Wednesday, November 27, 2013

மகேந்திரனின் மகத்தான படைப்பு - இயல்பு மாறாத இன்னிசை




இப்போது ரஜினி ரசிகனாக இருப்பது வேறு. பள்ளிக்காலங்களில் ரஜினி ரசிகனாக இருப்பது வேறு. அப்போதெல்லாம் ரஜினி ரசிகனுக்கென , எழுதப்படாத மரபுகள் இருந்தன.. கமலை பெர்சனலாக திட்ட வேண்டும்... திட்ட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு கமல் படத்துக்கு போக வேண்டும்... பாராட்ட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு ரஜினி படத்துக்கு போக வேண்டும்.. படங்கள் மட்டும் அல்ல... பாடல்களைக்கூட இப்படி இனம் பிரித்து ரசிக்க வேண்டும் என பல விதிகள் உண்டு.

நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என அவ்வப்போது ஆரோக்கியமான வாக்குவாதங்கள் நிகழும்.. இந்த டிரண்ட் கல்லூரியிலும் தொடர்ந்தது...

எப்படி இருந்தாலும் ரஜினி படம்தானே நல்லா ஓடுது என்பதால் விவாதங்களில் எங்கள் கை சற்று ஓங்கியே இருக்கும். ஆனால் வெளியே சொல்ல முடியாமல் இரண்டு காம்ப்ளக்ஸ்கள் அப்போது இருந்தன..
ரொமான்ஸ் பாடல்களில் பெரும்பாலும் கமல் பட பாடல்கள்தான் நன்றாக இருக்கும்... இன்னொன்று ரஜினி படத்தில் தெரியும் லேசான ஆணாதிக்கம்..

இந்த குறைகளை நீக்கியது டீவியில் பார்த்த ஒரு ரஜினி படம். அந்த படத்தை அதன் பின் மீண்டும் மீண்டும் பல முறை பார்த்து வருகிறேன். ரஜினி படங்களில் எனக்கு பிடித்தது அந்த படம்தான்... அதுதான் ஜானி... மகேந்திரன் படங்களிலும் எனக்கு பிடித்தது அந்த படமே.. கதானாயகியை அந்த அளவுக்கு வேறு யாரும் கண்ணியமாக காட்டியதில்லை.. ரஜினியை அந்த அளவுக்கு யாரும் நடிக்க வைத்ததும் இல்லை..

இந்த காட்சியில் ஸ்கோர் செய்வது ரஜினியா,ஸ்ரீதேவியா, இளையராஜாவா

ரஜினியை மிகவும் வித்தியாசமாக காட்டி இருப்பார் இயக்குனர் மகேந்திரன். அதன் பின்புதான் முள்ளும் மலரும் பார்த்து பிரமித்தேன்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மகேந்திரன் எனக்கு பிடித்த இயக்க்குனராகிப்போனார். அவரது மற்ற படங்களையும் தேடி தேடி பார்க்க ஆரம்பித்தேன்.
அவர் படங்களிம் இயல்பு தன்மை , இயல்பான சுருக்கமான வசனங்கள் , ஈர்க்கும் திரைக்கதை , இயல்பான நடிப்பு , பாடல்கள் படமாக்கப்படும் விதம் என அவர் படங்களின் மாணவன் ஆனேன்,

அந்த வகையில் அவர் படங்களில் எனக்கு பிடித்த ( ஜானி , முள்ளும் மலரும் நீங்கலாக ) படம் நண்டு ( 1981) ...  வெகு வெகு இயல்பான கதை, இயல்பான சம்பவங்கள் , மறக்க முடியாத பாத்திரப்படைப்புகள், விஷுவ
குறியீட்டு ரசிகர்களுக்காக...
ல் ட்ரீட்கள், பாடல்கள் , விறுவிறுப்பான திரைக்கதை , சஸ்பென்ஸ் , வித்தியாசமான சில முயற்சிகள் என கலக்கி இருப்பார்.

ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் பல இருந்தாலும், இரண்டு மட்டும் சொல்கிறேன்..இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன.,.. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல் !!

சிறந்த பாடகராக  நம் மனதில் இருக்கும் பிபி ஸ்ரீநிவாஸ் அவர்கள்தான் இந்த பாடல்களை படைத்த கவிஞர் ஆவார் !!!

டைட்டில் கார்டில் திரைக்கதை வசனம் இயக்கம் மகேந்திரன் என்பது ஹிந்தி மொழியிலும் காட்டப்படுகிறது..


இப்படி பல ஆச்சர்யங்கள்..

படத்தின் கதை சிவசங்கரியினுடையது... அதை அப்படியே எடுக்காமல் கொஞ்சம் மாற்றி வேறோர் அர்த்தம் கொடுத்து இருக்கிறார் மகேந்திரன்.  ஆனால் முள்ளும் மலரும்போல முழுமையாக மாற்றவில்லை..

அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது... படம் முழுக்க நண்டு வந்து கொண்டே இருக்கிறது..  நண்டு வளைக்குள் போகிறது என் இண்டர்வெல் கார்ட் போடுகிறார்கள் ...ஒருவேளை ஹீரோ என நாம் நினைப்பவன் மர்மமான ஆளா என்றெல்லாம் நினைக்கிறோம். கடைசியில்தான் அந்த குறியீடு புரிகிறது..
ஸ்பாய்லர் என்பதெற்கெல்லாம் பழைய படங்களில் அர்த்தம் இல்லை என்றாலும், இன்னும் படம் பார்க்காதவர்கள் யாரேனும் இருக்க கூடும்..எனவே அவர்கள் படம் பார்க்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை..அதை விளக்கவும் விரும்பவில்லை..

நண்டு பாறைகளை துளைப்பதில்லை... துயரங்கள் நல்லவர்களை அழிப்பதில்லை ..இதுதான் படத்தின் கான்சப்ட் என்பதால் , இதன் குறியீடாகவும் நண்டை பார்க்கலாம்..

 நண்டுகளை ஒரு கூடையில் போட்டு வைத்து பாருங்கள்..ஒரு நண்டு மேலே ஏற முயன்றால் , மற்றவை அதை கீழே இழுக்கும். மத்திய தர வாழ்க்கை இப்படித்தான்... கஷ்டப்பட்டு , சிக்கனமாக இருந்து முன்னேற முயலும்போது , பிரச்சனைகள் கீழே இழுக்கும்.. மீண்டும் பல்லைக்கடித்துக்கொண்டு முன்னேறியாக வேண்டும்..இதன் குறியீடாகவும் நண்டை பார்க்கலாம்..

நண்டு வெளியே தெரியாமல் மண்ணுக்குள் இருக்கும்.திடீர் என வெளிப்படும்..அது போல வாழ்க்கையில் பிரச்சனைகள் திடீர் என்றுதான் தோன்றும் என்பதன் குறியீடாகவும் பார்க்கலாம்..

ஆனால் படத்தில் இன்னொரு விஷ்யம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.. பழைய படம்தானே என சொல்ல விரும்பவில்லை... யாரேனும் ஒருவராவது புதிதாக பார்ப்பீர்கள்..உங்கள் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை..


பெரிய இடத்து வடக்கிந்திய பையன் ராம்... பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல் , அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரி முத்து சேர்த்து விடுகிறார்.சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம் ( குறியீட்டு ரசிகர்கள் , இந்த பெயர்களை கவனியுங்கள் !! ) .

சிதாவின் அம்மா , ( அப்பா இல்லை ) சீதா அக்கா , அவள் கணவன் , வீட்டு ஓனர், எல் அய் சி ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி , வீட்டு ஓனர் மகள் , அங்கு இருக்கும் மற்ற பெண்கள் , சீதாவின் தோழி , அவள் தகப்பன் , என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ) , வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

அதன் பின் பலத்த போட்டிகளுக்கிடையே காதலில் சீதா வெல்வது , அக்கா கணவனின் வில்லத்தனத்தை மீறி திருமணம் , குழந்தை , மகிழ்ச்சியான வாழ்க்கை , வட இந்தியா செல்லுதல் , ராம் அம்மாவின் மகிழ்ச்சி , என இளையராஜாவின் பாடலுடன் படம் இனிமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.. கடைசியில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த நண்டு வந்து படத்தை முடித்து வைக்கிறது..

பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை.. ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்..

பிரச்சனைகளை வெல்லும் ஆற்றல்  நம்மிடம் இருப்பது வரம் என்றால் , ஒரு பிரச்சனை முடிந்து விட்டது என ஹாயாக உட்கார முடியாது என்பது சாபம்...மண்ணுக்கடியில் ஒளிந்து இருக்கும்  அடுத்த பிரச்சனை எப்போதும் வெளி வரலாம்..

இந்த இரண்டுக்கும் நடுவில்தான் வாழ்க்கை செல்கிறது..

