Wednesday, October 8, 2014

அசோகமிதரன் பாராட்டிய என் கதை நிராகரிக்கப்பட்டது - வெண்முரசு பற்றி ஜெயமோகனுடன் எக்ஸ்க்லூசிவ்

ஜெயமோகனின் வெண் முரசு தொடரை பலர் படித்து வருவீர்கள் என நம்புகிறேன். முதல் பாகம் தொடும் ஆழம் , அதற்கு பிந்தைய பகுதிகளில் வரும் உணர்வெழுச்சி போன்றவை அபாரமாக இருந்தன..  ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மாதிரி என்றாலும் பொதுத்தன்மை என்றால் தமிழ் ஆளுமையை சொல்லலாம். சாரு இந்த தமிழை பாராட்டியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் முந்தைய பகுதியில் இருந்து சற்று வேறுபட்ட நடையில் வெளி வந்தது நீலம் எனும்  நாவல் . இதை புரிந்து கொள்ள முடியவில்லை.. பழைய பகுதிகள் போல இல்லை என சிலர் சொன்னார்கள்..இதுதான் நன்றாக உள்ளது என்பவர்களும் உண்டு..

இந்த முரண் குறித்து ஜெயமோகனிடம் கேட்டேன்.

நீலம் இப்படி பிரத்தியேக நடையில் எழுதப்பட காரணம் என்ன?

படிக்க கஷ்டமாக இருப்பதாக சிலர் சொல்கிறார்களே/?

இந்த பகுதி எந்த வகை வாசகர்களுக்காக எழுதப்பட்டது/?

இதை எப்படி வாசித்தால் நல்லது/?

இதற்கு ஜெயமோகன் அளித்த பதில் உங்கள் பார்வைக்கு

*****************************************************************


அன்புள்ள பிச்சைக்காரன்,

நீண்டகாலமாக எழுதிக்கொண்டிருப்பவன் என்றவகையில் எல்லா வினாக்களுக்கும் ஏற்கனவே ஓர் அனுபவமும் விடையும் என்னிடம் இருப்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். நீங்களும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். விரைவில் கண்டடைவீர்கள்.

என் ஆரம்பநாட்களில் ஆன் மிக நுட்பமானது என்று கருதும் கதை ஒன்று கணையாழியில் வெளிவந்தது. அசோகமித்திரன் அதைப்பாராட்டி எழுதியிருந்தார். ஆனால் அதை மிக நிராகரித்து ஒருவாசகர்கடிதம் வந்தது. எனக்கு கடும் வருத்தம். கதையில் என்ன பிரச்சினை என்று என்னுள்ளே கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது அசோகமித்திரன் எழுதிய சுருக்கமான கடிதம் வந்தது.

எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல என்று அவர் எழுதியிருந்தார். தஸ்தயேவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல்படைப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் வாசிப்புப் பயிற்சி, இயல்பு மட்டும் அல்ல அப்படைப்பை அம்முறை வாசிக்கும்போது அவர்களுக்கிருந்த மனநிலை ஆகியவையும் முக்கியம். ஒரு படைப்பை முழுமையாக நிராகரித்த ஒருவர் கொஞ்சநாட்கள் கழித்து சிறப்பானதாக எண்ணவும் கூடும். எழுத்தாளனுக்கே உள்ளூரத்தெரியும் சரியாகவந்திருக்கிறதா என்று, அது மட்டுமே முக்கியம் என எழுதியிருந்தார்

சரியாக ஒரு வாரம் கழித்து சி.மோகனைச் சந்தித்தேன். அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை அவர் நிராகரித்தார் என்றும் அது தற்போது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். ஏன் நிராகரித்தீர்கள் என்றேன். அதை அவர் குமுதத்தில் சிறுகதைகளாக எழுதி ஒன்றாகச்சேர்த்து நாவலாக்கியது பிடிக்கவில்லை என்றார். அசோகமித்திரன் எவ்வளவு பார்த்திருப்பார் என பிரமித்தேன்.

அரசியல் காரணங்களுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காழ்ப்பும்  மனவிலக்கமும் கொண்ட வாசகர்கள் உண்டு. வாசிப்பில் மிகமிகப் பின் தங்கி தேங்கிவிட்டவர்கள் உண்டு. எந்த ஒரு பேரிலக்கியத்தையும் நிராகரிக்கும் நோக்கத்துடன் வாசித்தால் அது எதையுமே அளிக்காமல் மௌனமாகி விடுவதை, தரமற்றதாகவே தெரிவதைக் காணலாம். ஏனென்றால் இலக்கியம் ஒன்றும் புறவமயான ஒரு பொருள் அல்ல. அது வாசகன் மனதில் நிகழவேண்டிய கற்பனை. அந்த கற்பனைக்கான தூண்டுதலை அளிக்கும் மொழிவடிவம் மட்டுமே இலக்கியத்தில் உள்ளது. கற்பனைசெய்ய மறுக்கும் வாசகன் ஓவியத்தை பார்க்கும் விழியற்றவனே.

அத்தகையோரை நாம் முழுமையாகவே நிராகரித்துவிடலாம். நான் எப்போதுமே சொல்வது போல நீ என் வட்டத்துக்குள் இல்லை என்றால் நான் உன் வட்டத்துக்குள் இல்லை என்பதே உண்மை.

நீங்கள் கேட்கும் வினா நுண்ணுணர்வுள்ள, தொடர்ந்து இதை வாசிக்கும் மனநிலை கொண்ட, பிறபகுதிகளை ரசிக்கும் வாசகர்களைப்பற்றியது. அதற்கான என் விடையை மேலேகுறிப்பிட்ட அ-வாசகர்களை வரையறை செய்து வெளியேதள்ளிய பிறகே செய்ய முடியும்.

நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன். சமீபத்தில் இன்னொரு நண்பரிடம் இதை விரிவாக தொலைபேசியில் பேச நேரிட்டது

வாசகர்களில் மிகக்கணிசமானவர்கள் அவர்கள் கண்முன் அறியும் அன்றாடவாழ்க்கையில்  இருந்து நீட்சிகொள்ளும் புனைவிலக்கியத்தை மட்டுமே  ரசிப்பவர்களாக இருப்பார்கள். அன்றாடவாழ்க்கையின் இடைவெளிகளை நிறைப்பதாகவும், உணர்வுகளை வளர்ப்பதாகவும் அறிதல்களை நுட்பமானதாக ஆக்குவதாகவும் அவ்விலக்கியம் இருக்கவேண்டுமென நினைப்பார்கள். அவர்கள் வாசிப்பதே அதற்காகவே.

இத்தகையவர்கள் அதிகமாக வாசிப்பவர்கள் என்பதைக் காணலாம். கொஞ்சம் சுமாராக இருந்தால்கூட இவர்களால் புனைவை வாசித்துவிடமுடியும். அதில் ஏதேனும் சில வாழ்க்கைக்கூறுகள் இருந்தால்போதும். அவர்கள் வெளியே வாழ்வதைப்போல ஓர் அக வாழ்க்கையை புனைவு வழியாக வாழ்வார்கள். அவர்கள் பாராட்டும் ஒரு படைப்பில் அவர்கள் என்ன தான் கண்டார்கள் என்று கேட்டால் அவர்கள் ஏற்கனவே அன்றாட வாழ்க்கையில் அறிந்த ஒரு நுட்பமான விஷயத்தை அப்படைப்பு தொட்டுணர்த்தியிருப்பதைச் சொல்வார்கள். இலக்கியத்தில் அன்றாடவாழ்க்கையின் ஒரு விஷயம் குறிப்புணர்த்தப்பட்டிருந்தாலே அவர்களுக்குப்போதும். இவர்கள் தங்கள் அறிவுத்திறன் அல்லது நுண்ணுணர்வைக்கொண்டு அதைக் கண்டுபிடித்தால் அதுவே இலக்கிய அனுபவம்.

இத்தகையவர்கள் இலக்கியத்தின் மொழிநடை மீது கவனமற்றவர்கள். குறைந்தபட்ச உரைநடை, சுருக்கமான வெளிப்பாடு என்பதே இவர்கள் விரும்புவதாக இருக்கும். கவித்துவம் என்பது உலகியல்தளத்தைத் தொடும்போதன்றி அவர்கள் கண்ணுக்குப்படாது. கவிதையின் கருவிகளான அணிகள், படிமங்கள், உருவகங்கள் எவையும் இவர்களை பெரிதாகக் கவர்வதில்லை. தத்துவார்த்தமான தளங்களை இவர்கள் கவனிப்பதில்லை. ஆன்மீகமான உச்சங்களை நோக்கிச் செல்வதுமில்லை.  காரணம் இவர்கள் புனைவில் கற்பனைமூலம் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கைக்குத் தடையில்லாதபடி மொழியும் புனைவுமுறையும் மிக இயல்பாக அவர்களை அறியாமல் அவர்களுடன் இருக்கவேண்டும். ஈர்த்து உள்ளே கொண்டுபோனபின் மொழி அவர்களை விட்டு விலகிவிடவேண்டும் .

இவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதக் கதைகளை வாசிப்பவர்கள். வேறுவகைப்படைப்புகளில்கூட யதார்த்தவாத அம்சத்தைக் கண்டடைந்து ரசிப்பார்கள். இவர்கள் தொடர்ந்து வாசித்து தங்களுக்குரிய இடங்களைக் கண்டடைந்துகொண்டே இருப்பார்கள். மிகநுட்பமான வாசகர்களாக தங்களை நம்புவார்கள். ஓர் எல்லைவரை அது உண்மையும் கூட!


இன்னொருவகை வாசகர்களே செவ்வியல்தன்மைகொண்ட படைப்புகளை இன்னும் அதிகமாக நெருங்குபவர்கள். அவர்களிடம் மேலே சொன்ன வாசிப்புச்சுவை இருக்கும். கூடவே இலக்கியத்தை கொஞ்சம் விலகி நின்று பார்ப்பவர்களும் கூட. ஆகவே இலக்கியத்தின் புனைவுமொழியின் அழகை அவர்கள் தனியாகக் கவனிப்பார்கள்.  கவித்துவ உத்திகளை முழுமையாக உள்வாங்க முயல்வார்கள். மொழியின் ‘ஒழுக்கை’ விட அதன் ‘செறிவு’தான் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

இவர்கள் பொதுவாக சில இயல்புகள் கொண்டிருப்பார்கள். தத்துவத்திலும் தொன்மங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மரபிலக்கிய ஆர்வம் இருக்கும். மரபிலிருக்கும் அழகிய மொழிவெளிப்பாடுகளை நினைவில்கொண்டு சொல்ல முடிபவர்கள். இலக்கியத்தை அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புக்கு அப்பால் செல்லும் ஒன்றாகவே எப்போதும் காண்பார்கள். ஆகவே இலக்கியத்தின் உலகியல் நுட்பம், அரசியல் கூர்மை ஆகியவற்றுக்கு மேலாக அது உருவாக்கும் பிரபஞ்ச அர்த்தம், ஆன்மீகமான எழுச்சி சார்ந்து அதிகக் கவனம் கொண்டிருப்பார்கள்.

இக்காரணத்தால் இவர்கள் இலக்கியத்தின் அணிகள், படிமங்கள், கவிருருவகங்களில் அதிகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியம் ஓர் அன்றாட உண்மையை ’மானுட உண்மையாக’  அல்லது ‘பிரபஞ்ச உண்மையாக’ ஆக்கவே இந்த  கவிதைக்கருவிகளைக் கையாள்கிறது.

வெண்முரசு ஒரு முழுமையான செவ்வியலை நோக்கிச் செல்ல முயல்கிறது. ஆகவே அதில் எல்லாவகையான புனைவுக்கும் இடமுண்டு. அதில் குழந்தைக்கதை, சாகசக்கதை, தேவதைக்கதை என எல்லாம் இருக்கும். தொன்மங்கள், படிமங்கள் எல்லாமே  கையாளப்படும். அன்றாடவாழ்க்கையின் நுண்ணிய சித்தரிப்பும் இருக்கும்.

வெண்முரசை வாசிக்கையில் அதில் அன்றாடவாழ்க்கை சார்ந்த நுட்பமான தருணங்கள் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். எந்த ஒரு யதார்த்தவாதத் தமிழ்ப்படைப்பைவிடவும் அவை வெண்முரசில் அதிகம் என்று சொல்வேன். மனிதர்களுக்கிடையேயான மனநாடகங்கள். உறவுச்சிக்கல்கள். ஒன்றிலிருந்து ஒன்றாக விரியும் உணர்வுகளின் சிடுக்குகள்.  முழுக்கமுழுக்க என்றென்றும் வாழும் மனிதர்களின் வாழ்க்கைச்சிக்கல்களாகவே நாவல் முன்னகர்கிறது.

யதார்த்தவாதத்தின் வாசகன் கண்முன் தெரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையையே புனைவிலும் வாசிக்கமுடியும் என்ற பலவீனம் கொண்டவன் அல்ல என்றால் வெண்முரசை எளிதில் வாசிக்கமுடியும், அதன் நுட்பங்களைக் கண்டடையவும் முடியும். ஆனால் அவனுக்குத் தடையாக இருப்பது அவனை ‘ஆற்றோட்டமாக’ இழுத்துச்செல்லாத செறிவான மொழி. அந்த மொழியையும் அவன் தனியாகக் கவனித்தாகவேண்டும். அது அவனை கற்பனைவாழ்க்கையில் இயல்பகா இருக்கமுடியாது வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். அதேபோல அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும் படிமங்களும், உருவகங்களும், தொன்மங்களும்.அவையும் அவனை வெளியே இழுக்கும்.

அவை கொடுக்கும் மேலதிக அர்த்தம் அவனுடைய வாசிப்புக்குத் தேவை இல்லை. எனவே யதார்த்தவாத வாசகன் மொழிநடையை அவனை அறியாமலேயே குறைந்தபட்ச அர்த்தத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு வாசிக்கப்பழகிவிட்டிருப்பான். வர்ணனைகளையும் விவரணைகளையும் ‘என்ன கதை’ என்று தெரிந்துகொள்ளத் தேவையான அளவு மட்டுமே வாசிப்பான். கவித்துவத்தை முழுமையாக விட்டுவிடுவான்.

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகியவற்றின் வழியாக ஒரு யதார்த்தவாத வாசகன் மேலே சொன்ன வாசிப்பினூடாக நகர முடியும். உதாரணமாக துரோணரின் கதையில் வரும் அவரது அடிப்படையான இக்கட்டு அவனை கவரும். அவரது வாழ்க்கை வழியாக அவன் பயணிப்பான். துரோணருக்கும் கிருபிக்குமான உறவின் நுட்பங்களெல்லாம் அவனைச் சென்றடையும்.  அந்த அடையாளச்சிக்கலும் பரிதவிப்பும் இன்றும் நாம் வாழ்க்கையில் காண்பதே. ஆனால் அவர்கையில் எப்போதுமிருக்கும் தர்ப்பை அவரது துயரில் தெய்வவடிவமாக விஸ்வரூபம் எடுப்பதை அவன் தாண்டிச்சென்றுவிடுவான். அது எந்தவகையான மனஎழுச்சியையும் உருவாக்காது

வெண்முரசின் முதல் மூன்றுநாவல்களும் மேலே சொல்லப்பட்ட இருவகை வாசகர்களுக்கும் இடமுள்ளவை. நீலம் இரண்டாம் வகை வாசகனுக்கு மட்டுமே இடமுள்ளது. யதார்த்தவாதத்தின் வாசகன் அதில் வாசிக்க எதுவுமே இல்லை. இதுதான் வேறுபாடு. அதில் கதை இல்லை. கதைத்தருணங்கள் இல்லை. கவித்துவத்தளம் மட்டுமே உள்ளது. மொழிவெளிப்பாட்டின் நுட்பம் வழியாக, படிமங்கள் மற்றும் தொன்மங்கள் வழியாக, மானுடவாழ்க்கையின் சில உச்சகணங்களைத் தொடுகிறது அது. காவியத்தன்மை மட்டுமே அதில் உள்ளது.

நான் பலமுறை சொன்னதுபோல நீலம் வெண்முரசின் ஒரு தனிப்பகுதி. ஓர் இணைப்பு போல. அதற்கும் வெண்முரசின் பொதுவான கதையோட்டத்துக்கும் தொடர்பு இல்லை. வெண்முரசின் அழகியல் கட்டுமானத்துக்கும் அதற்கும் நேரடி தொடர்பு இல்லை.

நீங்களே பார்க்கலாம். வெண்முரசு வரிசையில் நீலம் அளவுக்கு எதிர்வினைகள் வேறெந்த நாவலுக்கும் வரவில்லை. சொல்லப்போனால் மிதமிஞ்சிய எதிர்வினைகள் காரணமாக நானே அதிலிருந்து வெளியேறி பிரயாகைக்குள் நுழையமமுடியாமல் இருக்கிறே--  இன்னும்கூட ஆரம்பிக்கவில்லை. நீலத்துக்கான வாசகர்கள் வேறு. அவர்கள் துரோணரின் கதையில் தர்ப்பையைத்தான் பார்த்திருப்பார்கள். கர்ணன் கதையில் சூரியன் எப்படியெல்லாம் பொருள் அளிக்கிறது என்று பார்த்திருப்பார்கள். வெண்முரசின் படிமங்களையும் மொழியாட்சியையும் அதிகம் கவனித்திருப்பார்கள்.

என்ன பிரச்சினை என்றால் இவர்கள் நான் மீண்டும் மழைப்பாடல் ,வண்ணக்கடல் பாணிக்குச் செல்லக்கூடாது என்கிறார்கள். சென்றால் வெண்முரசு கீழே இறங்கிவிட்டது என்பார்கள். அவர்களுக்கும் இதேதான் பதில். இதில் எல்லாமே உண்டு.

நீலம் வாசிப்பதற்குரிய ஆரம்பகாலத் தடை சிலருக்கு இருக்கலாம். அதன் நடை மொழிமேல் ஒரு கவனத்தை கோரியபடியே இருப்பதுதான் முதல் தடை. அதற்குரிய வழி அதை கதையாக ‘என்ன நடக்கிறது, அடுத்து என்ன?’ என்றவகையில் வாசிக்காமலிருப்பதே. அதை வரிவரியாக கவிதைபோல வாசித்தாலே போதும்.

ஜெ

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா