அனுபவம் என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது வேறொன்று. பழைய அனுபவம் என்பது தற்போதைய அனுபவித்தலுக்கு தடையாக இருக்கும். அனுபவம் மகிழ்ச்சியானதா , துயரமானதா என்பது முக்கியம் அன்று. அது எதுவாக இருந்தாலும் , புதிய அனுபவங்கள் மலர்வதை அது தடுக்கும். அனுபவம் என்பது காலம் சார்ந்தது. இறந்த காலத்தில் இருக்க கூடியது. வெறும் நினைவுகளாக தேங்கி இருக்க கூடியது.
வாழ்க்கை என்பது நிகழ்காலம். இதற்கு அனுபவத்தின் உதவி தேவை இல்லை. பழைய அனுபவங்களின் சுமை நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும். எனவே அனுபவித்தல் என்ற நிகழ்ச்சி பழைய அனுபவங்களே மீண்டும் பெறுதலாகவே அமைந்து விடக்கூடும்.
மனம் என்பது பழைய அனுபவங்களால் ஆனது. இது ஒருபோதும் புதிய அனுபவத்தை பெறும் தகுதியை பெறாது. இது அனுபவிக்கும் அனைத்துமே பழைய அனுபவங்களின் தொடர்ச்சி மட்டுமே .
தொடர் நிகழ்வுகளை மட்டுமே மனம் அறியும். இந்த தொடர்ச்சி நீடிக்கும் வரை , இதனால் புதிதாக எதையும் அனுபவிக்க இயலாது. பழைய அனுபவங்களின் தொடர்ச்சி நின்றால் மட்டுமே புதிதாக அனுபவித்தல் சாத்தியம் ஆகும்.
மனம் தான் ஏற்கனவே தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் தான் உருவாக்கும் பிம்பங்களையே மீண்டும் மீண்டும் காண விழையும். தெரியாத புதிய விஷ்யம் ஒன்றை மனம் உணர இயலாது. அனுபவத்தின் வெளிப்பாடுதான் எண்ணங்கள். மனதில் சேகரமாகி இருக்கும் நினைவுகள்தான் எண்ணங்கள் ஆகின்றன. எண்ணங்கள் இருக்கும் வரை புதிய அனுபவங்கள் நிகழாது. எண்ணங்களை நிறுத்துவதற்கு எந்த வழி முறைகளோ , யுக்திகளோ இல்லை. எண்ணங்களை அடக்க முயலும் முயற்சியே எண்ணங்களை மேலும் வலுவாக்கி விடும்.
ஆசையை வெல்ல வேண்டும் என முயல்வதும் கூட ஒரு வகை ஆசைதான். இதில் இருந்து விடுபட வேண்டும். புதிதாக ஏதேனும் அனுபவிக்க நேர்ந்தால்கூட , அடையும் கூட நினைவில் சேகரித்து , ஓர் அனுபவமாக மாற்றி கொள்ள கூடிய தன்மை மனதுக்கு உண்டு. அனுபவம் அதை அனுபவிப்பவன் என்ற இரட்டை தன்மையை மனம் உருவாக்குகிறது.
உண்மையான அனுபவித்தல் நிகழும்போது , அனுபவமோ அனுபவிப்பவனோ இருப்பதில்லை. நான் இந்த நட்சத்திரத்தை பார்க்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் வெறுமனே நட்சத்திரத்தை பார்க்கையில், அந்த ந்டசத்திரம் அழகானது என மனதில் பதிய வைக்கும் செயல் நடைபெறாது. அங்கு பார்ப்பவனும் இல்லை. பார்த்த அனுபவமும் இல்லை. பார்க்கும் நிகழ்ச்சி மட்டும் புத்தம் புதிதாக நிகழ்கிறது. எண்ணம் அங்கு இருப்பதில்லை. இருத்தல் மட்டும் நிகழ்கிறது. இந்த நிலைட தியானம் மூலமோ , முயற்சியாலோ அடைய முடியாது.
நான் தியானம் செய்கிறேன் என்ற எண்ணமே பெரிய இடைஞ்சல். செயலை செய்வோன் மறைந்து போய், செயல் மட்டுமே நடக்கும் நிலையில்தான் எண்ணம் மறையும் , இருத்தல் மட்டுமே நிகழும். இதுதான் காலம் கடந்த நிலை.
அருமையான கடினமான விஷயத்தை
ReplyDeleteஎத்தனை எளிமையாகச் சொல்லிப்போகிறார்
பதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
யோசித்துப்பார்த்தால் இருத்தல் மட்டுமெ நிஜம் போலத்தான் இருக்கு
ReplyDelete