Pages

Thursday, January 3, 2013

உடை மட்டுமே பெண்ணை காக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.. பிறகு எதுதான் காக்கும் ?


  ராணுவ ஆட்சி வந்து எல்லோரையும் சுட்டு தள்ளினால்தான் இந்தியா உருப்படும் என்ற “ எளிய ‘ தீர்வு டீக்கடை விவாதங்களில் பிரபலமானது. அதை சற்று மெருகேற்றி , சமூக மாற்றம் என்ற தீர்வு தற்போது  தொலைக்காட்சிகளில் முன் வைக்கப்பட்டு வருகிறது.

 இன்னொரு சாரார் சட்டங்கள் இருப்பதால்தான் குற்றங்கள் நடக்கின்றன என்று அதிரடியாக கார்ப்பரேட் சாமியார்களிடம் படித்ததை ஒப்பிக்கிறார்கள்.
இதற்கு இவர்கள் ஒரு வினோதமான விளக்கம் வேறு கொடுக்கிறார்கள். ஓஷோவால் முதலில் சொல்லப்பட்டு , கார்ப்பரேட் சாமியார்களால் பிரபலமான விளக்கம் அது.

 காட்டுவாசிகளிடம் மதங்களோ சட்டங்களோ இல்லை.. அங்கு கற்பழிப்பு கிடையாது. என்கிறார்கள்...

ஒன்றை மறந்து விட்டார்கள். காட்டுவாசிகளிடம்  பெண்களை போக பொருட்களாக சித்திரிக்கும் சினிமா , தொலைக்காட்சி  , பத்திரிகைகள் என எதுவும் இல்லை..

நம் ” நாகரிமடைந்த ” சமூகத்தில் இந்த நிலை இல்லையே....  சமூக மாற்றம் , சமூக மாற்றம் என முனகுவதால் ஒன்றும் மாறி விடாது.

  வீடு தோறும் திண்ணை கட்டி, பேசி பேசி வளர்ந்த சமூகம் நம் சமூகம். நம்மால் ஒரு சிறு செயலைக்கூட செய்ய முடியாது.

  புத்தாண்டை ஒட்டி , மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க , அரசியல் விமர்சகர் ஞாநி ஒரு முயற்சி செய்தார்.  அனைவரும் இது சம்பந்தமாக சி எம் செல்லுக்கு மெயில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வளவுத்தான்..  நொள்ளை, நொட்டை சொல்ல புற்றீசல் என ஆட்கள் குழுமி விட்டார்கள் . மெயில் அனுப்பினால் மட்டும் மதுக்கடைகளை மூடி விடுவார்களா , மூடி விட்டால் மட்டும் பிரச்சினை நின்று விடுமா , இது மனித உரிமை மீறல் அல்லவா என அவரையே திகைக்க வைத்து விட்டனர். ஒரு சிறிய செயல் . இதில் கூட மக்கள் ஒன்று  கூடுவதில்லை. செயல் என்றால் அவ்வளவு கசப்பு.

இவர்களை வைத்து சமூக மாற்றமா ? ஜோக் அடிக்காதீர்கள்.

 நிறுவனங்களில் செயல் திறனை பெருக்கி , உற்பத்தியை அதிகரிக்க ஜப்பானிய வழி முறைகளை , கருதுகோள்களை  நம் நிறுவனங்கள் பின்பற்றுவதுண்டு.

செய்ரி , செய்டன் , செய்கெட்சு, சிட்ச்சுக்கே மற்றும் கைசன் என்றெல்லாம் பார்த்து இருப்பீர்கள். ஜப்பானிய சிந்தனை முறை என்பதால் இதை யாரும் புத்த மத சிந்தனை என புறக்கணிப்பதில்லை..

அதே போல, இந்தியாவின் இழி நிலைக்கு மருந்தாக இஸ்லாமிய சிந்தனைகளை முன் வைத்தால் மட்டும் மத பிரச்சாரம் என சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.


  அமெரிக்கன் சோஷியலாஜ்ஜிக்கல் ரெவியூ ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இஸ்லாமிய நாடுகளில் பாலியல் தவறுகள் குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. தவறு இல்லவே இல்லை என்பதில்லை.. ஆனால் மற்ற நாடுகளை விட குறைவு.

வெறும் சட்டம் மட்டும் இதை சாதிக்க முடியாது. மத நம்பிக்கைகளும் , சிறுவயதிலேயே மனதில் உருவாகும் மதிப்பீடுகளுமே இதற்கு காரணம்.

 நம் ஊரில் சிறு வயதில் இருந்தே, ஈவ் டீசிங் என்பதுதான் ஹீரோயிசம் என்பது  பதிய வைக்கப்படுகிறது. பெண்களை போகப்பொருட்களாக காட்டுகிறோம். எந்த விளம்பரமாக இருந்தாலும் , அதில் பெண்ணை கவர்ச்சிக்காக பயன்படுத்துகிறோம்.

இப்படி சாக்கடையாக இருக்கும் சமூகத்தில் ஆடையை கண்ணியமாக அணிந்தால் மட்டும் பாதுகாப்பு உறுதியாகி விடுமா என்ன ? கண்டிப்பாக இல்லை.

கடும் தண்டனை , கண்ணிய ஆடை மட்டும் போதாது. ஒட்டு மொத்தமாக மத மாற வேண்டும் என்பது இல்லை.. ஆனால் மனம் மாற வேண்டும்.

  என்னைப்பொறுத்தவரை எந்த மதம் மீதும் எனக்கு காழுப்புணர்ச்சி கிடையாது.. எல்லாவற்றிலுமே நல்ல விஷ்யங்கள் உள்ளன.

ஆனால் பெரும்பாலான மதங்கள் தனி மனித வள்ர்ச்சியை மட்டுமே யோசிக்கின்றன.. மோட்சம் , நிர்வாண நிலை , ஜீவன் முக்தி நிலை என தனி மனிதன் அடைய வேண்டிய உயர் நிலைகளை சொல்கின்றன..

ஆனால் ஒரு மார்க்கம் மட்டும் சற்று வேறுபட்டு, தனி மனித உயர்வையும் சொல்கிறது. சமுதாய நலனையும் சொல்கிறது.

 ஒரு சாக்கடை சமூகத்தில் வாழும் மனிதன் , என்ன உயர்வு அடைந்து என்ன பயன்?


 கண்ணியமான உடை , நல்ல மதிப்பீடுகள் , ஆண்களுக்கு உரிய கட்டுப்பாடுகள்  , கடும் தண்டனைகள் என ஒவ்வொன்றை பற்றியும்  அது சொல்கிறது... அப்படி எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும். கண்ணியமான ஆடை எனப்து ஒரு பகுதி மட்டுமே .. அது மட்டுமே முழு தீர்வு அல்ல .

    கண்ணியமான ஆடை மட்டுமே காக்காது என்றால் ,  வேறு எது காக்கும் என்பதை அசைக்க முடியாத ஆதரங்க்ளுடன் அடுத்தடுத்து பார்க்க இருக்கிறோம்...    தொடர்ந்து பேசுவோம்.... பேசுவதுடன் மட்டும் அன்றி செயல்புரிவோம்..




     








18 comments:

  1. " புத்தாண்டை ஒட்டி , மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க , அரசியல் விமர்சகர் ஞாநி ஒரு முயற்சி செய்தார். அனைவரும் இது சம்பந்தமாக சி எம் செல்லுக்கு மெயில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்."

    இந்த விடயத்தை எதிர்த்தவர்களில்/விமர்சித்தவர்களில் எழுத்தாளர் சாரு வும் ஒருவர். இது தொடர்பாக தங்களின் கருத்து என்ன?

    எனது பின்னோட்டத்தை பிரசுரிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். தங்களின் நேர்மையையும் ஒரு தடவை உரசி பார்ப்போமே!

    ReplyDelete
  2. திரு. பிச்சைக்காரன் அப்துல்லா அவர்களே, American Sociological Review-யின் முழு அறிக்கைக்கான சுட்டியை தர இயலுமா, அந்தக் கட்டுரையை வாசிக்கக் கூட செய்யாமல் ஒருவர் பதிவேற்றியுள்ளார், அவருக்கு கொஞ்சம் பதில் கூற வேண்டியுள்ளது ... !!!

    ReplyDelete
  3. சமிபத்திய பத்திரிக்கை செய்திகளை டில்லி சம்பவத்திற்கு பிறகு உள்ள பாலியல் வல்லுறவு செய்திகளை பார்த்ததில் இந்தியாவில் ஒன்றில் கூட முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இல்லை .ஜனத்தொகையிப்ன் படி பார்த்தால் கூட 15%முஸ்லிம்கள் இருந்திருக்க வேண்டும் .அப்படி இருந்தால் இஸ்லாத்தின் தாக்கல் இல்லை எனலாம் .ஆனால் எனது கண்ணில் ஓன்று கூட படவில்லை ,உலக தளம் சுற்றும் அன்பு சகோதரர் சாறு இந்தியாவில் முஸ்லிம்கள் பாலியல் குற்றம் செய்ததற்கான சமிபத்திய செய்திகள் அவருக்கு கிடைத்திருக்கிறதா என்று கேட்போம்.

    சாறு நான் என்ன கேட்டிருக்கிறேன் .ஒரு நாட்டின் சட்டம் அனுமதித்த வகையில் பெண்கள் ஆடைகள் அணிய கல்லூரிகள் மற்றும் அரசு,தனியார் நிறுவனங்கள் தடுப்பது எதனால்? 90%பர்தா ஆடையை அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
    இதற்கு பதில் தாருங்கள் .அதற்கு பிறகு குரான் வசனம் பற்றி பேசுவோம்

    ReplyDelete
  4. @ இக்பால்....... அந்த அறிக்கையை முழுதும் தந்தால் , அதை மத பிரச்சாரம் என சொல்வார்களே...அதனால்தான் தயக்கம்

    ReplyDelete
  5. @ Ethicalist E ஒரு விஷயத்தை எதிர்க்கவே கூடாது என்பதில்லை... ஒரு விஷயத்தை எதிர்ப்பவர்கள், அதற்கு மாற்றாக என்ன செய்து இருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். தான் எதுவும் செய்யாமல், மற்றவர்கள் செய்வதை விமர்சித்து கொண்டு இருக்கும் கூட்டம் இங்கு அதிகம்... அதைத்தான் கண்டிக்கிறேன்... ஞாநியின் கருத்தை எதிர்க்கும் சாரு , எழுத்தாளர் என்ற முறையில் மாற்று கருத்தை முன் வைத்து கொண்டுதான் இருக்கிறார்... எனவே அவரையும் , ஃஃபேஸ் புக் வீரர்களையும் ஒப்பிட முடியாது

    ReplyDelete
  6. சகோ.ஆனந்த்

    உங்களிடம் ஒரு கேள்வி ..இஸ்லாத்தின் எதிர் பிரச்சார பீரங்கிகள் எவ்வளவோ பதிவுகளை எழுதி தள்ளி விட்டனர்...அதற்க்கு அவர்களின் விசிலடிச்சான் குஞ்சிகளின் விசில் சத்தமும் காதை பிளக்கும்.. அவர்களின் பதிவை அவர்களே படிக்கமாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்..நீங்கள் மட்டும் எப்படி இஸ்லாத்திற்கு ஆதரவாக கருத்து கொண்டிருகிறீர்கள்...அவர்களின் கருத்து படி உங்களுக்கு யாராவது பணமுடிப்பை கொடுத்தார்களா..? ஸ்பெசலா வீட்டிற்கு வந்து தாவா செய்தார்களா..? ஏன் கேட்கிறேன் என்றால் ,

    தங்களின் செயல் எப்படி இருக்கிறது என்றால் ஒரு கட்சி கூட்டத்தில் அடுத்த கட்சியை விமர்சித்து பேசிக்கொண்டு இருக்கும் போது யாரை ஏமாற்ற கார சாரமாக பேசி கொண்டு இருக்கிறார்களோ..அவர்களே எதிர்த்தரப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் பாவம் அந்த பீரங்கிகளின் முகம் எப்படி இருக்கும்...அதையே அவர்களின் பின்னூட்டங்களின் வாயிலாக நாம் காண்கிறோம்..அதனால் தான் கேட்கிறேன்..

    தங்களுக்கு இந்த சிந்தனை எப்படி ,எதனால் வந்தது..??

    ReplyDelete
  7. அப்பப்பா தாங்க முடியலடாலா சாமி இந்த 'இ' அறிவாளிகளின அரிப்பு.

    அனைத்து அறிவாளிகளுக்கும் நான் சொல்ல விழைவது யாதெனில் : பெண்கள் ஆணகளைப்போலவே தனி மனிதர்கள். அவர்களுக்கு சுயமாக சிந்தித்து செயல் படும் திறன் உண்டு. அவர்களது உலகம் மாறுபட்டது. இவ்வுலகத்தினுடன் அவர் கொண்டிருக்கும் உறவு, இதை அவர்கள் புரிந்து கொள்ளும் விதம், இதனுடன் அவர்களது பறிமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் தனித்த சிறப்புடையது. எனவே காலத்திற்கேறப தாங்கள்  என்ன அணிய வேண்டும் எப்படி எங்கு எந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஆண் ஆதிக்க மடையனுக்கும் எந்த கருத்தையும் முன் வைக்க உரிமை இல்லை.

    எனவே தற்போதைய பிரச்சினைகளை சாக்காக வைத்து மதமெனும் மாயா ஜால குட்டிச் சாத்தான் வித்தைகளை மக்கள் மனதில் தினிக்காதே! இது மேலும் மனிதர்களை மடையர்களாக்கும் உத்தியே.

    துனிசியா, மொரோக்கோ ஏன் எகிப்திலும் கூட பெண்கள் அங்குள்ள ஆணாதிக்க மத அடாவடி கொடுமைகளை எதிர்த்து போராடி வருகின்றனர். வெறுமெனே தலையில் போட்டுக் கொள்ளும் சிறு முக்காட்டு துணி கூட வேண்டாம் என ஒதுக்க போராடி வருகின்றனர். ஆனால் இந்தியா போன்ற உன்னத ஜனநாயக நாட்டில் ஆணாதிக்க மடையர்கள் பெண்களுகளை துப்பட்டாவை போட்டு மூடி உணர்வுகளற்ற ஜடப் பொருளாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

    அட மடையர்களே! இது இந்தியா என்பதை முதலில் புரிந்து உணருங்குள். இந்தியாவில் பெண்கள் ஆண்களுடைய உதவி எதுவும் இல்லாமல் தனித்து சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக நீ தனித்து எந்த முடிவையும் எடுக்காதே! அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இது அவர்கள் வாழ்க்கை. இது அவர்கள் உலகம். நீ யாரடா அவர்களுக்காக முடிவெடுப்பது? எந்த மடையன் உனக்கு இந்த உரிமையை கொடுத்ததாக உனக்கு நினைப்பு.

    மதமெனும் மடத்தனத்திற்கு மக்கள அடி பணிய வைத்து மடையர்களாக்கி பிறகு அவர்களை ஆட்டிப்படைக்கும் தாகம் கொண்டு அலையும் மாயா ஜால அனைத்து மட மத குட்டிச்சாத்தான் வித்தைகளுக்கு இந்திய மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.

    கடவுளை மற. மனிதனை நினை.

    ReplyDelete
  8. மாசு நீவிர் சொன்னதில் நிறைய மாசு .பர்தா அணிந்த பெண்கள் மட்டுமே முஸ்லிம்கள் ,மற்ற பெண்கள் அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று மாசு நினனைத்துக் கொண்டார் போலும் .முஸ்லிம் பெண்களில் சிலர் பர்தா இல்லாமலே வெளியே செல்லுகிறார்கள் .கட்டயபடுத்தியிருந்தால் அவர்கள் அவ்வாறு பர்தா அணியாமல் இருக்க முடியுமா?
    பர்தா அணிந்த பெண்களில் 90 வீதம் பேர்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலே அணிகிறார்கள் .மற்றவர்கள் தங்களது பெற்றோர்களின் அறிவுறுத்தல் ,ஆலோசனைகள் பேரில் அணிகிறார்கள் .எப்படி மகனிடம் சிகரெட் பிடிக்காதே ,மது அருந்தாதே ,மாதுகளிடம் நெருங்காதே என்று அறிவுரை வழங்கவில்லையா?
    ஒரு நாட்டின் சட்டம் சிகரெட் ,மது,விபச்சாரம் ஆகியவற்றை அனுமதித்துள்ளதே ,அவ்வாறிருக்க அவரவர் விருப்பபடி அவற்றையெல்லாம் பயன்படுத்த கூடாது என்று சொல்ல பெற்றோர்களுக்கு என்ன உரிமை ?
    காலத்திற்கேற்ப இப்போதைய இளைஞர்கள் பெண் தோழிகளை வைத்துக் கொள்ளவேண்டும் .அவர்களுடன் உச்சகட்ட உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மாமல்லபுரம் என்று கண்ட இடங்களஎல்லாம் சுற்றுகிறான் .பாவம் வீட்டிலே படுக்கை வசதிக்க செய்து கொடுத்து விட வேண்டியதுதானே உங்களது குடும்ப மளிகை கடை லிஸ்ட்டில் மது ,காண்டம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டியதுதானே .மது மாதுவை தடுப்பதிலும் தாய் என்ற பெண்களுக்கும் ஆணாதிக்க மடையர்களுக்கும் எந்த உரிமையும் கிடையாதே.

    துப்பட்டாவை போட்டு மூடினால் பெண்கள் உணர்வற்ற ஜடங்கலாவது எப்படி ?துப்பட்டாவை வைத்து மூடுவதால் உணர்வுகள் அற்றுவிடும் என்று மருத்துவ ஆய்வு கூறுகிறதா?
    கல்லூரிகளில் பெண்கள் விருப்பப்படி ஆடை அணிய அனுமதிக்கவில்லையே ,ஏன் என்று கேட்டீர்களா?
    பல் பெண்கள் நடத்தும் கல்லூரிகளில் இந்த நடைமுறை உள்ளதே .
    ஆணாதிக்க மற்ற மாமேதையே ,உங்கள் குழந்தைகளை உங்கள் மனைவிதான் மலம்சலம் சுத்தப்படுத்தி ,குளிப்பாட்டி ,பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று யார் சொன்னது?
    உங்கள் மனைவியை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளீரா?
    பல இணையதள ஆணாதிக்க எதிர்ப்பு போராளிகள் ,தங்களது மனைவியரை இந்தியாவில் அடுப்பாங்கரையில் ஊத வைத்துவிட்டு அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்களே ,ஏன் அவர்கள் ஒரு மாற்றுக்காக அவர்கள் அடுப்பாங்கரை பொறுப்பை எடுத்துக் கொண்டு மனைவியரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே ?
    மற்ற நாட்டு விமானபணி பெண்கள் போலவே ஏர் இந்தியா விமான பணிப்பெண்களும் ஸ்கர்ட் டி சர்ட் யூனிபார்மில் அணிய அவர்களுக்கு விருப்பமில்லையா? அவர்களை ஏன் ஆதிகாலத்து சேலையில் பவனி வர கட்டாயப்படுத்து வது யார்?
    ஆண்களைப் போலவே பெண்களும் தனியாக வெளியூர் பயணங்களில் ஹோட்டல்களில் தங்க இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?இல்லையா? பிறகு ஏன் இந்த ஹோட்டல்காரர்கள் பெண்களை எ தனியாக தங்க அனுமதிக்கவில்லை ?இந்த ஹோட்டல்கார ஆணாதிக்க மடையர்கள் பற்றி பெண்ணியவாதி பெருந்தகையே ! நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை ?
    இந்தியாவில் பெண்கள் ,ஆண்கள் உதவி இல்லாமல் தனித்து சிந்தித்து முடிவு எடுக்க தகுதி பெற்றவர்கள் ,ஆமாம் மாசு ,

    ReplyDelete
  9. மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா?

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்

    நேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)

    சன் நியூஸ் தொலைக்காட்சியில்

    இன்ஷா அல்லாஹ்…..

    05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
    அதன் மறுஒளிபரப்பு
    06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.

    இதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :
    அடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
    இரண்டாம் பாகத்தின் மறுஒளிபரப்பு
    13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

    காணத்தவறாதீர்கள்!

    ReplyDelete
  10. "ஒரு விஷயத்தை எதிர்க்கவே கூடாது என்பதில்லை... ஒரு விஷயத்தை எதிர்ப்பவர்கள், அதற்கு மாற்றாக என்ன செய்து இருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். தான் எதுவும் செய்யாமல், மற்றவர்கள் செய்வதை விமர்சித்து கொண்டு இருக்கும் கூட்டம் இங்கு அதிகம்... அதைத்தான் கண்டிக்கிறேன்... ஞாநியின் கருத்தை எதிர்க்கும் சாரு , எழுத்தாளர் என்ற முறையில் மாற்று கருத்தை முன் வைத்து கொண்டுதான் இருக்கிறார்... எனவே அவரையும் , ஃஃபேஸ் புக் வீரர்களையும் ஒப்பிட முடியாது"

    சாரு மது தடையை எதிர்க்கின்றார். அத்துடன் தரமான மதுவை வழங்க ஆலோசனை வழங்குகின்றார். (தனிப்பட்ட முறையில் நானும் பூரண மது தடையை ஆதரிக்க வில்லை)'

    ஆனால் தாங்கள் சிபாரிசு செய்யும் இஸ்லாம் இல் / இஸ்லாமிய சட்டங்களில் மது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்களின் கருத்து. (அது தரமாக இருந்தாலும்/ தரமற்றதாக இருந்தாலும்)

    "அமெரிக்கன் சோஷியலாஜ்ஜிக்கல் ரெவியூ ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இஸ்லாமிய நாடுகளில் பாலியல் தவறுகள் குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது."

    அத்துடன் முக்கியமாக சுவீடன், நோர்வே போன்ற நாடுகளில் பாலியல் வல்லுறவில் ஈடுபவர்கள் அங்கே குடியேறிய முஸ்லிம்கள் தான் என்பது ஆதாரபூர்வமாக தரவுகள் நிரூபிக்கின்றன. (ஆதாரங்கள் தேவைப்படின் தரலாம்)




    ReplyDelete
  11. @ Ethicalist E என்ன சொல்ல வருகிறீர்கள்...? இஸ்லாமிய சட்டங்கள் அமலில் இருக்கும் நாடுகளில் யோக்கியமாக இருந்து விட்டு7 , இஸ்லாமிய சட்டங்கள் இல்லாத நாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறீர்களா ? இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய சட்டம் வேண்டும் எனும் கருத்துக்குத்தானே இது வலு சேர்க்கிறது ? ஏன் சேம் சைட் கோல் போடுகிறீர்கள் ?.

    ReplyDelete
  12. பிச்சைக்காரன், தாங்கள் தற்போது எந்த மதத்தை பின்பற்றுகிறிர்கள்?

    ReplyDelete
  13. அன்புள்ள பிச்சைக்காரன்,
    இந்தியாவில் உள்ள கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதுதான் தீர்வு என்னும் அரிய கண்டுபிடிப்பை வலியுறுத்தும் படியாக நீங்கள் எழுதிய தொடர் பதிவுகளை படித்தேன். தங்களின் பதிவுகளில் உள்ள முக்கிய கருத்துகளை தொகுத்து அதற்கு என் எதிர்வினைகளை பதிவு செய்ய முயற்சி செய்கிறேன். எனக்கு எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும் அனைத்து மதங்களும் நாம் வாழ்க்கை என்னும் தீராத புதிரை எதிர்கொள்ள உதவுவதற்காக உருவாக்கப்பட்ட வேறு வேறு வழிமுறைகள் என்னும் கொள்கை உடையவன் என்பதை முதலிலேயே தெரிவித்து கொள்கிறேன்.
    \\\\\ஆண்களும் பெண்களும் கட்டுபாடுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல் , மத கோட்பாடாக இல்லாமல் , ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால் , இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை என்ற நிலையை கொண்டு வந்தால் , குறைந்தது இன்னும் நூறு ஆண்டுகளிலாவது நாமும் மற்றவர்களை போல நாகரிகம் அடைந்த மக்களாக மாற முடியும்///////
    கட்டுப்பாடு என்று எதை சொல்கிறீர்கள்? பர்தா அணிந்து உடம்பு முழுவதையும் மறைக்க சொல்வதையா? இது பெண்களின் சுதந்ததிரத்தில் தலையிடுவது ஆகாதா? நமது நாட்டின் வெப்ப நிலையில் அது பெண்களுக்கு தரும் கஷ்டம் என்னவென்று யோசிக்க வேண்டாமா? இஸ்லாம் நாடான சவுதி அரேபியாவில் கூட பெண்கள் இதற்கு எதிராக போராட ஆரம்பித்து விட்டனர் என்பது தெரியுமா?இல்லை நான் பர்தாவை சொல்லவில்லை, நாகரீகமான உடைதான் அணிய சொல்கிறேன் என்று சொல்வீர்கள் ஆனால் ,இந்து மதமோ, கிறிஸ்தவ மதமோ அல்லது வேறு எந்த மதமாவது பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம் என்று சொல்கிறனவா? அவை இது தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லவில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு எனில், அப்படி சொல்வது சர்வாதிகாரம் மற்றும் தனி மனித உரிமையில் தலையிடுவது என்பது என் கருத்து. இந்து மதத்தின் அடிப்படை சிறப்பு என்பது அது எந்த கருத்தையும் ஒரு தனிமனிதனின் மீது திணிக்காது , பலவித மார்க்கங்கள் மற்றும் வழிமுறைகளை அது சொல்கிறது, அதை பின்பற்றுவர்கள் அனைத்தையும் பரிசீலித்து தனக்கு வேண்டியதை தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
    கடும் தண்டனை என்று நடுத்தெருவில் நிறுத்தி கல்லால் அடிப்பது மற்றும் உறுப்புகளை வெட்டுவது போன்றவற்றை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த 21 ஆம் நூற்றாண்டில் இவை எல்லாம் காட்டுமிராண்டி தனம் என்று தோன்றவில்லையா? இந்த மாதிரி தண்டனைகள் மற்றும் பர்தா அணிவதன் மூலமாக நாம் இன்னும் நூறு ஆண்டுகளில் நாகரிகம் அடைந்த மனிதர்களாக மாற முடியும் என்று நீங்கள் குறிப்பிடுவது வியப்பாக உள்ளது. நிற்க. நான் இந்த தண்டனைகளை/வழிமுறைகளை குறிப்பிடும் இஸ்லாமிய மூல நூல்களை குற்றம் சொல்லவில்லை. அவை தோன்றிய காலத்திற்கு ஏற்றவாறு சொல்லப்பட்ட விஷயங்கள் அவை. இந்து மூல நூல்களிலும் இவ்வாறு பல விஷயங்களை காண முடியும். (எ.கா : மனு ஸ்மிருதியில் உள்ள வர்ண பிரிவினைகள் ). நாம்தான் மத மூல நூல்களில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத கருத்துகளை மறு பரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும். இந்து மதத்தின் சிறப்பு என்னவென்றால் அது இந்த சுதந்திரத்தை அதை பின்பற்றுபவனுக்கு தருகிறது. வேதத்தில் உள்ள பல கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை உப நிடதங்களிலும் , கீதையிலும் காணலாம். கீதையின் இறுதியில் கிருஷ்ணன் அர்ஜுனனை தான் சொன்ன கருத்துகளை பரிசீலித்து ஏற்று கொள்ள சொல்கிறானே தவிர கண்மூடிதனமாக அல்ல. கீதையை வாசிக்கும் போது நாம் ஒவ்வொருவரும் அர்ஜுனனே. நீங்கள் இந்தியாவிற்கு தீர்வாக குறிப்பிடுவது என்னவென்றால் , எதையும் யோசிக்காமல் இஸ்லாமிய மூல நூல்களை பின்பற்றுவது.

    ReplyDelete
  14. \\\\\ ஆனால் இஸ்லாம் மதத்தில் இந்த இந்திய குறுக்கு புத்தி வேலையை காட்ட முடியாது... காரணம் அவர்கள் மனிதனை நம்புவதில்லை... குர் ஆனையே நம்புகிறார்கள்..’’’
    குர் ஆன் , மத நூலாக மட்டும் அன்றி வாழ்வியல் நூலாகவும் திகழ்வதே இதற்கு காரணம், கணவன் மனைவி பிரச்சினை முதல் கடவுள் வரை குர் ஆன் சொல்வதே இறுதி முடிவு////
    மறுபடியும் தனி மனிதனுக்கு சிந்திக்கும் உரிமையே கிடையாது. குர் ஆனில் சொல்லப்பட்ட விஷயம் 2000 வருட பழசாக இருந்தாலும் அதையே எல்லா பிரச்சினைகளுக்கும் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். இதனால் விளையும் சாம்பிள் பிரச்சினைகளை கீழே கொடுத்துள்ளேன் .
    1. அராப் ஷேக்குகள் இந்தியா வந்து 1,00,000 செலவில் பெண்களை திருமணம் செய்து அனுபவித்து விட்டு கைவிடுகின்றனர்.இதனால் அவர்கள் விபசாரத்தில் தள்ளப் படுகின்றனர்.
    2. குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள ஜிஹாத் என்பதை திரித்து இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாதத்தில் தள்ளப்படுகின்றனர்.

    ReplyDelete
  15. \\\\பல ஆண்டுகள் நம் நாட்டில் மொகலாயர் ஆட்சிதான் நடந்தது,,, அவர்கள் நினைத்து இருந்தால் , எல்லா கோயில்களையுமே இடித்து தள்ளி இருக்கலாம்,,, ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை../////
    உங்கள் வரலாற்று அறிவு என்னை புல்லரிக்க வைக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் முகலாய ஆட்சியில் இடிக்கப்பட்டு மசூதிகள் எழுப்பபட்டன என்பதை வரலாறு சிறிதளவு படித்த அனைவரும் அறிவர். சில கோயில்கள் விட்டு வைக்கப்பட்டன என்று நீங்கள் கணக்கு சொல்வீர்கள் எனில் அவை சிறிய கோயில்கள் அல்லது செல்வம் இல்லாத கோயில்கள் என்பதே உண்மை.

    ReplyDelete
  16. \\\\ ஒரு வெளி நாட்டுக்காரர் நம் நாட்டுக்கு ஒரு முறை வந்து பார்த்தால் போதும் , நம் நாட்டைப்பற்றிய கேவலமான மனச்சித்திரம் பதீவாகி விடும். டிராபிக்கை மதிக்காத வாகன ஓட்டிகள், நடு ரோட்டில் மல ஜலம் கழிக்கும் படித்த சமுதாயம், அடித்து பிடித்து பேருந்தில் ஏறும் காட்டுமிராண்டித்தனம் , ப்ளூ ஃபில்ம் போன்ற டிவி நிகழ்ச்சிகள் , மஞ்சள் பத்திரிக்கைகள் போன்ற வார இதழ்கள் போன்றவற்றை பார்க்கும் புதிய்வர் யாருக்கும் இது ஒரு காட்டு மிராண்டி தேசம் என்ற எண்ணமே தோன்றும்.///

    இவை அனைத்தையும் ஒத்து கொள்கிறேன். ஆனால் இந்த பிரச்சினைக்கு இஸ்லாம் தீர்வா? அப்படி என்றால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இந்த பிரச்சினைகள் ஏன் இன்னும் இருக்கின்றன? சொல்ல போனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் இந்த பிரச்சினைகள் அறவே இல்லை. எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக நாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடலாமா? நான் சொல்ல வருவது என்னவென்றால், பிரச்சினைகளுக்கு தீர்வு மதம் மாறுவது அல்ல, பிரச்சினை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு வருவதும், சட்டங்களை சரியாக அமல்படுத்துவதும் (effective implementation ), சமூகத்தின் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்துவதும் தான்.

    ReplyDelete
  17. \\\\பெரும்பாலான மதங்கள் தனி மனித வள்ர்ச்சியை மட்டுமே யோசிக்கின்றன.. மோட்சம் , நிர்வாண நிலை , ஜீவன் முக்தி நிலை என தனி மனிதன் அடைய வேண்டிய உயர் நிலைகளை சொல்கின்றன..
    ஆனால் ஒரு மார்க்கம் மட்டும் சற்று வேறுபட்டு, தனி மனித உயர்வையும் சொல்கிறது. சமுதாய நலனையும் சொல்கிறது/////

    மோட்சத்தை அடைய வேண்டிய மனிதன் ஒரு போதும் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க கூடாது என்று தான் ஹிந்து மதம் சொல்கிறது. இதை பின்பற்றினாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இஸ்லாமும் அன்பை தான் போதிக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் அதை விட்டு விட்டு அது 2000 வருடத்திற்கு முந்தைய சமூகத்திற்கு சொன்ன நெறிகளை தற்போது கண்மூடித்தனமாக பின்பற்றுவதின் மூலம் இந்தியாவை மாற்றி விடலாம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ReplyDelete
  18. கடைசியாக, தங்கள் பெயர் ஆனந்த் என குறிப்பிடபடுவதில் இருந்து தாங்கள் ஒரு இந்து என ஊகிக்கிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    நீங்கள் இந்த கட்டுரையில் இந்திய நாட்டை பன்றிக்கு ஒப்பிடுகிறீர்கள். மற்றும் இந்து கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்றும் இஸ்லாம் தான் அதற்கு மாற்று எனவும் சொல்கிறீர்கள். இந்த சுதந்திரத்தை தங்களுக்கு இந்து மதமும் இந்த medicore இந்தியாவும் தான் அளிக்கிறது. தாங்கள் ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து கொண்டு அந்த நாட்டை பற்றியோ அல்லது இஸ்லாமிய மதத்தை பற்றியோ இவ்வாறு கூற முடியுமா என்று சற்று சிந்தித்து பாருங்கள் .

    அந்த சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரம் தான் இந்து மதத்தின், இந்தியாவின் சிறப்பு. நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் எல்லாம் சட்டம் மற்றும் ஒரு திறமையான ஜனநாயக அரசால் தீர்க்கப்பட கூடியவையே. ஆனால் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் தனி மனித சுதந்திரமும், சகிப்புத்தன்மையும் இஸ்லாமை பின்பற்றும் நாடுகளில் வர வாய்ப்பு இல்லை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]