ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடக்கும்போது , நம் ஆட்கள் டெம்ப்ளேட்டாக சில குறைகளை எடுத்து வைப்பார்கள்.
நெரிசல் அதிகம், ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருப்பதால் கால் வலிக்கிறது, உணவகத்தில் சாம்பார் சரியில்லை என்பது போல அடுக்குவார்கள்.
இந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பது பலருக்கு தெரியாது.
பல முக்கியமான பதிப்பகங்கள் , 10% தள்ளுபடி என வழக்கமான அம்சங்கள் உண்டு. ஆனால் அப்பளம் , ஊறுகாய்களுக்கு புத்தக ஸ்டால்கள் பக்கத்தில் புத்தகங்களோடு புத்தகங்களாக இடம் ஒதுக்கும் காமெடி கிடையாது.
மெரினா பீச் அருகில் வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. விவேகாந்தர் இல்லம் இருக்கிறது அல்லவா..அதற்கு அடுத்த வளாகம்.
நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய். வேடிக்கை பார்க்கும் கூட்டம் அவ்வளவாக இல்லை. காரணம் வேடிக்கை பார்க்க மெரினா இருக்கையில் புத்தக கடைகளில் எக்சைட்மெண்ட் குறைவுதான்.
உண்மையிலேயே புத்தகம் வாங்க வருபவர்கள் மட்டுமே வருவதால் நெரிசல் இன்றி புத்தகங்களை பார்வை இட முடிகிறது.
குறிப்பாக இளைஞர்களும் ,இளம்பெண்களும் இடது சாரி புத்தகங்கள் , தத்துவம் , இலக்கியம் என தேடி தேடி வாங்குவதை பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது.
என்னை கவர்ந்தது ரஷ்ய புத்தகங்கள், கம்யூனிச புத்தகங்கள் , இஸ்லாமிய நூல்கள் போன்றவைதான்.
அவற்றை பற்றி விரிவாக பிறகு எழுதுவேன்.
இதே போல வேப்பேரி பெரியார் திடலிலும் ”சென்னை புத்தக சங்கமம் “ என்ற பெயரில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.
இந்த கண்காட்சிக்கு இந்த டைட்டிலை வைத்தது நிர்வாகிகள் அல்லர். நல்லதொரு தலைப்பு யோசித்து அனுப்புமாறுஅறிவித்து இருந்தார்கள். அதில் சிறந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்படும் என சொல்லி இருந்தார்கள்.
அப்படி பலர் அனுப்பி இருந்தார்கள். நண்பரும் , பத்திரிக்கையாளரும் , பதிவருமான லக்கிலுக் அனுப்பிய பெயரே சிறந்த தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த கண்காட்சிக்கு அனுமதி கட்டணம் , பார்க்கிங் கட்டணம் என எதுவும் இல்லை. பெரியார் திடலில் நடந்தாலும் , ஆன்மீக புத்தகங்களும் கிடைக்கின்றன.
ஒவ்வொரு பதிப்பகம் குறித்தும் , அந்த பதிப்பகங்களின் முக்கிய புத்தகங்கள் குறித்தும் அவ்வப்போது அறிவிக்கப்படுவது வெரி யூஸ்ஃபுல்.
இந்த புத்தக கண்காட்சியில் என்னை கவர்ந்த சூப்பர் சிக்ஸ் புத்தகங்கள் சுருக்கமாக... விரிவாக பிறகு பார்க்கலாம்..
6. பீட்டர்ஸ்பர்க் நாயகன் -
தாஸ்தயேவ்ஸ்கி எழுத்துகளை படித்து இருக்கிறோம். அவரைப்பற்றி எழுதப்பட்டவற்றையும் சிலர் படிக்க நினைக்கலாம். அந்த வகையில், இது ஒரு முக்கியமான புத்தகம்.
5 லெனினுக்கு மரணமில்லை
இது லெனினின் வரலாற்றை கதை போன்ற வடிவில் சுவையாக சொல்லும் புத்தகம். சோவியத் காலத்தில் வந்த புத்தகம் இப்போது மீண்டும் வருவது மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
4 மூன்று ஆண்டுகள்
செக்கோவ் சிறுகதைகள் படித்து இருக்கிறோம். மூன்று ஆண்டுகள் என்ற இந்த சிறுநாவல் ( அல்லது சற்று பெரிதான சிறுகதை !! ) கொஞ்சம் வித்தியாசமானது.
கொஞ்சம் விரிவாக கதையை சொல்லி இருக்கிறார், தனக்கே உரித்தான பாணியில். ஹீரோ , வில்லன் என்ற அலுத்து போன பாணி அவர் எழுத்துகளில் இருப்பதில்லை. இதிலும் இல்லை. யதார்த்தமான நடை. முக்கியமான படைப்பு
3 என் வாழ்க்கை - டிராட்ஸ்கி
மாற்று உலகை , மாற்று வாழ்க்கையை கனவு கண்டு சோவியத் யூனியனை படைத்தார்கள். அந்த கனவு கிட்டத்தட்ட மெய்ப்பட்டு விட்டது போல தோன்றியது. அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளே சற்று அயர்ந்து போயின.ஆனால் இந்த பொன்னுலக கனவு விரைவில்கலைந்து போனது .
ஒரு வேளை டிராட்ஸ்கியின் பாதையில் சோவியத யூனியன் நடை போட்டு இருந்தால், உலக வரலாறு வேறு திசையில் சென்று இருக்க கூடும்.
சோவியத் யூனியனின் சிற்பிகளில் ஒருவர் இவர். ஆனால் அவர் அந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டு கொல்லவும் பட்டார்.
அவர் மேஜையில் எழுதிக்கொண்டிருந்த தாள்களை அவர் ரத்தம் நனைத்தது. அவர் இறப்புக்கு பின் வெளிவந்த நூல் , அவர் ரத்தத்தின் ஒளி அச்சுடன் வெளியானது.
ஒரு மாபெரும் மனிதனைப்பற்றிய புத்தகம் இது.
2. வலிமார்கள் வரலாறு.
இஸ்லாமிய ஞானிகள், தலைவர்கள், தேச பக்தர்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் இதை யாரும் முன்னெடுப்பதில்லை. இதற்கு காரணம் இஸ்லாமியர்க்ள்தான்.
நம் ஊரில் கிரிக்கெட் ஆடும் டெண்டுல்கரை , கிரிக்கெட்டின் கடவுள் என்பார்கள். கடவுள் என்றால் அவர்தான் உலகத்தை படைத்தார் என்றல்ல.. அது ஓர் உயர்வு நவிற்சி .
இந்த உயர்வு நவிற்சி நம் இயல்பு. அது போல மகான்களையும் சிலர் கடவுள் என சொல்வது இஸ்லாமியர்களுக்கு பிடிப்பதில்லை.
இதனால் சில ஞானிகள் , மகான்கள் எழுத்துகள் பரவலாக வருவதில்லை. ஆனாலும் சில அருமையான புத்தகங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி பல புத்தகங்கள் வந்தாலும் , எவர் க்ரீன் புத்தகம் இது. பல பகுதிகளாகா வந்தது.
கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம்
1. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்.
பின் நவீனத்துவத்தின் அடையாளம் இந்த சிறுகதை தொகுப்பு.
சிலர் அடிக்கடி என்னிடம் கேட்பார்கள்.சாரு எழுதிய ” கிரிக்கெட்டை முன் வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது.. கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான அமைப்பியல் ஆய்வும்” இந்த கதைகள் எங்கு கிடைக்கும் என்பார்கள்..
இவை இரண்டும் இந்த தொகுப்பில் உள்ளன. மேலும் சில முக்கிய கதைகளும் இதில் இருக்கின்றன.
அட , இந்த கதை இதிலா இருக்கிறது என ஆச்சர்யப்படுவீர்கள்.
அந்த வகையில் இது ஒரு முக்கியமான புத்தகம்.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]