படிக்கும்போது பாசாகும் பிரச்சனை , காதல் பிரச்சனை , குழ்ந்தை பிறக்கவில்லையே என பிரச்சனை , குழந்தைகளால் பிரச்சனை , அவர்களுக்கு திரும்ண பிரச்சனை என எப்போதும் பிரச்சனைகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன..சினிமாவில்தான் , காதலர்கள் திருமணம் செய்து கொள்வதுடனோ . ஹீரோ பழி வாங்குவதடனோ பிரச்சனை முடிந்து விடுவதாக காட்டுவார்கள்...அல்லது எல்லாம் நாசமா போச்சே என ஒப்பாரியுடன் படத்தை முடிப்பார்கள்.. ஆனால் வாழ்க்கை இப்படி இல்லை..at a given moment , இரண்டுமே இருக்கும்..

இந்த வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று..

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்,, ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்.. அந்த நேரத்தில் அது பேருதவி.. ஓர் ஆணுடன் பேசினால் , புரணி பேசுபவர்கள் இருந்தால் , ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்.. திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்...அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்.. வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும் , துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்..
இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..

ஆனால் எல்லா காட்சிகளிலும் இப்படி தமிழ் ஒலிக்காது.. சில சந்தர்ப்பங்களில் தமிழ் , ஹிந்தி மொழி வேறுபாடுகளை வைத்து காட்சி இருக்கும்..உதாரணமாக , மாமியார் பேசுவது சீதாவுக்கு புரியவில்லை..கணவனிடம் கேட்கிறாள் என்றால் , மாமியார் ஹிந்தியிலேயே பேசினால்தான் இயல்பாக இருக்கும்... அது போன்ற இடங்களில் ஹிந்தியிலேயே பேசுவார்கள்.
அதில் சுவாரஸ்யமான காட்சி ஒன்று.. சீதா பேசுவதை தன் தாய்க்கு ராம் விளக்குகிறான் இல்லையா.. அவனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படும்.. அதை அவன் தமிழிலேயே கேட்பான்... என்னப்பா சொல்ற என அம்மா கேட்க, வெட்கத்துடன் தன் தவறை உணர்ந்து ஹிந்தியில் கேட்பான்// மெல்லிய நகைச்சுவை..அதே நேரம் அவன் தமிழ் குடும்பத்தில் பழகி பழகி அவன் மனதில் தமிழ்தான் இருக்கிறது என்பதும் பூடகமாக சொல்லப்பட்டு இருக்கும்..லல்லி சீன்


செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர் , ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது...தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை...

கதானாயகன் சுரேஷ் நாயகி அஸ்வினி....இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்...  நாயகனுக்கு குரல் கொடுத்து இருப்பவர் சரத்பாபு... அருமை.

அள்ளித் தந்த் பூமி அன்னை அல்லவா , சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா.

எனக்கு மிக மிக பிடித்த பாடல்..

இதை வட இந்திய நாயகன் பாடப்போகிறானா என சற்று புன்னகையுடன் எதிர்பார்த்தேன்.. ஆனால் மகேந்திரன் கில்லாடி... அதை நாயகன் பாடவில்லை.. அவர்கள் ஊர் சுற்றி பார்க்கும்போது பின்னணியில் பாடல் ஒலிக்கும்.. ராஜாவின் பல பாடல்களை நம் இயக்குனர்கள் வீணடித்துள்ளனர்.. ஆனால் மகேந்திரன் போன்ற மேதைகள் அந்த பாடல்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்...உதா. இந்த பாடல்..

பார்த்தே ஆக வேண்டிய அந்த பாடல்

மஞ்சள் வெயில் என்றொரு இன்னொரு பாடல்..மயக்கும் பாடல்..

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்... உன் மூஞ்சிய பார்த்தா காறித்துப்புற மாதிரி இருக்கு என ஓர் இளம்பெண் முன் காறித்துப்புகிறார் நடிகர்... ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்..இதில் என்ன நகைச்சுவை என எனக்கு புரியவில்லை...

காட்சிப்பூர்வமான ஹாஸ்யம் இங்கு வளரவே இல்லை... இந்த படத்தில் காட்சிப்பூர்வ ஹாஸ்யங்கள் அனேகம்.. உதாரணமாக சுண்டல் காட்சி... படம்பார்த்தால் , அதை காண மறக்காதீர்கள்..

கிளைமேக்ச்சை மட்டும் வைத்து படம் எடுக்காமல் , ஒவ்வொரு காட்சியையும் சிறுகதையாக செதுக்கி இருக்கும் நேர்த்தி அபாரம்... சீதாவின் காதலுக்காக , தோழியும் அவள் அப்பாவும் பேசுவது அழகு அழகு அழகு..

இன்னொரு காட்சி..

ராக்கி பண்டிகை... அந்த வீட்டு பெண்களிடன் ராக்கி கயிற்றை கொடுத்து, யாராவது ஒருவர் எனக்கு கட்டி விட்டு , எனக்கு தங்கை ஆகுங்கள் என்கின்றான் ராம்.

அவனை மாடிக்கு போகச்சொல்லி விட்டு பெண்கள் விவாதிக்கிறார்கள்.. யாருக்கும் தங்கையாக விருப்பம் இல்லை... நைசாக நாயகியிடம் கொடுத்து மாடிக்கு அனுப்புகிறார்கள்..அது வரை அவர்கள் காதலை சொல்லிக்கொண்டதில்லை...எனவே நாயகி ராக்கி கயிற்றுடன் மாடிக்கு போகிறாள்..

முன்னணி இசை , இசையராஜா என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டு சிலர் அவரை ஒழித்து கட்டி விட்டார்கள்.. ஆனால் நான் சொல்லும் இந்த காட்சியில் அவர் இசையமைப்பு ஃபர்ஸ்ட் கிளாஸ்.

இந்த காட்சி , அதற்கு நாயகன் பதில் , அவள் என்ன செய்கிறாள் , கீழே வந்து தன் உணர்வுகளை தன் தாயிடம் எப்படி வார்த்தை இன்றி வெளிப்படுத்துகிறாள் , அந்த் தாய் அதை எப்படி ஏற்கிறார் என்பதையெல்லாம் பார்க்கையில் என் கண்கள் கலங்கி விட்டன ( சோகத்தால் அல்ல )/.



மகேந்திரன் வாழும் கால கட்டத்தில் , அதே மானிலத்தில் , அதே ஊரில் வாழ்கிறேனே...இதை விட வேறு என்ன் வேண்டும் என தோன்றியது..

விட்டால் இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்... ஒன்றே ஒன்று சொல்கிறேன்.

அந்த காலத்தில் மாயாஜாலப்படங்கள் வந்தன.. பிறகு வசனப்படங்கள்..அதன் பின் 80 களில் மகேந்திரன் போன்றோர் யதார்த்தவாத படங்கள் எடுத்து சினிமாவை வேறு திசைக்கு கொண்டு போனார்கள்..
இன்றோ மீண்டும் மாயாஜாலப்படங்கள் வந்து விட்டன... பறந்து சண்டை போடுவது..ஹீரோ பல ஆளாக பிரிந்து தோற்றம் காட்டுவது. தேவலோக அப்சரஸ் போன்ற நாட்டியக்காரிகள் என யதார்த்தம் செத்தே போய் விட்டது..

இதில் இருந்து தமிழ் சினிமாவைக்காக்க மீண்டும் மகேந்திரனோ அவரைப்போன்றவர்களோ வருவார்களா !!!

டெயில் பீஸ்-

ஆழமான படம் என்றாலும் இந்த படம் நல்ல எண்டர்டெய்னரும்கூட.. இனிய பாடல்கள்  நகைச்சுவை என அருமையான பொழுதுபோக்கு படம்..ஆனாலும் இது வந்த காலகட்டத்தில் பெரிதாக ஓடவில்லை... டப்பிங் படம்போல என பலர் நினைத்து விட்டனர்..ஆனால் மெல்ல பிக் அப் ஆகி ஓடத்தொடங்கியபோது படத்தை எடுத்து விட்டனர்..கொஞ்சம் விளம்ப்ரம் செய்து இருந்தால், படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் என மகேந்திரன் பேட்டிகளில் சொன்னார்...



8 comments:

  1. நண்பரே,
    மகேந்திரன் என்றாலே பலரும் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி என்றே பேசுவார்கள். பிறகு நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் பேசப்படும். ஆனால் நண்டு படத்தைப் பற்றி வெகு சிலரே விவாதிப்பார்கள். ஒரே ஒரு முறை தூர்தர்ஷனில் (என்று நினைக்கிறேன்) இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். படத்தில் ஹிந்தியில் பேசுவார்கள். ஆனால் தமிழாக ஒலிக்கும் டாகுமெண்டரி யுக்தியை மகேந்திரன் செய்திருப்பார். மிக மெதுவாக நகரும் கதை. நீங்கள் சொல்வது போன்று மனதை தொடும் படம். இதே போல் மெட்டி என்ற படமும் மிகவும் சிறப்பானது. பொது சிந்தனையிலிருந்து அகன்று விட்ட அருமையான படங்களை தேடிப் பிடித்து பார்த்து திறமையாக விமர்சனம் செய்யும் உங்கள் ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட்.

