Pages

Sunday, January 27, 2013

மனம் திறக்கிறார் விஸ்வரூபம் தணிக்கை குழு இஸ்லாமிய உறுப்பினர் - பெரும்பான்மை முடிவை நான் மாற்ற முடியாது



விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார். 

” எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். ” என்று கூறியுள்ள அவர் , ஆனால் தணிக்கை குழுவின் இறுதி முடிவு தன் ஒருவனை பொறுத்தது அன்று என்றும் , பெரும்பாலானோர் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு அமையும் என்றும் கூறி இருக்கிறார்..

விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என இஸ்லாமிய தலைவர்கள் கூறி இருந்தனர்.. 
ஆனால் படம் பார்த்த சில ஹிந்து சகோதரர்கள்  , படம் ட்ரூ லைஸ் படத்தின் மொழி பெயர்ப்பு போல இருக்கிறது.. தமிழக இஸ்லாமியர்களை கேலி செய்வது போல காட்சிகள் இல்லையே என்று கருத்து சொல்லி இருந்தனர்.
ஆனால் இஸ்லாமிய பழக்க வழக்கங்களும் , அரபி மொழியும் தெரிந்த இஸ்லாமியர்கள் , இந்த படம் இஸ்லாத்தை கேலி செய்வதை உணர முடியும் என இஸ்லாம் தலைவர்கள் சொல்லி இருந்தனர்..
ஆனால் தணிக்கை குழுவில் ஓர் இஸ்லாமியரும் இருந்தார்... அவதூறு ஏதும் இருந்தால் அவர் தடுத்து இருக்க மாட்டாரா என சிலர் கேட்டனர்.. ஓர் இஸ்லாமியர் இருந்தும் , இந்த படம் எப்படி அனுமதிக்கப்பட்டது என இஸ்லாமியர்க்ள் கோபப்பட்டனர்.

இந்த நிலையில் , விஸ்வ ரூபம் தணிக்கை குழுவின் உறுப்பினரான முகம்மது ஜின்னா , தன் மவுனத்தை கலைத்துள்ளார்.  இப்போதைய நிலையில் அவரால் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றாலும் , அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.. 
அவர் கருத்துகளில் சிலவற்றை பாருங்கள்....
  • சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
  • படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
  • விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து  இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
  • அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை
  • தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.  

      ஒவ்வொரு வரியிலும் அவர் வேதனை புரிகிறது,,, தணிக்கை முறையை மாற்ற வேண்டியதன் அவசியம் புரிகிறது...   

அவர் கருத்துகள் , முழுமையாக உங்கள் பார்வைக்கு ...
*******************************************************************************************

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.
      தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
 என்னைப் பற்றி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரும் மூத்த சகோகதரராக நான் மதிப்பவருமான பெருந்தகையாளர், ஊடகங்களின் வாயிலாகக் என்மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நானும் என் தரப்பு விளக்கங்களைத் தர வேண்டியிருக்கிறது. மூத்த சகோதரரராக நான் மதிக்கும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நிறைய படித்தவர். சமுதாய நலனில் அக்கறை கொண்டு நலப்பணிகள் பலவற்றை முன்னின்று மேற்கொள்பவர். மார்க்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். எளிய நிலையிலிருந்து தன் அறிவாலும் ஆற்றலாலும் உழைப்பாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பவர். அவருடைய அமைப்பின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நானும் ஒரு காரணமாக உதவியிருக்கிறேன் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். அந்த அடிப்படையில், அவர் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் எந்தளவிலும் எனக்குக் குறையவேயில்லை. யாரோ சிலரை திருபதிப்படுதவதற்காகவோ, யாருடைய தூண்டுதலின் பேரிலோ என்னை விமர்சிக்கவில்லை என்றே இன்னும் நம்புகின்றேன்.
இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.
      தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத் துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை. வழிகாட்டும் முறைகள் (guidelines) ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
      விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு  தணிக்கை செய்யப்பட்டது., இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல்வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது.
படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம்பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை. அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு படமும் தணிக்கை செய்யப்படுகிறது. விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து  இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
 அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லைதாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும்வேண்டுகோளுமாகும்.   இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
 விஸ்வரூபம் படம் தற்போது உலகின் பல நாடுகளிலும், தணிக்கை செய்தபிறகே வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நாடான மலேசியாவிலும் இப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
 நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, என் மனதுக்கு சரியென்று படுவதை எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுத்துவேன்.எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்படஎந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும். அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே கூறியதுபோல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இருப்பினும், இடைப்பட்ட நேரத்திலான செயல்பாடுகளுக்காக நான் விமர்சனத்திற்குப் பயன்படுகிறேன் என்றால் அதையும்கூட என் தனிப்பட்ட மனவலியாகத்தான் கருதுகிறேனே தவிர, ஏதேனும் ஒரு வகையில் அவருடைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறேன் என்ற அளவில் மனநிறைவும் கொள்கிறேன்.

9 comments:

  1. ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விஸ்வரூபம் கலை அல்ல களை..

    தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.

    இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள்.

    அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம்.

    கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.

    அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார்.

    இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.

    ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..

    தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அயல்நாட்டு போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும்.

    வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம் பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும்,

    ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக் என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள்.

    இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும் உண்மை என்பது வேறு கதை) என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான்.

    ஒருவேளை கமலின் நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம்.

    இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர கண்ட பின் கமலின் ஆஸ்கார் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது.

    , கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார் என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது.

    ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பது திண்ணம்.

    இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம் எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது தமிழ்நாட்டில் ரொம்ப எளிது.

    இதில் கமலுக்கு என்னதான் லாபம்?

    ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார்.

    இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது?

    தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு?

    கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது?

    மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான்.

    ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”

    இந்த படம் வெளியாக வேண்டும்.

    தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

    கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும்.

    அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும்.

    உடனடியாக தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள் புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும்.

    இத்தகைய படத்தினால் விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

    பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும்

    இது உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் தங்கசாமி அவர்களின் முகநூலில் இருந்து பகுதி இது…….

    >>>>>> முழுதும் படிக்க

    COPIED FROM SOURCE: http://manithaabimaani.blogspot.com/2013/01/blog-post_27.html

    THANKS TO MANITHABIMANI.BLOGSPOT.COM

    ReplyDelete
  2. போடா லூசு

    ReplyDelete
  3. அவர் பணியை பற்றி பொதுவாக சொல்லி இருக்கிறார். விஸ்வரூபம் படத்துக்கு அவர் என்ன நிலை எடுத்தார் என்று தெளிவாக கூறவில்லை. அவர் எதிர்ப்பு தெரிவித்தாரா? இல்லையா? அவ்வாறு எதிர்ப்பை தெரிவித்தும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா என்று பல கேள்விகள் வருகின்றன. அரைகுறை பேட்டியை போட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதோ சதி வேலை நடப்பது போல் சித்தரிக்க முயல்வது சரியல்ல.

    ReplyDelete
  4. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் விஷரூபத்திற்கு
    பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
    விஷகருத்துகள் முறைதனா?
    மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.


    இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?

    ReplyDelete
  5. பிரபல சினிமா விமர்சகர் கருந்தேள் எழுதிய விமர்சனம் - பகுதி 1

    "சரி. அப்படியே வைத்துக்கொள்வோம். ஒரு திரைப்படத்தில் இதுபோன்ற தவறான சித்தரிப்புகள் இருக்கின்றன என்பதை முடிவு செய்யவேண்டியவர்கள் யார்? படம் பார்க்கும் மக்களா அல்லது ஓரிரு இயக்கங்கள் மட்டுமா? அப்படி ஒரு படத்தில் தவறான சித்தரிப்பு இருக்கிறது என்பது எப்போது தெரியவரும்? படம் வெளியாகி, அதை மக்கள் பார்க்கும்போதுதானே? ஒரு படத்துக்கு, அது வெளியாகும் வாய்ப்பையே வழங்காமல், தடை விதிக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? அதுமட்டுமல்லாமல், படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடனேயே, படத்தைப் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல், ‘படம் எங்களை தவறாக சித்தரிக்கிறது; ஆனால் படத்தை இன்னமும் நாங்கள் பார்க்கவில்லை; ஆதலால் படத்தைப் போட்டுக்காட்டுங்கள்’ என்று சொல்லி, படத்தைப் பார்த்துவிட்டு, படத்தைத் தடை செய்ய கோஷம் எழுப்புவதும் என்னைப்பொறுத்தவரை நியாயமற்ற செயலாகவே தோன்றுகிறது. எப்படி ஒரு பெரும் சமுதாயத்துக்கான முடிவுகளை எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியும்? மக்களிடம் போய்ச்சேரவேண்டிய படத்தை இப்படியாக தடை செய்வது, படத்தின் விளம்பரத்தை அதிகரிக்கும் என்பது ஏன் இப்படி கோஷம் எழுப்பும் நண்பர்களுக்குத் தெரியவில்லை? ஒரு வாதத்துக்கு, படத்தில் தவறான சித்தரிப்பு இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், அதை எப்படி சந்திக்க வேண்டும்? முறைப்படி படம் வெளிவந்தபின், வழக்கின் மூலம் சந்தித்திருக்கவேண்டிய பிரச்னையல்லவா இது?"

    கருத்து சொல்லும் துணிவு இருந்தால் இந்த கருந்தேளின் கருத்துக்கு பதில் கூறவும்?? (துணிவு இருந்தால் மட்டுமே)

    ReplyDelete
  6. பிரபல சினிமா விமர்சகர் கருந்தேள் எழுதிய விமர்சனம் - பகுதி 2

    சரி. படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்தப் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளனவா?

    இல்லை என்பதே என் பதில். இந்தப் படத்தில் வில்லன்களாகக் காட்டப்படுபவர்கள் தாலிபான்கள். ஆனால் அவர்களுமே மொட்டையாக வில்லன்களாக காட்டப்படவில்லை. இக்கட்டுரையின் முதல் பாகத்தில் தாலிபான்களுக்குப் பின்னிருக்கும் காரணங்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் எழுதியதை கவனித்தீர்கள் அல்லவா? ஆஃப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ அதுதான் படத்தில் காண்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கழுத்தறுபட்டு இறந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளரான டானியல் பேர்லைப் பற்றிப் படித்தோம் அல்லவா? இதைப்போன்ற ஒரு சம்பவம் படத்தில் உள்ளது. ஆனால் அதைச் செய்பவர்கள் தாலிபான்கள். தாலிபான்கள் வசமுள்ள குண்டுகள், அவர்கள் பின் லேடனை சந்திப்பது, அமெரிக்காவுக்கு எதிரான அவர்களது வாதங்கள் போன்றவையெல்லாம் படத்தில் வருகின்றன. தாலிபான் என்பது ஒரு தீவிரவாத கும்பல். அந்தத் தாலிபான்களை ஆஃப்கன் மக்களே வெறுத்து திட்டுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளன.

    அதேபோல், படத்தின் கதாநாயகன் ஒரு முஸ்லிம். அமெரிக்க வீரர்களுடன் சேர்ந்து தீவிரவாதிகளை தாக்கும் காட்சியில், திடீரென்று கதாநாயகனைக் காணவில்லை. பார்த்தால் அவன் அங்கே தொழுகை செய்கிறான். அநியாயமாக தன்னால் இறந்தவர்களுக்காக அழுகிறான். வருந்துகிறான். படம் நெடுகவே கதாநாயகன் இரக்கமுள்ள ஒரு அருமையான முஸ்லிமாகத்தான் காட்டப்படுகிறான்.


    கருத்து சொல்லும் துணிவு இருந்தால் இந்த கருந்தேளின் கருத்துக்கு பதில் கூறவும்?? (துணிவு இருந்தால் மட்டுமே)

    ReplyDelete
  7. சாருவின் வாசகர்கள் கருத்துகளை துணிந்து கூறக்கூடியவர்கள் (சாரு போல் )
    பார்ப்போம் நீங்கள் எப்படி பதில் கூறுகின்றீர்கள் என்று?

    மழுப்பல் இருக்க கூடாது

    ReplyDelete
  8. நான் போட்ட பின்னூட்டம் இருக்கிறது. அதற்க்கான உங்களுடைய பதில் என்ன? அதுதான் முக்கியம்

    திருப்பூர் வரதராஜன்

    ReplyDelete
  9. அனானி நண்ப்[ரே.. ஒரு சினிமா என்ற வகையில் நடு நிலையுடன் கருந்தேள் விமர்சித்து இருக்கிறார்... அதை நானும் ரசித்து படித்தேன்...

    ஆனால் அந்த படம் இஸ்லாமியர் உணர்வுகளை புண்படுத்துகிறதா இலையா என்பதை ஓர் இந்துவாகிய நானோ , அவரோ கணிக்க இயலாது

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]