Pages

Monday, September 10, 2012

புயலிலே ஒரு தோணி- புகழ் சேர்த்த நாவல்

தமிழில் படிக்க வேண்டிய முக்கிய நாவல் ஒன்றை பரிந்துரையுங்கள் என சாருவிடம் வேண்டுகோள் விடுத்தார் புதிய வாசகர் ஒருவர் ( வாசகர் வட்ட சந்திப்பு ஒன்றில் ) . சற்றும் யோசிக்காமல் சாரு சொன்ன பதில் , புயலிலே ஒரு தோணி.

 நான் படித்திராத நாவல். எனவே யார் எழுதிய நாவல் இது என்றேன். கேள்வி கேட்டது யார் என சாரு பார்ப்பதற்கு முன் , அங்கு இருந்த நண்பர் ஒருவர்  வேறு பேச்சு கொடுத்து சாருவின் கவனத்தை திசை திருப்பினார்.

அதன் பின் என்னுடன் தனித்து பேசிய நண்பர்,  ஒரு சாரு வாசகன் என்ற முறையில் இதை எல்லாம் நீங்கள் ஏற்கனவே படித்து இருக்க வேண்டும். யார் எழுதியது என கேட்கிறீர்களே என உரிமையுடன் கடிந்து கொண்டார்.

சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக அந்த நாவலை வாங்கினேன். கொஞ்சம் படித்தேன். உலக போர் , புலம் பெயர் வாழ்க்கை என நன்றாக இருந்தது.  சில பக்கங்கள் கழித்து பார்த்தால் , கப்பல் பயணம் , வட்டி தொழில், தமிழ் நாட்டு வாழ்க்கை என்றெல்லாம் இருந்தது. இலக்கில்லாத நாவலாக இருக்கிறதே , நமக்கு புரியுமா என்று கொஞ்சம் பயமாக இருந்ததால் , நாவலை அப்படியே வைத்து விட்டேன்.

அதன் பின் கொஞ்ச நாள் கழித்து , மீண்டும் எடுத்தேன். படிக்க ஆரம்பித்து கொஞ்ச நேரம் கழித்துதான், முன்பு வாசித்த முறையின் தவறை உணர்ந்தேன்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக  வாசிப்பது தவறு.

அமைதியான சூழலில், முழு கவனத்தையும் செலுத்தி, முழு நாளை ஒதுக்கி வாசித்தால்தான் முழுமையாக நாவலை உள் வாங்க முடியும். ஒரே சிட்டிங்கில் படித்து முடித்து விடலாம்.  இனிமையான , அழகான தமிழ் நம்மை உள்ளே இழுத்து கொண்டு விடும்.  ஒரே அமர்வில் படித்தால்தான் ,  நாவலின் வீர்யம் புரியும் என்பது என் கருத்து. மைய இழையை விட்டு இம்மி அளவு கூட விலகாமல் சீராக நாவல் பாய்ந்து செலவதை தொடர்ச்சியாக படித்தால்தான் உணர முடியும்.

எதிர்பார்க்காத பல் வேறு நிகழ்ச்சிகளால் , பல்வேறு நபர்களால் உருவாக்கப்படுவதே நம் வாழ்க்கை. இதை நான் டைப் செய்கிறேன், நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அது மிக மிக தற்செயலான நிகழ்வு. கம்யூட்டர் கண்டுபிடிப்பு, இண்டர்னெட் பயன்பாடு, போர் ஏதும் நடக்காத சூழ்னிலை என்ற பல்வேறு புற காரணிகளும் ஒத்துழைப்பதால்தான் , நான் டைப் செய்வதை , நீங்கள் படிக்கும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

அதாவது வாழ்க்கை என்பது ,  ஒத்திகைக்கு பின் நடக்கும் நடனம் அல்ல. முன் கூட்டியே யூகிக்க முடியாத , ஒaரு கால்பந்தாட்டம். கால்பந்திலாவது சில விதி முறைகள் , கால கட்டுப்பாடு உண்டு. ஆனால் வாழ்க்கை எந்த விதிகளுக்கும் உட்படாத அபத்த களஞ்சியம். எனவேதான் ”வாழ்க்கையின் இந்த அபத்தம் என்னை வாந்தி எடுக்க வைக்கிறது ” என்கிறார் சார்த்தார்.

எனவே வாழ்க்கையை எந்த கட்டுப்பாடுக்கும் , தர்க்கத்துக்கும் கட்டுப்படாத புயலுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இந்த புயலில் அல்லாடும் தோணிகள்தான் நாம் அனைவரும். ஆனால் உலகே நம்மை மையமாக வைத்து இயங்குவதாகவே நாம் நினைக்கிறோம். வாழ்க்கையின் பிரமாண்டத்துக்கு முன் நாமெல்லாம் தூசு.

சரி, இந்த புயலில் உழலாமல் அமைதியாக இருப்பது சிறந்ததா. கரையில் இருப்பது தோணிக்கு பாதுகாப்பானதுதான். ஆனால் தோணி படைக்கப்பட்டது அதற்காகவா?


கிராமத்து இனிய வாழ்வு, பால்ய வயதுக்குரிய விளையாட்டுகள் ,  உலகப்போர், வட்டிக்கடை , இந்திய தேசிய ராணுவம் , நேதாஜி, நண்பர்கள், காமம், சாகசம் , மனிதனின் மேன்மை, கீழ்மை என வாழ்க்கை எனும் புயல் கொண்டு செல்லும் பல இடங்களை ஒரு பார்வையாளனாக பார்க்கும் பாண்டியனின் கதைதான் புயலிலே ஒரு தோணி.

ஒரு பார்வையாளனாக வாழ்வது என்றால் என்ன ? சாலையில் செல்கிறோம். சாலையில் யாரோ அடிபட்டு கிடைக்கிறார்கள். பார்த்து விட்டு மெல்ல நகர்கிறோம்.

இதுவா பார்வையாளனாக வாழ்வது ? இல்லை?

இது கோழைத்தனம். ஒதுங்கி போதல். புயலில் அடிபட பயந்து கரையிலேயே தேங்கி கிடைக்கும் சோம்பேறித்தனம்.

பாண்டியன் துணிச்சலுடன் பொறுப்புகளை ஏற்கிறான் . ஆனால் அந்த பொறுப்புகளில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.  போர் கைதியாக இருக்கும்  டச்சு வீரன் டில்டனுக்கு , ரிஸ்க் எடுத்து உதவுகிறான். அதே நேரத்தில் அதை பெரிய சாதனையாக நினைக்காத விலகல் தன்மையும் அவனுக்கு இருக்கிறது.

 இப்படி வாழ்வது இருக்கட்டும். இதை வாசிக்கும்போதே கூட நமக்கு அந்த விலகல் தன்மை வாய்ப்பதில்லை.

உலகப்போர் பின்னணியில், ஜப்பானியர் படை எடுப்புடன் நாவல் ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரத்தில் நாமே , உலகபோருடன் நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம். நாவல் அடுத்த கட்டத்துக்கு நகரும்போது, வியாபார களத்துக்கு நாவல் செல்லும்போது , நம்மால் அதை ஏற்க இயலவில்லை. ஆனால் நாவலின் நாயகன் பாண்டியனோ வாழ்வின் போக்கில் இயல்பாக செல்கிறான்.

ஒரு கட்டத்தில் வியாபார களத்துக்கு மனம் பழகி விடுகிறது. இதுதான் யதார்த்தம் என மனம் நம்பும் நிலையில் , பாண்டியன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து , சாகச செயல்களில் ஈடுபடும்போது , நம் மனம் அதிர்கிறது. செல்லாது , செல்லாது என துடிக்கிறோம்.  நாவல் யதார்த்தத்தை மீறுவதாக நினைத்து பரிதவிக்கிறோம்.

உண்மையில் இதுதான் வாழ்க்கை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாண்டியனின் இந்த தெளிவு நமக்கு ஒரு கணத்தில் ஏற்படுகிறது.  பாண்டியன் எதிலும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளாமல் அனைத்தையும் தோன்றி மறையும் காட்சியாக பார்ப்பதைப்போல , பாண்டியனையும் விலகி நின்று  கவனிக்கும் மனப்பாங்கு நமக்கு ஏற்படுகிறது.

வழக்கமாக ஒரு நாவலில் , கதாபாத்திரங்களுக்க்குள் ஏற்படும் முரண்களே கதையாக இருக்கும். இதில் பாண்டியன் அளவுக்கு க்தை முழுதும் வரும் கதாபாத்திரங்கள் இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண் என்பது கதை இல்லை.

உலகப்போரோ, புலம்பெயர் வாழ்வோ , மதுரை வாழ்க்கையோ , தனி நபர் சாகசங்களோ கதை இல்லை. இவை எல்லாம் முக்கியமானவை தான். ஆனால் நாவல் இதைப்பற்றியது அல்ல.

கதாபாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியும் கதை அல்ல. புயலில் அலைந்து திரியும் தோணியின் பயணம் மட்டும்தான் கதை.

தலைகளை வெட்டி கண்காட்சி நடத்தும் ஜப்பானியர்கள் , அனைவரையும் நடுங்க வைத்த ஜப்பானியர்கள் பின்பு ஒடுக்கப்படுவது,

இந்த நாவலில் , கடல் பயணத்தில் ஏற்படும் புயலைப்பற்றிய குறிப்பு வருகிறது. நாவலின் உச்சம் என அதை சொல்லலாம்.

கடல் கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்த போது யாரும் கடிகாரம் பார்க்க்கவில்லை. பார்த்தபோது , எல்லா கடிகாரங்களும் நின்று போய் இருந்தன. 


இடை நில்லாமல் ஒரே மூச்சில் நாவலை படித்த நான் , இந்த இடத்தில்தான் மேலே படிக்க இயலாமல் அயர்ந்து நின்றேன்.


யுத்தம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளே ஒட்டு மொத்த பிரமாண்ட வரலாற்றுக்கு முன் தூசி என்றால், நம் வாழ்க்கையெல்லாம் ஒன்றுமே இல்லை. அதே நேரத்தில் மிகவும் மகத்தானதும் கூட..

நாவலை முடித்த பின் தோன்றுவது இதுதான்.

புயலிலே ஒரு தோணி- புகழ் சேர்க்கும் நாவல்
எழுதியவர்- ப சிங்காரம்
வெளியீடு - தமிழினி


கடலுக்கு அப்பால் என்ற அடுத்த நாவலுடன் சேர்த்து  இன்னும் கொஞ்சம் பேசலாம் , அடுத்த இடுகையில்...

( தொடரும் )





5 comments:

  1. சாரு சொல்லவில்லை என்றாலும் இது நல்ல நாவல் தான்.
    மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று..
    தடை செய்யப்படவேண்டிய நாவல்களை எழுதியவர் ஆனந்தவல்லி புருஷன்..
    சீஈஈ ஆயய்ய்ய்யி
    பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள்,த்வனி,கழுகு,குறத்தி முடுக்கு இதெல்லாம் படிங்க..
    சும்மா உங்க ஆளுக்கு தட்டு தட்டாதிங்க...

    ReplyDelete
  2. இதை எங்க தல ஜெ. சொல்லித்தான் தலயோட நண்பர் தமிழினி வசந்தகுமார் வெளியிட்டார்!!! எப்படி? இல்லேன்னா உங்காளு இதைப் படித்திருக்கவே முடியாது!

    ReplyDelete
  3. கடலுக்கு அப்பால் - நாவலும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் - செல்லையா மரகதம் காதல் ஒரு உன்னத அன்பு

    ReplyDelete
  4. கடலுக்கு அப்பால் - நாவலும் படித்துஇருப்பீர்கள் - அதில் செல்லையா மரகதம் காதல் ஒரு உன்னதம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]