    ReplyDelete
    Replies
    1. சார்... ஹிந்தியில் பேசி தமிழில் ஒலிக்கும் யுக்தி குறித்து எழுத மறந்து விட்டேன்.. நினைவு படுத்தியமைக்கு நன்றி...அதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது...இதோ சேர்த்து விடுகிறேன்

      Delete
  2. லிங்க் கேக்கவே மாட்டேன்.... !!
    ஏன்னா, dvd கிடைத்தால் இந்த படமும், உதிரிப்பூக்களும், முள்ளும் மலரும் வாங்க வேண்டும்.

    நான் இந்த படத்த பார்த்துட்டேன். படம் பார்க்கும் முன், அந்த நாவலையும் படித்திருந்தேன். நாவல் பிடித்திருந்தாலும் பல இடங்களில் சோகமயமாக தோய்வுடன் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் படம் கொஞ்சம் கூட தோய்வில்லாமல், மிகத் தெளிவான கதையமைப்புடனும் சிறப்பான காட்சியமைப்புடனும் positive energy-யுடன் இருந்தது.

    உதிரிப்பூக்களை தூர்தர்ஷனில் பார்க்கும் போது எனக்கு 12 வயது இருக்கும். நடிகர்கள் இயக்குனர் யாருடைய பெயரும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் தோன்றவில்லை. சில விஷயங்கள் அரை குறையாக புரிந்தும் புரியாமலும் பார்த்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் படம் என்னை உலுக்க ஆரம்பித்தது. அந்த படத்தை அதற்குப் பின் பார்க்கவில்லை. இருப்பினும், இன்று 20 வருடங்கள் கழித்தும் அந்த படத்தை நினைக்கையில், நெஞ்சு அடைக்கிறது.

    எனக்கும் ரஜினியை மிக பிடிக்கும். ஜானியிலும், முள்ளும் மலரிலும் பார்த்த ரஜினியை வேறு படங்களில் பார்த்ததாக ஞாபகம் இல்லை [தளபதியில் மட்டும் சில காட்சிகளை குறிப்பிடலாம்]. பல வருடங்கள் கழித்து, அவருக்கு பிடித்த இயக்குனராக மகேந்திரன் சாரை தான் குறிப்பிட்டார். ரஜினியே அதை மிக தாமதமாகத் தான் உணர்ந்திருப்பார் என்று தோன்றியது.
    இவருக்கு இது முன்னரே தோன்றியிருக்க கூடாதா என்ற ஆயாசம் எனக்கு இப்போதும் உண்டு. :-)

    இன்று, கோடிகளில் செலவு செய்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ஒருவர் கூட, இவர் தரத்திற்கு படம் எடுப்பதாக தோன்றவில்லை.

    மகேந்திரன் சார் தமிழின் original இயக்குனர்களில் ஒருவர். அவர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப படம் எடுக்க முனைந்தால் தமிழ் சினிமா இதுவரை எட்டாத சிறப்புகளை எட்டலாம்.

    உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு ஏனோ அவரைப் பார்த்து கைபிடித்து இதைக் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. என்னவோ ஒன்றை விட்டு விட்டோமே என நினைத்தேன்.. நீங்கள் சொல்லும் பாசிட்டிவ் எனர்ஜி,,,யெஸ்,....அது என்னை வெகுவாக ஈர்த்தது...உங்களது கடைசி வரி , என் எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது

      Delete
  3. உண்மையில் நான் அதிகம் ரசித்த படம் அதுவும் அந்த அள்ளித்தந்த வானம் பாடல் எப்போதும் தாலாட்டும் ஊர் ஞாபகத்தை கதா நாயகன் இயல்பாக நடித்து இருப்பார்! நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
  4. இப்படி எவ்வளவு தான் பாராட்டுகிறது அந்த ராசாவை, குறிப்பாக முள்ளும் மலரும் படத்தின் பின்னணி ஆரம்பிப்பது பேர் போடும் பாடலில் இருந்து. உருக்கமாக ஆரம்பிக்கும் அந்த பாடல் படத்தில் என்னமோ ஒரு சோகம் இழையோடி இருப்பதை முன்னமே சொல்லும் பாடல். இதை மகேந்திரனும் மறுப்பதற்கு இல்லை.......

    ReplyDelete
  5. This is the definitive scene in Jhonny....Rajni scores all the way...

    http://youtu.be/x1cLdezW57I

    ReplyDelete
  6. This is the most definitive moment in the Film, Jhonny....Rajni scores all out in this movie...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா