ஒரு பெண் அரசரை மயக்கி அவர் மனதில் இடம் பிடித்து விடுகிறாள். சதி செய்து அவரையும் அவர் வாரிசுகளையும் கொன்று ஆட்சியை பிடிக்கிறாள்.
திடீர் திருப்பமாக அவள் கூட்டாளியையுமே தீர்த்து கட்டி விடுகிறாள்..
தட்டிக்கேட்க ஆள் இல்லாத அரசியாகி காட்டாட்சி நடத்துகிறாள்...
கரிகாலன் என்பவன் தலைமையில் மக்கள் அணி திரள்கிறார்கள்... புரட்சிக்கு திட்டம் இடுகிறார்கள்... கரிகாலன் வெல்ல முடியாதவனாக இருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது தெய்வம் ரகசிய கட்டளைகள் வழங்கி வழி காட்டுகிறது...
அரசிக்கு விசுவாசமான தளபதி அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான். கரிகாலனை வெல்ல முடியாத நிலையில் , அவனை மயக்கி வீழ்த்தும் பொருட்டு அரசியின் தரப்பில் இருந்து கலாவதி என்ற பெண் தந்திரம் செய்து கரிகாலன் இருப்பிடத்தை அடைகிறாள்.
ஒரு யோகி மர்மமான சில வேலைகள் செய்கிறார்... அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது புதிராக இருக்கிறது...
அரசி யாருக்கும் அடங்காமல் இருந்தாலும் , அவளை ஒரு பேய் அடிக்கடி வந்து மிரட்டி செல்கிறது... அதற்கு மட்டும் அஞ்சுகிறாள்..
இதற்கிடையில் காலாவது மனம் மாறி கரிகாலனை நேசிக்க தொடங்குகிறாள்.. அவனும் நேசிக்கிறான், ஆனால் இதை அவனது கூட்டம் விரும்பாததால் , அவன் தலைமை பதவியை துறந்து வெளியேறுகிறான்.
தலைமை இல்லாத அந்த கூட்டத்தினரை அரசி படையினர் வென்று ஜெயிலில் அடைக்கின்றனர். கலாவதியும் ஜெயிலில் அடைக்கப்படுகிறாள்...
அவர்களை காப்பாற்ற கரிகாலன் வந்து சண்டையிடுகிறான்...அவனுக்கு தெய்வ கட்டளை மூலம் வழிகாட்டுவது தன் தந்தையான் என்பதை தளபதி கண்டுபிடிக்கிறான்.
அவர் ஏன் அப்படி செய்தார். அவர் மர்மமான நடவடிக்கைகளின் காரணம் என்ன என்பது கடைசியில் தெரிகிறது...
அவர் யார் என என்பது தெரிய வரும்போது அனைவரும் அதிர்கின்றனர்..
பழைய படங்களை நாம் புதிய படங்களை பார்க்கும் மதிப்பீடுகளோடு பார்க்க முடியாது... அந்த கால தொழில் நுட்பம் , திரை மொழி போன்றவை ஆரம்ப கட்டத்தில் இருகின்றன என்பதால் ஒரு சலுகை கொடுத்து விட்டுத்தான் பழைய படங்கள் பார்ப்போம்..
ஆனால் மர்ம யோகி என்ற இந்த சினிமா , இப்போது பார்த்தாலும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் , பழைய படம் எனும் சலுகையை கோராமலும் இருக்கிறது..
எம் ஜி ஆருக்கு மிகப்பெரிய வெற்று தந்து அவருக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படம் இது..
இந்த வெற்றியை எம் ஜி ஆர் எவ்வளவு அடக்கத்துடன் ஏற்று கொண்டார் என்பதில்தான் அவர் நிற்கிறார்.
எம் ஜி ஆர் கூறுகிறார்.
ஒரு முறை நாடக மற்றும் சினிமா நடிகரான கே பி கேயுடன் அவர் கதா நாயகனாக நடித்த படம் ஒன்றுக்கு போய் இருந்தோம். அதில் நானும் சிறிய வேடத்தில் நடித்து இருந்தேன்.. எல்லோரும் கே பி கே, கே பி கே என அவரை சூழ்ந்து கொண்டார்கள்.. அவரை காப்பாற்றி அழைத்தி செல்வது பெரும்பாடாக இருந்தது..என்னை யாருக்கும் தெரியவில்லை... அவர் புகழை நினைத்து வியந்தேன்.
சில ஆண்டுகள் கழித்து , நான் நடித்த மர்மயோகி மாபெரும் வெற்றி கண்டது..திரையரங்குக்கு நான் சென்ற போது கரிகாலன் கரிகாலன் என வாழ்த்தொலி எழுப்பி மக்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக கே பி கே இருந்தார் , டைகர் ஆஃப் இந்தியன் ஸ்டேஜ் என கவர்னரால் புகழப்பட்ட அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை...
சில ஆண்டுகள் முன்பு என்னால் ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்த அவரை இன்று யாருக்கும் தெரியவில்லை என்றால் , புகழ் என்பதை நிலையான ஒன்று என நினைக்கும் ஆணவம் எனக்கு எப்படி வரும்...
இந்த வரலாற்று சிறப்பு மிக்க படம் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ( அரசியாக ) அஞ்சலிதேவி நடித்தார்.
மர்ம யோகியாக நடித்தவர் செருகளத்தூர் சாமா,
சமூக ரீதியான புரட்சிகரமான கதையை திகில் , கடவுள் போன்ற சமாச்சாரங்கள் கலந்து கொடுத்த புத்தி சாலித்தனம்தான் படத்தை இன்றும் நினைக்க வைக்கிறது..
அரசி பேயைக்கண்டு நடுங்கும் காட்சியில் அவளது நிழல் அவளைவிட பெரிய உருவமாக காட்சி அளிப்பதை பதிவு செய்து இருக்கும் நேர்த்தி, கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான், தவறினால் குறி வைக்க மாட்டான் என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகள் ,
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
என்பது போன்ற இனிய பாடல் வரிகள் , நேர்த்தியான நடிப்பு என படம் பார்ப்பது ஓர் இனிய அனுபவமாக இருக்கிறது.. நம்பியாரின் நடிப்பை மறக்க முடியாது...
இந்த படம்தான் தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்பது குறிப்பிடத்தக்கது... பேய் வரும் திகில் காட்சிகளுக்குக்காக இதற்கு ஏ சர்ட்டிஃபிகேட் வழங்கினார்கள்..
இன்று எத்தனையோ ஏ படங்கள் வந்து விட்டன,,, ஆனால் இந்த படம் போன்ற நேர்த்தியுடன் வந்ததில்லை...
இந்த படத்தை தமிழ் ஸ்டுடீயோ நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான திரையிடலில் பார்த்தேன். அவர்களுக்கு நன்றி...
உண்மை. புகழ்தான் ஒருவன் கண்களை மறைக்கிறது.
ReplyDeleteஆட்சியாளர்கள் நல்லது செய்ய விடாமல் தடுப்பது புகழ் போதைதான்.
http://pimbam.com