ரஜினி படம் ரிலீஸ் என்றால் காத்திருந்து எதிர்பார்த்து ரிலீஸ் ஆனதும் ஓடிபோய் பார்த்த அனுபவம் உண்டு.. அதேபோல சில உலக படங்கள் பார்க்க ஆசைப்பட்டு , வாய்ப்பு கிடைக்காமல் தவித்து , வாய்ப்பு வரும்போது ஆவலாக பார்த்த அனுபவம் உண்டு.
அதேபோல பார்க்க ஆசைப்பட்டு , வெகு நாள் காத்திருந்த ஒரு படம்தான் “ நடு இரவில்’ இயக்கம் எஸ் பாலச்சந்தர்.
இவரது இயக்கத்தில் வந்த பொம்மை , அந்த நாள் , அவனா இவன் போன்ற படங்களை பார்த்து விட்டேன்... நடு இரவில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. நெட்டில் பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை..
இந்த சூழலில்தான் சமீபத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.. செம மகிழ்ச்சி.. என் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா/?

அறிமுகப்பாடல்கள் , எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற செண்டிமெண்ட் காட்சிகள் , இன்னார் பெருமையுடன் வழங்கும் இன்னார் நடிக்கும் இந்த படம் என எதுவும் இல்லாமல் முதல் நொடியிலேயே படம் ஆரம்பித்து விடுகிறது..அந்த காலத்திலேயே இப்படி ஓர் ஆரம்பமா என வியந்தேன்... பணக்கார முதியவர் ஒருவர் தன் துப்பாக்கியில் குறி பார்ப்பது போல முதல் காட்சியே படத்தின் தன்மையை சொல்லி விடுகிறது..
சில நிமிடங்களிலேயே முக்கியமான கதாபாத்திரங்கள் , கதை எதை நோக்கி செல்லப்போகிறது என தெரிந்து விடுவதால் , படத்தில் ஈர்க்கப்பட்டு விடுகிறோம்.. இப்போதைய படங்களில்கூட இந்த விறுவிறுப்பு இருப்பதில்லை..
ஒரு தீவில் ஒரு பணக்கார முதியவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.. சில வேலைக்காரர்கள்.. மன நலம் சரியில்லா மனைவியை அவ்வபோது பார்த்து செல்லும் டாக்டர் நண்பன்...இவர்களைத்தவிர அங்கு யாரும் இல்லை...
அந்த பணக்காரர்க்கு கேன்சர் என்றும் சில தினங்களில் மரணம் உறுதி என்றும் அதனால் , கடைசி நாட்களை மன நிறைவுடன் செலவிட , அவரது உறவினர்களை அழைத்து இருப்பதாகவும் சொல்கிறார் டாக்டர்.. தனது திருமணத்தை ( கலப்பு மணம் ) ஒப்புக்கொள்ளாமல் இழிவு செய்த உறவினர்க்ளை பணக்காரர் விரும்பவில்லை..ஆனாலும் டாக்டர் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒப்புக்கொள்கிறார்..
அவர்கள் வந்ததில் இருந்து , அந்த தீவில் அச்சமூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன..பியனோ அதுவாகவே இசைக்கிறது... சிலர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்...
அந்த பணக்காரர் பழிவாங்க இப்படி செய்கிறாரா... அல்லது உறவினர்களை கொன்று விட்டு சொத்தை ஆட்டையை போட டாக்டர் விரும்புகிறாரா... அல்லது உறவினர்களில் ஒருவர் இப்படி செய்கிறாரா..அல்லது மன நலம் அற்ற மனைவி இப்படி செய்கிறாரா என எல்லோர் மேலும் சந்தேகிக்கிறோம்.. கடைசியில் மர்மம் விலகுகிறது..
இந்த கதையை விட , எடுத்த விதம் அற்புதம்.. ஒளிப்பதிவு , இசை , நடிப்பு , மெல்லிய நகைச்சுவை, அச்சமூட்டும் அமைதி , நிழல்கள் தரும் அமானுஷ்ய தன்மை என படம் பார்ப்பது அற்புத அனுபவம் அளிக்கிறது..
டைட்டில் இன்றி படம் ஆரம்பிக்கிறது .. ஒவ்வொரு உறவினராக பணக்காரர்க்கு அறிமுகம் ஆகும்போது , டைட்டில் போடும் யுக்தி சூப்பர்..
அப்போதும் கூட இயக்கம் யார் என்பது போடப்படுவதில்லை..
குறிப்பிட்ட ஒருவரை எல்லோரும் சந்தேகிக்கிறார்கள்>.. படம் முடியபோகும் நிலையில் , முக மூடி அணிந்த ஒருவனை சுட்டு சாய்த்து விட்டு, அந்த சந்தேகப்பேர்வழியை கொன்று விட்டதாக நினைத்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்>
அங்கே என்ன சத்தம் என ஒரு குரல்... பார்த்தால் , யாரை கொன்று விட்டதாக நினைத்தார்களோ அவர் சிரித்தபடி ஸ்டைலாக நிற்கிறார்...இந்த இடத்தில் இயக்கம் - எஸ் பாலச்சந்தர் என போடப்படுகிறது... செம கைதட்டல் .... இத்தனை ஆண்டுகள் கழித்தும் கைதட்டல் வாங்கும் அவரது மேதமையை வியந்தேன்..
இயக்கம் மட்டும் அல்ல.. நடிப்பிலும் கலக்கியவர் எஸ் பாலச்சந்தர்... தன் படங்களை ரசிக்கும் தகுதி வினியோகஸ்தர்களுக்கு இல்லை என நினைத்தவர் , திடீரென சினிமாவை விட்டு முழுக்க முழுக்க விலகி விட்டார்.. அதன் பின் இசையில் முழு மூச்சாக ஈடுபட்டு , பிற்காலத்தில் வீணை பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்...
பணக்காரராக மேஜர் சுந்தர்ராஜன் அவரது மனைவி பொன்னியாக (பண்டரிபாய்) வேலைக்காரர்களாக கொட்டாப்புளி ஜெயராமன், சோ, ராமானுஜம் மற்றும் சரோஜா
மருத்துவராக எஸ்.பாலசந்தர் அண்ணன்(சி.வி.வி. பந்துலு), அண்ணனின் மகள்(வி.ஆர்.திலகம்) மற்றும் அவளின் கணவன்(கோபாலகிருஷ்ணன்), கோபக்காரத் தம்பி (ஈ.ஆர்.சகாதேவன்), அவரின் மனைவி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்), மகள் (கல்பனா), கண்பார்வை இழந்த மற்றும் ஒரு தம்பி (வி.எஸ்.ராகவன்), அவரின் மகள் (சௌகார் ஜானகி), இரண்டு மகன்களுடன் (விஜயன், சதன்) வரும் மற்றொரு தங்கை (எஸ்.என்.லட்சுமி), இறந்துபோன மற்றொரு அண்ணனின் மனைவி (எஸ்.ஆர்.ஜானகி) , அவரது மகன் (மாலி)
என படம் முழுக்க நட்சத்திர பட்டாளங்கள் இயல்பான நடிப்பை வழங்கி உள்ளனர்..
இசையும் பாலச்சந்தர்தான்... இரண்டு இனிய பாடல்கள்...சற்று அமானுஷ்யம் கலந்த பாடல்கள்>.
மொத்த்ததில் நடு இரவில் --- கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்