனை விஷ்யங்களும் இஸ்லாமிய நூல்களில் உள்ளன.

அதே போல இறை உணர்வு என்ற உன்னத நிலையை அடைய தெளிவான வழிமுறைகள் உள்ளன.

இதில் சுஃபி வழிமுறை என ஒன்று உண்டு. இந்த வழிமுறையை சில இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை.

மக்காவில் “ காபா” எனும் இறையாலயம் உள்ளது. இந்த ஆலயப்பணிக்கென்றே தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள் “ பனு சுஃபா “ எனும் குலத்தினர். இதில் இருந்தே சுஃபி எனும் பெயர் வந்தது.

இந்த சுஃபி வழிமுறையில் பல வகைகள் உள்ளன. சிஷ்தியா , காதிரியா , சுஹ்வர்த்தியா , நஃப்ஷ்பந்தியா என்ற நான்கு இந்தியாவில் பிரபலமாக உள்ளன . பாரசீக மொழியில் சுஃபி இலக்கியங்கள் ஏராளம். “ குல்ஷனே ராஸ் “ மற்றும் “இன்சானுல் காமில் “ ஆகிய இரண்டு நூல்கள் முக்கியமானவை.

சுஃபி நெறி என்ன சொல்கிறது ?  இஸ்லாம் மதத்தில் பிறந்து விட்டால் , ஆட்டோமேடிக்காக அல்லாவின் அருளை பெற்று விடலாம் என்ற கருத்து தவறு என்கிறது.

அல்லாவின் அருளை முயன்று பெற வேண்டும் என்கிறது சுஃபித்துவம். டெல்லிக்கு புதிதாக போகிறோம் . வழிகாட்டி ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா ? டில்லி பயணத்துக்கே இப்படி என்றால் ஆன்மீக பயணத்துக்கும் வழிகாட்டி தேவை என்கிறது சுஃபித்துவம். ஆனால் இந்த வழிகாட்டி இறைவனுக்கு நிகர் அல்ல . இதை சரியாக புரிந்து கொள்ளாமல் சில இஸ்லாமியர்கள் சுஃபித்துவத்தை எதிர்ப்பதுண்டு.

இந்த வழிகாட்டியை ஷைகு என்பார்கள். அவரிடம் “ முரீது “ எனும் தீட்சை பெற்று கடும் பயிற்சிகள் செய்தால்தான் அல்லாவின் அருள் கிடைக்கும் என்பது சுஃபித்துவம். “ கல்வத் “ எனும் யோக நிட்டைகள் போன்ற ஏராளமான விஷ்யங்கள் உள்ளன.

இந்த வழிதான் சரி என சொல்லவில்லை. இந்த வழிமுறைகளை பயன்படுத்தாமலேயே அல்லாவின் அருளை பெற முடியும்தான் . அல்லா அருள் எதற்கு , அன்றாட வாழ்க்கை ஜாலியாக நடந்தால் போதும் என்றும் வாழ முடியும்தான். அல்லாவை விட என் கடவுள்தான் பெரிது என சிலர் சொல்ல கூடும்தான்.

அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை. சுஃபித்துவம் என்பதை மட்டும் இப்போதைக்கு பார்க்கிறோம். அவ்வளவுதான்.


இப்படிப்பட்ட சுஃபி ஞானியர் உலகம் முழுக்க இருந்தாலும் , நம் தமிழ் நாட்டிலேயே ஒரு ஞானி இருந்து இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாது.
குணங்குடி மஸ்தான் என்ற பெயர் ஆன்மீக உலகிலும் , இலக்கிய உலகிலும் பிரபலம் என்றாலும் , சாதாரண மக்களிடையே பிரபலம் இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், ஆன்மீக சூப்பர் ஸ்டாராக இருந்து இருக்கிறார். அவர் பெயரால் சென்னையின் ஒரு பகுதி அழைக்க்படுகிறது.


அவர் ஓர் இஸ்லாமியர் என்பதால் இந்து மதத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் பாடல்கள் சிலவற்றை தவறாக புரிந்து கொண்ட இஸ்லாமியர்களும் , அவரை பெரிய அளவில் போற்றுவதில்லை . அவர் புத்தகங்களை தீயிட்டு அழித்த சம்பவங்களும் நடந்துள்ளன.


ராமனாதபுர மாவட்டம் , தொண்டியில் பிறந்தவர் அவர். கடும் ஆன்மீக பயிற்சிகளால் , உயர் நிலை அடைந்தார். பல இடங்கள் சுற்றி திரிந்து ஆன்மிக சேவைகள் செய்த இவர் , சென்னைக்கு வந்து சேர்ந்தார். ராயபுரம் பகுதியில் ஆஸ்ரம் அமைத்து தங்கினார். அவரை எதிர்த்தவர்கள் கூட , அவர் அருமை புரிந்து , பிறகு மனம் மாறினர்.

