நேற்று ( 31.08.2013 ) எதிர் பாராத திடீர் சந்திப்பு. சாருவின் முக்கிய தளபதிகளை ஒன்றாக சந்தித்து பேசியது இனிய அனுபவம்.
சாருவை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் , வட்ட சந்திப்புகளிலும் , தனிப்பட்ட முறையிலும் சந்தித்து இருக்கிறேன். ஆனால் குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்தது இல்லை.
பின் நவீனத்துவம் , இலக்கியம் , இசை , சினிமா என வாழ்ந்து வரும் அவர் இது போன்ற நிகழ்ச்சிகளில் எப்படி நடந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.
ஆனால் அவரது இன்னொரு பரிமாணத்தை தெரிந்து கொண்டது மகிழ்ச்சிகரமான ஓர் அனுபவமாக அமைந்தது.
இலக்கியம் என்பதை தாண்டி அனைவரையும் சமமாக மதிக்கும் அவரது பண்பு வியக்க வைத்தது.
பல வி ஐ பிகள் , நெருங்கிய நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களை எந்த அளவுக்கு கவனித்தாரோ அதே அளவுக்கு கவனிப்பை எல்லோருக்குமே கொடுத்தார் .
நாங்கள் எல்லாம் பார்த்து பேசி விட்டு கிளம்ப்ப ஆயத்தமாக இருந்தோம். நேரம் ஆகிவிட்டதால் , சாருவும் அவசரமாக கிளம்ப வேண்டி இருந்தது. அவரும் கிளம்ப்ப தயாராக இருந்தார்.
அப்போது கடைசி நேரத்தில் நண்பர் ராஜராஜேந்திரன் வந்து சேர்ந்தார் . மாலை நான்கு கிளம்பி , டிராபிக்கில் சிக்கி, ஒன்பது மணிக்கு வந்தார். இந்த பிரச்சினைக்காகத்தான், டிரெயின் பிடித்து வாருங்கள் என கணேசன் அன்பு சொல்லி இருந்தார். ஆனால் , மற்றவர்கள் சொல்வதை கேட்காதே.. நீயே முடிவெடு என சார்த்தரோ வேறு யாரோ அவரிடம் சொன்னார்களாம்..அதன் அடிப்படையில் கஷ்டப்பட்டு பஸ்ஸிலேயே வந்து சேர்ந்தார்.
அப்படி கடைசி நேரத்தில் வந்த அவரையும் சாரு அன்பாக அழைத்து சென்று , மூன்றாம் மாடியில் இருக்கும் உணவு கூடத்துக்கு அழைத்து சென்றார்.
லேட் ஆச்சே என்று அருகாமை பகுதியில் இருப்பவர்கள் டென்ஷன் ஆனார்களே தவிர , அங்கிருந்து வெகு தூரம் செல்ல வேண்டிய சாரு உபசரிப்பை - ஒரு வி அய் பிக்கு தரும் வரவேற்பை- ராஜராஜேந்திரனுக்கு கொடுக்க தவறவில்லை.
நடிகரும் இயக்குனருமான பார்த்தீபன் , நெருங்கிய உயிர் நண்பர் அராத்து போன்றோருக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த பாரபட்சமும் காட்டாமல் - அதாவது காட்ட தெரியாமல்- இருந்த அவரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு நண்பரை அறிமுகப்படுத்துவது போல எங்களுக்கெல்லாம் பார்த்திபனை அறிமுகம் செய்து வைத்தார்.
இமயமலை பயண அனுபவங்கள் , கொஞ்சம் இலக்கியம். தங்க மீன்கள் சிறப்பு விமர்சனம் என ரகளையாக சந்திப்பு சென்றாலும் அதை எல்லாம் outshine செய்து விட்டார் இன்னொருவர்.
அவர்தான் அராத்துவின் அடுத்த வாரிசு . குட்டிப்பையன்... செமையாக டிரைனிங் கொடுத்து வைத்து இருக்கிறார்.
உனக்கு பிடித்தது ஜெயமோகனா , சாருவா- எழுத்தாளர்கள் ஏன் சண்டை போட்டு கொள்கிறார்கள்... தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்ன ., ஜெயமோகன் எழுத்து குறித்து உன் கருத்து என்ன போன்ற இலக்கிய கேள்விகளுக்கு அப்பாவின் இடுப்பில் தொற்றியபடி , மழலை மொழியில் அவன் கொடுக்கும் பதில்கள்.ம்ம்... சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது..
விடீயோ பேட்டி எடுக்கலாம் என நினைத்தேன்.. கண் திருஷ்டி போல ஏதேனும் ஆகி விடக்கூடும் என்ற பகுத்தறிவு சிந்தனையால் அதை கைவிட்டேன்.
அராத்துவின் சினிமா விமர்சனங்களை எழுத்தில் படிப்பதை விட, நேரடியாக ஆக்ஷன் காட்சிகளுடன் அவர் சொலவதை கேட்பது செம அனுபவம்.
டூயட் இல்லாமல் எடுத்து விட்டால் நம் ஆட்கள் நல்ல படம் என நினைத்து கொள்கிறார்கள் , வெளினாட்டுக்கு வேலைக்கு செல்வது போல 1000 ரூபாய் சம்பளத்துக்காக வெளியூருக்கு வேலை தேடி செல்லும் அபத்தம், சின்ன குழந்தையை படிக்க சொல்வதுல் காட்டப்படும் செயற்கைத்தன்மை. ஓவர் ஆக்டிங் , யாழை தேடி அலைந்து லேப்டாப்பை பறிக்கும் காமெடி , இவ்வளவு கஷ்டப்பட்டு கடைசியில் கொடுக்கும் மெசேஜ் என சீன் பை சீனாக செம ஓட்டு ஓட்டினார். யாரும் குழந்தைகளை இந்த படத்துக்கு அழைத்து செல்லக்கூடாது. இது குழந்தைகளுக்கு உகந்ததல்ல என ஒரு மெசேஜ் கொடுத்தார்.
விரிவாக எழுதுவார் என நினைக்கிறேன்.
சாரு இனிமேல் சினிமா விமர்சனம் எழுதுவாரா என தெரியவில்லை..ஆனால் தங்க மீன்கள் போன்ற படங்களுக்கெல்லாம் எழுதுவதை விட அவர் எழுதாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது.
இந்த மினி சந்திப்பு மாக்சிமம் மகிழ்ச்சி அளித்தது என்று சொன்னால் மிகை இல்லை...