Sunday, August 12, 2012

உலக புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை - குதிரை வண்டி

சில கதைகள் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் . அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. சிறுகதை மன்னன் செக்கோவ் இதைப் பற்றி மிகவும் பாராட்டி எழுதி இருக்கிறார். இந்த கதை அன்றைய ரஷ்யாவை பிரதிபலித்தாலும் , இன்றும் பொருந்த கூடிய கதை.
படித்து பாருங்கள். வலைப்பதிவுகளில் பெரிய இடுகைகளை படிக்க முடியாது என்ற ய்தார்த்தம் அறிந்து சற்று சுருக்கி இருக்கிறேன்.


குதிரை வண்டி - நிக்கோலாய் வசிலெயெவிச் கோகோல் 
*******************************************
ராணுவ அலுவலகம் அமைக்கப்பட்டதில் இருந்து அந்த ஊர் உயிர் துடிப்பு மிக்கதாகிவிட்டது. அதுவரை சோம்பலான , சலிப்பூட்டும் ஊராக அது இருந்து வந்தது. அந்த ஊர் வழியாக பயணம் செய்ய நேரிட்டால் , அழுது வடிந்து கொண்டு இருக்கும் சிறிய வீடுகளை காணும்போது , உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை எழுத நினைத்தால்கூட எழுத முடியாது. உங்கள் பணம் அனைத்தையும் இழந்து விட்டாலோ அல்லது உங்கள் நிறுவனத்தில் பெரிய தவறு ஒன்றை செய்து விட்டாலோ ஏற்படுவது போன்ற ஒரு சங்கடமான மன நிலைதான் உண்டாகும். 

               தென் ரஷ்ய நகரங்களில் வழக்கமாக செய்வது போல , மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இருந்தன. யாரும் யாரையும் சந்தித்து கொள்வதில்லை. லேசாக ஒரு தூறல் விழுந்தால் போதும் . சாலை முழுதும் சகதியாகிவிடும். தப்பித்தவறி அந்த ஊர் வழியாக பயணம் செய்யும் பயணிகள் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த ஊரை கடந்து செல்ல , தம் குதிரைகளை துரிதப்படுதுவார்கள். 
      ஆனால் குதிரைப்படை அலுவலக்ம் அங்கு அமைக்கப்பட்டவுடன் , எல்லாமே மாறிவிட்டது. தெருக்கள் உயிர் பெற்று , புதிதாக தோற்றம் அளித்தன. ராணுவ அதிகாரிகள் கம்பீரமாக சாலைகளில் செல்வதை, அந்த ஊர் வாசிகள் தம் சிறிய வீடிகளில் இருந்து பார்த்து ரசிப்பது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. அந்த அதிகாரிகளும் , அவர்கள் செல்லும் வண்டிகளும் , ஆடைகளும் நகரவாசிகளுக்கு நல்ல பொழுது போக்காக இருந்தது. 
                         
படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் தனது இல்லத்தை அங்கே மாற்றி கொண்டவுடன், அந்த ஊரின் உயிர்த்துடிப்பு மேலும் அதிகரித்தது. அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த அண்டை ஊர் காரர்கள் எல்லாம் அதிகாரிகளை சந்திக்கும் பொருட்டும் , விருந்துகளுக்காவும் அந்த ஊருக்கு வர தொடங்கினர். 

   ஒரு சுபமுகூர்த்த நாளில் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு பிரமாண்டமான விருந்துக்கு அழைப்பு விடுவித்து விட்டார் ஜெனரல். அதற்கான ஏற்பாடுகள் பிரமிக்க வைத்தன. சமையலறை கத்திகள் எழுப்பும் ஓசை வெகு தொலைவு வரை கேட்டு கொண்டு இருந்தது. ஜெனரலின் வீட்டு முற்றம் முழுதும் விருந்தினர்களின் வாகனங்களால் நிரம்பி இருந்தது. அதிகாரிகள், கனவான்கள்   மற்ற ஆடவர்கள் வந்து இருந்தனர். அவர்களில் முக்கியமாவர் பித்தாகரஸ் பித்தாகொரோவிச் செர்டோகவுட்ஸ்கி என்ற  நிலக்கிழார்தான். பேச்சு வன்மை மிக்க அவன் , அந்த மாவட்டத்தில் முக்கியமான ஒருவன்.  குதிரைப்படை பிரிவில் சேவை ஆற்றியவர் அவன். விருந்துகளில் தவறாமல் கலந்து கொள்வான். அவர் செல்வாக்கு மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சில “அசம்பாவித “ சம்பவங்களால் அவன் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டான். தவறு அவன் மீதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் செல்வாக்கு இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