மத வேற்றுமை இன்றி அனைவரும் , அவரை மதித்தனர். தொண்டியார் என அழைக்கப்பட்டார். அவர் மறைவுக்கு பின் , தொண்டியார் பேட்டை என அவர் வாழ்ந்த இடம் அழைக்கப்பட்டு, பிறகு தண்டையார் பேட்டை என மாறியது.

******************************


குணங்குடி மஸ்தான் பாடல்களின் நெடு நாள் ரசிகன் நான். ஆனால் அவர் தர்க்கா சென்னையில் இருப்பது அல்ட்டிமேட் ரைட்டர் சொன்னபின் தான் எனக்கு தெரிந்தது. அல்ட்டிமேட் ரைட்டர் அந்த தர்க்காவிற்கு அழைத்தபோது , நான் சென்னையில் இல்லை. எனவே அவருடன் செல்ல முடியவில்லை. தனியாகவே கிளம்பினேன்.

அந்த தர்க்கா எங்கு இருக்கிறது என தெரியவில்லை. தண்டையார்பேட்டைக்கு பெயர் கொடுத்தவர் ஆயிற்றே . அனைவருக்கும் தெரியும் என நினைத்தேன்.
ஒருவர் சொன்ன வழியில் சென்று பார்த்தால் , அங்கு இருந்தது பள்ளி வாசல். அட பாவிகளா. பள்ளி வாசலுக்கும் , தர்க்காவுக்கும் வித்தியாசம் தெரியாதா?

சரி. இஸ்லாமியர்களிடன் கேட்கலாம் என்றால் , அவர்கள் சொன்ன தர்க்கா வேறு இடம்.

கடைசியில் ஃபேஸ்புக்கில் , நம் நண்பர்களிடம் கேட்டேன்.   நண்பர்கள் சுரேஷ் குமாரும் , செல்வ குமார் கணேசனும் தெளிவாக விலாசம் சொன்னார்கள்.


செல்வகுமார் கணேசன்
சுரேஷ் குமார்




அவர்கள் இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு , அந்த ஞானியின் தர்க்கா சென்றேன். அந்த பகுதியில் , மஸ்தான் கோயில் என அது பிரபலமாக உள்ளது.



பலர் பல வேண்டுதல்களுடன் வந்து இருந்தார்கள் . தனியாக போனவன் நான் மட்டுமே. ஆனால் தனியாக போனதும் நல்லதாக போயிற்று.
ஒருவர் மட்டுமே அமர்ந்து தொழுகை செய்யக்கூடிய  , நிலவறை அங்கே இருக்கிறது. குணங்குடியார் அங்குதான் தொழுகை செய்வாராம்.

நான் தனி ஆள் என்பதால், அங்கு அமர்ந்து தியானிக்க அனுமதித்தார்கள். தியானிக்க சரியான இடம்.  கண் மூடி அமர்ந்தேன். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

இவ்வளவு நேரம் தியானித்தெல்லாம் ரொம்ப நாள் ஆகி விட்டது. மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் வர வேண்டும் என எண்ணமிட்டவாறு வெளியே வந்தேன். அது வரை வாட்டி வதைத்த வெயில் குறைந்து, குளிர்ச்சியாக இருந்தது. மனமும் குளிர்ந்து இருந்தது..

******************************************************

ஆச்சிதனைத்தேடி ஆசை வைத்து அலையாமல்
பூச்சியாய் ஏனோ பிறந்தேன் பராபரமே




தந்தை தாய் என்றே தயங்குகின்ற பாவி மனக்கண்
திறக்க வந்தருள் செய் கண்ணே றகுமானே

***************************************************

சில குறிப்புகள்.

1. வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது அந்தந்த தலங்களுக்கு உகந்த பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது நல்லது. இந்த தர்க்காவிற்கு எடுத்து செல்ல வேண்டியது , நல்லெண்ணெய் அல்லது நெய் ( தீபம் ஏற்ற )

2. மிகவும் பட்டினியாகவோ. அதிகம் சாப்பிட்டு விட்டோ செல்ல வேண்டாம். தியானிப்பது கடினம்


3. வேறு மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது , அந்த தலத்திற்குரிய நெறிமுறைகளை அனுசரிப்பது நல்லது.  ( தர்க்கா செல்லும் அன்று , நான் வேறு இந்து கோவில்களுக்கு செல்வதை தவிர்த்தேன். இந்து மத அடையாளங்கள் இல்லாமல் பார்த்து கொண்டேன் ) .



 நிலவறை




1 comment:

  1. yes, I went here with charu, selvakumar ganeshan, karuppasamy,and one kerela poet Mr.santhan(who said about masthan to charu)
    nice experience ! I like your well cleared POST

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா