அபூர்வ சகோதரர்கள் (1949) - நான் ஸ்டாப் எண்டர்டெய்னர்
நடிப்பு : எம் கே ராதா , பானுமதி , நாகேந்திர ராவ், சோமு மற்றும் பலர் & ஜெமினி நிறுவன கலைஞர்கள்
இயக்கம் : ஆச்சார்யா
தயாரிப்பு : ஜெமினி ஸ்டுடியோ ( எஸ் எஸ் வாசன் )
கதை : 1. சதியால் பிரிக்கப்பட்ட அரசரின் இரு குழந்தைகள் , பெரியவர்கள் ஆனதும் , ஒன்று சேர்ந்து சதிகாரனை பழி வாங்குகிறார்கள்..
2. தன் சகோதரனின் நிழலாக வாழ சபிக்கப்பட்டு , தன் இருத்தலுக்கு அர்த்தம் இன்றி வாழும் சகோதரன் ,
தான் இல்லாமல் போவதன் மூலம் தன் இருத்தலுக்கு அர்த்தம் தேடிக்கொள்கிறான்..
வகைப்பாடு : பொழுதுபோக்கு , யதார்த்தம் , மாற்று சினிமா, குப்பை
*******************************************************************************
இளையராஜாவுக்காக படங்கள் ஓடிய காலகட்டம் உண்டு.. அதுபோலவே நடிகர்களுக்காகவே ஓடிய கால கட்டங்கள் உண்டு... ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை ஆதிக்கம் செலுத்துவதும் , அவர்கள் பெயராலேயே படங்கள் அடையாளப்படுத்துவதும் தமிழக பாணி..இளையராஜா படம் , பாலச்சந்தர் படம் , ரஜினி படம் , கமல் படம் - அவ்வளவு ஏன் .சிலுக்கு படம் என்று அடையாளப்படுத்தப்பட்டு ஓடிய படங்கள் உண்டு..
பழைய படங்களைப் பொருத்தவரை காசு போடும் தயாரிப்பாளர்கள்தான் ராஜாவாக இருந்து இருக்கிறார்கள்... ஜூபிட்டர் பிக்சர்ஸ் , மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி என அந்த காலத்தில் கொடி கட்டி ப்றந்தார்கள்..இவர்கள் படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற அளவுக்கு பிராண்ட் இமேஜ் இருந்தது... தயாரிப்பாளர் பெயர் வரும்போது திரையரங்கில் கைதட்டுவார்கள் என்றால் இன்று நம்ப கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்..
சில படங்களின் டைட்டிலை பார்த்தால் , தயாரிப்பாள்ர் இயக்குனர் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் எல்லாம் போட்டு முடித்த பின்புதான் , நடிகர்கள் பெயர் மொத்தமாக வருகிறது...ஹீரோ , வில்லன் , காமெடியன் என எல்லா பெயரும் ஒரே பட்டியலில் வருகிறது.. என்ன ஒன்று , ஹீரோ பெயர் பட்டியலில் முதலாவதாக வருகிறது..
அந்த வகையில் ஜெமினி நிறுவனத்தின் முக்கியமான படங்களில் ஒன்று அபூர்வ சகோதரர்க்ள் ..( ஆங்கிலத்தில் Strange Brothers !! )
இது முழுக்க முழுக்க பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்ற தெளிவு , காட்சிகளின் பிரமாண்டம் , தேர்ந்த நடிப்பு , அசத்தும் தொழில் நுட்பம் என காலத்தை வென்று நிற்கிறது படம்..கிராஃபிக்ஸ் இல்லாத அந்த காலத்திலேயே இரட்டை வேடத்தை அழகாக எடுத்து இருக்கிறார்கள்..ஒரே ஃபிரேமில் இயல்பாக தோன்றுவது , கிராஸ் செய்வது , அடிப்பது போன்றவற்றை வெகு நேர்த்தியாக எடுத்து இருக்கிறார்கள்..
பியானோ இசையில் ஒரு பாடல் , வெகு வெகு ஸ்டைலிஷாக இருக்கும்..எல்லா பாடல்களுமே கனவு உலகத்துக்கு , ஏதோ ஒரு காலத்துக்கு நம்மை எடுத்து சென்று விடுகின்றன..
வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை...இந்த வில்லன் கேரக்டருக்கு முக்கியமான கதானாயாகன் யாரையாவது போடலாம் என்றுதான் நினைத்தார்கள்..பி யு சின்னப்பா. ரஞ்சன் போன்ற அன்றைய பெரிய தலைகளை கேட்டு , அது சரியாக வரவில்லை... கடைசியில் , கன்னட திரையுலகில் கலக்கி வந்த நாகேந்திர ராவை புக் செய்தனர்...
இந்த படத்தின் முதுகெலும்பு இவர்தான்... எம்ஜிஆர் , சிவாஜி படங்களில் வருவது போன்ற வில்லன் அல்லர்.. யதார்த்தமான , காமெடி கலந்த சத்யராஜ் பாணியிலான வில்லன்...அந்த காலத்தில் எப்படி இப்படி ஒரு வில்லன் என தெரியவில்லை...
பானுமதி வெகு அழகாக மட்டும் அல்ல..புத்திசாலியாகவும் காட்டப்படுகிறார்..லவ்லி...எம் கே ராதா மிகை அற்ற நடிப்பில் கவர்கிறார்..டாக்டர் , வேலையாள் போன்ற உயிர்ப்பான கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன..
இரு சகோதரர்கள் பிரிந்து கடைசியில் சேர்வது என்ற கான்சப்டை எத்தனை முறை பார்த்து விட்டோம்... ரஜினி , கமல் , எம் ஜி ஆர் , சிவாஜி , அஜீத் ( வடிவேலு !!! ) என இந்த கான்சப்ட்டில் நடிக்காத நடிகர்கள் இல்லை..இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று ( உத்தம புத்திரன் படம் குறித்து பிறகு பேசலாம் )...
அடையாள குழப்பம், காமெடி , கிரைம் என பலர் பல விதமாக இந்த கான்சப்டை பயன்படுத்தினாலும் , வாழ்க்கையின் அபத்தத்தை தொட்டுக் காட்டிய விதத்தில் இந்த படம் கொஞ்சம் தனித்து தெரிகிறது...
வாழ்வதற்கு சபிக்கப்பட்டு , எந்த ஆதரவும் இல்லாமல் , உலகில் தூக்கி எறியப்படுவன் மனிதன் என்ற கான்சப்ட் தொட்டுக்காட்டப்படுகிறது..பாட்டு , டான்ஸ் , சண்டை , காதல் இவைகளுக்கு மத்தியில் இந்த மனித அவலம்- என்னை கேட்காமல் என்னை யார் உலகத்துக்கு வந்தது. , எனக்கு யார் இந்த வாழ்க்கையை கொடுத்தது என்ற கேள்வி - உள்ளூர இருப்பதே படத்தின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்.
பிரிக்கப்பட்ட சகோதரர்கள்... ஒருவன் காட்டில் வளர்க்கப்படுகிறான்... வசதியற்ற சூழல்... சற்று வசதியான நிலையில் வாழும் தன் சகோதரன் எங்கோ அனுபவிக்கும் வலி , சோகம் போன்றவற்றை இவன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்ந்தவண்ணம் இருக்கிறான்.
அவனுக்கு வலித்தால் இவனுக்கு வலிக்கிறது...அவனை ஒரு பெண் தொட்டால் , அந்த இன்ப உணர்ச்சி இவனுக்கு ஏற்படுகிறது..
அதாவது இவனுக்கு என வாழ்க்கை இல்லை.யாரோ ஒருவனின் நிழலாக வாழும் நிலை...
நேசிக்கும் பெண்ணிடம் இவன் கேட்கும் கேள்வி அவலச்சுவை நிரம்பியது,,,என்னை ஏன் புறக்கணிக்கிறாய்.. எல்லா விதத்திலும் நானும் அவனும் ஒன்றுதான்... ஒரு வேளை நீ என்னை முதலில் பார்த்து இருந்தால் , என்னைத்தான் காதலித்து இருப்பாய்... என அவன் ஆவேசப்படுவது மனித அவலமாகும்..
தகுதி இன்றி ஒன்று கிடைக்காமல் போவது வேறு..எல்லாம் இருந்தும் , வெறும் சந்தர்ப்பத்தால் , ஏதோ ஒரு சின்ன அபத்தத்தால் , கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போவது என்ன ஒரு அவலம்.. யோசித்தால் வாழ்கையின் அபத்தம் புரியும்... ஒரு கால்பந்து போட்டி, இரு அணிகள் மோத தயாராக இருக்கின்றன... இரண்டும் வலுவான அணிகள்.. திடீர் என , போட்டியெல்லாம் வேண்டாம் , எனக்கு இந்த அணி பிடித்து இருக்கிறது,அவர்களுக்கு கோப்பையை கொடுத்து விடுங்கள் என சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும்...தோற்றவர் பார்வையில் அது எப்படிப்பட்ட ஒரு அவலம்... ஆனால் இப்படிப்பட்ட அவலமும் அபத்தமுமே வாழ்க்கை..
ஒரு கட்டத்தில் தன் சகோதரனை கொன்று விடலாமா என்றுகூட நினைக்கிறான்.. ஆனால் , அதில் இருக்கும் முரண் புரிகிறது,,,கடைசியில் தான் இல்லாமல் போவதன் மூலம் , தன் இருப்பை உறுதி செய்கிறான்...
வில்லனை கொல்வது கடைசி காட்சி அன்று... இவனது தியாகமே கடைசி காட்சி...
எக்சிஸ்டென்ஷியலிசம் , சார்த்தர் என ஆழமாக போக வேண்டிய சப்ஜெக்ட்டை , ஒரு பொழுதுபோக்கு படமாக அமைத்ததுதான் இயக்குனரின் கெட்டிக்காரத்தனம்..அதே நேரத்தில் அந்த ஆழமான தன்மையையும் அண்டர்லைன் செய்ய தவ்றவில்லை...
ஒரே ஒரு பத்து பைசா சுண்டி விடுவதில் , ஒருவன் வாழக்கையே அழிகிறது என்ற கான்சப்டை கமல் ஹாசன் ஆளவந்தானின் சொல்ல முயன்று இருப்பார்.... வழக்கமாக படத்தின் குறைகளை மறைக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துவார்கள்..ஆனால் ஆள வந்தானில் கமல் தன் அழகான கான்சப்ட்டை மறைக்க , அதாவது படத்தின் பலத்தை மறைக்க , தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பார்.
இந்த படத்தில் அந்த விபத்து நேரவில்லை.. அழகான ஆழமான படம்,
இன்னொரு முக்கிய அம்சம் உறுத்தாத பின்னணி இசை.. பல இடங்களில் இசையே இல்லை..இயல்பான ஒலிகள் மட்டுமே ..சூப்பர்...
படத்தில் விரவி இருக்கும் அழகியல் குறிப்பிடத்தக்கது.. இதே படம் ஹிந்தியிலும் , தெலுங்கிலும்கூட சூப்பர் ஹிட் ஆனதையும் சொல்ல வேண்டும்...ஹிந்தியில் இயக்கியது எஸ் எஸ் வாசன்...
அபூர்வ சகோதரர்கள்- தமிழில் வந்த அபூர்வமான திரைப்படம்
டெயில் பீஸ்
இந்த படம் The Corsican Brothers நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது ( இது இதே பெயரில் படமாக்கப்பட்டு சென்னையில் சூப்பர் ஹிட் ஆனது...எனவேதான் தமிழில் எடுத்தார்கள் )...தமிழ் சினிமா ஆரம்ப நிலையில் இருந்தபோது , பல்வேறு மொழி கலைச்செல்வங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது...
ஆனால் இன்று வெளி நாட்டு படங்கள் சுலபமாக கிடைக்கும் நிலையில் , தமிழ் சினிமா வளர்ந்து விட்ட நிலையில், இன்றும் வெளி நாட்டு படங்களை பார்த்து எடுப்பது , அதுவும் அனுமதி வாங்காமல் எடுப்பது கேலிக்குரியது...கண்டனத்துக்கு உரியது...