ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை திறம்பட கண் முன் நிறுத்தும் எழுத்துகள் ஒரு வகை. மிகவும் நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.
கால கட்டங்கள் , இடங்களை தாண்டி எல்லா தேசங்களுக்கும் , எல்லா காலங்களிலும் பொருந்த கூடிய எழுத்துகள் இன்னொரு வகை. இதற்கு நிபுணத்துவம் , அறிவு இவற்றை தாண்டி வேறு ஏதோ ஒன்று தேவைப் படுகிறது.
அப்படிப்பட்ட எழுத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மத்தவ் படைத்த புகழ் பெற்ற நாவலான குல்சாரி நாவல்தான் அது.
தற்போது டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவல் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதிலேயே வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன். இதனால்தான் வலைப் பக்கம் கூட அதிகம் வர முடியவில்லை.
போரும் அமைதியின் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வரலாம் என ஒரு சேஞ்சுக்காக படித்தததுதான் குல்சாரி.
புரட்சிக்கு முந்தைய ரஷ்ய இலக்கியம் , புரட்சியை சித்தரிக்கும் எழுத்துகள், புரட்சிக்கு பிந்தைய சமகால ரஷ்ய இலக்கியம் போன்றவற்றில் பலருக்கு ஆர்வம் உண்டு.
ஆனால் சோவியத் யுகத்தில் படைக்கப்பட்ட , அன்றைய கால கட்டத்தை சித்திரிக்கும் எழுத்துகள் அவ்வளவாக நம் மக்களை சென்றைடையவில்லை.
என்னை பொருத்தவரை , சோவியத் கம்யூனிஸ்ட் யுகத்தை நம் கண் முன் நிறுத்தும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் சிங்கிஸ் ஐத்மத்தவ். அன்னை வயல், ஜமீலா , முதல் ஆசிரியர் என பல பொக்கிஷங்களை படைத்தவர் அவர் என்றாலும் அவற்றுள் முதன்மையானது குல்சாரி என்பது என் கருத்து.
தானாபாய் என்ற முதியவர் , தன் குதிரையுடன் பயணமாவதுடன் நாவல் ஆரம்பிக்கிறது. தன் மகனுடன் வசித்து வரும் அவர் அவமதிப்புகளை சந்தித்து , குறிப்பாக மருமகள் டார்ச்சர் தாங்க முடியாமல் , தன் ஊருக்கு கிளம்பி செல்கிறார் . அவ்ரது இளமை காலம் , குதிரையிடன் அவருக்கு ஏற்பட்ட பந்தம் போன்றவை கடந்த கால நினைவுகளாக சொல்லப் படுகிறது.
கதை நடப்பது , கிர்கிஸ்தான் நாட்டில். சோவியத் யூனியனுக்கு முன் அது எப்படி இருந்தது. சோவியன் யூனியனில் சேர்ந்த பின் ஏற்பட்ட மாற்றம் போன்றவை கதைப் போக்கில் சொல்லப் படுகிறது.
கூட்டுப் பண்ணைகள் அமைத்து வறுமையை விரட்டியது , கட்டாய கல்வி மூலம் கல்வியறிவு அளித்தது என பல மாற்றங்களை கம்யூனிஸ்ட் ஆட்சி கொண்டு வந்தது . ஆனால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் ஆட்சி கெடுதி மட்டுமே செய்தது , கொடுங்கோல் ஆட்சி நடத்தியது என்ற கருத்துகளே பலர் மனதில் பதிந்துள்ளது. திட்டமிட்ட பிரச்சாரத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.
கம்யூனிச கொள்கையில் ஈடுபாடுள்ள தானாபாய் , கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகிறான். அதற்காக உழைக்கிறான். அப்போதுதான் குல்சாரி என்ற குலுங்கா நடை குதிரையின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கிறது. பல போட்டிகளில் அவனுக்கு வெற்றியை ஈட்டி தந்து பிரபலம் ஆகிறது குதிரை. ஒரு கால்பந்தாட்ட வீரன் அடையும் ஹீரோ ஸ்டேட்டஸை அடைகிறது குதிரை.
சிறுவர்கள் ரஜினி , கமல் போல இமிடேட் செய்வதை போல , சிறுவர்கள் குல்சாரியை போல நடந்து இமிடேட் செய்து மகிழ்கின்றனர்.
தானாபாய் ஆடுகளை பரமாரிக்கும் வேலையில் அமர்த்தப்படுகிறான். ஆனால் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தாலும் , உதவியின்மையாலும் அந்த பணியில் தோல்வி அடைகிறான். அதிகாரியுடன் தகராறு ஏற்பட்டு , தான் நேசிக்கும் கட்சியில் இருந்து விலக்கப்படுகிறான்.
அவன் நண்பன் சோராவின் மரணமும் அவன் மனதை வெகுவாக பாதிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின் கட்சி அவனை மீண்டும் அழைக்கிறது.
தன் இன்பத்தில் , தன் கூடவே இருந்த குதிரையை , தன் கஷ்ட காலத்தில் அவன் கை விடவில்லை. அதனால் பயன் இல்லை என்ற நிலையிலும் கூட , அதன் ஒரு நண்பன் போல தன் கூடவே வைத்து இருக்கிறான். தன் உணர்வுகளை குதிரையிடன் தான் பகிர்ந்து கொள்கிறான்.
ஒரு நல்ல விஷ்யம் உருவாகும்போது , சிலரது தவறுகளால் அந்த நல்ல விஷயத்தின் நோக்கமே அடிபட்டு போவது யதார்த்தம், இதை அருமையாக சில அதிகாரிகள் மூலம் சித்திரித்து இருக்கிறார் ஐத்மத்தவ் . அதிகாரிகள் சிலர் அப்படி இருந்தாலும் , தொழிலாளிகள் கட்சியை உயிருக்கு நிகராக நேசித்ததையும் அழகாக சொல்லி இருக்கிறார். குறிப்பாக சோராவின் கடைசி ஆசை நெகிழ வைக்கிறது.
இந்த புத்தகத்தை நம் ஊர் கம்யூனிஸ்ட்டுகள் உரிய முறையில் பிரபலப்படுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது.
மொழி பெயர்ப்பு வெகு அழகு. ஆங்கிலத்தில் படித்து இருந்தாலும் , கதை தெரிந்து இருந்தாலும் , மொழி பெயர்ப்பு அழக்குக்காகவே தமிழில் படித்தேன்.
கடைசியில் குதிரையை இறந்தவுடன் தானாபாய் அடையும் வேதனையை நாமும் அடைகிறோம் . கூடுதலாக சோவியத் யூனியன் மறைவும் நம் நினைவுக்கு வந்து மனதை கனக்க செய்கிறது.
குல்சாரி - தவற விடக்க்கூடாத , குறிப்பிடத்தக்க நாவல்
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை - ரூ 95
thanks for sharing... good review.
ReplyDelete