நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த், இயக்குநர்
எம் சசிகுமார்
இசை: இளையராஜா
தயாரிப்பு: எம் சசிகுமார்
எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா
கதை : காதல் கல்யாண சண்டை
வகைப்பாடு : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்
************************************************************************
பொதுவாக , ஒரு படத்துக்கு டிக்கட் கிடைக்கவில்லை என்றால் வருத்தம் ஏற்படும். ஆனால் தலைமுறைகள் படத்துக்கு பெரிய தியேட்டர்களில் டிக்கட் கிடைக்கவில்லை என்றபோது மகிழ்ச்சியே ஏற்பட்டது.. கடைசியில் கோயம்பேடு ரோகிணியில் பார்த்தேன்.
இந்த படத்துக்கு என வந்தவர்கள் சிலர் என்றால் , பிரியாணி படத்துக்கு டிக்கட் கிடைக்காமல் வந்தவர்கள் , சும்மா தெரியாமல் வந்தவர்கள் என்றும் ஒரு சாரார் இருந்தனர்.. சள சள என பேசிக்கொண்டு இருந்தனர்.. பேசாமல் இன்னொரு ஷோவுக்கு பெரிய தியேட்டர் எதற்காவது போயிருக்கலாமே என நினைத்துக் கொண்டேன்.
படம் ஆரம்பித்து முதல் காட்சியிலே முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகி , முதல் நிமிடத்திலேயே கதை நகர ஆரம்பித்து விடுகிறது. மருத்துவர்களாக இருக்கும் கணவன் மனைவி , அவர்கள் குழந்தை , காதல் கல்யாணம் என்பதால் கணவனின் அப்பாவுடன் பிரிவு என்பதெல்லாம் வெகு சில நிமிடங்களில் ரத்தினச்சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகிறது.
கணவனும் மனைவியும் வீட்டில் ஆங்கிலேயத்திலேயே பேசிக்கொள்பர்கள்.. அவர்களது குட்டிப்பையனும் அப்படியே. தன் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என அவரைப்பார்க்க அவன் வெகு நாட்கள் கழித்து தந்தையை பார்க்க போகிறான் என்பது ஆரம்பம்.
இப்போது நம் மனதில் கதைப்போக்கு குறித்து ஓர் அனுமானம் ஏற்படும்..வயதான நோய் வாய்ப்பட்ட ஆங்கிலம் தெரியாத தந்தை , ஆங்கிலம் மட்டுமே பேசும் அடுத்த தலைமுறையில் சிக்கி கஷ்டப்படுவார் போல என நினைப்போம்.
ஆனால் இது போன்ற மெலோடிராமாக்களுக்கான வாய்ப்பு பல இருந்தாலும் , எல்லாவற்றையும் தவிர்த்து இருக்கிறார் இயக்குனர்.. தமிழ் தெரியாத பேரன் என்பதற்காக ஆங்கிலத்துக்கு எதிரான பிரச்சாரப்படமாக்கி விடாமல் , இந்த இயல்பான சூழலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என அட்டஹாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
குறியீட்டு படங்கள் , திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த படங்கள் , கண்ணீர் சிந்த வைக்கும் குடும்ப சித்திரங்களை கண்டு களித்த நமக்கு அவ்வபோது ஏற்படும் சில அனுமானங்களை ஏமாற்றி விட்டு , யதார்த்தமாக படம் செல்கிறது..இப்படி ஏமாறுவது நமக்கு பிடித்தும் இருக்கிறது..
நிகழ்வுகளை , உணர்வுகளை எப்படி காட்சி படுத்துகிறார்கள் என்பதே படம்.. நம் ஊரை பொருத்தவரை பரபரப்பான காட்சிகள் , எதிர்பாரா திருப்பங்கள் இவ்ற்றையே படம் என நினைக்கிறோம்.
வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் படம் பார்த்தால் , அந்த உள் முக பயணம் எப்படி வெளி உலக பயணத்துடன் லிங்க் ஆகிறது என உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பார்கள். காரில் கிளம்பும் பெரியவர் கடத்தப்படுகிறார் மருமகளால் கொல்லப்படுகிறார் என்றெல்லாம் திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாமல் ஒரு இம்பாக்ட்டை மட்டும் ஏற்படுத்திச்செல்லும் அந்த படம்.. மிகை உணர்ச்சிகளுக்கு வேலை இல்லாமல் அப்படி எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படத்தை பார்ப்பது பெருமையாக இருந்தது. நம்மை கண்ணீர் கடலில் தள்ள வேண்டும் என இயக்குனர் முயலவே இல்லை.. ஆனாலும் வேறு காரணங்களுக்காக , உணர்வு பூர்வமாக நம் கண்கள் கலங்குகின்றன..
உதாரணமாக ஒவ்வொரு மனிதனும் பால் குடித்து வளரும் , தாய்மைக்கான அந்த உறுப்பை சினிமாவில் எப்படியெல்லாம் வக்கிரமாக காட்டுகிறார்கள்..அந்த நாய்களை செருப்பால் அடிப்பது போல காட்டி இருப்பார் ஒரு காட்சியில்..
அந்த சிறுவன் தன் அத்தை தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்க்கிறான்..என்ன இது என குழந்தைத்தனமாக கேட்கிறான்.. எல்லா தாயும் இப்படித்தாண்டா பால் கொடுப்பார்கள்... நீயும் உன் தாயிடம் இபப்டி பால் குடித்து வளர்ந்தவன் தான்... அதற்கான உறுப்புதான் இது என விளக்குகிறார் அத்தை.
அந்த சிறுவன் மெதுவாக வந்து தன் தாயை பார்க்கிறான். தாய்க்கு இந்த விஷ்யம் எதுவும் தெரியாது.. தன் ரத்தத்தை உணவாக கொடுத்தவளல்லவா இவள் என்பது போன்ற உணர்ச்சி , பல்வேறு யோசனைகள் அவன் முகத்தில் தெரிகின்றன.. அவன் என்ன நினைக்கிறான் என்பது நமக்கு தெரிவதில்லை.. அவன் எதுவும் பேசுவதும் இல்ல... மெல்ல அருகில் வந்து தன் தாய்க்கு ஒரு மெல்லிய முத்தம் கொடுத்து விட்டு ஓடி விடுகிறான்.. நான் முன்பு சொன்னேன் அல்லவா , சளசள பேச்சு சப்தம்- எல்லாம் அடங்கி ஒரு கனத்த மவுனம் திரையரங்கில் நிலவியது...பின் சுதாரித்துக்கொண்டு கை தட்டினார்கள். எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்ததை உணர முடிந்தது.
ஆனால் ஒன்று ,, வழக்கம்போல இளையராஜா முன்னணி இசை அமைத்து , படத்துக்கு மிகை உணர்ச்சி கொடுத்து இருக்க முடியும்.. ஆனால் வரலாறு காணாத அதிசயமாக குறைந்த பட்ச இசை - எங்கு தேவையோ அங்கு மட்டும் - என பிரமிக்க வைத்து விட்டார். மற்ற இடங்களில் பறவைகள் சப்தம் , விலங்குகளின் குரல் , நீர் ஓசை , இரவின் ஓசை என ஒலியியல் குறிப்புகள் கச்சிதமாக உள்ளன . சிறுவன் முதன் முதலாக தாத்தா வீட்டுக்கு வந்து சுற்றி பார்ப்பது , தந்தைக்கு ஹார்ட் அட்டாக் என மனைவியிடம் சொல்வது போன்ற காட்சிகளில் பின்னணி இசை அட்டகாசம்... சில மாதங்கள் கழித்து அந்த பிஜிஎம் யூ ட்யூபில் வலம் வரும் என்பது என் எண்ணம்.. இந்த படத்துக்காக இளையராஜா என்றென்றும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் ( பாடல்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது )
பாரம்பரிய பெருமைகள் தெரியாமல் , தமிழ் தெரியாமல் இருக்கும் பேரனுக்கு எல்லாம் கற்றுக்கொடுத்து , ஒரு நல்ல பேரனாக உருவாக்குகிறார் என அழகாக சொல்லி இருப்பது சூப்பர்தான்.. ஆனால் ஒரு நல்ல தாத்தா எப்படி உருவாகிறார் என்பதையும் சேர்த்து சொல்வதில்தான் பாலுமகேந்திரா நிற்கிறார்.. ஒரு குழந்தை பிறக்கும்போது , ஒரு தாயும் பிறக்கிறாள் என்பதை நுட்பமாக சொல்கிறது படம்.. தாத்தாவில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் , பேரனிடம் ஏற்படும் மாற்றம் என இரு தலைமுறைகளுக்கிடையே இருக்கும் தொடர்பை ஓர் இடத்தில் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்.
தாத்தா எப்போதும் ஓய்வெடுக்கும் இடத்தில் பேரன் அவரைப்போலவே படுத்து தூங்கி கொண்டு இருப்பான்..தாத்தா மெல்ல அருகில் வந்து மூடிகிடக்கும் அவன் கையை திறந்து பார்ப்பார்..உள்ளே ஒரு மிட்டாய்...அதை எடுத்து சுவைத்தவாறு கிளம்புவார்... பேரன் மனதில் தாத்தாவும் , தாத்தா மனதில் பேரனும் முழுமையாக குடியேறி ஆக்ரமித்து விட்டார்கள் என்பதை இதை விட கவிதையாக சொல்லி விட முடியாது..
வெளியே இருக்காரே , அந்த ஆள் யாரு என தன் மாமாவை பையன் விசாரிப்பது , நீங்க யாரு சார் என அண்ணனை தங்கை கேட்பது , நீ யாருப்பா என பேரனை தாத்தா கேட்பது , அவர் என்ன கேட்கிறார் என்பது கூட புரியாமல் பேரன் விழிப்பது என பிரச்சார நெடி துளியும் இன்றி இன்றைய உறவு அடையாளங்கள் தொலைவதை ஹைக்கூ போல சுருக்கமாக சொல்கிறார்.
தான் ஆற்றுக்கு எதற்கு போகிறேன் என ஆங்கிலத்தில் சொல்ல முடியாமல் தாத்தா , ஆறு என்றால் என்ன என விளக்க முடியாத அம்மா என ஒவ்வொரு காட்சியும் அழகு..
தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் ( அவளுக்கு முதலில் தமிழ் தெரியாது..பிறகு கற்றுக்கொண்டாள் ) ஆங்கிலத்தில் பேசுவதை வெறுப்பு தொனியில் காட்டாமல் , அதுதான் யதார்த்தம் என சொல்கிறது படம். இந்த கிராமத்துக்கு வந்து யார் சேவை செய்ய போகிறார்கள் என கணவன் கேட்க , நான் செய்வேன் என்கிறாள் அவள்... இந்த கிராமத்தில் படித்தால் , தன் மகன் தேற மாட்டான் என கணவன் சொல்ல , இதில் படித்துதானே டாக்டர் ஆனீர்கள் என்கிறாள் மனைவி... கல்வி அறிவற்ற உங்கள் தாயே உங்களை சிறப்பாக வளர்க்கும்ப்போது , என்னால் என் மகனை இங்கு சிறப்பாக வளர்க்க முடியாதா என்கிறாள் மனைவி.. வழக்கமாக இது போன்ற படங்களில் வில்லன்கள் ஆங்கிலம் பேசுவார்கள்..ஆனால் இவர்கள் ஆங்கிலம் பேசினாலும் நல்லதுதான் செய்கிறார்கள் என்ற நடு நிலை பார்வை சூப்பர்... அவர்கள் பேசுவது எளிதாக புரியக்கூடிய இந்திய ஆங்கிலம் என்றாலும் இந்த காட்சிகள் கிராமங்களில் எடுபடுமா என்பது தெரியவில்லை ..
பிடித்த காட்சி என சொன்னால் படம் முழுதையும் சொல்ல வேண்டும் என்றாலும் ஒன்றே ஒன்றை சொல்கிறேன்..
ஒரு சாமி சிலையை காட்டி இது என்ன என்கிறான் பையன்...சாமி என்கிறார் தாத்தா...இல்லை இது கல் என்கிறான் பையன்..
அடுத்த காட்சி ,...ஒரு போட்டோவை காட்டி இதுதான் நான் என்கிறான் பையன்... இல்லைப்பா..இது வெறும் பேப்பர் என்கிறார் தாத்தா..பரபரப்பான விவாதம்..இதில் தாத்தா சிலவற்றை கற்கிறார்,..பேரன் சிலவற்றை கற்கிறான்..
பெண்மையை கேலி செய்வதையே நகைச்சுவை என நினைக்கும் நமக்கு , இதில் வரும் இயல்பான ஹாஸ்யம் நிம்மதி அளிக்கிறது... அனா ,ஆவன்னா சொல்லி தருகிறார் தாத்தா/// அதை பேரன் பேனா இல்லாமல் வேறொன்றை (?! ) பயன்படுத்தி எழுதி ( !! ) பார்ப்பதையும் , அதை பார்த்த தாத்தா தானும் முயன்று பார்ப்பதையும் தியேட்டரில் பாருங்கள்..
நல்ல ஒலியமைப்பு கொண்ட தியேட்டரில் பார்த்தால் , முழுமையாக ரசிக்கலாம்..
தாத்தாவாக பாலுமகேந்திரா வாழ்ந்து இருக்கிறார்... மற்றவர்களும் இயல்பான நடிப்பு/.சுருக்கமான வசனங்கள்... தங்கை ,இரண்டாவது தங்கை , தங்கை கணவன் , பால்ய நண்பன் என ஒவ்வொரு கேரக்டரும் முழுமை...உதாரணமாக நண்பரை எடுத்துக்கொண்டால் , அவருக்கு ஒரு கதை..கல்யாணத்துக்கு சாட்சி கை எழுத்து போட்டு பெரியவரால் வெறுக்கப்படுகிறார்... தங்கையை எடுத்துக்கொண்டால் , அண்ணன் கல்யாணத்தால் அவள் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது... பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக கஷ்டப்படுகிறாள் என ஒவ்வொரு கேரக்டரும் உயிர்ப்புடன் உள்ளன.
ஒளிப்பதிவு கேட்கவே வேண்டாம்.. ஒளி ஓவியம்..விடியற்கால சூர்ய ஒளி , மழை நேர வெளிச்சம் என ரசித்து ரசித்து எடுத்து இருக்கிறார்..
அந்த பேரன் பெரியவானாகி ஒரு விழாவில் - 2032ல் ( இயக்குனர் சசிகுமார் ) பரிசு பெறுகிறான்.பேச அழைக்கிறார்கள்..மைக் முன் வருகிறான்...தாத்தாவைப்பற்றி பேச சொல்கிறார்கள்...யோசிக்கிறான்..பல காட்சிகள் மனதில் ஓடுகின்றன... கடைசியில் எதுவும் பேச முடியாமல் மௌனமாக கை கூப்புகிறான்...
படத்தைப்பற்றி என் கருத்தை கேட்டால் , மவுனமாக கைகூப்புவதை தவிர வேறு எப்படியும் பாராட்ட முடியாது.
வெர்டிக்ட்...
தலைமுறைகள் - தலைமுறைகள் தாண்டி நிற்க போகும் அற்புதம்
எல்லாம் பிரியாணி என்றென்றும் புன்னகை என போகும் போது உங்கள் ரசனை அருமை கண்டிப்பா பார்க்க வேண்டும் தலைமுறைகள்
ReplyDeleteபார்த்துட்டு உங்க கருத்துகள சொல்லுங்க
DeleteArumaiyana vimarsanam
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமிக அருமையாக எழுதியுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Aruma
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
arumai
ReplyDeletemiga arumaiyaana vimarsanam.padikkumpothe padatthai paarkka thoondugirathu
ReplyDeleteVIMARSAM padikkympothe padam paarkka thoondugirathu.nalla vimarsanam
ReplyDeleteநன்றி சார்
DeletePadaththai kattaayam paarkka vEndum!!
ReplyDeleteபாருங்க
Deleteபார்த்தால் மட்டும் போதாது...உங்க மவுனத்த கலைத்து மீண்டும் எழுதுங்க
Deleteமிக நல்ல பதிவு; எனக்கு பிடித்த இயக்குனர் ஒளிப்பதிவாளர்! விமர்சனம் அருமை. நானும் ஒரு சினிமா விமர்சனம் எழுதணும் எழுதணும் என்று நினைத்தேன்; உடனே எழுதுகிறேன்!
ReplyDelete+1
ம்ம்..எழுதுங்க
DeleteA printout of this review was taken and handed over to Sir. He read it and became emotional.
ReplyDeleteThanks for this wonderful review.
- Student
எமோஷனல் ஆகி இன்னும் பலவற்றை என்னால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை..இன்னும் எத்தனை எத்தனை காட்சிகள் !!
Deletevery good movie...
ReplyDeletewww.writerkarthikeyan.blogspot.in
நேர்மையான பதிவு. ஒரு ப்யூச்சர் பில்ம் என்பதைவிட ஒரு டெலிபில்மாகவே எனக்கு தோன்றியது. அவரது கதைநேரத்தின் நீட்சியாக......... ஆனால் வெகுநேரம் மனதை தொந்தரவு செய்த்து...
ReplyDeleteநேர்மையான பதிவு. ஒரு ப்யூச்சர் பில்ம் என்பதைவிட ஒரு டெலிபில்மாகவே எனக்கு தோன்றியது. அவரது கதைநேரத்தின் நீட்சியாக......... ஆனால் வெகுநேரம் மனதை தொந்தரவு செய்த்து...
ReplyDeleteநேர்மையான பதிவு. பல இடங்களில் கனத்த மௌனத்துடன் உறையவே முடிந்தது. ஆனாலும் ஒரு ப்யூச்சர் பில்ம் என்பதை விடவும் ஒரு டெலிபில்மாகவே தோன்றியது. அவரது கதை நேரத்தின் நீட்சியாக...
ReplyDeleteவிமர்சனத்தைப் படித்ததே படம் பார்த்துவிட்டது போல் இருக்கிறது.. இனியாவது பார்க்க வேண்டும். நன்றி
ReplyDelete