ஆரம்ப காலங்களில் சினிமாவில் ஒலி இல்லை. பிற்காலத்தில்தான் ஒலி தொழில் நுட்பம் முன்னேறி , பேசும்படங்கள் வந்தன.
ஆனால் இந்த கண்டுபிடிப்பால் அந்த கால திரையுலக மேதைகள் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை. சினிமா என்பதே காட்சி ஊடகம்தானே , இதில் ஒலி எதற்கு ? சார்லி சாப்ளின் போன்றவர்கள் ஒலி இல்லாமலேயே சிறந்த படங்கள் எடுக்கவில்லையா.. வெகு சில படங்களுக்கு மட்டுமே ஒலி தேவைப்படும். அந்த படங்களுக்கு மட்டும் ஒலி இருந்தால் போதும். ஒலி இல்லாத ஊமைப்படங்களும் வர வேண்டும் என கருதினார்கள். எல்லா படங்களுமே ஒலியை பயன்படுத்த ஆரம்பித்தால் காட்சி மொழி அழிந்து விடும் என்பது அவர்கள் கருத்து.
ஆனால் , தொழில் நுட்ப வளர்ச்சியை யாரும் தடுத்து வைக்க முடியாது. ஆனாலும் வளர்ந்த நாடுகளில் காட்சி மொழி அழியாமல் பார்த்து கொண்டார்கள்.
ஆனால் , இந்தியா போன்ற பிச்சைக்கார நாடுகள் ஒலி தொழில் நுட்பத்தை காணாததை கண்டது போல ஓவராக பயன்படுத்தி திரை மொழியையே அழித்து விட்டன. உரிய காலத்துக்கு முன்பே , ஒலி தொழில் நுட்பம் இங்கு வந்ததுதான் , சினிமா ரசனை இங்கு வளராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார் தியடோர் பாஸ்கரன்.
கேசட்டில் வசனம் கேட்பது , ரேடியோ நாடகம் போல திரைக்கதை உருவாக்குவது எல்லாம் இங்கு மட்டுமே உண்டு.
இதில் சிக்கி இருந்தாலும் , அவ்வப்போது நல்ல படங்கள் பார்த்து மனதை தேற்றிக்கொள்வது என் வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் பார்த்த ஒரு படம்
An occurrence at Owl creek Bridge . இது 1962ல் வெளியான ஒரு குறும்படமாகும்.
Ambrose Bierce ன் சிறுகதையை Robert Enrico இயக்கி இருந்தார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் இது,. வெறும் 28 நிமிடத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம் இது.
கண்டிப்பாக பாருங்கள்.. கிளைமேக்சில் இருக்கும் ஒரு சஸ்பென்சை முழுமையாக அனுபவிக்க விரும்புபவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
ம்ற்றவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
**********************************************************************
ஒரு தூக்குத்தண்டனை கைதி.. ஒரு பாலத்தின் மீது தூக்குக்கயிற்றை எதிர்னோக்கி இருக்கிறான் சுற்றிலும் காவலர்கள். தூக்குபோட ஏற்பாடு நடக்கிறது.
தப்ப வாய்ப்பிருக்கிறதா , மனைவி மக்களை பார்க்க முடியுமா என மனம் அலைபாய்கிறது. ஆனால் சுற்றிலும் காவல். கை கால்களை கட்டி விட்டார்கள். தூக்கு கயிறு கழுத்தில் மாட்டப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக கயிறு அறிந்து விடவே கீழே ஓடும் ஆற்றில் விழுந்து நீந்தி தப்பிக்கிறான்.
உயிர் பிழைத்ததை நம்பவே முடியவில்லை அவனுக்கு. உலகமே புதிதாக தோன்றுகிறது. புழு ஊர்வது , சிலந்தி பூச்சி கூடு கட்டுவது , பறவை சப்தம் , மரங்கள் , இலைகள் என எல்லாமே புதிதாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் வாழ்க்கை பூத்து குலுங்குவதை கவனிக்கிறான்.
தன் வீட்டுக்கு போய் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையை மனதில் தேக்கி ஓடுகிறான். வீடு வந்து விட்டது .இனி பயம் இல்லை. மனைவி அவனை நோக்கி ஆசையாக வருகிறாள். அவளை நோக்கி கை நீட்டுகிறான். அவள் அவன் தோளில் கையை வைக்கிறாள்
இனி எல்லாம் இன்பம்தான் என நினைக்கையில் கழுத்தில் ஏதோ உறுத்துகிறது.
சட் என இந்த காட்சிகள் கலைகின்றன. தூக்கு அவன் கழுத்தை இறுக்கி பிணமாக தொங்குகிறான்.
அவன் தப்பிக்கவே இல்லை. தூக்கு கயிறு அவன் கழுத்தில் மாட்டப்படும்போது , அவன் தப்பிப்ப்பதாக நினைப்பதெல்லாம் அவன் மனதில் நிகழும் மாயத்தோற்றமே. தூக்கு மாட்டப்பட்டு அது அவன் கழுத்தை இறுக்குவதற்கு முந்தைய சில நிமிடங்களில் அல்லது சில நொடிகளில் ஒரு பெரிய கனவு காட்சியை கண்டு முடித்து விடுகிறான்.
ஒருவனின் மரணம் நமக்கு ஏற்படுத்தும் பரிதாபம், அதிர்ச்சி, உயிர் வாழ்வதில் அனைத்து உயிர்களுக்கும் இருக்கும் வேட்கை - இதுதான் நமக்கு ஏற்படும் முதல் உணர்வு.
முதலில் இந்த தூக்குத்தண்டனையையெல்லாம் ஒழித்தாக வேண்டும் என நம் மனம் பதறுகிறது.
ஆனால் படத்தில் இதைத்தவிர பல விஷ்யங்கள் இருக்கின்றன.
ஒரு மரண தண்டனை கைதியைப்பற்றிய படம் என்பதால் , முதல் காட்சியில் அவனைத்தான் காட்டி இருக்க வேண்டும். பொதுவாக அப்படித்தான் செய்வார்கள்.
ஆனால் இதில் அப்படி நிகழ்வதில்லை. காட்சி அவனிடம் இருந்து ஆரம்பிப்பதில்லை. சுற்றுவட்டார காட்சிகள் நம் முன் விரிகின்றன. இயற்கை காட்சிகள் , ஒலிகள் என மெல்ல நகர்ந்து பாலத்தை அடைகிறோம். பிறகுதான் அந்த காவலர்களை , கைதியை காண்கிறோம்.
காலம் , நேரம் இவற்றைக் கடந்து திரைக்குள் சென்று அந்த சம்பவங்களின் ஒரு காட்சியாக மாறி விடுகிறோம்.
நமக்கு அந்த தண்டனை அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் பிரமாண்டமான இயற்கைக்கு முன் இது போல மனிதன் வருவதும் போவதும் அப்படி ஒன்றும் பெரிய விஷ்யம் அல்ல என்று சொலவது போல இயற்கையின் பிரமாண்டம் , பாலம் , அதன் கீழ் நீரோட்டம் என எல்லாம் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
And here and there a foamy flake
Upon me, as I travel
With many a silvery waterbreak
Above the golden gravel,
And draw them all along, and flow
To join the brimming river
For men may come and men may go,
But I go on for ever.
என்ற கவிதை தன்னிச்சையாக நம் மனதில் வந்து செல்கிறது.
அவன் ஏன் தூக்கு கயிற்றுக்கு வருகிறான் என்பதெல்லாம் விரிவாக சொல்லப்படுவதில்லை. ஆனால் அது அமெரிக்க உள்னாட்டு யுத்த காலம் என்பதை யூகிக்க முடிகிறது. இது போன்ற பல தண்டனைகள் , உயிர் பலிகள் , தியாகங்கள் மூலம்தான் ஓர் அரசு உருவாகி இயங்க முடிகிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதாவது ஒரு தனிப்பட்ட மனிதனாக அந்த தண்டனை மிகவும் அதிர்ச்சியை அளித்தாலும் , ஒட்டுமொத்த பார்வையில் பார்த்தால் இது போல பலர் உயிர் பலிகளின் பலனைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம் என்ற யதார்த்தம் புரிகிறது.
இந்த படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் காலம் பற்றிய இதன் பார்வை. அந்த கைதியின் கடிகார ஒலி இதய துடிப்பு போல கேட்கும் . நாள் உயிரை அழிக்கும் வாள் என வள்ளுவர் சொன்னது போல , அந்த கணத்தில் காலம் அவனை கொல்ல துடிக்கும் வில்லனாக அவனுக்கும் நமக்கும் தோன்றுகிறது. எனவே அவன் தனக்கான ஒரு காலத்தை , தனக்கு சாதகமான காலத்தை உருவாக்கி கொள்கிறான்.
அவனுக்கு கொடுக்கப்பட்ட சில நிமிடங்கள் , பல நிமிடங்களாக அவன் மனதில் விரிவடைகிறது.
படம் ஓடுவது அரைமணி நேரம். அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவு வேறு. அவன் மனதில் இந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவு வேறு. இப்படி மூன்று தளங்களில் காலம் இயங்குகிறது.
படம் முழுக்க குறியீடுகள் விரவுக்கிடக்கின்றன.
தப்பிக்க வாய்ப்பே இல்லையா என மனம் சலித்து போய் இருக்கையில் ஆற்றில் அடித்து செல்லப்படும் சிறிய மரத்துண்டு காட்டப்படுகிறது.
அவன் திட்டம் நிறைவேறி ஜெயித்து இருந்தால் , அவன் ஹீரோவாக போற்றப்பட்டு இருக்க கூடும். அவனை தண்டிப்பவர்கள் , தண்டனைக்க்கு உள்ளாகி இருக்க கூடும்.
நாம் வெற்றி பெறும் காலங்களில் வெற்றிக்கு காரணம் நம் உழைப்பு, புத்தி, தன்னம்பிக்கை என்றெல்லாம் நினைப்போம். யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம் ..உழைச்சா போதும் என பாடம் நடத்துவோம்.
ஆனால் தோல்வியில் துவண்டிருக்கும்போதுதான் , வாழ்க்கை எனும் பெரு நதியில் அடித்து செல்லப்படும் சிறுதுண்டுகள்தான் நாமெல்லாம் என தோன்றும். அந்த மரத்துண்டு நமக்கு , கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடலை நினைவு படுத்துகிறது
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
இது போல படத்தில் குறியீட்டு காட்சிகள் ஏராளம். எந்த பச்சாதாபமும் இன்றி , வாகனம் ஓட்டுவதைப் போல ஒரு வேலையாக கருதி , மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகள் , அதிகார வர்க்கத்தை பிரதிபலித்து இருப்பார்கள்.
இதை எல்லாம் விட முக்கியமான ஒன்று உண்டு.
எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் இருந்தார் . பெரிய ஸ்காலர். ஆனால் அவர் ,மனைவி அவர் அருமை தெரியாதவர். எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். நோய்வாய்பட்டு இருந்தாலும் திட்டுவதில் குறைவிருக்காது. ரொம்ப நாளாகவே நோயில் இருந்து , ஒரு நாள் இறந்து விட்டார் மனைவி.
சரி, இனி இந்த பெரியவர் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் இவர் அதன் பின் ஏதோ பறிகொடுத்தது போலவே இருந்தார். என்னதான் மனைவி கொடுமைக்காரியாகவும் , நோய்வாய்ப்பட்டும் இருந்தாலும் , அவளிடம் அவருக்கு ஏதோ ஒருவகை உளவியல் பாதுகாப்பு கிடைத்து இருக்கிறது. மனைவி மறைந்த கொஞ்ச நாட்களில் இவரும் இறந்து விட்டார்.
மனைவி , வீடு , தாய் போன்றவை ( அல்லது இதற்கு மாற்றாக காதலர்கள் , நண்பர்கள் தேசம் போன்றவை )பாதுகாப்பு என்பதாகவே மனதில் பதிவாகி இருக்கும். சாதாரண காலத்தில் வீடு என்பது சிறையாக தோன்றினாலும், சில சந்தர்ப்பங்களில் வீட்டை வந்து அடைந்தால் ஒருவகை அமைதி கிடைப்பதுண்டு,.
அதுபோல , இந்த படத்தில் அந்த மனைவியும் , வீடும் பாதுகாப்பின் குறியீட்டாக உள்ளன. வீரம் சாகசம் எல்லாம் போதும் என்ற கையறு நிலை ஏற்பட்டு , பாதுகாப்பாக ஓர் இடத்தை ஒரு தாய் மடியை தேடும் சராசரி மனிதனின் இயல்பை துடிப்பை படம் பதிவு செய்து இருக்கிறது.
முழுக்க முழுக்க காட்சிகளால் நகர்வதாலோ என்னவோ, இந்த அரை மணி நேர குறும்படம் நம் இதய அறையில் நிரந்தர இடம்பிடிக்கிறது.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]