விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார்.
” எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். ” என்று கூறியுள்ள அவர் , ஆனால் தணிக்கை குழுவின் இறுதி முடிவு தன் ஒருவனை பொறுத்தது அன்று என்றும் , பெரும்பாலானோர் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு அமையும் என்றும் கூறி இருக்கிறார்..
விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என இஸ்லாமிய தலைவர்கள் கூறி இருந்தனர்..
ஆனால் படம் பார்த்த சில ஹிந்து சகோதரர்கள் , படம் ட்ரூ லைஸ் படத்தின் மொழி பெயர்ப்பு போல இருக்கிறது.. தமிழக இஸ்லாமியர்களை கேலி செய்வது போல காட்சிகள் இல்லையே என்று கருத்து சொல்லி இருந்தனர்.
ஆனால் இஸ்லாமிய பழக்க வழக்கங்களும் , அரபி மொழியும் தெரிந்த இஸ்லாமியர்கள் , இந்த படம் இஸ்லாத்தை கேலி செய்வதை உணர முடியும் என இஸ்லாம் தலைவர்கள் சொல்லி இருந்தனர்..
ஆனால் தணிக்கை குழுவில் ஓர் இஸ்லாமியரும் இருந்தார்... அவதூறு ஏதும் இருந்தால் அவர் தடுத்து இருக்க மாட்டாரா என சிலர் கேட்டனர்.. ஓர் இஸ்லாமியர் இருந்தும் , இந்த படம் எப்படி அனுமதிக்கப்பட்டது என இஸ்லாமியர்க்ள் கோபப்பட்டனர்.
இந்த நிலையில் , விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார். இப்போதைய நிலையில் அவரால் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றாலும் , அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது..
அவர் கருத்துகளில் சிலவற்றை பாருங்கள்....
- சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
- படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
- விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
- அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை.
- தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.
ஒவ்வொரு வரியிலும் அவர் வேதனை புரிகிறது,,, தணிக்கை முறையை மாற்ற வேண்டியதன் அவசியம் புரிகிறது...
அவர் கருத்துகள் , முழுமையாக உங்கள் பார்வைக்கு ...
*******************************************************************************************
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.
தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
என்னைப் பற்றி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரும் மூத்த சகோகதரராக நான் மதிப்பவருமான பெருந்தகையாளர், ஊடகங்களின் வாயிலாகக் என்மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நானும் என் தரப்பு விளக்கங்களைத் தர வேண்டியிருக்கிறது. மூத்த சகோதரரராக நான் மதிக்கும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நிறைய படித்தவர். சமுதாய நலனில் அக்கறை கொண்டு நலப்பணிகள் பலவற்றை முன்னின்று மேற்கொள்பவர். மார்க்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். எளிய நிலையிலிருந்து தன் அறிவாலும் ஆற்றலாலும் உழைப்பாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பவர். அவருடைய அமைப்பின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நானும் ஒரு காரணமாக உதவியிருக்கிறேன் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். அந்த அடிப்படையில், அவர் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் எந்தளவிலும் எனக்குக் குறையவேயில்லை. யாரோ சிலரை திருபதிப்படுதவதற்காகவோ, யாருடைய தூண்டுதலின் பேரிலோ என்னை விமர்சிக்கவில்லை என்றே இன்னும் நம்புகின்றேன்.
இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத் துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை. வழிகாட்டும் முறைகள் (guidelines) ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது., இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல்வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது.
படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை. அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு படமும் தணிக்கை செய்யப்படுகிறது. விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை. தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும். இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
விஸ்வரூபம் படம் தற்போது உலகின் பல நாடுகளிலும், தணிக்கை செய்தபிறகே வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நாடான மலேசியாவிலும் இப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, என் மனதுக்கு சரியென்று படுவதை எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுத்துவேன்.எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே கூறியதுபோல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இருப்பினும், இடைப்பட்ட நேரத்திலான செயல்பாடுகளுக்காக நான் விமர்சனத்திற்குப் பயன்படுகிறேன் என்றால் அதையும்கூட என் தனிப்பட்ட மனவலியாகத்தான் கருதுகிறேனே தவிர, ஏதேனும் ஒரு வகையில் அவருடைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறேன் என்ற அளவில் மனநிறைவும் கொள்கிறேன்.