1932 ல் வெளியான scareface படத்தின் ஒரு காட்சி இது. படத்தின் கதை என்ன என்பது தெரியாவிட்டால் பரவாயில்லை. வசனம் கூட தேவை இல்லை. காட்சிகளே எவ்வளவு அழகாக ஒவ்வொரு பாத்திரத்தையும் , அவற்றின் குணாதிசயங்களையும் உணர்த்துகின்றன என கவனியுங்கள்.
கொலையை கொடூரமாக காட்டி மனதை திசை திருப்பாமல் , ஓசை மூலம் அந்த கொலையை உணர்த்துவது , அது வெறும் கொலை மட்டும் அல்ல, ஒருவனது வீழ்ச்சி இன்னொருவனது எழுச்சி என்பதை உணர்த்துவது, நாணயத்தை சுண்டி போட்டு விளையாடிக்கொண்டு இருந்து விட்டு , குறிப்பறிந்து கொல்பவனின் குணாதிசயம் என பலவற்றை கவனித்து இருப்பீர்கள். இந்த காட்சிகள் எப்படி முடிகின்றன என்பதையும் இணைப்பின் கடைசிவரை கவனியுங்கள்.
இது போல இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம்.
இது 1932 ல் வந்த படம். நம் ஊரில் அந்த கால கட்டத்தில் இப்படி காட்சி ரீதியாக ரசிக்கத்தக்க படம் எதுவும் வரவில்லை என்பதை பெரிய குறையாக சொல்வதற்கில்லை. அப்போதுதான் சினிமா வளர தொடங்கி இருந்த நிலையில் மேடை நாடகங்களின் இன்னொரு வடிவாகவே சினிமா இருந்தது. மேடை நாடகங்களில் வாய்ப்ப்பு கிடைக்காதவர்கள் , சினிமாவில் ஈடுபடுவது வழக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாக நிலை மாறி , சினிமா ஒரு தனி அடையாளம் பெற முயன்ற நிலையில் , பழைய ஆட்கள் அதை வசன ஊடகமாகவே வைத்து இருக்க போராடினர், இருதரப்புக்கும் போட்டி நிலவியது.
இந்த போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தது பராசக்தி. சிவாஜியின் நடிப்பு, கலைஞரின் வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசிய நேர்த்தி போன்றவை தமிழ் நாட்டை பொருத்தவரை சினிமா என்பது வசன ஊடகம் என்பதை நிறுவி , தமிழ் சினிமா ரசனையை ஒழித்து கட்டியது.
1955ல் வந்த பதேர் பாஞ்சாலி, 1957ல் வந்த வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் , 1959ல் த 400 ப்ளோஸ் , 1950ல் வந்த ராஷோமான் போன்ற படங்களை எல்லாம் பார்த்தால் ரத்த கண்ணீர் வருகிறது. அவர்கள் எல்லாம் அடுக்கு மொழி வசனங்களை வைத்தா படம் எடுத்தார்கள்? நாம் மட்டும் ஏன் ஏமாந்து போனோம் என்றால் அதற்கு கலைஞர் சிவாஜி கூட்டணி முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
சிவாஜி உன்னத கலைஞன் தான், அந்த நாள் போன்ற நல்ல படங்களில் அற்புதமாக நடித்தாலும் , அவர் வசன நடிகர் என்ற இமேஜில் இருந்து வெளிவர முடியவில்லை.
முதல் மரியாதை , தேவர் மகன் போன்ற படங்களில் அவர் நடிப்பை பார்த்தால் , அவரை மற்றவர்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்களே என்ற வேதனை ஏற்படும்.
கலைஞரின் தமிழ் மீது குறையில்லை, அவர் அறிவாற்றாலிலும் குறை இல்லை. ஆனால் அவர் அடுக்கு மொழி வசனங்கள் , நல்ல சினிமாவுக்கு பொருந்தாது என்பதே என் வாதம். டிவி நாடகங்களிலோ , மேடை நாடகங்களொலோ அந்த வசனங்கள் இடம்பெறலாம், ஆனால் இந்த வசனங்களோ ஒரு படத்தை தரமான படம் என ஏற்க இயலாது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவசமாக திரையிடப்பட்டு வருகின்றன, இந்த தேர்வு முறையில் எனக்கு சில ஏமாற்றங்கள் உண்டு.
வெளி நாடுகளில் நல்ல சினிமாவை பட்டியலிட சொன்னால் , பல்ப் ஃபிக்ஷன் உட்பட நன்றாக ஓடிய படங்களையும் சேர்த்து பட்டியிலிடுவார்கள்.
நம் ஊரில், ஓடாத படங்கள்தான் , பார்க்க முடியாத படங்கள்தான் நல்ல படங்கள் என்ற கருத்து உண்டு. ஆரண்ய காண்டம் , பருத்தி வீரன் , மகாநதி போன்றவை நல்ல படங்கள் என்ற அளவுகோலில் தேர்ந்தெடுக்கப்பட்டு , பாட்ஷா , சந்திரமுகி போன்றவை வரலாறு படைத்தவை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இப்படி செய்யவில்லை என்பது வருத்தம் என்றாலும் அன்று வரலாறு படைத்த நாடோடி மன்னன் , ரிக்ஷாக்காரன் போன்றவற்றை திரையிட்டது மகிழ்ச்சியே.
எம்ஜிஆர் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது சொந்தமாக எடுத்த படம் நாடோடி மன்னன். வேண்டாம் இந்த ரிஸ்க் என பலர் எச்சரித்தனர். படம் தோற்றால் நாடோடி ஆவேன். வென்றால் மன்னன் ஆவேன் ., கவலை வேண்டாம் என சொல்லி எடுத்தார். படம் இமாலய வெற்றி.
அது போல , ரிக்ஷாக்காரன் படத்துக்காக எம் ஜி ஆர் மத்திய அரசு விருது பெற்றார். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க படங்களை வெளியிடுவது நல்லதே.
சினிமா என்ற அளவுகோலில் தகுதியை கோராமல் , எம் ஜி ஆர் படம் போட்டால் , தி மு க தலைவர் என்ற அளவுகோலின் அடிப்படையில் கலைஞர் படமும் போட வேண்டும் என கேட்பதில் அழகு இல்லை. அரசியல்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]