ஜே கிருஷ்ணமூர்த்தி உரை ஒன்றில் இருந்து...ஆழ் மனம் , பிரஞ்ஞை , கனவு , தியானம் போன்றவற்றைப்பற்றி எல்லாம் நமக்கு இருக்கும் கருத்துகளை அடித்து நொறுக்குகிறார்...
இதை உடனே ஏற்கவோ மறுக்கவோ செய்யாமல் , சும்மா கவனியுங்கள்
*************************************************************
இறந்த காலம் என்பது நிழல் போன்றது. எல்லாவற்றையும் களை இழந்தும் , வண்ணங்களை இழந்தும் நமக்கு காட்டுகிறது இந்த நிழலின் பிடியில் சிக்கி நிகழ் காலம் தன் புத்துணர்வை , தெளிவை இழக்கிறது. இதன் விளைவாக எதிர்காலமும் இதன் தொடர்ச்சியாகவே அமைந்து விடுகிறது.
இறந்த காலம் , நிகழ் காலம் , எதிர் காலம் - இந்த மூன்றும் நினைவு எனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன.. ஒரு கம்பத்தில் கட்டிப்போடப்பட்ட விலங்கு போல , எண்ணம் இறந்த காலம் , எதிர்காலம் என அலைந்து கொண்டே இருக்கிறது. இப்படி எண்ணம் என்னதான் அலைந்தாலும் , அது குறிப்பிட்ட எல்லையை விட்டு தாண்டி போக முடியாது.. இப்படி முன்னும் பின்னும் அலைவதே மனதின் வேலை.. இப்படி அலைவதுதான் மனம் என்றும் சொல்லலாம். இப்படி அலைதல் இல்லாத பட்சத்தில் மனமே இல்லை.. மனம் என்பது அதன் உள்ளடக்கம்தான். புகழ், தேசம் , கடவுள் , குரு , மது , ஆத்திகம் , நாத்திகம் என உள்ளடக்கம் எதுவாகிலும் இருக்கலாம்.. ஆனால் எல்லாம் ஒன்றே.. கடவுள் இருக்கிறார் என நினைப்பதற்கும் கடவுள் இல்லை என நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே வெறுமையானவைதான்.
ஏதாவது ஒன்றை நினைக்கும்போதுதான் மனம் தான் ஏதோ வேலை செய்வதாக நினைக்கிறது.. தன் இருப்பை உணர்கிறது. எதாவது ஒன்றை அடைய நினைக்கிறது,.அல்லது எதையாவது விட்டுக்கொடுத்து தியாகி என்ற பெருமையை அடைய முயல்கிறது.
ஏதாவது ஒன்றுடன் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே மனதின் ஆவல்..எதில் ஈடுபடுகிறது என்பது முக்கியம் அல்ல... எதிலாவது ஈடுபட வேண்டும்..அதுவே முக்கியம்.எந்த அளவுக்கு சமூக முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு முனைப்புடன் மனம் அதில் ஈடுபடும். அறிவு , சமுதாய சீர்திருத்தம் , கடவுள் என எதிலாவது ஈடுபட்டுக்கொண்டே இருப்பது மனதின் இயல்பு.
இப்படி ஈடுபட எதுவும் இல்லையென்றால் மனமே இல்லை..எனவே மனம் இந்த நிலையை விரும்பாது.
கனவு என்பது மனதின் இன்னொரு விளையாட்டு ஆகும். நாம் அன்றாட வேலைகளை கவனிக்கும்போது , விழிப்பு நிலையில் இராத மனதின் இன்னொரு பகுதியின் வேலைதான் இது...இதுவும் மனதின் நீட்சிதான். மனதுக்கு அப்பாற்பட்ட ஒன்று அன்று. மேல் மனம் , ஆழ் மனம் எல்லாம் அடிபடையில் ஒன்றுதான்.
ஒரு முடிவை தேடி பயணித்தல் என்பது ஏற்கனவே இருப்பதன் தொடர்ச்சியே ஆகும். இப்படிப்பட்ட மனம் ஒரு போதும் இறக்காது. இறப்பு இல்லாவிடில் புதிதாக பிறப்பது என்பது இல்லை.
மனதின் வேலைகள் முடிவுக்கு வருவதுதான் , அமைதியின் ஆரம்பம், மனம் ஒருபோதும் அமைதியை உணர் முடியாது.. தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் ஒரு போதும் அமைதியை அடைய முடியாது. அமைதி என்றால் என்ன என மனம் ஏற்கனவே கற்பனை செய்து வைத்து இருப்பதை அடையலாம்..உண்மையான அமைதியை உணர முடியாது.
ஆழ்மனம் , கனவு மனம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் இந்த பூரண அமைதி. ஆழ்மனம் என்பதற்கு புனிதம் ஏதும் இல்லை... இதுவும் கடந்த காலத்தின் எச்சம்தான். இந்த எச்சம் ஒரு போதும் உண்மையை உணர்த்தாது. ஆனால் உண்மையைப்பற்றி கனவு காணும் ஆற்றல் இதற்கு உண்டு.. இந்த கனவு ஒரு போதும் உண்மை ஆகாது.
பல நேரங்களில் கனவையே உண்மையாக கொள்கிறோம்..உண்மையில் கனவும் , அந்த கனவை காண்போனும் மனதின் உருவாக்கங்கள் மட்டுமே.
இதை உங்கள் மொழிப்பெயர்ப்பா? நன்றாக இருக்கிறது.
ReplyDelete