Pages

Sunday, February 16, 2014

முன்னாள் கணவனை எப்படி மறப்பது - ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடல்

ஜே கிருஷ்ணமூர்த்தி நூல் ஒன்றில் படித்ததை பகிர்கிறேன்..  அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு அன்று... நினைவில் இருந்து பகிர்கிறேன்...வரிக்கு வரியெல்லாம் மொழி பெயர்க்கவில்லை...
முழுமையாக படிக்க , அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நூல்களை படியுங்கள்..இது சும்மா அறிமுகம் மட்டுமே
****************************************************************


அவள் தன் மூன்று நண்பர்களுடன் வந்து இருந்தாள். அனைவரும் சிரத்தையுடனும் அறிவுக்களையுடனும் இருந்தனர். ஒருவர் சொல்வதை சுலபமாக கிரகிக்கும் தன்மையுடன் இருந்தார். ஒருவர் வேகமாக தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலில் பொறுமை இன்றி காணப்பட்டார். ஒருவர் ஆர்வத்துடன் காணப்பட்டார். ஆனால் ஆர்வம் நீடிக்கவில்லை. நல்லதொரு குழுவாக இருந்தனர். தன் தோழிக்கு உதவ வேண்டும் என நினைத்தனர். அவளது பிரச்சனையை பகிர்ந்து கொண்டனர். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அல்லாமல் அவளுக்கு எது நல்லதோ அதை அவள் செய்ய வேண்டும் என விரும்பினர். என்ன சிக்கல் என்றால் எது நல்லது என அவளுக்கு தெரியவில்லை. குழப்பமுற்று இருந்தாள். ஒத்திப்போடாமல் உடனே முடிவெடுக்க வேண்டிய சூழல்.  ஒரு குறிப்பிட்ட உறவில் இருந்து விலக வேண்டும். இதுதான் அவள் பிரச்சனை.. வந்ததில் இருந்து பல முறை சொல்லி விட்டாள்.

  அறிவுரையையோ ஒரு முடிவையோ எதிர்பார்க்காமல் , பிரச்சனைக்குள் போக அவர்கள் விரும்பினார்கள். பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டால் , சரியான செயல் என்பது இயல்பாக முழுமையாக நடந்து விடும்.  பிரச்சனையின் உள்ளடக்கத்தை சரியாக புரிந்து கொள்வதே முக்கியம். தீர்வு முக்கியம் அன்று. பிரச்சனையை புரிந்து கொண்டால் போதும். என்ன செய்வது என்பது பிரச்சனைக்குள்ளேயே இருக்கும் விஷயமாகும்.

”  அவருடனான தொடர்பில்  இருந்து விடுபட விரும்புகிறேன் “ என்றாள் அவள்.

விடுபடல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்.. எந்த விதத்தில் உங்கள் விடுதலை கட்டுண்டு போய் இருப்பதாக நினைக்கிறீர்கள்? விடுபட விரும்புகிறேன் என சொல்வதில் இருந்து , இப்போது ஏதோ ஒன்றில் கட்டுண்டு போய் இருப்பதாக சொல்ல வருகிறீர்கள். எது உங்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது?

” உடல் அளவில் நான் சுதந்திரமானவள்தான்.. நான் இப்போது அவர் மனைவி அல்லள்..எங்கு வேண்டுமானாலும் போகலாம் , வரலாம்.. ஆனால் முழுமையாக அவரை விட்டு விலக விரும்புகிறேன் “

உடல் அளவில் சுதந்திரமானவள் என்றால்  வேறு எந்த விதத்தில் இன்னும் அவருடன் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்?

“ தெரியவில்லை.. அவரை நினைத்தாலே கடும் கோபம் ஏற்படுகிறது.முழுமையாக அவரை மறக்க வேண்டும்”

அவரை மறக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அவரை நினைத்தால் கோபம் வருகிறது என்கிறீர்கள்.அப்படி என்றால் அவரிடம் இருந்து நீங்கள் விடுபடவில்லை என்று பொருள். ஏன் அவர் மேல் கோபம்

“ அவர் எவ்வளவு கேவலமான மனிதர் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது..அன்பற்ற தன்மை , சுய நலம் , கேவலமான மன நிலை.ச்சே..இதை கண்டுபிடித்தபோது எனக்கு ஏற்பட்ட வேதனை சொல்லி புரிய வைக்க முடியாது. அவரை எப்படி எல்லாம் நேசித்தேன். என்னையே அர்ப்பணித்தேன்.இப்படி ஒரு கேவலமான மனிதரையா லட்சிய கணவன் என நினைத்தோம் என யோசித்தால் மனம் கொதிக்கிறது . அவரை முழுக்க மறக்க விரும்புகிறேன் “

உடல் அளவில் நீங்கள் அவரை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் உங்கள் மனதில் இந்த கோபம் இருக்கும் வரை அவரைவிட்டு விலகியதாக கருத முடியாது. அவர் மேல் கோபம் என்பதும் ஒரு வகை பிணைப்புதான்.

உண்மையில் கோபம் அவர் மீதா , உங்கள் மீதா.. அவர் எப்படியோ , அப்படித்தான் இருக்கிறார். அவர் இயல்புப்படி அவர் இருக்கிறார். இதில் கோபப்பட என்ன இருக்கிறது?  அவரது மோசமான மனம் தெரிந்ததும் , இவரைபோய் நேசித்தோமே என உங்கள் மேல்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள். உங்களை நினைத்து அவமானப்படுகிறீர்கள்..ஆனால் இதை ஒப்புக்கொள்ள மனம் இன்றி அவர் மேல் கோபப்படுவதாக காட்டிக்கொள்கிறீர்கள்.. அவர் தன் இயல்புப்படி இருந்து விட்டு போகிறார். அதற்காக அவர் மீது கோபப்பட முடியுமா?

“ ஆமா..உண்மைதான் “

இதை நீங்கள் முழுமையாக உணர்ந்தால் உங்கள் கோபம் மறையும்..அவரை வெறுக்க மாட்டீர்கள். வெறுப்பும் காதலைப்போன்ற ஒரு பிணைப்புதான்.

“ உண்மைதான்.. சரி...  இந்த வெறுப்பை நான் எப்படி நீக்குவது? “

ஏன் இந்த வெறுப்பை  நீக்க விரும்புகிறீர்கள் என்பதை கவனியுங்கள்..அதுதான் முக்கியம்..  எப்படி என்பது  இரண்டாம்படசம்தான்..

” அவரை நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது.. இது போதுமான காரணமாகாதா ? “

” இல்லை..அவரை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது என்பது மட்டும்போதுமான காரணம் அன்று.பழசை மறப்பது மட்டும் தீர்வாகாது “

” என்ன இப்படி சொல்கிறீர்கள்..பிரச்சனை ஏற்கனவே சிக்கலாக இருக்கிறது.. மேலும் சிக்கல் ஆக்காதீர்கள்”

பொறுமையாக கவனியுங்கள்.. பழசை மறந்தால் நிம்மதியாக இருக்க முடியும் என கருதுகிறீர்கள்.துன்பகரமான நினைவுகளாக இருக்கலாம்.. ஆனால் ஏன் மறக்க வேண்டும். ந்ம்மைப்பற்றி உய்ரவாக நினைத்து இருப்போம். அந்த எண்ணத்திற்கு அடி விழும்போது கலங்கி போகிறோம். இந்த அடியோ வீழ்ச்சியோ முக்கியம் இல்ல.. நம்மைப்பற்றி உயர்வாக நினைத்தோமே .இதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நம்மை உயரத்தில் வைத்துக்கொள்ளாத பட்சத்தில் வீழ்வது என்ற பேச்சே இல்லையே..சுய பெருமிதம் , லட்சியவாதம் என்பதெல்லாம் எதற்கு.. நாமும் சாதாரண ஆள்தான் என்பது புரிந்து விட்டால், வீழ்ச்சியை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டோம். உங்களைப்பற்றிய எந்த எண்ணமும் இல்லாவிட்டால் , வாழ்க்கையை என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்.என்ன நடக்கிறதோ அதை தவிர்த்துவிட்டு , அப்படி செய்து இருக்கலாமே ,இப்படி செய்து இருக்கலாமே என கற்பனையில் வாழ ஆரம்பிப்பதுதான் கோபம் , வெறுப்பு போன்றவற்றுக்கு காரணமாகிறது.

நீங்கள் யாரோ அதை அப்படியே புரிந்து கொண்டு வாழுங்கள். இல்லாத ஒன்றை நினைக்காதீர்கள்..இருப்பதை நிராகரிக்கவும் செய்யாதீர்கள். பயம்  , கவலை இருந்தால் தனிமைப்பட்டு போய் விடுவீர்கள்..இவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு நிகழ் காலத்தில் வாழுங்கள்.. நிகழ்காலத்தை  நேசியுங்கள்.அப்போது காலம் அழிந்து விடும். இறந்த காலம் அப்போது உங்களை கஷ்டப்படுத்தாது..






6 comments:

  1. ம்ம் ...தான் ஒரு விஷயத்தை தீவிரமாக மறக்க முயற்சித்தல் அதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்துவதிலே தான் முடிகிறது ...

    ReplyDelete
  2. சமீப காலத்தில் ஆன்மீகத்தைப் பற்றி நான் படித்ததில் சிறந்த பதிவு எது என்றால், அது இதுதான்....மீண்டும் நன்றி பிச்சை...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]