சினிமாவில் கேமராவைப் பற்றி பேசுவது , எழுத்தைப் பற்றி பேசாமல் பேனாவைப் பற்றியும் பேப்பரைப் பற்றியும் பேசுவது போன்றது என இயக்குனர் பாலு மகேந்திரா பேசினார்.
லீனா மணிமேகலைக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பில் லெனின் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. மழை தூறிய மாலை வேளையிலும் அரங்கு நிரம்பி வழிந்தது. இயக்குனர் ஹரிஹரன் , பாலாஜி சக்தி வேல் , லெனின் , பாலு மகேந்திரா, பத்திரிக்கையாளர் அசோகன் , நடிகர் சார்லி , அழகிய பெரியவன் , சிவகாமி ஐ ஏ எஸ் போன்றோர் ஆழமான , செறிவான உரைகள் வழங்கினர். ஒரு விஷ்யத்தை உண்மையான ஆர்வத்துடன் பேசினால் , எத்தனை கடினமான மேட்டர் என்றாலும் கூட்டம் அமைதியாக கேட்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரவு பத்து மணி வரை கூட்டம் கொஞ்சமும் கலையவில்லை. இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என நினைக்கையில் லெனின் சார் அவராகவே போதும் என நிறுத்தி விட்டார்.
போலியான அலங்காரப்பாராட்டாக இல்லாமல் , ஒவ்வொருவரும் மனதில் இருந்து பேசினார்கள். மாற்று கருத்தையும் முன் வைத்தார்கள்.
லீனா மணிமேகலையை திமிர் பிடித்த , சும்மா பரபரப்புக்கு எழுதும் எழுதும் ”பெண்ணீய” எழுத்தாளர் என்றே ஒரு காலத்தில் நினைத்து வந்தேன். அதன்பின் அவர் எழுத்துகளை படிக்க்க ஆரம்பித்ததும் அவர் மீது ஒரு மரியாதை வந்தது.
அதன் பின் அவ்வ்வபோது அவர் பேச்சுகளை கேட்பதுண்டு. கணீர் என பேசுவார். ஆனால் இன்றுதான் முதன் முதலாக அவர் நெகிழ்ந்து போய் , குரல் தடுமாறி பேசியதை கேட்டேன்.
முதலில் பேசிய இயக்குனர் ஹரிஹரன் டிஜிட்டல் யுகத்தின் சாத்தியங்களை பேசினார். இனிமேல் இண்டர் ஆக்டிவ் சினிமாக்கள் வரும். பார்வையாளனும் படத்தில் பங்கு பெற முடியும், ஒரு காட்சியை நிறுத்தி, அந்த காட்சி நடக்கும் இடத்தை எக்ஸ்பாண்ட் செய்து பார்க்க முடியும், இப்படி பல வசதிகள் கிடைக்கும். அந்த வகையில் இரண்டு மணி நேர படத்தை இரண்டு மாதங்கள்கூட பார்க்கலாம் என்றார்.
சிவகாமி அய் ஏ எஸ் தன் அனுபவங்கள் சிலவற்றை கூறி லீனாவின் ஆவணப்படங்களைப் பற்றி பேசினார். கவிதைகள் குறித்தும் சொன்னார்.
பாலாஜி சக்திவேல் பேசுகையில் லீனாவின் தேவதைகள் படத்தை சிலாகித்து பேசினார். ஒத்திகை பார்த்து நடிப்பதை ஷூட் செய்வதை விட , டிஸ்கவரி சானலில் சிங்க வேட்டையை காத்திருந்து பதிவு செய்வது போல ஷூட் செய்யும் சினிமாக்கள் இனி தமிழில் அதிகம் வரும் என்றார்.
காமடி நடிகராக நாம் அறிந்த சார்லியின் இன்னொரு முகத்தை இன்று பார்த்தேன்,. சிறப்பான ஓர் உரையை வழங்கினார். அவர் திறமையை தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என தோன்றியது.
எனக்கு மாற்று சினிமா தெரியாது. சோற்று சினிமாதான் தெரியும் என ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொர் வார்த்தைக்கும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. நோவா கதை சொல்லி அட்டகாசமாக பேச்சை முடித்தார்.
அழகிய பெரியவன் அடுத்து பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் கணீர் என இருந்தது.
மேல்னிலையாக்கல் என்பதைப் பற்றி தீர்க்கமான ஓர் உரை வழங்கினார்.
மதுரை வீரன் கதை ஒடுக்கப்பட்ட ஒருவன் பற்றிய கதை. அதை எப்படி மேல் நிலை ஆக்குக்கிறார்கள். அவன் தேவ லோகத்தில் செய்த தவறு காரணமாக , ஒரு சாபத்தால் ஒடுக்கப்பட்டவனாக பிறந்தான் என கதை கட்டி உள்ளதை உள்ளபடி பார்க்க முடியாமல் செய்கிறார்கள்.
இந்த மேல் நிலையாக்கத்தை லீனாவின் படங்கள் உடைக்கின்றன என்றார்.
பாலு மகேந்திரா பேசுகையில் லீனா தன் கேமிராவை தூரிகையாக பயன்படுத்தி மாடர்ன் ஆர்ட் வரைகிறார் என்றார்.
நான் இரவு நேர சென்னையை பார்த்து அசந்து போனேன். பகல் நேர சென்னையை விட முற்றிலும் மாறு பட்டு இருந்தது. அதை படமாக்க முடிவு செய்தேன். இரவு சென்னையை சும்மா ஷூட் செய்வதில் பயன் இல்லை. இரவு சென்னையை நான் பார்த்தபோது அடைந்த உணர்வை படமாக்க வேண்டும்., அதாவது கேமிராவை தூரிகை ஆக்கி , நான் விரும்பும் ஓவியம் தீட்டினேன்.
மெஷின்கள் ஒரு போதும் படம் எடுக்காது.படைப்பாளிதான் முக்கியம். எனவே தயவு செய்து கேமிராக்கள் பற்றி என்னிடம் பேசாதீர்கள். ஒரு கவிஞனிடம் போய் பேனாவைப்பற்றியும் , பேப்பர் பற்றியுமா பேசுவீர்கள்.?
ஒவ்வொரு படைப்புக்கும் பணம் , புகழ் என்பது போன்ற ஒரு நோக்கம் இருக்கும், நான் இப்போது எடுத்து வரும் படத்துக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் இறந்த பின்பும் பல ஆண்டுகள் அந்த படம் பேசப்பட வேண்டும். அதுதான் அதை படைத்ன் நோக்கம் என்றார்.
லீனா சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஏற்புரை வழங்கினார்.
கடைசியாக பேசிய லெனின் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பேசினார். அவர் பேசியவற்றை அப்படியே வெளியிட்டால் ,ஒன்று அவருக்கு பிரச்சினை வரும். இல்லை என்றால் எனக்கு பிரச்சினை வரும்.
என் வாழ் நாளில் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.
தன் அனுபவத்தை சாறாக்க்கி அவர் புகட்டிய தமிழ் விருந்து இரவு முழுதும் நீடித்து இருந்தாலும் கேட்பதற்கு அனைவரும் தயாராகவே இருந்தனர்.
ஆனால் அவர் ஒரு பாடலுடன் பேச்சை முடித்து ஏமாற்றம் அளித்தார். இன்னும் ஒரு மணி நேரம் பேசி இருக்கலாம்.
சிறப்பான ஒரு நிகழ்ச்சியில் , மேதைகள் பேச்சைக் கேட்ட நிறைவுடன் கிளம்பினேன்,
லெனின் பேசியது குறித்து எனக்கு மட்டுமாவது விரிவாக செய்தி அனுப்ப வேண்டுகிறேன். அவரே ஒரு மாபெரும் படைப்பாளி என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்.
ReplyDelete