அவன் எப்போதுமே மிடுக்கான ராணுவ அங்கியைத்தான் அணிவான் அழகான ஒரு பெண்ணை மணந்து இருந்தான். வரதட்சணையாக கணிசமான பணம் கிடைத்து இருந்தது. இந்த பணத்தில் சில குதிரைகள் வாங்கி இருந்தான். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவன் ஓர் உயர் குடிமகனாக காட்சி அளித்தான். அவனைத்தவிர மற்ற விருந்தினர்களைப் பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரும்பாலும் அதிகாரிகள்தான் வந்து இருந்தனர். ஜெனரல் சற்று பருத்த மனிதர்தான். ஆனால் அவர் நல்லவர் என்றே அவர் ஊழியர்கள் சொன்னார்கள். அவர் குரல் கணீர் என இருக்கும்.

விருந்து அற்புதமாக இருந்தது.  பல தரப்பட்ட உணவுகள் . விருந்துக்காக பல மணி நேரங்கள் செலவிடப்பட்ட உழைப்பு விருந்தின் சுவையில் தெரிந்தது. அருமையான கோடைக்காலம் , நன்றாக திறந்து விடப்பட்டு இருந்த சாளரங்கள் , மேஜையில் ஐஸ் கட்டிகளால் நிரப்பப்பட்டு இருந்த தட்டுகள் , சூடான சுவையான உரையாடல்கள் , ஜெனரலின் சத்தமான குரல், ஷாம்பெய்ன் என எல்லாம் கச்சிதமான ஒத்திசைவில் இருந்தன. விருந்தினர்கள் திருப்தியுடன் சாப்பிட்டு எழுந்தனர். சுருட்டை பற்ற வைத்தபடி , காஃபி கோப்பைகளுடன் வெளியே வந்தனர்.

இப்போது அவளை பார்க்க இருக்கிறோம் “ என்றார் ஜெனரல்.  “இதோ , என் அன்புக்குரிய இவர் “  தன் ஊழியரான இளம் அலுவலரை சுட்டிக் காட்டினார் “ அந்த குதிரையை அழைத்து வருவார். கனவான்களே , நீங்களே பாருங்கள் “ என்றார். 

    சுருட்டு புகையை ஆழமாக இழுத்தபடி இந்த வார்த்தைகளை சொன்னார். சுருட்டு புகை மேகம் போல அவரை சூழ்ந்து இருந்தது. 
அந்த குதிரையின் பெயர் அக்ரஃபெனா இவனோவ்னா. வலிமையாகவும் , தைரியமாகவும் காட்சி அளித்தது. ஜெனரல் அதை திருப்தியுடன் பார்வையிட்டார். மற்றவர்கள் அதை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். சிலர் அதன் அழகை தொலைவில் இருந்தே ரசித்தனர்.

.செர்டோகவுட்ஸ்கி அந்த குதிரையின் அருகே சென்றான்.  “ இவள் மிக மிக நன்றாக இருக்கிறாள் “ என்றார் செர்டோகவுட்ஸ்கி ., “  நல்ல வடிவமைப்பில் இருக்கிறாள். இவள் எப்படி நடந்து கொள்கிறாள் என கேட்க மேதைகையீர் அனுமதிப்பீர்களா ? “  

       “ மிக நன்றாக இருக்கிறாள். ஆனால் அந்த முட்டாள் மருத்துவன் சில தவறான மருந்துகள் கொடுத்து விட்டான். அத்னால் இரண்டு நாட்கள் கொஞ்சம் பிரச்சினை.அவ்வளவுதான் ” 


     “ இவள் அருமையானவள். மிக அருமையானவள்.   இவளை பூட்ட்டுவதற்கான வண்டி மேதைகையீரிடம் இருக்கிறதா ?
 “  இவளை வண்டியில் பூட்ட முடியாது. இவள் சவாரி குதிரை “


” எனக்கு தெரியும். நான் கேட்டது , மேதைகையீர், மற்ற குதிரைகளுக்கு ஏற்ற குதிரை வண்டிகள் உங்களிடம் இருக்கிறதா ?”

          ” இல்லை. அப்படிப்பட்ட வண்டிகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்களுக்கு முன் , தற்போதைய பாணியில் , குதிரை வண்டி ஒன்று வாங்க விரும்பினேன். பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் என் சகோதரனுக்கு இதைப் பற்றி எழுதினேன். ஆனால் அவனால் வாங்கி அனுப்ப முடியுமா என தெரியவில்லை”

   ” மேதகையீர். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் “ கர்னல் குறுக்கிட்டார் ” வியன்னாவில் செய்யப்படும் குதிரை வண்டிகளுக்கு நிகர் எதுவும் இல்லை “


    “ சரியாக சொன்னீர் “
“ என்னிடம் ஒரு அட்டகாசமான வியன்னா வண்டி இருக்கிறது., மேதகையீர் “ சொன்னான் செர்டோகவுட்ஸ்கி .

 “ அந்த வண்டியில்தான் இங்கு வந்தீர்களா ?

 “ இல்லை. அதை சில சந்தர்ப்பங்களில்தான் பயன்படுத்துவேன்.  மிக விசேஷமானது அது. இறகைபோல லேசாக இருக்கும். அதில் நீங்கள் அமர்ந்தால் , தொட்டிலில் இருப்பது போல உணர்வீர்கள் “ 

” அந்த அளவுக்கு வசதியானதா ? “

“ மிக மிக வசதியானது. இருக்கைகள் , சுருள் கம்பிகள் . என ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கும் “ 

” ஒஹோ ! அற்புதம் “

" அதில் என்னவெல்லாம் ஏற்றி செல்ல முடியும் தெரியுமா! மேதகையீர், இதைப் போன்ற ஒன்றை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. பத்து போத்தல்கள் ரம் , இருபது பவுண்ட் புகையிலை , ஆறு சீருடைகள் மற்றும் இரண்டு சுருட்டு பைப்புகள் , உள்ளதிலேயே நீளமான பைப்புகள் , மேதகையீர். இதில் ஏற்றலாம் “

 “ வெகு அருமை “ 

 “ இதன் விலை 4000 ரூபிள்கள், மேதகையீர் “

  “ கண்டிப்பாக இவ்வளவு விலைக்கு தகுதியானதுதான். நீங்களே வாங்கினீர்களா  ?

   “ இல்லை , மேதகையீர். தற்செயலாகத்தான் எனக்கு கிடைத்தது. என் பழைய நண்பன் வாங்கினான். அவனுடன் இருப்பது இன்பம் தருவதாக இருக்கும் , மேதகையீர்.  நாங்கள் நெருங்கிய நண்பர்கள். என்னுடையதெல்லாம் அவனுடையது.அவனுடையதெல்லாம் எனது. நாளை என் வீட்டிற்கு வந்து விருந்துண்டு மேதகையீர் என்ன கவுரவிப்பீர்களா? வந்தால் அந்த வண்டியை பார்க்கலாம் “
   
” என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் தனியாக வர இயலாது. இந்த அலுவர்களையும் அழைத்து வர சம்மதீப்பீர்கள் என்றால்... “

” அவர்களும் வர வேண்டும் என கெஞ்சி கேட்டு கொள்கிறேன். கனவான்களே , உங்களை என் வீட்டில் பார்ப்பதை பெரிய கவுரவமாக எண்ணுவேன் “

கர்னல், மேஜர் மற்றும் மற்ற அலுவலர்கள் செர்டோகவுட்ஸ்கிக்கி நன்றி தெரிவித்தனர். 

   “ என்னுடைய கருத்து என்னவென்றால் , மேதகையீர் , ஒன்றை வாங்குகிறோம் என்றால் அது சிறப்பானதாக இருக்க வேண்டும். அது சிறப்பானதாக இல்லாவிட்டால் , அதை வாங்கும் முயற்சியே தேவை அற்றது.  நாளை என் வீட்டிற்கு வந்து என்னை கவுரவித்தால் , அதில் நான் செய்துள்ள வசதிகளை உங்களுக்கு காட்டுவேன் “

 புகையை ஊதியவாறு பார்வையிலேயே ஜெனரல் சம்மதித்தார். செர்டோகவுட்ஸ்கி மகிழ்ந்து போனான். என்ன உணவுகள் எல்லாம் ஏற்பாடு செய்து விருந்தினர்களை மகிழ்விக்க வேண்டும் என மனதிலேயே திட்டமிடத் தொடங்கினார். அந்த கனவான்களை நோக்கி புன்னகைத்தார். அவர் மீது அவர்கள் கவனம் அதிகரித்து இருப்பதை உணர்ந்தார். கண்களில் தெரிந்த உணர்ச்சிகளில் இருந்தும் , தலை அசைப்பில் இருந்தும் அவர்கள் கவனத்தை உணர முடிந்தது. திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. 


உடனடியாக வீட்டுக்கு சென்று விருந்து ஏற்பாடுகளை கவனிக்க நினைத்தான். தொப்பியை எடுத்து கொண்டு கிளம்ப ஆயத்தமானான். ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் ஜெனரலோடு இருக்கலாமே என ஏனோ தோன்றியது.

 சீட்டாட்டம் தொடங்கியது. தானும் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என குழம்பினான். ஆனால் சிலர் அவரை அழைத்தனர். அழைப்பை மறுப்பது நாகரிகமல்லவே. எனவே ஆட்டத்தில் அமர்ந்தான். எப்படியோ ஒரு மது கோப்பை அவன் கைக்கு வந்து சேர்ந்தது.  அதிகம் யோசிக்காமல் , அதை குடித்து முடித்தான். சில ஆட்டங்களுக்கு பிறகு இன்னொரு கோப்பையும் குடித்தான் அவர் வாய் முணுமுணுத்தது

 “  நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும் , நண்பர்களே “

  புதிய ஆட்டம் தொடங்கியது. உரையாடல்கள் சூடு பிடித்தன. ஒரு கேப்டன் சோஃபாவில் வசதியாக சாய்ந்து அமர்ந்தபடி, வாயில் சுருட்டு ஒன்றை புகைத்து கொண்டு , தன் வீரதீர பிரதாபங்களை சொல்லிக்கொண்டு இருந்தார். செர்டோகவுட்ஸ்கி அவ்வப்போது தான் இருந்த இடத்தில் இருந்தபடியே உரையாடல்களில் கலந்து கொண்டான். “ எந்த வருடம்? “ “ எந்த படைப்பிரிவில் ? “ என கேள்விகளை சம்பந்தமே இல்லாமல் எழுப்பினான். இரவு உணவுக்கு சற்று முன் சீட்டாட்டம் முடிந்தது. செர்டோகவுட்ஸ்கி ஏராளமாக வென்று இருந்தார். ஆனால் வெற்றி தொகையை எடுத்து கொள்ளவில்லை. 

. அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஒயினுக்கும் குறைவில்லைசெர்டோகவுட்ஸ்கியை சுற்றி போத்தல்கள் இருந்ததால் , விருப்பம் இல்லாம்லேயே தன் குடுவையை நிரப்பி கொண்டு இருந்தான். அதிகாலை மூன்று மணிக்கு அனைவரும் கிளம்பினர். வண்டிக்காரன் அவரை அவன் வீட்டில் விட்டு சென்றான். அவன் மனைவி வெள்ளை ஆடை அணிந்து தூங்கி கொண்டு இருந்தாள் . அவள் அருகில் சென்று படுத்தார். திடுக்கிட்டு கண் விழித்த அவள் ,  தன் கைகளை அவரை நோக்கி நீட்டினாள். ஆனால் அவளை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள். 

     அவள் மிகவும் தாமதமாகவே எழுந்தாள். தன் கணவன் பலமான குறட்டை சத்தத்துடன் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தாள். நான்கு மணிக்குதான் அவன் வந்தான் என்பதை நினைவுக்கு வந்தது , எனவே அவனை எழுப்பாமல், முகம் கழுவ சென்றாள். கண்ணாடியில் தன்னை பார்த்த அவள் , இந்த காலையில் தான் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டாள் . இந்த எண்ணம் தோன்றியதும் , கண்ணாடி முன் வழக்கத்தை விட அதிக நேரம் செலவழித்தாள். பின் அழகாக ஆடை அணிந்து கொண்டு தோட்டத்துக்கு சென்றாள்.

  சீதோஷ்ண நிலை அருமையாக இருந்தது. சூரியன் தன் இனிமையாக கதிர்களை வீசிக்கொண்டு இருந்தான். ஆனால் இனிமையான இதமான குளிரும் நிலவியது. சூரியனின் இதமான கதகதப்பினால் , மலர்கள் இனிமையான வாசம் வீசின. மதியம் ஆகி விட்டதையும் . தன் கணவன் இன்னும் தூங்குவதையும் அவள் கவனிக்கவில்லை.  தொலைவில் ஏதோ வண்டி சத்தம் கேட்டது. உற்று கவனித்தாள் . ஒன்றன் பின் ஒன்றாக பல வண்டிகள் வருவதை கவனித்தாள். ஒரு வண்டியில் ஜெனரலும் , கர்னலும் வந்து கொண்டு இருந்தனர். மேஜர் , கேப்டன் , அலுவலர்கள் என பலர் வந்து கொண்டு இருந்தனர். 

” அவர்கள் இங்கா வருகிறார்கள்?; அவள் எண்ணமிட்டாள் “ கடவுளே இங்குதான் வருகிறார்கள் “

இன்னும் தூங்கி கொண்டு இருந்த கணவன் அருகே ஓடினாள்

“ எழுந்திருங்கள். சீக்கிரம் “ அலறினாள்.

“ என்ன ? என்ன ஆச்சு ? “ முனகினான் செர்டோகவுட்ஸ்கி .கண்களை திறக்காமலேயே சோம்பல் முறித்தான். 

” விருந்தாளிகள் வந்து இருக்கிறார்கள். கேட்குதா? . விருந்தாளிகள் “

” விருந்தாளிகள்? என்ன விருந்தாளிகள் ? “  முணகினான் அவன் . “ சரி.ஒரு முத்தம் கொடேன் “

“ சீக்கிரம் எழுந்திருங்கள்.. ஜெனரலும் மற்றவர்களும் வந்து இருக்கிறார்கள்”

“ ஜெனரலா? வந்து விட்டாரா? என்னை ஏன் எழுப்பவில்லை? விருந்து தயாரா ? ”

“ என்ன விருந்து ? “

“ ஆனால் நான் தான் விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னேனே ?”

“ விருந்தா? நான்கு மணிக்கு வந்து படுத்தவர்தான். என் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் தூங்கி விட்டீர்கள். நானும் தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டேன் “

இடி விழுந்தது போல கொஞ்ச நேரம் அசையாமல் நின்றான் செர்டோகவுட்ஸ்கி . கண்கள் நிலைகுத்தி போய் இருந்தன. திடீர் என படுக்கையில் இருந்து குதித்தான்.

“ என்னவொரு முட்டாள் நான் “ தலையில் அடித்து கொண்டான். ” அவர்களை நான் தான் அழைத்தேன். வந்து விட்டார்களா? “

“ கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் “


 “ அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். நான் வீட்டில் இல்லை என சொல்லி விடு. காலையிலேயெ சென்று விட்டேன் என்றும் வீட்டுக்கு வர மாட்டேன் என்றும் சொல்லி விடு. பணியாட்களிடமும் சொல்லு. புரியுதா.? சிக்கிரம் “
சொல்லி முடித்ததும் ஒளிந்து கொள்ள இடம் தேடினான். வண்டியை நிறுத்தும் இடம்தான் பாதுகாப்பு என நினைத்து அந்த அறைக்கு ஓடி சென்றான். குதிரை வண்டியில் ஏறி கதவை மூடிக்கொண்டான். இன்னும் பாதுகாப்பு கருதி ,போர்வையால் தன்னை போர்த்தி கொண்டான்.

ஜெனரலும் மற்றவர்களும் வீட்டிற்குள் வந்தனர்.

“ ஐயா வீட்டில் இல்லை “ பணியாள் சொன்னான்.

“ என்ன? இல்லையா? விருந்துக்கு வருகிறாரா இல்லையா ?

“ இல்லை.. நாளைதான் வீடு திரும்புவார்”

“  அட கடவுளே” என்றார் ஜெனரல்

“  நல்ல காமெடி “ சிரித்தார் கர்னல்.


” இல்லை .இல்லை. இதை பொறுத்துகொள்ள முடியாது. நம்மை வரவேற்க முடியாவிட்டால் , ந்ம்மை ஏன் அழைத்தான் “ ஜெனரல் கோபத்தில் கொந்தளித்தார்.

” என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,. மேதகையீர் , எப்படி இது போல நடந்து கொள்ளலாம் “  ஓர் இளம் அதிகாரி ஒத்து ஊதினார்.

“ என்ன சொன்னாய்? “ வினவினார் ஜென்ரல். அந்த அதிகாரியை இரண்டு முறை சொல்ல சொல்லி ரசிப்பது ஜென்ரலின் வழக்கம்

” என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,. மேதகையீர் , எப்படி இது போல நடந்து கொள்ளலாம் “ 


” ஆமா..ஏதாவது பிரச்சினை என்றால் நம்மிடம் சொல்லி இருக்க வேண்டும் “

” இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. வீட்டுக்கு போகலாம் “ என்றார் கர்னல்.


” கண்டிப்பாக . ஆனால் அவனது வண்டியை பார்த்து விட்டு செல்லலாமே. அதை எடுத்து கொண்டு சென்று இருக்க மாட்டான்  . தம்பி  , வா இங்கே “

” என்ன வேண்டும் மேதகையீர் “ பணியாள் ஓடி வந்தான்


 ” உன் எஜமானரின் புதிய வண்டியை காட்டு “ 


” அன்பு கூர்ந்து இந்த வண்டி அறைக்கு வாருங்கள் “ 


ஜென்ரலும் மற்றவர்களும் வண்டி நிறுத்தும் அறைக்குள் நுழைந்தனர்

அந்த வண்டியை கவனமாக பார்த்தார்கள். சக்கரங்களையும் , சுருள் கம்பிகளையும் கவனித்தனர்.

“ சிறப்பாக ஒன்றும் இல்லையே” என்றார் ஜெனரல் . “ ரொம்ப சாதாரணமாகத்தான் இருக்கிறது “ 
 “ பார்க்க ஏதும் இல்லை “ என்றார் கர்னல் “ சிறப்பம்சம் ஒன்றுமே இல்லையே”

” எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மேதகையீர் , இது 4000 ரூபிள் மதிப்பு பெறாத வண்டி “ என்றார் இளம் அதிகாரி.

“என்ன சொல்கிறாய்? “

” எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மேதகையீர் , இது 4000 ரூபிள் மதிப்பு பெறாத வண்டி “ 
” நான்காயிரமா? இரண்டாயிரம் கூட பெறாது. எதற்கும் உட்புறத்தையும் பார்த்து விடுவோம். ஒருவேளை அதில் சிறப்பம்சம் இருக்க கூடும் . திறந்து பாருங்கள் ”

திறந்ததும் உள்ளே இருந்த செர்டோகவுட்ஸ்கியை அனைவரும் பார்க்க முடிந்தது. 

“ அட . நீ இங்கேயா இருக்கிறாய்? “ ஜெனரல் வியப்புற்று விட்டார்.
அவனை மீண்டும் மூடி வைத்து விட்டு , தன் பரிவாரங்களுடன் கிளம்பி சென்றார். 

***********************************************




2 comments:

  1. //// அவர் ஓர் உயர் குடிமகனாக காட்சி அளித்தான். ///

    அவன்-அவர் என மாற்றி மாற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    கலோனல் என்பது கர்னல் என இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அவசரத்தில் நிகழ்ந்த தவறுக்கு வருந்துகிறேன் . மன்னிக்கவும் . சுட்டிகாட்டியதற்கு நன்றி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா