Pages

Monday, September 29, 2014

உலகப்கோப்பை கால்பந்து: உள்ளங்களை ஒன்றிணைத்த உன்னதம்

உயிர் எழுத்து  இதழில் வெளியான கட்டுரை  - ஆகஸ்ட் மாத கட்டுரை

ஆஃப்சைடு (Offside, 2005, இயக்கம், எரெஸ் டட்மார் & கய் நாட்டிவ், Erez Tadmor & Guy Nattiv, இஸ்ரேல் ) என்கிற ஏழு நிமிடமே ஓடக்கூடிய குறும்படத்தை யாரும் மறந்து இருக்க முடியாது. எல்லை காக்கும் பணியில் இரு ராணுவ வீரர்கள். ஒரு சின்ன கையடக்கமான வானொலியில் கால்பந்து நேர்முக வர்ணனை கேட்டபடி ரோந்து வந்துகொண்டு இருக்கிறார்கள். உலகக்கோப்பை இறுதிப் போட்டி. ஆட்டம் அனல் பறக்கிறது. சிக்னல் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும், வானொலியை அப்படி இப்படி திருப்பி வர்ணனையை கேட்கிறார்கள். அப்போது எல்லைத் தடுப்பு வேலியில் எதிர்தரப்பு ராணுவ வீரர்கள் இருவரை பார்த்து விடுகிறார்கள். இரு தரப்பு துப்பாக்கிகளும் சுடுவதற்கு தயாராகின்றன. துப்பாக்கிகள் குறி வைத்தாலும், வானொலி வர்ணனை தொடர்கிறது. அந்த எதிர்தரப்பு வீரர்களும் அந்த வர்ணனையை ஆவலுடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். எல்லைக்கோடு, அரசுகள், கட்சிகள், மொழி, சமுதாயம், மதம், துப்பாக்கி என பிரமாண்டமான பல விஷயங்கள் இரு தரப்பையும் பிரிக்கின்றன. அந்த சின்னஞ்சிறு வானொலிப்பெட்டி இரு தரப்பையும் இணைக்கிறது. மேட்ச் என்ன ஆகுமோ என இரு தரப்பு வீரர்களும் பதைபதைக்கின்றனர். வானொலிப்பெட்டி தவறுதலாக கீழே விழும்போது அனைவருமே பதறுகின்றனர். ஒரு வீரன், துப்பாக்கி குறி வைப்பதை நீக்கிவிடாமல், கால்களாலேயே வானொலியை மீண்டும் இயங்கச் செய்யும்போது, அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். வானொலி இணைக்கிறது. துப்பாக்கி பிரிக்கிறது. இந்த இரண்டும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்துகின்றன. கடைசியில் எது வென்றது என்பது கிளைமேக்ஸ். துப்பாக்கியா வானொலியா!!
கால்பந்துக்கு இப்படி அனைவரையும் இணைக்கும் ஆற்றல் உண்டு. இந்த இணைப்பு ஆற்றலை பல நாடுகளும் உணர்ந்துள்ளன. குறிப்பாக அன்றைய சோவியத் அரசு நன்கு உணர்ந்து இருந்தது. அன்றைய அதிபர் ஸ்டாலின் கால்பந்தில் ஆர்வம் காட்டி வந்தார். கம்யூனிச அகிலத்தின் தேசிய விளையாட்டாக கால்பந்து விளங்கியது என்றால் மிகையாகாது. இந்தியாவிலும்கூட கம்யூனிசம் வலுவாக உள்ள கேரளாவிலும், வங்காளத்திலும் (மட்டும்) கால்பந்து பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 1947 முதல் 1989 வரை கம்யூனிச நாடுகளில் ஒன்றாக விளங்கிய ஹங்கேரி, அந்தக் காலகட்டத்தில் கால்பந்தின் தன்னிகரற்ற சக்தியாக திகழ்ந்தது. இந்த நூற்றாண்டின் சிறந்த போட்டி என வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஆட்டம் 1953இல் இங்கிலாந்தில் நடந்தது. அதில் 90 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே காணாத இங்கிலாந்தை வீழ்த்தியது ஹங்கேரி. அந்த நாட்டில் கம்யூனிசம் வீழ்ந்தபின், கால்பந்தும் அங்கு நலிவடைந்தது வரலாறு. 1990இல் இருந்து இந்த ஆண்டு வரை (2014) உலக கோப்பை எதற்கும் தகுதி பெறாதது ஒரு காவிய சோகம்.
சோவியத் யூனியன் எந்த அளவுக்கு கால்பந்தில் ஆர்வம் காட்டியது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். உள் நாட்டுப் பிரச்சினைகள் முற்றி, யூனியனே கலைந்து போகும் நிலையில் இருந்த 1990ஆம் ஆண்டில், அவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் உலககோப்பை போட்டியை தனது நாட்டில் நடத்த ஆர்வம் காட்டியது சோவியத் யூனியன். இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டது. போட்டியில் இருந்து மற்ற நாடுகள் விலகிய நிலையில் இத்தாலியும் சோவியத் யூனியனும் மட்டுமே கடைசியில் போட்டியில் இருந்தன. வாக்கெடுப்பில் போட்டியை நடத்தும் வாய்ப்பு இத்தாலிக்குக் கிடைத்தது. அந்தமுறை சோவியத் யூனியனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருந்தால், சோவியத் யுக வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கக்கூடும். அடுத்த உலகக் கோப்பை 2018இல் ரஷ்யாவில்தான் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1990 வேறு. 2018 என்பது வேறு.
இப்படி அரசியல்ரீதியாக, பண்பாட்டுரீதியாக ஒவ்வொரு நாட்டுடனும் ஒவ்வொரு விதமாக கால்பந்து கலந்துள்ளது. நம் ஊரில் கால்பந்து முதன்மை விளையாட்டல்ல. இந்தியா உலக கோப்பைக்கு தகுதி பெறுவதும் இல்லை. ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக நம் ஊரிலும் ரசிக்கப்படுகிறது. ஏன் ரசிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்ந்தால் ரசிக்கத்தக்க சில விஷயங்களைக் காண முடியும்.
ஜோர்ஜ் அமடோ, போர்ஹேஸ், ஜூலியோ கொர்த்தசார், கப்ரியேல் கர்ஸியா மார்கோஸ், இசபெல் அலண்டே, ப்யூந்தஸ், மரியோ பர்கஸ் யோசா, நெரூதா, ஆக்டோவியா பாஸ் என லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் சிலருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரஸீல், அர்ஜெந்தீனா, கொலம்பியா, சிலே போன்றவற்றின் மீது ஒருவித ஈடுபாடு ஏற்பட்டு அந்தந்த நாடுகள் ஆடும் விளையாட்டுகளை ரசிக்க ஆரம்பிப்பார்கள் . இலக்கிய வாசகர்கள் எல்லோரும் இப்படி ரசிப்பார்கள் எனச் சொல்ல முடியாது.
இன்னும் சிலருக்கு தென் அமெரிக்க நாடுகளுக்கும் நமக்கும் இருக்கும் சில ஒற்றுமைகள் அவர்கள்பால் ஓர் ஈடுபாடு ஏற்படுத்தும். பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளின் அலுவல் மொழி அவர்களது பூர்விக மொழி அன்று. 'வந்தேறி' மொழியான ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய மொழிதான் அங்கு கோலோச்சுகிறது. இப்படி பண்பாட்டு, மொழி மோதல்கள் அல்லது கலப்புகள் அங்கு அதிகம். அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நம் மொழியை, நம் பண்பாட்டை தக்க வைத்துக்கொள்ள போராடி வரும் அனுபவம் நமக்கு இருப்பதால் அங்கு நடந்துள்ள மாற்றங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு நிலவும் வறுமை, அரசியல் பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களின் தலையீடு போன்றவையும் உணரக்கூடிய விஷயங்கள்தான். ஆகவே ஆப்ரிக்க அணிகளைவிட, வெள்ளைக்கார ஐரோப்பிய அணிகளைவிட தென் அமெரிக்க அணிகள் நமக்கு நெருக்கமாக உள்ளன.
ஒரு குறிப்பிட்ட அணியை ரசிக்க இன்னும் பல சுவையான காரணங்கள் உள்ளன. என் நண்பர் நிர்மலின் குழந்தை தீவிர ஜெர்மனி ஆதரவாளர். காரணம்? குழந்தைகளின் மனம் கவர்ந்த ரேப்பன்சல் இளவரசி ஜெர்மனியை சேர்ந்தவளாயிற்றே !!
மெஸ்ஸி, நெய்மார், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோபன், தாமஸ் முல்லர், அலெக்சிஸ் சான்செஸ் என சில வீரர்களை சிலருக்குப் பிடிக்கும். எனவே அவர்கள் சார்ந்த அணிகளை ஆதரிப்பார்கள் சிலர்.
என் தோழி ஒருவர் ஸ்பெயின் அணி வீரர் ஜெரார்ட் பிக்கின் தீவிர ரசிகை. ஸ்பெயின் முதல் சுற்றுடன் வெளியேறியதுடன் அந்தத் தோழிக்கும் உலக கோப்பை ஆர்வம் போய்விட்டது. உலக கோப்பையை சாக்காக வைத்து அவருடன் நேரம்கெட்ட நேரத்தில் போன் செய்து பேசலாம் என்ற என் கனவு இப்படியாக கலைந்து போய்விட்டது. பட்டர்ஃபிளை எஃபக்ட் என்பதை ஸ்பெயின் அணி எனக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு போனதுதான் இந்த உலக கோப்பையில் அந்த அணியின் ஒரே சாதனையாகும்.
இதுபோன்ற காரணங்களை தவிர்த்துவிட்டு, உண்மையிலேயே கால்பந்து விளையாட்டை கிளப் போட்டிகளில் இருந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆஃப்ரிக்க தேசிய சாம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா என எல்லாவற்றையும் ரசித்து தகுதி வாய்ந்த அணிகளின் ரசிகர்களாக இருப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களில் பலர் கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருப்பதும் உண்டு. பீலே, மாரடோனா, ராபர்ட்டோ பாஜியோ, பெபட்டோ, ரொமரியோ என பாரம்பரியமாக ரசிப்பவர்களும் உண்டு .
இப்படி பல தரப்பினரையும் ஒன்றாக இணைப்பதுதான் கால்பந்தின் கவர்ச்சியாகும். இன, மத, மொழி வேற்றுமைகள் எல்லாம் மறந்து, காலம் இடம் அழிந்து ஒன்றாக மாறுவதை கால்பந்து மட்டுமே நடத்திக்காட்டுகிறது.
அதற்கேற்ப இந்த ஆண்டு போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்து இருந்தன. ஆட்டத்தை மந்தமாக்கும் காரணிகள் கண்டறிப்பட்டு அவ்வப்போது சரி செய்யப்படுவதால், விறுவிறுப்பு என்பது பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சொல்ல முடியும்.
உதாரணமாக முன்பெல்லாம் வெற்றிக்கு 2 புள்ளிகளும், டிரா ஆனால் இரு அணிகளுக்கு ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்டன. இதனால் பல அணிகள் தற்காப்பு ஆட்டம் ஆடி டிரா செய்து ஒரு புள்ளியை கைப்பற்ற முயன்றன. இதை தடுப்பதற்காகத்தான், வெற்றிக்கு 3 புள்ளிகள் கொடுக்கும் முறை வந்தது. டிரா ஆனால் ஒரு பாயிண்ட்தான் கிடைக்கும். இரண்டு புள்ளிகள் போய்விடும். இந்த அச்சத்தால் பல அணிகளும் முனைப்புடன் ஆடத் தொடங்கவே, அதிக கோல்கள், குறைந்த டிரா என ஆட்டங்கள் களை கட்ட ஆரம்பித்தன.
அதேபோல, கடைசி க்ரூப் ஆட்டங்களை ஒரே நேரத்தில் நடத்தும் முடிவும் நல்ல பலன்களைத் தந்து வருகிறது. கடைசி ஆட்டம் டிரா ஆனால் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என தெரியவந்தால், இரு அணிகளும் ஒரு புரிதலுக்கு வந்து முனைப்பின்றி ஆடி டிரா செய்து வந்தன. தற்போது ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், கடைசி ஆட்டம் முடிந்த பின்புதான் தகுதி பற்றிய விபரங்கள் தெரியும். எனவே வெற்றி பெறவே அனைத்து அணிகளும் முயல்கின்றன.
இப்படி தேவையான மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய அணிகள் தென் அமெரிக்க மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதற்கு, அதீத வெப்ப நிலை காரணமாகச் சொல்லப்பட்டது. இதற்குத் தீர்வாக இந்தமுறை குளுமைக்கான இடைவேளை என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் முதற்பாதி இரண்டாம் பாதியில், சற்று இளைப்பாறிக்கொள்ள தலா 3 நிமிட இடைவேளை கொடுக்கப்படும். (கிட்டத்தட்ட 30ஆவது நிமிடத்திலும் 75ஆவது நிமிடத்திலும்) . இது எல்லா போட்டிகளுக்கும் கிடையாது. அந்தந்த போட்டிகள் நடக்கும்போது அதிக வெப்ப நிலை நிலவினால் மட்டுமே இந்த இடைவேளை கொடுக்கப்படும். க்ரூப் ஆட்டங்கள் எதற்கும் இந்த இடைவேளை கொடுக்க வேண்டிய நிலை வரவில்லை. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நெதர்லாந்தும் மெக்சிக்கோவும் மோதியபோது, கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இந்த இடைவேளை கொடுக்கப்பட்டது.
ஆசிய அணிகள், ஆஃப்ரிக்க அணிகள், வட அமெரிக்க அணிகள் என ஒவ்வொரு பிரிவிலும் சில அணிகள் சிறப்பாக ஆடின. ஆனால் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தியது ஐரோப்பிய அணிகளும், தென் அமெரிக்க அணிகளும்தான்.
ஐரோப்பிய அணிகள் ஆட்டத்திற்கும் தென் அமெரிக்க அணிகளின் ஆட்டத்திற்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. ஐரோப்பிய அணிகளின் ஆட்டம் இலக்கணம் மீறாமல், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து நேர்த்தியாக வழங்கப்பட்டும் பாரம்பரிய நடனம் போன்றது. தென் அமெரிக்க அணிகளின் ஆட்டம், இலக்கணத்தை மீறி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் களியாட்டம் போன்றது. அதிரடியும் ஆவேசமும் மிக்க சாம்பா நடனத்தின் விளையாட்டு வடிவம்தான் கால்பந்து என்பது பிரஸீல் போன்ற நாடுகளின் பார்வையாகும். இதில் எந்த முறை சிறந்தது என்பது அவரவர் பார்வையை பொருத்தது.
உதாரணமாக, கலவி என்பது இன்பமான விஷயம்தான், இதை முறைப்படி செய்வது ஒருவித சுகம். சிலவகை மூச்சுப் பயிற்சிகள் செய்தால் வெகு நேரம் வரை உடலுறவில் ஈடுபடலாம். பிராணவாயுவை சரியான முறையில் உலவச்செய்வதன் மூலம் வெகு நேரம் வரை கலவி சுகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். முயக்கத்தில் ஈடுபட உரிய நேரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு முன் மூச்சை ஒழுங்குபடுத்தி, முதலில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு விழிகளால் அழகைப் பருகி, அதன்பின் நாசிகளால் மணத்தை முகர்ந்து, காதல் மொழிகளை உதிர்த்து, மெதுவாக தொட்டு (எந்த வரிசையில் தொட வேண்டும் எவ்வளவு நேரம் தொட வேண்டும், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வரையறைகள் உண்டு), லேசான கிள்ளல், மிதமாக கடித்தல், தட்டுதல், துன்பம் போன்ற இன்பம் தரும் அடுத்தடுத்த செயல்கள் என முறைப்படி செய்தால், அதை விட வேறு இன்பம் இல்லை.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
அரும்பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
என கவிதை பாடி, வீணை இசைத்தல் போல பூரண சுகத்தை முறைப்படி பெறுவது ஒரு விதம்.. இதுதான் ஐரோப்பிய விளையாட்டு பாணி. திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் போன்றது
இப்படி எல்லாம் முறைப்படி யோசிக்கவெல்லாம் தேவை இன்றி, காமம் ஒரு கொண்டாட்டமாக, ஒரு களியாட்டமாக, ஒரு பித்தேறிய நிலையாக, காதலின் வெளிப்பாடாக பீறிட்டு தன்னை வெளிப்படுத்தி, தன்னையே மறக்கசெய்து, ஆண் பெண் என்ற இருமை அழிந்து அந்த சங்கமம் மட்டுமே கோலோச்சும் சந்தர்ப்பங்களும் உண்டு. அங்கு கவிதைகள் தேவைகள் இல்லை. காமத்தின் உச்சத்தில் வெளிப்படும் அர்த்தம் அற்ற சிணுங்கலே அங்கே கவிதை. ஆபாச முனகலே அங்கு தேசிய கீதம். எச்சிலே அமிழ்தம். உச்சகட்டமே சுப முகூர்த்தவேளை. பற்குறிகளும், நகக்குறிகளுமே பிரசாதம். எப்போது என்ன செய்ய வேண்டும் என அந்த இரண்டு உடல்களே அறியும். அந்த சங்கமம் எங்கும் எழுதி வைக்கப்பட்ட முறையில் நிகழ்வதில்லை. அங்குதான் முதல் முதலாக எந்த திட்டங்களும் அறிவுரைகளும் இன்றி தன்னிச்சையாக நிகழ்கிறது.
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எஞ்ஞனமே
என்கிறாரே திருமூலர். சொல்லித்தந்து வருவதல்ல மன்மதக்கலை. இயல்பான எதிர்பாராத தன்மையே அதன் சிறப்பு என்கிற கோணமும் இருக்கிறது.
இது தென் அமெரிக்க விளையாட்டு பாணி. குறைந்தபட்ச திட்டம் அதிகபட்ச திறன் என்ற முறையிலான அதிரடி.
ஐரோப்பிய முறையில் நேர்த்தியை, கட்டுக்கோப்பை ரசிக்கலாம். தென் அமெரிக்க முறையில் எதிர்பாரா ஆச்சர்யங்களை ரசிக்கலாம். எப்படி பாஸ் செய்வார்கள், எப்படி கோல் போடுவார்கள் என்பது அணி வீரர்களுக்கே தெரியாது. அந்தந்த கணத்தில் தீர்மானிப்பதுதான்.
ஐரோப்பிய பாணி என்பது கனிந்த காதலன் ஒருவன் காதலிக்கு முத்தம் கொடுப்பது போன்றது. அவளுக்கு எங்கு எப்படி முத்தம் கொடுத்தால் அவளுக்கு அதிகபட்சம் இன்பம் கிடைக்கும் என கணக்கிட்டு, பீத்தோவனின் சிம்பனி இசைபோல துல்லியமாக அதை நிகழ்த்துவது.
தென் அமெரிக்க பாணி என்பது ஒரு காதலன் தன் முதல் முத்தத்தை தன் காதலியிடம் இருந்து பெறுவதைப் போன்றது. அங்கு இருப்பது இளமையின், காதலின், வாழ்க்கையின் கொண்டாட்டம், அந்த கணத்தில் வாழும் நிலை ஆகியவை மட்டுமே.
இதனால்தான் தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்து என்பது விளையாட்டாக மட்டும் அல்லாமல் வாழ்க்கையாக, ஒரு மதமாக, ஓர் அடையாளமாக, உயிராக, உணர்வாக இருக்கிறது. கால்பந்து அங்கு இலக்கியமாகவும் இருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒருமுறை சாருவுடன் பேசும்போது இதைக் குறிப்பிட்டார்.
உருகுவாய் எழுத்தாளரான எதுவார்தோ கலியானோ லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகில் முக்கியமான ஒருவராவார். அவரது SOCCER IN SUN AND SHADOW மிகவும் முக்கியமான நூலாக கருதப்படுகிறது. ஏழ்மை, வன்முறை, அரசியல் பிரச்சினைகள் என ஆயிரம் தடங்கல்களுக்கு மத்தியில் கால்பந்து அங்கு எப்படி வழிபடப்படுகிறது என்பதை அறிய விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த நூலைப் படிக்க வேண்டும்.
அதேபோல சிலே நாட்டின் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக வைத்து சிலே நாட்டு எழுத்தாளர் அந்தோனியா ஸ்கார்மேத்தாவால் எழுதப்பட்ட I DREAMT THE SNOW WAS BURING என்ற நூலும் மிக முக்கியமான நூலாகும்.
இப்படி வெவ்வெறு பாணியிலான அணிகள் இறுதி போட்டிக்கு வந்தது கால்பந்து ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. ஐரோப்பாவின் சார்பில் ஜெர்மனி, லத்தீன் அமெரிக்காவின் சார்பில் அர்ஜெந்தீனா என இரு அணிகள் இறுதிக்கு வந்தன என்றால் இரண்டுமே தகுதியான அணிகள்தான். இவை இரண்டுமே ஆட்டத்தில் சற்று வித்தியாசத்தையும் கூடுதல் திறனையும் காட்டியதால் மட்டுமே இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது. இன வேற்றுமைக்கு பேர்போன ஜெர்மனியில் பல இன மக்களுக்கும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, மெசூத் அசில் துருக்கி பின்புலத்தை சார்ந்தவர். சாமி கிடீரா துனிசியா வம்சாவழியைச் சேர்ந்தவர். ஜெரோம் போவாத்தீங் கானா வம்சாவழியைச் சேர்ந்தவர். இப்படி ஜெர்மனி தன்னை மாற்றிக்கொண்டது அந்த அணிக்கு பலனளித்தது.
இந்த உலக கோப்பையை பொருத்தவரை, புதுமைகளை முயன்று பார்த்த அணிகளுக்கு வெற்றி கிடைத்தது. உதாரணமாக நெதர்லாந்து - கோஸ்த்தா ரிக்கா ஆட்டம் எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் முடிவு செய்யப்பட இருக்கிறது என்ற நிலை வந்தபோது, அதுவரை நன்றாக பணியாற்றிய கோல்கீப்பரை (ஜேஸ்பர் சிலிசன்) வெளியே அழைத்துக்கொண்டு டிம் க்ரூல் என்ற கோல் கீப்பரை பெனால்ட்டி ஷூட் அவுட்டை சந்திக்க அனுப்பினார் பயிற்சியாளர் வேன் கால். இந்த யுக்திக்கு வெற்றி கிடைத்தது. டிம் க்ரூல் இரண்டு கோல்களைத் தடுத்து அணியை அரை இறுதிக்கு எடுத்துச் சென்றார்.
ஆனால் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளாத அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறின. டிக்கி டாக்காவை நம்பிய ஸ்பெயின், தனது அலுத்துப்போன 4-2-3-1 வியூகத்தை (வீரர்கள் விளையாடும் நிலை) விடாப்பிடியாக கையாண்ட இங்கிலாந்து போன்ற பாரம்பரிய சிறப்பு பெற்ற அணிகள் முதல் சுற்றிலேயே வீழ்ந்தன.
இதை நெதர்லாந்து அணியின் வேன் கால் யுக்தியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு வியூகம் அமைத்தார். ஐந்து ஆட்டங்களுக்கு அவர் அமைத்த ஐந்து வியூகங்களை கவனியுங்கள் 5-3-2, 5-2-3, 4-3-3, 3-4-3, 3-3-1-3 மற்றும் 3-5-2.
ஜெர்மனியின் சீரான வெற்றிகளுக்கு காரணம் இந்த தகவமைக்கும் பண்புதான் என்றால் மிகை இல்லை. ஸ்ட்ரைக்கர் இல்லாமல்கூட வியூகம் அமைத்தது அந்த அணி. அதாவது பொய் ஸ்ட்ரைக்கர் என சொல்லப்படும் ஃபால்ஸ் நைன் முறையை லாகவமாகப் பயன்படுத்தியது ஜெர்மனி. இதில் அர்ஜெந்தீனாதான் கில்லாடியாக கருதப்பட்டது. அந்த யுக்திக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள ஜெர்மனி தயங்கவில்லை. அதேபோல ஸ்பெயினின் டிக்கி டாக்காவையும் கச்சிதமாக பயன்படுத்தியது ஜெர்மனி. அதைப் அப்படியே பயன்படுத்தாமல், தனக்கேற்றவாறு பயன்படுத்தியதில்தான் ஜெர்மனியின் வெற்றி இருக்கிறது. அரை இறுதியில் இந்த டிக்கி டாக்கா ஆட்டத்தை ஜெர்மனியிடம் எதிர்பார்க்காத பிரஸீல் வீரர்கள் திகைத்துப் போய்விட்டனர். என்ன நடக்கிறது என அவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே ஜெர்மனி வீரர்கள் கோல் மழை பொழிந்து விட்டனர்.
டிக்கி டாக்கா என்பது அணி வீரர்கள் ஒரு முக்கோணம் போன்ற அமைப்பை உருவாக்கி, தமக்குள் பந்தை பாஸ் செய்தவாறு கோலை நோக்கி முன்னேறுவது ஆகும். சிறிய சிறிய பாஸ்களை செய்தவாறு இப்படி விளையாடுவதற்கு அசாத்தியமான நிபுணத்துவமும், அணி வீரர்களுக்கிடையேயான புரிதலும் மிக முக்கியம். ஒருவரிடம் பந்து இருக்கும்போது சக வீரர்கள் அவருக்கு உதவியாக ஆங்காங்கு நிலை கொள்வார்கள். ஆக எண்ணற்ற முக்கோணங்கள் அங்கு உருவாகும். அதில் எந்த முக்கோணத்திற்கு பந்தை பாஸ் செய்கிறார் என்பதில் அந்த வீரரின் மேதமை இருக்கிறது.
நெதர்லாந்துக்கு எதிராக ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்த மெக்சிக்கோ தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து இருந்தால், நெதர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்து இருக்க முடியும் . ஆனால் தாக்குதல் ஆட்டக்காரர்களை வெளியே அழைத்துக்கொண்டு, தற்காப்பை பலப்படுத்தி தற்காப்பு ஆட முற்பட்டது நெதர்லாந்தின் மீதான நெருக்கடியை குறைத்துவிட்டது. அவர்கள் தாக்குதலில் இறங்கி வெற்றி பெற்றுவிட்டார்கள். இது யுக்திரீதியான தவறாகும்.
அதேபோல, காலிறுதியில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த, பெனால்ட்டி ஷூட் அவுட் ஸ்பெஷலிஸ்ட் டிம் க்ரூல் அரை இறுதியில் கை கொடுக்க - மன்னிக்கவும் - கால் கொடுக்க முடியவில்லை. காரணம் அந்தப் போட்டியில் ஏற்கனவே மூன்று மாற்று ஆட்டக்காரர்களை பயன்படுத்திவிட்டார் வேன் கால். இதுவும் யுக்திரீதியான தவறாகும்.
இப்படி பெரும்பாலான வெற்றி தோல்விகளுக்கு யுக்திகள் காரணமாக அமைந்தாலும், குயுக்திகளும் சில முடிவுகளை பாதித்தது வருந்தத்தக்கது. திட்டமிட்டு குறிப்பிட்ட வீரரை தாக்குவது, காயமடையச் செய்வது போன்றவை அதிகமாகக் காணப்பட்டன. இத்தாலி வீரரை கடித்த சுவாரஸ் தண்டனை பெற்றார். அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கக்கூடும். அதேபோல, பிரஸீல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார், கொலம்பிய வீரர் ஜூவான் காமிலோ ஜுனிகாவால் காயப்படுத்தப்பட்டு தொடர்ந்து ஆட முடியாமல் போனார். விளைவாக 1-7 என்ற கணக்கில் பிரஸீல் அணி ஜெர்மனியிடம் அரை இறுதியில் படுதோல்வி அடைய நேரிட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். ஆனால் மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் திட்டமிட்ட தாக்குதல் என்பது வருந்தத்தக்கது.
இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க உரிய விதிகள் வேண்டும். உருகுவாயுடனான ஆட்டத்தில் இத்தாலி வீரருக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு, ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிராக க்ரீஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட பெனால்ட்டி கிக், மெக்சிக்கோவுக்கு எதிராக நெதர்லாந்துக்கு கிடைத்த பெனால்ட்டி கிக், ரஷ்ய கோல் கீப்பரை திசை திருப்பி அல்ஜீரியா போட்ட கோல் போன்றவற்றில் சர்ச்சைகள் இருக்கின்றன. கிரிக்கெட் போல, இந்தச் சர்ச்சைகளை தீர்த்து வைக்க தொலைக்காட்சி நடுவர் அமைப்பது அல்லது வேறு மாற்று வழிகள் குறித்து ஃபிஃபா(FIFA) ஆராய வேண்டும்.
இதுபோன்ற தாக்குதல்களைத் தவிர அரசியல்ரீதியான தாக்குதல்களும் அவ்வப்போது நடப்பது சகஜம்தான். முதலாளித்துவ நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற வேலைகளில் நிபுணர்களாக விளங்குகின்றன.
1982 உலகக் கோப்பையில் அல்ஜீரியா, மேற்கு ஜெர்மனி, சிலே, ஆஸ்த்ரியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் இடம் பெற்று இருந்தன. அல்ஜீரியா இரண்டு வெற்றிகள் பெற்று தன் அனைத்து ஆட்டங்களையும் முடித்து இருந்தது. இரு வெற்றிகளை பெற்றிருந்த ஆஸ்திரியாவும், ஒரு வெற்றியை பெற்று இருந்த ஜெர்மனியும் கடைசி ஆட்டத்தில் மோதின.
அந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலோ ஆஸ்த்திரியா வென்றாலோ, அந்த க்ரூப்பில் இருந்து அல்ஜீரியாவும் ஆஸ்திரியாவும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். அல்லது அந்த ஆட்டத்தில் ஜெர்மனி மூன்று அல்லது அதற்குமேல் கோல் போட்டு வென்றால், ஜெர்மனியும் அல்ஜீரியாவும் தகுதி பெறும். ஆக, அல்ஜீரியா வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் திட்டமிட்டு, அல்ஜீரியாவுக்கு எதிராக திட்டம் வகுத்தன. அதன்படி ஆட்டம் ஆரம்பித்த சில நொடிகளில் ஜெர்மனி ஒரு கோல் போட்டது. அதன்பின் இரு அணிகளும் கோல் எதுவும் போட முயற்சிக்கவில்லை. சும்மா பெயரளவுக்கு அளவுக்கு விளையாடி நேரம் கடத்தின. இறுதியில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் வென்று, ஜெர்மனியும் ஆஸ்த்திரியாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அல்ஜீரியா வெளியேற்றப்பட்டது. இது உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மைதானத்துக்கு வெளியேயும் அணிகள் தோற்கடிக்கப்படுவது உண்டு. கால்பந்து உலகில் பெரிய சக்தியாக விளங்கிய அணி யுகோஸ்லேவியா. கம்யூனிஸ்ட் நாடான அதன் வெற்றி மற்ற நாடுகளுக்கு ஓர் உறுத்தலாகவே இருந்து வந்தது. 90களின் ஆரம்பத்தில் கம்யூனிச அகிலத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் யுகோஸ்லேவியாவில் இருந்தும் சில பகுதிகள் பிரிந்தன. யுகோஸ்லேவிய குடியரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யூரோ 92இல் போட்டியிட அந்த அணி ஆயத்தமாக இருந்தது. போட்டி ஆரம்பிக்க பத்தே நாட்கள் இருந்த நிலையில் அந்த அணி போட்டியிடக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது. அந்த அணிக்கு பதிலாக களமிறங்கிய டென்மார்க் அந்த சாம்பியன்ஷிப்பை வென்றது ஒரு நகைமுரண்.
அதேபோல, ஐரோப்பிய மண்டலம் க்ரூப் ஐந்தில் முதல் இடத்தில் இருந்த யுகோஸ்லேவியா, 1994 உலக கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இப்படி கண்ணுக்குத் தெரியாத தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
1938 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலியும், ஹங்கேரியும் மோதின. போட்டிக்கு முன் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி இத்தாலி அணிக்கு ஒரு தந்தி அனுப்பியதாக ஒரு (நிரூபிக்கப்படாத) செய்தி உண்டு “உங்கள் முன் இரு வாய்ப்பு. வெற்றி அல்லது மரணம்“. அதாவது ஜெயிக்காவிட்டால் கொன்று விடுவார் என அர்த்தம் இல்லை. அந்த அளவுக்கு அவர் ஆர்வம் காட்டினார். கால்பந்து என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல் தேச கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.
உதாரணமாக, 1952 ஒலிம்பிக்கில் யுகோஸ்லேவியா, சோவியத் யூனியன் கால்பந்து அணிகள் மோதியபோது அது அரசியல் போட்டியாகவே கருதப்பட்டது. அதில் வென்றே ஆக வேண்டும் என்பதில் ஸ்டாலின் குறியாக இருந்தார். ஆனால் யுகோஸ்லேவியா வென்றது. டிட்டோ-3 ஸ்டாலின் -1 என சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அந்தத் தோல்வி ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்தச் செய்தி சோவியத் பத்திரிகைகளில் வெளியாகவே இல்லை.
அதுபோல எந்த நாடு போட்டியை நடத்துவது என்பதிலும் அரசியல் உண்டு. குறிப்பிட்ட நாடு போட்டியை நடத்த விடாமல் செய்ய மற்ற நாடுகள் அணி திரள்வது உண்டு. சில நேரங்களில் உள் நாட்டு அரசியலும் உண்டு. பிரஸீலை பொறுத்தவரை அதன் கனவு, வாழ்க்கை, அடையாளம் என எல்லாம் கால் பந்துதான். அதனால்தான் மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே போட்டியை நடத்திக்காட்ட விரும்பியது. ஆனால் நம் நாட்டுக்கு இதெல்லாம் தேவை இல்லை என அந்த நாட்டு மக்களிலேயே ஒரு சாரார் எதிர்ப்புக்காட்டியதும் நடந்தது.
இந்த உலகக் கோப்பையில் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள், வீரர்களுக்கு சரியாக ஊதியம் கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினை போன்றவையும் சில அணிகளின் திறனை பாதித்தன.
நாம் துவக்கத்தில் கூறிய ஆஃப்சைடு படத்தில் வசனங்கள் ஏதும் இல்லை. வானொலி வர்ணனை மாத்திரம்தான். இரு தரப்பு வீரர்களும் துப்பாக்கியை நீட்டியபடியே வர்ணனையை கேட்கும்போது தவறுதலாக ஒருவன் சுட்டுவிட, மாறி மாறி இருதரப்பும் சுட்டு அனைவரும் பலியாகின்றனர். வர்ணனை தொடர்கிறது. அவர்கள் சுட ஆரம்பிக்கையில் கோல்ல்ல்ல் என வர்ணனையாளர் உற்சாகமாக சொல்கிறார். கூட்டம் ஆரவாரிக்கிறது. பிறகு தெரிகிறது. அது கோல் இல்லை. ஆஃப்சைடு விதியின் கீழ் அந்த கோல் தவறானதாக அறிவிக்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. சுட ஆரம்பித்தவன், தன்னை வெற்றியாளனாக நினைத்து இருக்கலாம். ஆனால் அங்கும் இருதரப்பும் வெல்லவில்லை.
கால்பந்தும் விளையாட்டு நெறிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டால், யாருக்கும் வெற்றி இல்லாமல் போய்விடக்கூடும். வெல்வது யாராகவும் இருக்கலாம். ஆனால் கால்பந்து தோற்றுவிடக்கூடாது. அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்த உலகக் கோப்பையை பொருத்தவரை அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும். இன வெறி அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஜெர்மனியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் குறித்து பார்த்தோம் அல்லவா. அது தவிர இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜெர்மனி அபாரமாக ஆடி பிரஸீலை வென்ற போதும், பிரஸீலை கிண்டல் செய்யும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. கோல் போட்டதும் மிதமாகவே ஒவ்வொரு கோலையும் கொண்டாடினர்.
ரசிகர்களும் விளையாட்டு அறத்துடன் (விளையாட்டுத்தனமான அறம் அன்று) நடந்து கொண்டனர். பிரஸீல் அணியின் தோல்வி உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. பிரஸீல் தேசம் முழுக்க துக்கம் சூழ்ந்திருந்தது . ஆனாலும் சுதாரித்துக்கொண்டு மூன்றாம் இடத்துக்கான போட்டியை காண வழக்கமான உற்சாகத்துடன் திரளாக கலந்து கொண்டனர். (அதிலும் பிரஸீல் தோற்றது வேறு விஷயம்.)
ஜெர்மனி ஒருங்கிணைந்த நாடாக பெறும் முதல் வெற்றி என்பது இந்த உலகக் கோப்பையின் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்குமுன் மேற்கு ஜெர்மனி என்ற பெயரில்தான் வென்றுள்ளது. அதேபோல தென் அமெரிக்க நாட்டில் நடக்கும் போட்டியில் ஐரோப்பிய அணி ஒன்று வெல்வதும் முக்கிய நிகழ்வாகும்.
இதைவிட முக்கிய நிகழ்வு என்பது மற்ற அணிகளை ரசிப்பது, மற்றவர்களிடம் இருந்து கற்பது, குறுகிய வேறுபாடுகளை கொஞ்ச நாளாக மறந்து இருந்தது, உள்ளங்கள் ஒன்றுபடுவதால் ஏற்படும் உவகையை உணர்ந்தது போன்றவைதான். யாரோ ஒரு ஸ்வீடன் பெண்ணும், சென்னையில் வாழும் ஒரு தமிழனும் ஜெர்மனி வெற்றிக்காக ஒன்றாக பிரார்த்திக்கும் அற்புதம் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியம் ஆனது.
ஜெர்மனி வெற்றியையும், கால்பந்தின் வெற்றியையும் இதைவிட சுருக்கமாக யாரும் சொல்ல முடியாது. பிரஸீலின் முன்னாள் வீரர் ஒருவர் இப்படி சொன்னார்: பிரஸீல் அணி என்ன செய்து வந்ததோ அதை ஜெர்மனி செய்து வருகிறது. ஜெர்மனி அணி எவற்றையெல்லாம் கை விட்டதோ அவற்றை பிரஸீல் செய்ய ஆரம்பித்துள்ளது

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]