Saturday, May 18, 2013

இறந்தவர்களிடம் பண மோசடி ( அறிவியல் புனைவு )


 கண்டிப்பாக அவன் ஏதோ ஃபிராடு செய்கிறான் என புரிந்தது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை.

கணேசன் எனக்கு பள்ளிகாலத்தில் இருந்தே பழக்கம்.  நான்கூட அவ்வப்போது லீவு எடுப்பேன். ஆனால் அவனோ ஒரு நாள் கூட லீவு எடுக்கவே மாட்டான். அந்த அளவுக்கு படிப்பில் ஆர்வம் என அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள். லீவு எடுக்காமல் வந்து விடுவானே தவிர வகுப்பறைக்குள் வர மாட்டான். கால்பந்து மைதானம் அருகே ஒரு புளிய மரம் இருக்கும். அங்கே அமர்ந்து சினிமா பத்திரிக்கைகளையோ , சீன் படங்களையோ பார்த்து கொண்டு இருப்பான்.

அப்போதெல்லாம் இண்டர்னெட் கிடையாது. எனவே யாருக்கும் கிடைக்காத சீன் படங்கள் அவனிடம் இருப்பது அபூர்வமானதாக கருதப்பட்டது. மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அதை காட்டுவான். விலைக்கும் விற்று வந்தான். அந்த வகையில் அந்த வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.

காசின் அருமை அப்போதே அவனுக்கு புரிந்து விட்டது, சம்பாதிக்கும் லாகவமும் கை வந்து விட்டது.

ஆனால் ஆசிரியர்கள் அவனை அவ்வளவாக கண்டிப்பதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கி விடுவான்.

எனவேதான் நன்றாக படிக்க கூடிய எனக்கு பி ஏ தமிழ் பிரிவு கிடைத்தது அவனுக்கோ ஆர் ஈ சீயில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் கிடைத்தது.

    இதில் கொடுமை என்னவென்றால் நான் பி ஏ படித்தாலும் ஒரு வொர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக இயந்திரவியலில் பல நுணுக்கங்களை கற்று , பொறியியல் துறையில் செட்டில் ஆகி விட்டேன்.

அவனோ பொறியியல் துறையில் பட்டம் பெற்றாலும் அந்த துறை தவிர மற்ற துறைகளில்தான் ஆர்வம் காட்டி வந்தான்.

ஒரு நாள் ஓர் ஆர்டர் விஷ்யமாக சென்னை வந்தபோது, மூர் மார்கெட்டுக்கு வழி கேட்டு கொண்டு இருந்தேன். பென்ஸ் கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது, அருகில் சென்றேன்..

“ சார்..இங்கே மூர் மார்க்கெட் பக்க்கதில், கெஜேஃப் எஞ்னினியரிங் எங்கே இரு..” கேட்ட்கும்போதே முகத்தை பார்த்து விட்டேன்.

அட.. நம்ம கணேஷ்,.

“ “டேய்...கணேஷ்... நீயா ,,, நல்லா இருக்கியா?”

அவனுக்கும் என்னை தெரிந்து விட்டது.

“ அட ... நீயா.... வாடா வா... பார்த்து எத்தனை நாள் ஆச்சு... ம்ம்...காரில் ஏறு “

அழைத்து கொண்டு பெசண்ட் நகரில் இருக்கும் அவன் வீடு நோக்கி காரை பறக்க விட்டான்.

“ மச்சான்.. ஹார்ட் வொர்க்  , ஸ்மார்ட் வொர்க் என இரண்டு இருக்கு,,, நான் அந்த காலத்தில் இருந்தே , ஸ்மார்ட் வொர்க்கைத்தான் நம்புறேன்.. பாரு.. இந்த மாதிரி என்னிடம் நாலு காரு இருக்கு. சொந்தமா மூணு வீடு இருக்கு. எல்லாம் மூளைடா.. “ சிரித்தான்.

அவன் என்ன தொழில் செய்கிறான் என யூகிக்க முடியவில்லை.. ஏதோ தப்பான வழி என புரிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என புரியவில்லை. சீட்டு , காந்த படுக்கை , பிரமிடு போன்று லோக்கலாக இறங்கும் ஆளும் இல்லையே.

என்னை பார்த்து புன்னகைத்தான்.

” ஆசை கண்களை மறைக்கும்,இந்த கான்சப்டை மட்டும் மனதில் வச்சுக்கிட்டா, எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம்டா.. :

“ டேய்..மத்தவங்க ஆசையை பயன்படுத்தி ஏமாத்துறது தப்பு,,, என்னிக்கு இருந்தாலும் மாட்டிக்குவ”

மறுபடி சிரித்தான்.

“ தம்பி... நான் ஏமாத்துறது ஏற்கனவே இறந்து போனவங்களை... அவங்க எப்படி என்னை மாட்ட வைக்க முடியும்??”

” என்னடா சொல்ற” அதிர்ச்சி அடைந்தேன்.

“ம்ம்.... அட்வான்ஸ்டு அறிவியல் எப்படி கைகொடுக்குதுனு உனக்கு மட்டும் நேரடியா காட்டுறேன்...  நீயே பாரு.. இதை வேறு யாரிடமும் சொன்னதில்லை... உனக்கு சொன்னாலும் நீ இதே போல செய்ய மாட்டேனு எனக்கு தெரியும்.,உனக்கு தைரியம் பத்தாது..  என்னை காட்டி கொடுக்கவும் முடியாது,, ஏனா இதை யாரும் நம்ப மாட்டாங்க..உள்ளே வா”

அறைக்குள் அழைத்து சென்றான்..

விதவிதமான வித்தியாசமான கருவிகள்..  கெமிக்கல் வாசனை. அமிலம் ஒன்று ஆவேசமான மணம் வீசிக்கொண்டு இருந்தது.

“ இதோ பார்..இதுதான் டை மெஷின்...இதன் மூலம் கடந்த காலத்துக்கு மெசேஜ் அனுப்பலாம்..   அந்த கால மனிதர்களுக்கு கனவு மூலம் இந்த மெசேஜ் கிடைத்து , சிலர் நேரில் வரக்கூடும். அவர்களுடன் நான் வியாபாரம் செய்வேன். இதில் எனக்கு ஒரு போதும் நஷ்டம் வராது. லாபம் மட்டுமே வரும்.. எப்படி என நீயே பார்ப்பாய்.. வெயிட் “ என்றான்.

“ என்ன வியாபாரம் ? “

“ என்றுமே டிமாண்ட் இருக்கும் ஒரே வியாபாரம் ஆயுத வியாபாரம்..  இப்ப பாரு..  நவீன ஆயுதம் விற்பனைக்கு அப்படீனு ராஜராஜ சோழன் காலத்துக்கு மெசேஜ் அனுப்புறேன்.  விளைவுகளை பாரு.”


என்னவோ டைப் செய்தான்.. மானிட்டரை அட்ஜஸ்ட் செய்து டெஸ்டினேஷன் காலம் என்பதை நிரப்பினான். message sent  என மானிட்டர் அறிவித்தது.

கொஞ்ச நேரம் ஏதும் நிகழவில்லை.. எதிர்பார்ப்புடன் காத்து இருந்தேன்.

கதவு தட்ட்டப்பட்டது.

’திறந்துதான் இருக்கு..வாங்க”

உள்ளே ஒருவர் நுழைந்தார்.

பழைய காலத்து ஆள் போல இருந்தார். வேட்டி அணிந்து இருந்தார். உடலில் ஒரு துண்டை சுற்றி இருந்தார்.

“ என் பேர் பரமேஸ்வரன்..சோழர் ஆட்சியை கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்..  ஆயுதங்கள் கிடைப்பதாக கேள்வியுற்றோம்”

கணேஷ் ஒரு துப்பாக்கியை காட்டினான்.

“ இதன் பெயர் துப்பாக்கி. இதில் குண்டுகளை நிரப்பி எதிரிகளை சுடலாம். வில் , அம்பு போன்றவற்றை விட சக்தி வாய்ந்தது.

சட் என அங்கிருந்த கண்ணாடி குடுவையை சுட்டான். உடைந்து சிதறியது.

பரமேஸ்வரன் ஆச்சர்யமாக பார்த்தார்.

“ இதன் விலை ? “

கணேஷ் மர்மமாக புன்னகைத்தான்.

“இதற்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.  இதை வைத்து நீங்களே புதிய கருவிகளை உருவாக்க முடியும், உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.. ஆயிரன் பொற்காசுகள் “

பரமேஸ்வரன் அதிர்ந்தார். “ஆயிரம் சற்று அதிகம் அல்லவா?”

”பேரம் பேச நேரம் இல்லை.. உங்கள் காலத்துக்கு விரைவில் சென்றாக வேண்டும்.. நீண்ட நேரம் இருக்க முடியாது “

முடிவு எடுத்து ஆயிரம் பொற்காசுகளை மேஜையில் வைத்தார்.

அவர் கையில் துப்பாக்கி வைக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் மறைய தொடங்கினார்.

அவர் உடைவாள், ஆடை, குடுமி , உடல் என மறைய தொடங்கியது.

ஆனால் துப்பாக்கி மறையவில்லை.

தொப் என தரையில் விழுந்தது.

கணேஷ் அதை எடுத்து பத்திரப்படுத்தினான்.

“ நான் சொன்னேனே,,,ஆசை கண்ணை மறைக்கும் என...அதுதான் இது.... கடந்த கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியும்.. ஆனாலும் ஒரு போதும் எதிர்கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியாது...  இது தெரியாமல் பலர் ஏமாறுகிறார்கள்.

இப்படி பல அரசர்கள், ராபர்ட் கிளைவ் போன்றவர்களை ஏமாற்றித்தான் இவ்வளவு சொத்து சேர்த்தேன்..ரிஸ்க் இல்லாத தொழில் “ சிரித்தான்.

சரி..போதும் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானேன்,\

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

உள்ளே வந்தவர் பரமேஸ்வரன் காலகட்ட ஆள் போலவே இருந்தார். என் பெயர் ரவிதாசன் என்றார்.


**********************************************

கணேஷை பேய் அடித்து கொன்று விட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசி கொண்டார்கள்.  ஹார்ட் அட்டாக் என போலீஸ் கேசை முடித்தது.
ஆனால் ஆசை கண்ணை மறைக்கும் என்ற கணேசின் கான்சப்ட் அவனுக்கே எமன் ஆனது எனக்கு மட்டுமே தெரியும்.

இப்போதைய பொருட்களை கடந்த காலத்துக்கு எடுத்து செல்ல முடியாது... ஆனால் கடந்த கால பொருட்களை இப்போது பயன்படுத்தலாம் எனற அவனது புரிதல் சரிதான்.

ஆனால் அவன் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை.

பிரச்சினை வந்தால் , கடந்த கால ஆட்களை நாம் கொல்ல முடியாது., ஏனென்றால் அது பாரடக்ஸ். கடந்த கால ஆளான நம் தாத்தாவை நாம் கொன்று விட முடிந்தால் , நாம் எப்படி பிறந்து இருக்க முடியும். கடந்த காலத்தில் கொலை என்பது paradox.

ஆனால் கடந்த காலத்தின் விளைவுகளால் நாம் இறப்பது என்பது இயல்பானது.

 நவீன ரக ஆயுதங்கள் யாவும் ரவிதாசன் முன் பயனற்று போய் , ஆயுதம் ஏதும் இன்றி வெறும் கைகளால் ரவிதாசன் கணேஷை கொன்றதை நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?
:

3 comments:

  1. வலைச்சரம் மூலம்தான் உங்கள் பதிவுக்குள் வந்தேன் ..படித்த முதல் பதிவே அசத்தல்... என்னமா யோசிச்சிருக்கீங்க.... பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. சங்கரகிருஷ்ணன்October 31, 2014 at 12:37 PM

    சுஜாதாவின் கதை மாதிரி உள்ளது. அருமை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா