Pages

Monday, November 4, 2013

பலமுறைகள் பார்க்க வேண்டிய சிவாஜி படம்


திரைப்படங்களில் பழைய படம் , புதிய படம் என்றோ கமர்ஷியல் படம் , கலைப்படம் என்றோ பார்க்க கூடாது. நல்ல படமா இல்லையா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் கொள்கை. அந்த அடிப்படையில் தீபாவளி விடுமுறையில் சில படங்கள் பார்த்தேன்.

இதற்காக நான் டிவிடிகளை சூஸ் செய்வதைப் பார்த்து  கடைக்காரரும், சக நண்பரும் குழம்பினார்கள்.. காரணம் நான் தேர்ந்தெடுத்தது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத படங்கள். ப்ளாக் அண்ட் வெயிட் படங்கள், லோக்கல் படம், ஆங்கிலப்படம் , பிட்டு படம் என நான் எடுப்ப்பதைப்பார்த்து ஒரு கட்டத்தில் அவர்கள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்.

அப்படி நான் பார்த்த முக்கிய படங்களில் ஒன்று அந்த நாள். எஸ். பாலச்சந்தர் இயக்கம். சிவாஜி நடித்த படம். இதை தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பினாலும் , என்னால் ஏனோ இது வரை பார்க்க முடியாமல் போய் விட்டது.  ஒருவழியாக இந்த லீவில் பார்த்தேன்.

அந்த நாள் ஒரு முக்கியமான நாள் என ஒரு குரல் ஒலிப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.. தமிழ் ஃபாண்டிலேயே தமிழ் எழுத்துகள் தோன்றுகின்றன. உலகப்போர் காலகட்டம். ஜப்பான் குண்டு வீசப்போகிறது என்ற அச்சமூட்டும் சூழல்  .அப்போது ஒரு திருவல்லிக்கேணி வீட்டில்...

இப்படி அதிரடியாக வித்தியாசமாக ஆரம்பிக்கிறது படம்.  சரி,,அந்த வீட்டில் என்ன நடக்கிறது. முதல் காட்சி. முதல் ஷாட். சிவாஜி சுட்டு கொல்லப்படுகிறார்.
கதா நாயகன் முதல் காட்சியிலேயே மரணம் அடைவது போல அந்த காலத்திலேயே எப்படித்தான் எடுத்தாரோ. தொடர்ந்து ஒரு பெரியவர் தடதடவென போலீஸ் நிலையம் நோக்கி ஓடுகிறார்.
அதன் பின் போலீஸ், சி ஐ டி விசாரணை என படம் பரபரவென செல்கிறது.

துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடனேயே அது கொலைதான் என்பதை எப்படி யூகித்தார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு அந்த பெரியவர் அவர் பார்வையில் கொலைக்கு காரணத்தை விளக்குகிறார்.

அண்ணன் தம்பி பிரச்சனையே கொலைக்கு காரணம் என்பது அவர் பார்வை.
ஆனால் தம்பியோ கொலையை இன்னொரு கோணத்தில் விளக்குகிறான்.

தம்பியின் மனைவியோ , நடனக்காரி ஒருவள்தான் கொலை செய்தாள் என்கிறாள். அந்த நடனகாரி தன் பார்வையில் இன்னொரு கதையை சொல்கிறாள்.
ஆக நமக்கு ஒரே படத்தில் பல்வேறு குறும்படங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கதையும் லாஜிக்கலாக இருக்கின்றன. ஓர் ஆரம்பம், ஒரு முடிச்சு , ஒரு முடிவு என பக்காவாக உள்ளன.

சிவாஜியின் நடிப்பு உச்சத்தில் இருப்பது இந்த படத்தில்தான் என்றால் மிகை இல்லை. புரட்சிகரமான பேசுவதிலும் , தன் திறமை மதிக்கப்படாத ஆதங்கத்தை காட்டுவதிலும் , காதலை காட்டுவதிலும் , தன் கனவுகளை விவரிப்பதிலும் , ஆட்டுமந்தையில் சேரமுடியாத ஆனால் மனிதர்களை நேசிக்கின்ற தன்மையை காட்டுவதிலும் , கடைசியில் வெறி கொண்ட மனிதனாக மாறுவதிலும் சிவாஜி ஒளிர்கிறார். மிகை நடிப்பு எங்கும் இல்லை.

அதே போல ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாணியும் இல்லை. சிவாஜியின் மனைவி, தம்பி , அவனது கோபக்கார மனைவி , பெரியவர் , அழகான நடனக்காரி , குதிரைக்காரன், சொல் வீச்சில் கில்லாடியான சைக்கிள்காரன், கடைக்காரர் , எதிர்கருத்துகளுக்கு வாய்ப்பு அளிக்கும்  சங்கத்தலைவர் , நிதி வசூல் மாணவன் , போலி மாணவர் தலைவர் , புத்திசாலித்தனமான சி அய் டி , அவரை அவ்வபோது கிண்டல் அடிக்கும் ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கும் இன்ஸ்பெக்டர், வேலைக்காரன் என ஒவ்வொன்றும் அற்புதமாக செதுக்கப்பட்டு இருக்கிறது.






படத்தில் பாடல் கிடையாது. சில இடங்களில் பாடல் வைத்து இருக்கலாம் என தோன்றியது..அதற்கான சூழல் உள்ளது.. ஆனாலும் பாடல் வேண்டாம் என துணிச்சலாக முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர்.

அந்த நாளிலேயே கேமரா மொழியை பயன்படுத்தி இருப்பதை பார்க்கையில் ஆங்கிலப்படம்போல இருந்தது. பழைய தமிழ் படங்களில் கேமரா அவ்வளவாக அசையாது. நாடகம் போல ஒரே திக்கில் பார்த்து வசனம் பேசுவார்கள் .கேமரா ஒரே இடத்தில் நின்று படம் பிடிக்கும்( இது போன்ற கேமராவை சமீபத்தில் ஓ ஆ படத்தில் பார்த்தேன் )

இந்த படத்தில் கேமரா கோணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. சிவாஜியும் நடனக்காரியும் காரசாரமாக பேசும் காட்சி, கடைசியில் சக்கர நாற்காலி சுழலும் காட்சி , சாவியை தூக்கி போட்டு பிடிக்கும் காட்சி என பல காட்சிகளில் கேமரா விளையாடி இருக்கிறது. சிவாஜியின் கண்கள் , முகம் என அவர் நடிப்பை கச்சிதமாக உள் வாங்கி இருக்கிறது கேமரா.சிவாஜி ஏன் இந்த இயக்குனருடன் மீண்டும் ஏன் இணையவில்லை. ஏன் இது போல அதற்குபின் நடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவேஇல்லை..

பின்னணி இசை இன்னோர் அற்புதம். பதட்டம் , நிச்சயமின்மை போன்றவற்றை காட்டும் காட்சிகளில் இசை பதட்டம் அளிக்கிறது. மற்ற நேரங்களில் மவுனம் காக்கிறது. தேவை அற்ற இரைச்சல் இல்லவே இல்லை.

படத்தின் ஆரம்ப காட்சி எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறதோ அதே போல கடைசி ஷாட்டும் மிகபிரமாதம். நீங்கள் தனியாக அமர்ந்து பார்த்தாலும் கை தட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதற்கு இது மட்டும் காரணம் அல்ல. படம் முழுக்க விரவி இருக்கும் இயல்பான நகைச்சுவை படத்தை சுவையான அனுபவம் ஆக்குகிறது.

அந்த பெண்ணின் அடையாளத்தை சொல்லும்போது அவள் மூக்கு சி ஐ டி போல இருக்கும் என்பான் அந்த பையன். அதில் அவருக்கு ஒரு  வெட்கம் கலந்த பெருமை. இன்னொருவருக்கு அவர் அடையாளம் சொல்கையில் , சிவப்பாக இருப்பாள் , கருப்பு கண்கள், மூக்கு .. என ஆரம்பித்து லேசாக வெட்க்ப்படுவது செமையாக இருக்கும்.

அதேபோல அந்த பையன் கலகலப்பாக கலக்கி இருப்பான். யோவ் கான்ஸ்டபிள் இந்த பையனை கூட்டிக்கிட்டு போயா.. என்றதும் அவரு எதுக்கு சார்.. நான் தனியாகவே வீட்டுக்கு போறேன் என்பான். நீ வீட்டுக்கு போகல ..ஸ்டேஷன்லதான் இருக்க போற என்றதும் அவன் ரெஸ்பான்ஸ் சூப்பர்.

துப்பறியும் களேபரத்திலும் யானை கதை சொல்வதும், அதனால் சில நிமிடங்கள் தாமதாகி தேடியவரை பிடிக்க முடியாமல் போய் கிண்டலுக்கு ஆளாவதும் இயல்பான நகைச்சுவைக்கு சான்று.

 நாட்டு பற்று , பொது நல சேவை போன்றவை குறித்து சிவாஜி எடுத்து வைக்கும் மாற்று வாதங்கள் இன்றும் சிலிர்க்க வைக்கின்றன. இன்றைய இளைஞர் அந்த சிவாஜி கேரக்டரை நன்கு புரிந்து கொள்ள முடியும் என கருதுகிறேன்.

எதிர் துருவம் ஈர்க்கும் என்பது போல சிவாஜியுடன் காதல் வயப்பட்டு , மனைவியாகி , பிறகு கொல்வதும் அதை மறைப்பதும் , அதற்கு கூறும் காரணமும் ஃபர்ஸ்ட் கிளாஸ். உலகப்போர் , ஜப்பான் , சுதந்திர போர் போன்றவற்றை அழகாக இணைத்து , நம் மண்ணுக்கேற்ற புனைவு ஆக்கியிருப்பதை இளம் படைப்பாளிகள் கவனித்து கற்க வேண்டும்.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. ஒரு முறை அல்ல..பல முறை

7 comments:

  1. "RASHOMON" படத்தின் தாக்கத்தில் உருவான படம்.... வீணை பாலச்சந்தர் என்று குறிப்பிட்டால் தெளிவாக இருக்கும்...

    ReplyDelete
  2. வீணை எஸ் பாலச்சந்தர் ஒரு ஜீனியஸ். அவருக்கு அது பெரிய சவால் ஆக இல்லை என்பதனாலோ என்னவோ அவர் அதிகப் படங்கள் இயக்கவில்லை. அந்தநாள் இயக்கிய பிறகு தமிழில் அவர் இயக்கியது மொத்தம் நான்கு தான் என விக்கிபீடியா சொல்கிறது. மன திருப்திக்கு கர்னாடக இசை. பணத்திற்கு திரைத் துறை என்று சொன்னதாக படித்திருக்கிறேன். கர்னாடக இசை உலகில் அவர் சாதித்தது ஏராளம்! True Genius!

    ReplyDelete
  3. வீணை s.பாலசந்தர்,சிவாஜி போன்ற திறமைசாலிகளை தமிழகம் சரியாக கௌரவிக்கவில்லை.பாரதி சொன்னதைப்போல கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதைதான்.

    ReplyDelete
  4. "ஒரு முறை அல்ல..பல முறை"

    ReplyDelete
  5. அபாரம் அபாரம்! நண்பரே, (உங்கள் பெயரை சொல்ல தயக்கமாக இருப்பதால்" நண்பரே"),
    அந்த நாள் தமிழ் சினிமாவின் மிக அற்புதமான புதுமையான படம். இன்றைக்கும் நவீனமாக இருக்கும் ஒரு ஆச்சர்யம் இந்தப் படம். இதைப் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்திருந்தேன். மக்கள் இப்போது மறந்துவிட்ட எஸ் பாலச்சந்தர் என்ற ஒரு மகா மேதையை அங்கீகாரம் செய்வதற்காக இந்தப் பதிவு அவசியப்படுகிறது. சிவாஜியை மிகை நடிப்பு என்று இகழ்பவர்கள் இந்தப் படத்தில் வரும் மேடைப் பேச்சு காட்சியையும் இறுதிக் காட்சியையும் பார்த்தால் கொஞ்சம் பதற்றத்தில் உறைந்தே போய்விடுவார்கள். சிவாஜி மிக அருமையாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்த வெகு சில படங்களில் இது மிக முக்கியமானது. இசையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எஸ் பாலச்சந்தர் கர்நாடக சங்கீதத்தில் கரைகண்ட மாபெரும் இசைக் கலைஞன். (அவனா இவன் என்ற அவருடைய இன்னொரு படத்தையும் பாருங்கள். சிறப்பான இசையை அளித்திருப்பார்.) அந்த நாள் தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. சொல்லப்போனால் முதல் மூன்று இடங்களில் கண்டிப்பாக இருக்கும் படம். உங்கள் பதிவுக்கு பாராட்டுகள்.

    திரைப்படங்கள் மட்டுமல்ல பாடல்களிலும் பழைய பாடல் புதிய பாடல் என்று பிரித்துப் பார்க்காமல் நல்ல பாடல் மோசமான பாடல் என்று ரசிக்கக் கற்றுக்கொண்டால் பல இன்பங்களை இழக்க மாட்டோம். மீண்டும் நன்றி மற்றும் பாராட்டுகள்.

    கடைசியாக ஒரு தகவல். பலர் இந்தப் படத்தை ஜப்பானிய படமான ரோஷமான் படத்தின் தழுவல், காப்பி என்று சொல்வதுண்டு.(இங்கே கூட ஒரு அனானி இதையே சொல்லியிருக்கிறார்) உண்மையில் தமிழில் முதல் முறையாக flash back யுக்தி இந்தப் படத்தில்தான் பயன்படுத்தப்பட்டது. ஒரே நிகழ்வை பலர் தங்கள் பார்வையிலிருந்து சொல்லும் பாணி ரோஷமான் படத்தில் வந்த ஒரு புதிய கதை சொல்லும் விதம். ரோஷமான் படத்திலிருந்து இந்த கதை சொல்லும் முறையை மட்டுமே எஸ் பாலச்சந்தர் கையாண்டிருக்கிறாரே ஒழிய அந்தப் படத்தின் கதையை தொடக்கூட இல்லை. இதே பாணியை நூற்றுக்கு நூறு படத்தில் கே பாலச்சந்தரும் விருமாண்டி படத்தில் கமலஹாசனும் செய்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் சார்... டீவியில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது...ஆனால் ஏனோ ஆர்வம் இன்றி இருந்தேன்... பார்க்கும் உந்துதலை ஏற்படுத்தியதற்கு நன்றி.. நீங்கள் சொன்ன இன்னொரு படமான அவனா இவன் படத்தையும் தேடிப்பிடித்து பார்த்து விடுவேன்

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]