பொழுது போக்குகாக பல ஆங்கில நாவல்கள் படித்தாலும் , என்னை முதன் முதலாக ஈர்த்த நாவல்கள் அயன் ராண்ட் நாவல்கள்தான் . அந்த அளவுக்கு வலிமையான எழுத்து அவருடையது. ஆனால் அவர் எழுத்து , வெறும் பிரச்சாரமாக நின்று விட்டதே என்ற ஆதங்கமும் இருந்தது.
நாம் என்பது பொய்யானது , நான் என்பதே நிஜம் என்ற கருத்தை வலியுறுத்தியே அவர் நாவல்கள் இருக்கும். கதா நாயகன் அவர் கருத்தை வலியுறுத்தும் நல்லவனாக இருப்பான் . எதிர் கருத்து கொண்டவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். இந்த டெம்ப்ளேட்டில் அவர் நாவல்கள் இருக்கும்.
நான் , நாவல் என்ற முரண்பாட்டு பிரச்சினையை , இவர் சார்பு ஏதும் எடுக்காமல் அலசி இருந்தால் , அருமையாக இருந்து இருக்கும் என அவ்வப்போது நினைப்பதுனடு. அப்படி ஒரு நாவல் வந்தால் படிக்க ஆவலாக இருந்தேன் .
வேறொரு கதை அம்சம் கொண்ட இன்னொரு நாவலில் , இந்த பிரச்சினை பல மடங்கு அருமையாக , ஆழமாக , நடு நிலையாக அலசப்பட்டு இருப்பதை , சமீபத்தில் படித்து ஆச்சர்யமும் , மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இந்த பிரச்சினை நாவலின் மைய இழை அல்ல.. தத்துவம் மதம், காதல் , கலை , அதிகாரம் , மதம் என பலவற்றை தொட்டு செல்கிறது நாவல்.
அந்த நாவல்தான் என் பெயர் சிவப்பு.
துருக்கி நாவல். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு , ஆங்கிலம் வழியாக தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல் பந்திலேயே சிக்சர் அடித்து பேட்டிங்கை ஆரம்பிப்பது போல அதிரடியாக நாவல் தொடங்குகிறது. ஒரு பிரேதம் தன் கதையை சொல்வது போல கதை தொடங்குகிறது. ஆரம்பமே ஆவலை தூண்டுவது போல இருப்பதால், விறுவிறுப்பாக படிக்க ஆரம்பிக்கிறோம். வசீகரன் எஃபெண்டி என்ற நுண்ணோவியன் ஏதோ சில காரணங்களாக கொல்லப்பட்டு இருக்கிறான என்பது தெரிகிறது. கொன்றவன் வில்லனாக இருப்பான் என நினைத்து படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் விரைவிலேயே நம் எண்ணம் தவறு என நம் தோல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நம் வாசிப்பு தொடங்குகிறது.
கொலையுண்டவன் முதல் அத்தியாயத்தில் பேசுகிறான் என்றால் கொலைகாரன் தன் பார்வையில் நிகழ்ச்சியை இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறான். இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொருவர் பார்வையில் நக்ர்வதால் , நிகழ்ச்சிகளைப் பற்றி முழுமையான பார்வை கிடைக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கதை நிகழ்கிறது.
இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு , ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவரும் சுல்தான் ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்காக , திருவிழா மலர்களையும் , தன் பெருமையை வெனிசீய மன்னருக்கு எடுத்தியம்பும் வகையில் , தன் உருவப்படத்தையும் உருவாக்க உத்தரவிடுகிறார். இந்த பணி ரகசியமாக நடக்கிறது .
எனிஷ்டே எஃபெண்டி தலைமையில் தலை சிறந்த ஓவியர் குழு இந்த பணியை மேற்கொள்கிறது . நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன் எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்கள் இந்த குழுவில் உள்ளனர்.
இந்த “வசீகரன்” தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால் முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டவன் . அவனை கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இது ஒரு புறம்.
கருப்பு என்ற ஓவியனின் மாமாதான் இந்த எனிஷ்டே எஃபெண்டி. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கருப்பு இஸ்தான்புல் வருகிறான். மாமா மகளான ஷெகூரேவை காதலித்து , அந்த காதலில் தோல்வி அடைந்த வரலாறு இவனுக்கு உண்டு. இவன் ஊருக்கு திரும்பி வரும்போது , அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறாள். போருக்கு சென்ற அவள் கணவன் திரும்பி வரவில்லை. இறந்து விட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பது தெரியாததால் அவள் வாழ்க்கை குழப்பத்தில் இருக்கிறது. அவள் கணவன் இறந்து விட்டான் என்பது உறுதியானால் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அந்த மரணம் உறுதியாக தெரியவில்லை. கணவனின் தம்பிக்கு அவள் மேல் ஆசை.
இது ஒரு கதை.
இதற்கிடையில் சமூக அமைப்பு எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது. பாரம்பரிய இஸ்லாம் மதத்துக்கு எதிரான போக்கை நுஸ்ரத் ஹோஜா போன்றோர் கண்டிக்கிறார்கள். இதை மத விரோதம் என்கிறார்கள். சிலரோ அவர்களையே கிண்டல் செய்கிறார்கள். இந்த போக்கு ஓவியத்திலும் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய பாணிக்கும் , வெளி கலாச்சார பாணியிலான நவீன ஓவியத்துக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
இந்த நிலையில் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்த நிலையில், கணவனின் தம்பியுடன் தான் அவர் மகள் சென்றாக வேண்டும் . இதை தவிர்க்க கருப்பு , மாமா மகளை மணந்து கொள்கிறான். அவன் தான் , மாமா மகளை மணக்கும் பொருட்டு , எனிஷ்டே எஃபெண்டியை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
உண்மையான கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டிய நெருக்கடி கருப்பு ஏற்படுகிறது.
தன் உத்தரவை செயல்படுத்தி வந்த ஓவியர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது சுல்தானுக்கு கோபம் ஏற்படுத்துகிறது. மூன்று நாட்களுக்குள் கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டும் என சுல்தான் உத்தரவிடுகிறார் .
தலைமை குரு உதவியுடன் கொலைகாரனை கண்டு பிடிக்க முயல்கிறான் கருப்பு.
கொலைகாரன் யார் என்பதை விட கொலைக்கான காரணமே முக்கியம் என நமக்கு தோன்றி விடுகிறது. அதுதான் நாவலின் வெற்றி. இல்லையேல் துப்பறியும் நாவலாக இது நின்று போய் இருக்கும். கொலைக்கான காரணம் நியாயமா இல்லையா என்பதும் , கொலைகாரன் வில்லனா எனபதும் வேறு விஷயம்.
இரு தரப்பு கருத்து மோதல்கள்தான் கவனத்துக்கு உரியது.
திருக்குறளை அனைவரும் படிக்கிறோம். ஆனால் அதை எழுதியவர் பெயர் யாருக்கேனும் தெரியுமா ? திருவள்ளுவர் என்பதெல்லாம் பிற்காலத்தில் நாமாக வைத்த பெயர்தான். காக்கை பாடினியார் , செம்புலப் பெயல் நீரார் என்பதெல்லாம் அவர்கள் பாடிய பாடலை வைத்து நாம் வைத்த பெயர்கள்தான். தம் படைப்புகளே முக்கியம் , பெயர்கள் அல்ல எனப்தே அவர்கள் எண்ணமாக இருந்து இருக்கிறது.
இந்த நாவல் இதைப்பற்றி பேசுகிறது
எங்கே உண்மையான கலையும் களங்கமின்மையும் இருக்கிறதோ அங்கே ஒரு கலைஞன் தனது அடையாளத்தின் சிறிய சுவடைக்கூட விட்டுச்செல்லாமல் ஓர் ஒப்பிடவியலா மகத்தான படைப்பைத் தீட்டமுடியும்
நுண்ணோவியம் என்ற கலையில் தனி மனித சாதனை முக்கியம் இல்லை. ஒட்டு மொத்தமான கலைப் படைப்பே முக்கியம். நான் என்ற சிந்தனையே , சாத்தானின் தூண்டுதல்தான் . அதே போல , உலகில் நாம் காணும் விஷ்யங்கள் எந்த முக்கியத்துவமும் அற்றவை. சாஸ்வதம் அற்றவை. அதை அப்படியே தத்ரூபமாக வரைவதில் எந்த பெருமையும் இல்லை என்பது அவர்கள் சிந்தனை போக்கு.
இதற்கு எதிரான வெளி தேசத்து சிந்தனைகளுடன் ஏற்படும் முரண்களை நாவல் அட்டகாசமாக சொல்கிறது.
எல்லா தரப்பு கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“ ஓர் ஓவியம் அதன் அழகின் மூலமாக நம்மை வாழ்க்கையின் முழுமையை நோக்கி பரிவுணர்வை நோக்கி, இறைவன் உருவாக்கிய ஆட்சியிலுள்ள பல்வேறு நிறங்கள்மீது மதிப்பை நோக்கி, பிரதிபலிப்பையும் நம்பிக்கையையும் நோக்கி நம்மை செலுத்துவதுதான் முக்கியம். வரைந்த நுண்ணோவியத்தின் அடையாளம் முக்கியமல்ல.”
மனம் எதைக் காண்கிறதோ, ஓவியம் அதற்கு உயிர்கொடுத்து கண்களுக்கு விருந்தாக்குகிறதெனலாம்: கண்கள் உலகத்தில் எதைக்காண்கிறதோ அது மனதில் பதிகின்ற அளவுக்கு ஓவியத்தில் பதிவாகிறது. ஆகையால் மனது ஏற்கனவே அறிந்திருப்பதை கண்கள் நமது உலகத்தில் கண்டுபிடிப்பதே அழகு எனப்படுகிறது
இறைதூதரின் பிறப்புக்காவியம் வாசிக்கப்பட்டதா? இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா? முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா?
‘தீர்ப்பு தினத்தன்று ஓவியர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பார் என்று நமது இறைத் தூதர் எச்சரித்திருப்பதை அவர்கள் அறிவர்.”
“ஓவியர்களை அல்ல; பிரதிமைகளைச் செய்பவர்களை. மேலும் இது குர் ஆனில் இருப்பதல்ல; புக்காரியில் இருப்பது”
”ஓவியம் என்பது கதையின் நீட்சி அல்ல. தன்னளவில் அது தனிப் பொருள்”
”காதல் நம்மை முட்டாள் ஆக்குகிறதா அல்லது முட்டாள்கள் மட்டுமே காதலில் விழுகிறார்களா ?”
”நான் மரமாக இருக்க விரும்பவில்லை. அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்”
”நிறம் என்பது கண்ணின் தொடுகை”
என்பது போன்ற பல வரிகளை ரசித்து படிக்கலாம்.
ஓவியம் பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விவரித்து எழுதி இருக்கிறார் கதாசிரியர் .
கூர்ந்து படித்தால் , இது ஓவியத்துக்கு மட்டும் அன்றி எல்லா கலைகளுக்கும் பொருந்தும் என்பது புரியும்.
யதார்த்தமாக படம் எடுக்கிறேன் என சிலர் டாக்குமெண்ட்ரி போல படம் எடுக்கிறார்கள். இதில் கலை எங்கே இருக்கிறது என தேட வேண்டி இருக்கிறது இல்லையா ?
கமல் ஹாசன் போன்றவர்கள் , வெளி நாட்டு படங்களை போலி செய்வதையே தம் சாதனையாக நினைக்கிறார்கள்.. இதில் கலை எங்கே இருக்கிறது ? கலையை தம் மகிழ்ச்சிக்கு செய்யாமல் , பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டும் நோக்கத்தில் , மேக் அப் போடுவது , கிராபிக்ஸ் என்பதையே நடிப்பு என வைத்து ஏமாற்றுகிறார்கள்
அதே நேரத்தில் பாதுகாப்பான வேலைகளை உதறி விட்டு, உண்மையான நல்ல படங்கள் , குறும்படங்கள் எடுத்து உரிய அங்கீகாரம் இல்லாமல் வாழும் நல்ல கலைஞர்களும் வாழ்கிறார்கள்.இங்கே முரண் வந்து விடுகிறது இல்லையா.
ஏதோ ஒரு நூற்றாண்டியில், ஒரு குறிப்பிட்ட கலையை மட்டும் வைது எழுதப்பட்ட இந்த நாவல் , உலகளாவிய வரவேற்பு பெறுகிறது என்றால் , அதற்கு காரணம் , மேலே நான் உதாரணத்தை போல , அது எல்லா இடங்களுக்கும் ,எல்லா கலைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால்தான்..
மொழி பெயர்ப்பாளர் குப்புசாமி சிறப்பான பணியை செய்து இருக்கிறார். மொழி பெயர்ப்பு என்பது சிக்கலான பணி. ஒரேயடியாக தமிழ் படுத்திவிட்டால் , மூல நூலின் சுவை போய் விடும். லேசான மொழி பெயர்ப்பு செய்தால் , கரடு முரடாக இருக்கும் .
குப்புசாமி மிக மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதேபோல ஆங்கில பெயர்ப்பும் அருமை. நோபல் பரிசு பெற ஆங்கில மொழி பெயர்ப்பும் ஒரு காரணம்.
குறைகள் என எதையும் சொல்ல முடியாது.. ஆனால் என் எதிர்பார்ப்புகள் சில நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு வாசகனாக என் கருத்து
- தர்க்கா வழிபாடு, இறை நேசர்களை போற்றுவது பற்றி உண்மையிலேயே இஸ்லாம் நிலை என்ன என்பது பற்றிய ஆழமான விவாதங்கள் இல்லை
- சீரோ டிகிரி போன்ற பின் நவீனத்துவ நாவல்களில் , நான் லீனியர் முறையை பயன்படுத்தி , சிதறுண்ட வடிவ முறையில் , நிறைய விஷ்யங்களை சொல்லி இருப்பார்கள்.. ஆனால் இந்த நாவல் லீனியர் முறையிலேயே செல்வதால் , வாசகனின் யோசிப்புக்கு அந்த அளவுக்கு பெரிய சவால் இல்லை. குறிப்பிட்ட இடப்பரப்பையும் , கால் அளவையுமே நாவலால் சொல்ல முடிகிறது.
- கருப்பின் காதல் புரிகிறது. ஆனால் காதல் சம்பவங்களில் ரொமாண்டிக் அம்சம் குறைவே .
வெர்டிகெட்
என் பெயர் சிவப்பு - சிறப்பு
எழுதியவர் - ஒரான் பாமுக்
அருமையான எளிமையான நடை உங்களின் எழுத்து..
ReplyDeleteநானும்தான் அந்நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன்,ஆனால் கதையின் போக்கு அவ்வளவு எளிதல்லவே. தமிழில் மொழிபெயர்த்தவரும் அங்கும் இங்கும் தாவுவதைபோன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்துகின்றார். இதுபோன்ற நாவல்களின் மொழிபெயர்ப்பை விட அசலில் படிப்பது சிறப்பு என ஒருவர் முகநூலில் பின்னூட்டம் இட்டதால் அதை அப்படியே அலமாரியில் வைத்து விட்டேன்.
நாவல்கள் படிப்பதில் ஒரு சூட்சமம் இருக்கின்றது தெரியுமா? நாம் மனதின் நுண்ணிய உணர்வுகளுக்கு அந்நாவல் ஒத்துவரவில்லையென்றால், அதில் மனம் ஒன்றாமல், அதன் வாசலிலேயே நின்றுக்கொண்டு ஏடுகளை மட்டும் புரட்டிக்கொண்டு பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இந்நாவல், தொடக்கத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தொடரும் போது சோர்வாகவே இருக்கின்றது. அது மொழிப்பெயர்ப்பால் வந்த கோளாறா என்பதும் தெரியவில்லை.
உங்களின் இந்த விமர்சனம் படித்த பின்,அது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கலைகளின், குறிப்பாக ஓவியக்கலையின் நுணுக்கங்கள் சொல்லப்பட்டுள்ளது என்பதனையும் உள்வாங்கிக்கொண்டேன். நிச்சயம் அந்நாவலைத் தொடர்வேன் சகோ.
எஃக்யூஸ்மீ, உங்களின் ப்ளாக்’ஐ ஏன் என்னால் பின் தொடர முடியவில்லை.? பல முறை முயன்றும், பதிவுகள் என் ப்ளாக்கிற்கு வரமாட்டேன் என்கிறது. எதாவது ரகசிய கோட் மூலம் பலமான தடுப்புக் காவல் இட்டுள்ளீர்களா? தயவு செய்து அகற்றுங்கள். நல்ல பதிவுகள் உங்களின் ப்ளாக்கில்,வளரும் வாசகர்களுக்கு வழிகாட்டியாய் உதவலாமே..!
நான் இந்த நாவலை ஆங்கிலத்தில் வாசித்தேன்..மிகவும் ரசித்து வாசித்த நாவல், உங்கள் விமர்சனம் அருமை !!
ReplyDeleteநான் இந்நாவலில் பெரும் குறையாக கருதுவது, மீண்டும் மீண்டும் மீண்டும் வரும் பெரும் உணர்வெழுச்சியை தட்டாத நுண்ணோவிய விளக்கங்களே.. அவையே எனக்கு மிகபெரும் வேக தடைகளாக இருந்தன.. தமிழில் இந்த குறை இல்லாதிருந்தால் மகிழ்ச்சியே!!
@கார்த்திக் ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் . மகிழ்ச்சி . ஓவியர்கள் ஒரே மாதிரியான ஓவியம் வரைந்து அலுத்து போய் இருக்கிறார்கள் . இந்த அலுப்பை வாசகனுக்கு உணர வைக்கும் யுக்திதான் மீண்டும் மீண்டும் ஒரே விபரங்களை சொல்வது .
ReplyDelete