Friday, November 22, 2013

அந்த கால சஸ்பென்ஸ் த்ரில்லர்- கண்ணாடி மாளிகை

பழைய படம் என்பதற்காகவே ஒரு படத்தை கிளாசிக் என புகழ் முடியாது. என்னைபொருத்தவரை , ஒரு படம் காலத்தை வென்ற படமாக இருக்க வேண்டும் ( அந்த நாள் போல ) . அல்லது அந்த கால கட்டத்திலாவது சிறந்த படமாக இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் அந்த காலத்தில் பாடலுக்காகவும் , எம் ஆர் ராதா நடிப்புக்காகவும் புகழ் பெற்ற ஒரு படத்தை ஒரு பெரியவர் ரெகமண்ட் செய்தார்.

படத்தின் பெயர் கண்ணாடி மாளிகை.

அந்த காலகட்டத்துக்கு கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான். டைட்டில் கார்டில் எம் ஆர் ராதா பெயரைத்தான் ஹீரோ போல போடுகிறார்கள். ஆனால் அவர் ஹீரோ அல்லர்.
ராதாராணி என்பவர்தான் கதா நாயகி , அவர்தான் இந்த படத்தை தயாரித்தவரும் கூட. அசோகன் , நாகையா போன்றோரும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம் காலத்தை வென்ற படம் என்ற லிஸ்ட்டில் வராது. அதற்காக குப்பைப்படம் அல்ல, அந்த கால ரசனைக்கேற்ப எடுக்கப்பட்ட , அந்தக்கால கமர்ஷியல் படம்.

ஆரம்பம் கலக்கலாக ஆரம்பிக்கிறது. ஒரு பெண்ணை ஒரு பேய் அல்லது மர்ம உருவம் துரத்துகிறது. அவள் கண்ணாடி மாளிகை என்ற பங்களாவில் தஞ்சம் புகுகிறாள் என்று அதிரடியாக எதிர்பார்ப்பை கிளப்புகிறது படம்.
ஆனால் அப்படி முழுமையான் சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு போகாமல் , ஆட்டம் பாட்டம் டான்ஸ் பாடல் சண்டை என எண்டர்ட்டெயினராக எடுத்து இருக்கிறார்கள்.

ராதாராணி தயாரிப்பாளர் என்பதால் , அவருக்கு அதிகப்படியான பாடல்கள் , சண்டைகள் .ஆம், அவரே சண்டை எல்லாம் போடுகிறார். துப்பறிகிறார். எம் ஜி ஆர் பாணியில் ஆலமர விழுதுகளைப்பிடித்து ஜம்ப்  செய்கிறார், மாறு வேடம் போடுகிறார்.. கண்ணாடி ஜன்னலை உடைத்து டைவ் அடிக்கிறார்.

அந்த காலத்தில் சாட்டையடி சந்திரகாந்தா , டாக்டர் சாவித்ரி என பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் சில வந்தன. அதில் ஒன்றாக இது வந்து இருக்கிறது.

கண்ணாடி மாளிகையில் வசிக்கும் பணக்காரர் நாகையாவுக்கு வாரிசு இல்லை. அவரது தங்கை மகன் எம் ஆர் ராதா கூடவே வசிக்கிறார். பணத்தை சுருட்ட திட்டமிடுகிறார், சின்ன வயதில் காணாமல் போன தங்கையை தேடுகிறார்.  பணக்காரரின் நம்பிக்கைக்கு உரிய  நபர் அசோகன்.

முதல் காட்சியில் வந்த பெண் தான் கதா நாயகி . அவள்  அங்கே வேலை பார்ப்பவள். அவளை காதலித்துவிட்டு கல்யாணம் செய்யாமல் ஏமாற்றி விடுகிறார் அசோகன். அவள் காட்டுக்கு சென்று வசிக்கிறாள். அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அது தொலைந்து போய் நாகையாவிடம் கிடைக்க அவரே வளர்க்கிறார்.

கதானாயாகி மாறு வேடம் பூண்டு மக்கள் நலனுக்காக பல்வேறு சாகசங்கள் செய்கிறாள். அவ்வப்போது வரும் மர்ம உருவத்திடம் இருந்து தன் மகளை காக்கிறாள். ஆனால் அந்த மகளுக்கு தன் தாய் என தெரியாது.

அந்த மகள் வளர்ந்த நிலையில் தன் மகள் என தெரியாமல் அவளிடமே தவறாக நடக்க அசோகன் முய்ல, கதானாயகி வந்து எல்லாவற்றையும் சுமுகமாக முடிக்கிறாள்.
அவ்வபோது வந்த மர்ம உருவம் எம் ஆர் ராதாதான்.. அவர் தேடிக்கொண்டிருந்த தங்கைதான் ஹீரோயின் என சஸ்பென்ஸ் கடைசியில் உடைகிறது.

ஆனால் பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை. பெரிய திகிலும் இல்லை

ஆயினும் இதை எம் ஆர் ராதாவிற்கு பார்க்கலாம். இன்றும் ரசிக்கத்தக்க கிண்டல் பேச்சு , டயலாக் டெலிவரி , குரலில் ஏற்ற இறக்கம் என கலக்கி இருக்கிறார்.

வேலைகாரிக்கு பேர் ராணியா..என்னடா இது..யார்டா பேரு வச்சா என கரகர குரலில் கிண்டலாக கேட்பது போன்ற பல காட்சிகள் அவரை காலத்தை மிஞ்சிய கலைஞன் ஆக்குகின்றன.

”சிரித்த முகம் வேணுமடி பெண்ணே/ அதுதான் சேவை செய்யும் பெண்களுக்கு அழகு தரும் கண்ணே...” என்ற  சுசீலாவின் அழகான பாட்டு அந்த காலத்தில் பயங்கர ஹிட். இசை பத்மன்
இயக்கம் சாமி மற்றும் மகேஷ்
வசனம் பாடல்கள் முடியரசன்

பார்த்தே ஆக வேண்டிய படமும் அல்ல...தவிர்க்க வேண்டிய படமும் அல்ல...





1 comment:

  1. இந்தப் படத்தை நான் கேள்விப்பட்டதே கிடையாது. ஒரு முறை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அதுவும் சந்தர்ப்பம் வாய்த்தால்தானே? எங்கிருந்து இப்படியான கருப்பு வெள்ளை அதிசயங்களை கண்டெடுக்கிறீர்கள் என்ற ரகசியத்தை சொல்லவும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா