Pages

Sunday, November 17, 2013

சிவாஜி - கலைஞர் காம்பினேஷனில் பராசக்தியை மிஞ்சிய பக்காவான திரைப்படம்


கலைஞர் சிவாஜி காம்பினேஷனில் பல படங்கள் வந்து இருந்தாலும் , அவற்றுள் மாஸ்டர் பீஸ் என நாம் நினைப்பது பராசக்தி. அது எவ்வளவு தவறான கருத்து என சமீபத்தில் உணர்ந்தேன்.

பராசக்தியை குறைத்து சொல்லவில்லை. திராவிட இயக்கத்தின் , தமிழ் நாட்டின் முக்கியப்படங்களில் ஒன்று.சிவாஜி எனும் கலைஞனை தந்த படம். கலைஞரின் சிறந்த வசனங்கள் , இனிய பாடல்கள் என ஜொலித்த படம். அதெல்லாம் வேறு.

ஆனால் கலைஞர் சிவாஜி காம்பினேஷனில் இதை விட சிறப்பான படம் ஒன்று வந்து இருக்கிறது.  புராண கதைகளை எடுத்துக்கொண்டு , அதை மாற்றி திராவிட இயக்க படமாக மாற்றிய புத்திசாலித்தனம், சிவாஜியின் இயல்பான நடிப்பு, கலைஞரின் நேர்த்தியான கூர்மையான வசனங்கள் . இனிய இசை , அரசியல் நையாண்டி என ஒரு முழுமையான பக்காவான திரைப்படமாக திகழும் திரும்பிப்பார் , பராசக்தியைவிட ஒரு படி மேல் என்றே சொல்வேன். அந்த காலத்தில் இந்த படம் மெகா ஹிட் ஆனது மட்டும் அல்ல... ஒரு டிரண்ட் செட்டராகவும் இருந்தது.

படத்தின் பெயர்  : திரும்பிப் பார்

பராசக்தி எனும் மெகா வெற்றிப்படத்தை தந்த இந்த கூட்டணி அந்த படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திசையில் பயணிக்க தீர்மானித்ததே பெரிய ஆச்சர்யம். இன்றுகூட அப்படி துணிச்சல் யாருக்கும் வராது.

பராச்க்தியில் ஹீரோவாக நடித்த சிவாஜி இதில் பயங்கர வில்லன் . அந்த நாள் படத்தில் நெகடிவ் ரோல் என்றாலும், அதில் அவர் எதிர்மறை காரியங்கள் செய்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கும், அவர் தவறு ஜஸ்டிஃபை செய்யப்படும்.

ஆனால் இந்த படத்தில் எந்த ஜஸ்டிஃபிகேஷனும் கிடையாது. முழுக்க முழுக்க கெட்டவன். அழகான ,் திறமையான , புத்திசாலியான , ஸ்டைலான கெட்டவன் என்று அந்த காலத்திலேயே கேரக்டர் அமைத்து இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

பரந்தாமன் ( சிவாஜி ) ஒரு பெண் பித்தன், பணத்தாசை பிடித்தவன்.  அவனை அவனுடைய அக்காதான்( பண்டரிபாய் ) வளர்த்து வருகிறார். பல பெண்களை ஏமாற்றுகிறான் தொழிலாளர்களை தன் நாவன்மையால் சுரண்டுகிறான். துரோகம் செய்கிறான். இன்னொருவர் எழுதிய நூல்களை தன் பெயரில் போட்டுக்கொள்கிறான்.

இப்படி என்னென்ன அயோக்கியத்தனம் உண்டோ அனைத்தையும் செய்கிறான், அவனுக்கு பரந்தாமன் என பெயர் வைத்து திராவிட இயக்க முத்திரை பதித்ததோடு நிற்கவில்லை. இவனுக்கு எதிர் நிலையில் நல்லவனாக திகழும் கேரக்டர் பெயர் பாண்டியன். ( பி வி நரசிம்ம பாரதி) ..

பரந்தாமன் , அவன் அக்கா, பாண்டியன் என்ற மூவருக்கிடையே நடக்கும் முரண்பாடுகளும் மோதலுமே கதை.

படம் அதிரடியாக ஆரம்பிக்கிறது.. ஆரம்பத்திலேயே கோர்ட் சீன்.  பாரந்தாமனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பாண்டியன் குற்றவாளி கூண்டில் நிற்கிறான். அவன் குற்றவாளி இல்லை பரந்தாமனின் அக்கா வாதிடுகிறாள்.. அவள் வார்த்தைகளில் படம் ஃபிளெஷ் பேக்காக நம் முன் விரிகிறது.

சிவாஜியின் அலட்டல் இல்லாத , மிகை நடிப்பற்ற , வில்லன் நடிப்பும் கலைஞரின் வசனங்களும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்கிறேன்.  வசனம் என்றால் முழுக்க முழுக்க பிரச்சாரம் இல்லை. இயல்பான ஹ்யூமர் , அரசியல் பகடி என பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள்.

இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். சிவாஜி பிற்காலத்தில் காங்கிரஸ்காரராக அறியப்பட்டாலும் , ஆரம்பத்தில் அவர் திராவிட இயக்கத்தின் திரையுலக பிரதிநிதியாகத்தான் இருந்தார். ஆனால் சிலரது சூழ்ச்சிகளால்தான் அவர் காங்கிரசை நோக்கி தள்ளப்பட்டார் என்பது வரலாறு. ஆனால் அவர் திராவிட இயக்கத்தில் இருந்தபோது , அவர் திராவிட இயக்கத்துக்கு வலுவாக குரல் கொடுத்ததுபோல எம் ஜி ஆர் குரல் கொடுக்கவில்லை என்பது பழைய படங்களை பார்த்தால் தெரிகிறது/

அந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு திமுகவினரை நான் சென்ஸ் என விமர்சித்தார். இதை வைத்து அவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியிருப்பார்கள். நேருவைப்போல கருப்பு கண்ணாடி , கோட் அணிந்து சிவாஜி வருவார். நான்சென்ஸ் என்பார்.

ஒரு காட்சியில் ஒரு தொழிலாளி சம்பளம் கேட்டு வருவான்.

தொழிலாளி  : அய்யா.

( நேருவின் தோற்றத்தில் இருக்கும் ) சிவாஜி :   நான்சென்ஸ்

தொழிலாளி : நான்சென்சா... பெரிய மனுஷன்னு மதிச்சு பேசினா, பெரிய மனுஷன் பேசற பேச்சா இது


இன்னொரு காட்சி

கருடன் பதிப்பக உரிமையாளரும் ( துரைராஜ்)  சிவாஜியும் பேசிக்கொண்டு இருப்பார்கள்

துரைராஜ் : பரந்தாமா... புத்தகம் எழுது,,லாபத்துல எனக்கு முக்கால் ,,உனக்கு கால்..

தொழிலாளி : எனக்கு ?

துரைராஜ் : அவனுக்கு கால் ...உனக்கு அறை ( பளார் என ஓர் அறை )

சிவாஜி : ஹா ஹா

இந்த வசனத்தை ஆட்டையைப்போட்டு பிறகு ஒரு காமெடி காட்சி வந்ததை மறந்து இருக்க மாட்டீர்கள்



இன்னொரு காட்சி

துரைராஜ் : பரந்தாமா ,அந்த பாண்டியன்  நம் வழியில் அடிக்கடி குறுக்க வறான்... நாம வெளியிட்ட புத்தகத்தை திட்டினான், இப்ப நாம கல்யாணம் பண்ணிக்க போற...

சிவாஜி : டேய்

துரைராஜ் : இல்லை இல்ல.... நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை கட்டிக்க பாக்குறான்.
இப்படி படம் முழுக்க ரகளையான , நக்கலான வசனங்கள்.

பாண்டியனிடம் அறை வாங்கும் சிவாஜி. இந்த அடிய வெளிய சொல்லிடாதடா என தன் சகாவை கெஞ்சுவது. துணிச்சலாக தவறாக செய்வது. அக்காவிடம் மாட்டிக்கொண்டால் செண்டிமெண்ட்டாக பேசுவது என செமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

போராட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டு இருப்பார்.

பராசகதிபோல ஒரு முன்னரை கொடுத்து பேச ஆயத்தமாவார்... என்னவோ பேசப்போகிறார் என ஆவலாக காத்து இருபோம்..
இந்த குற்ற்ச்சாட்டு தவறு... அப்படி உண்மையாக இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள் என் ஒரு ஸ்டண்ட் அடித்து , ஒரு டாப்கிளாஸ் வில்லனாக அந்த காட்சியில் மிளிர்வார்.

அதற்கு முந்தைய காட்சி வரை தொழிலாளர்களின் வீர மிகு தலைவனாக தன்னை காட்டிக்கொண்டு , அந்த ஒரு காட்சியில் பல்ட்டி அடிப்பார்.

இயல்பாக நடிக்கும் சிவாஜி, வீரமாக நடிக்கும்போது மட்டும் வேண்டும் என்றே மிகை நடிப்பை காட்டுவார். இரு விதமாகவும் தன்னால் நடிக்க முடியும் என காட்டிய அவரை , மிகை நடிப்பாளர் என முத்திரை குத்துவது அறியாமையே.

புராண கதை ஒன்று உண்டு. முனிவரின் மனைவி அகல்யாவை கவர இந்திரன் திட்டம் இடுவான். முனிவர் தினமும் அதிகாலை எழுந்து நீராட செல்வார். இந்திரன் தன்னை சேவலாக மாற்றிக்கொண்டு , நடு இரவிலேயே விடியல் ஓசை எழுப்பி , அவரை ஆற்றுக்கு அனுப்பி விட்டு , அகல்யாவை நெருங்குவான். ஞான திருஷ்டி , சாபம் என அந்த கதை போகும், அதை அழகாக இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்..இந்திரன் செய்த வேலையை சிவாஜி செய்வார்.

அதேபோல , இன்னொரு சம்பவம். பெண் பித்தராக அலையும் அருணகிரி நாதர் ஒரு வேசியை தேடிசெல்வார். உனக்கு பெண் தானே வேண்டும்,. என்னை எடுத்துக்கொள் என ஒரு கட்டத்துல் அவரது அக்கா கூற அதிர்ந்து போவார்.

இதையும் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

கடைசியில் அந்த மோசடி பதிப்பகத்தை விட்டு செல்லும்போது, கருடன் பதிப்பகம் என்ற பெயரின் முதல் எழுத்தை , தி என மாற்றி செல்வது தமிழ் குறும்பு.

பாண்டியனின் தந்தையாகவும் , சிவாஜியை நம்பும் ஏமாறுபவராகவும் நடித்து இருப்பவர் தங்கவேலு. கிருஷ்ணகுமாரி , கிரிஜா , முத்துலட்சுமி போன்றோரும் சிறப்பாக தம் பங்கை செய்து இருக்கிறார்கள்.

இசை ஜி ராம நாதன் ... ஒவ்வொரு பாடலும் இனிமை.

இயக்கம் டி ஆர் சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. வசனத்துக்காக , சிவாஜியின் நடிப்புக்கா, இசைக்காக ., தமிழுக்காக , துணிச்சலுக்காக , நகைச்சுவைக்காக


3 comments:

  1. //அந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு திமுகவினரை நான் சென்ஸ் என விமர்சித்தார்.//
    பரந்தாமா திரும்பிப்பார் என்பது பிரபலமான வசனம்.. சரிதான்.. இதே திராவிட ரசிகரான நீங்களும் திரும்பிப்பாருங்கள்..
    ஒரு ஃப்ளாஷ்பேக்
    சேலம் உருக்காலை தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடப்படுகிறது.. அப்போது சில தொழிற்சங்க ஆட்கள் முரசொலி மாறனை பார்க்கச் சென்றனர்..
    அப்போது அவர் சொன்ன வார்த்தை....?????
    திருவாளர் பிச்சைக்காரர் திரும்பிபபாரும்.. அது என்ன என்று கேட்டுப்பாரும்.... history repeats
    R Chandrasekaran

    ReplyDelete
  2. திரும்பிப்பார் அருமையான படம். சிவாஜிக்கே மிகவும் பிடித்த படம் என்று எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. நேருவை பகடி செய்யும் விதத்தில் சிவாஜி உடையணிந்து அடிக்கடி நான்சென்ஸ் என்று சொல்லியபடி இருப்பார். நான் பாதிதான் பார்த்தேன். என்னிடமிருந்த டி வி டி பிரிண்ட் சரியாக இல்லாததால் முழுவதும் பார்க்க முடியவில்லை.சிவாஜி அற்புதமாக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று.நல்ல பதிவை எழுதியதற்காக வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]