சூரிய கதிரில் ( செப்டம்பர் 2015 )வெளியான அண்ணன் இமையம் அவர்களின் பேட்டி.....
பேட்டி எடுத்தவர் - உங்கள் பிச்சை
பேட்டி எடுத்தவர் - உங்கள் பிச்சை
எழுத்தாளன் உருவாகிறானா... உருவாக்கப்படுகிறானா... உங்களை எழுத தூண்டியது எது...
இரண்டும்தான்
நிகழ்கிறது. இரண்டில் ஒன்று மட்டுமே நிகழ்ந்தால் ஒருவர் முழுமையான எழுத்தாளராக மிளிர
முடியாது. என்னை எழுதத் தூண்டியது, எழுதுவதற்கு சிந்திக்கத் தூண்டியது நிகழ்கால சமூகமும்,
அதனுடைய வாழ்க்கை முறையும்தான். சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சுரண்டல்கள்,
உழைப்புச் சுரண்டல்கள், சாதிய மேலாதிக்கம், உலகமயம், கிராமவாழ்வு அதனுடைய தற்சார்பு
தன்மையிலிருந்து விடுபடுவது போன்ற பல சமூகக் காரணிகள்தான் எழுதத் தூண்டுகின்றன. கடவுளின்
அருளால் நான் எழுதவில்லை. நான் வாழ்கிற நிகழ்கால சமூகமும், அதனுடைய இயங்கியல் போக்கும்,
சிக்கல்களும்தான் என் எழுத்திற்கான அடிப்படை, ஊற்றுக்கண்.
இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை ?
நிஜமும்
புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே
எழுதினால் அது அறிக்கை. புள்ளி விபரத் தொகுப்பு. அறிக்கையை, புள்ளிவிபரங்களை, தகவல்களைத்
தொகுத்துத் தருபவன் வரலாற்று ஆய்வாளன். இலக்கியவாதி அல்ல. படைப்பாளி அல்ல. குறிப்பிட்ட
காலத்தில், குறிப்பிட்ட சமூகம், என்னென்ன விதமாக வாழ்ந்தது, வாழ்வதற்கு அச்சமூகம் மேற்கொண்ட
சமூக ஒழுக்கவியல், அறவியல், வாழ்வியல் பண்புகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் என்ன என்பதை
சொற்களின் வழியே உருவாக்கிக்காட்டுகிறவன், சொற்களில் சேமித்து வைக்கிறவன் எழுத்தாளன்.
வெறும் உண்மையை மட்டுமே எழுதுவது இலக்கியப் படைப்பல்ல. வெறும் புனைவை மட்டுமே எழுதுவதும்
இலக்கியப் படைப்பு அல்ல. உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம். வெறும் உண்மை
என்பது வேறு. கலை என்பது வேறு.
மேஜிக்கல் ரியலிசம் , சர்ரியலியசம் , ரியலிசம் போன்றவை குறித்து ?
இலக்கியப்
படைப்புகளில் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், இசங்கள் இரண்டாம்பட்சமானவை. ஒருவகையில்
அவசியமற்றவை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்கள்
வருகின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை போய்விடுகின்றன. அந்தந்த காலத்தில் உருவாகும்
கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்களுக்கேற்ப இலக்கியப் படைப்புகளும் சிலரால்
உருவாக்கப்படுகின்றன. தத்துவங்கள் இசங்கள் மாறும்போது, அதை முன்னிருத்தி எழுதப்பட்ட
இலக்கியப் படைப்புகளும் அந்த காலத்தோடு செத்துவிடுகின்றன. எக்காலத்திற்குமான கொள்கைகள்,
தத்துவம் என்று எதுவுமில்லை. காலத்திற்கு காலம் மாறும். ஆனால் இலக்கியப் படைப்பு அப்படி
அல்ல. காலத்திற்கு காலம் மாறாது. கொள்கைக்கு கொள்கை மாறாது. கொள்கைகளை, கோட்பாடுகளை
முன்னிருத்தியோ, அவற்றைப் பிரச்சாரம் செய்யும் விதமாகவோ எழுதப்படுபவை இலக்கியமல்ல.
பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கமல்ல.
கோவேறு கழுதைகள் வெளி வந்த போது மிகப்பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டன... இன்று திரும்பி பார்க்கையில் என்ன தோனறுகிறது
இலக்கியப்
படைப்பு பரபரப்புக்காக எழுதப்படுவதல்ல. பரபரப்பை உருவாக்குபவன் படைப்பாளியுமல்ல. பரபரப்புக்காக
எழுதப்படும் படைப்பு பரபரப்பு முடிந்ததும் செத்துவிடும். நான் பரபரப்புக்காக எழுதுகிறவனல்ல.
கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நாவல் இன்னும் வாங்கப்படுகிறது.
வாசிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அந்த நாவல் குறித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட
சர்ச்சைகள், வீண்வாதங்கள், பழிகள், பரபரப்புகள் எல்லாம் உருவான வேகத்திலேயே செத்துவிட்டன.
படைப்புதான் நிற்கும். பரபரப்பு அல்ல. சர்ச்சைகள் அல்ல. அப்போதும் சரி, இப்போதும் சரி
நான் எந்தவிதமான வீண்சர்ச்சைகளிலும் ஈடுபட்டதில்லை. சர்ச்சைகளில் ஈடுபடுவது, சர்ச்சைகளை
உருவாக்குவது எழுத்தாளனின் வேலை அல்ல என்பதால் நான் அப்போது எந்த சலனமும் அடையவில்லை.
சர்ச்சைகளின் வழியே ஒரு படைப்புக்கு எந்த மதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. படைப்பின்
தரம்தான் அதற்கான மதிப்பையும் வாழ்வையும் தீர்மானிக்கிறது.
குறிப்பிட்ட இன , மத அடையாளங்களுக்குள் சிக்க விரும்பாதவர் நீங்கள்... இதனால் உங்களை எந்த தரப்பும் நம் ஆள் என ஏற்க முடியாத நிலை வரலாம் அல்லவா...
ஆதரவாக
எழுதுவது, எதிராக எழுதுவது என்பது என் எழுத்தின் நிலைப்பாடு அல்ல. உண்மையை எழுதுவது,
அதை சமரசமின்றி, சார்பின்றி எழுதுவதுதான் என் நிலைப்பாடு. இதுவரை அப்படித்தான் எழுதிவந்திருக்கிறேன்.
இனியும் அப்படித்தான் எழுதுவேன். நான் ஒரு சாதியில் பிறந்துவிட்ட காரணத்தால் என் எழுத்து,
குறிப்பிட்ட சாதி சார்ந்துதான் இருக்கும், சுயசாதி சார்ந்த பெருமைகளை, இழிவுகளையே பேசும்
என்று நம்புவதும், முத்திரை குத்துவதும், அடையாளப்படுத்துவதும் இழிவான செயல். அடிப்படையில்
நிஜமான எழுத்தாளன் சாதிக்கு, சாதிய மனோபாவத்திற்கு, சாதிய மேலாதிக்கத்திற்கு, சாதியமைப்புகளை
கட்டிக்காக்கும், பாதுகாக்கும், வளர்க்கும் எல்லாவிதமான கலாச்சார பண்பாட்டுக்கூறுகளுக்கும்
எதிரானவன். சாதி கூடாது, சாதி சார்ந்த இழிவு கூடாது என்று எழுதுகிறவர்களே சாதி சார்ந்த
அடையாளத்தை விரும்புவது. அதை பெருமையாக பேணுவது ஏற்புடையதல்ல. சாதிசார்ந்த அடையாளங்களுடன்
எழுதப்படுவதும், படிக்கப்படுவதும், கொண்டாடப்படுவதும், சாதி சார்ந்த பண்புகளை மேலும்
இறுக்கமாக்கிவிடும். அக்காரியத்தை இலக்கியப் படைப்பு செய்யக்கூடாது. படைப்பாளி செய்யக்கூடாது.
சாதியை வளர்ப்பதற்காக இலக்கியப் படைப்புகள் எழுதப்படுவதில்லை. பிற்போக்குத்தனங்களுக்கு,
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது.
செடல் நாவல் உருவான பின்னணி குறித்து ?
, நான்
எழுதிய நாவல்களிலேயே மிகவும் முக்கியமானது 'செடல்'. தமிழகத்தில் இசைவேளாளர் இனத்தை
சேர்ந்தவர்களைத்தான் கோவில்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவார்கள் என்ற சமூக நம்பிக்கையை,
செடல் பொய்யென நிரூபித்தது. தாழ்த்தப்பட்டவர்களிலேயே கடைநிலையில் இருக்கக்கூடிய - தெருக்கூத்து
ஆடுவதைத் தொழிலாகக்கொண்ட இனத்துப்பெண்ணையும் பொட்டுக்கட்டுவார்கள் என்ற நிஜமான வரலாற்றை
சொன்ன நாவல். ராஜாக்கள் கட்டிய பெரியபெரிய கோவில்களில் மட்டும்தான் பொட்டுக்கட்டுவார்கள்
என்பது மட்டுமல்ல சாதாரண கிராமத்துக் கோவில்களுக்கும் பொட்டுக்கட்டிவிடுவார்கள் என்ற
உண்மையை சொல்கிறது. சட்டரீதியாக தமிழகத்தில் பொட்டுக்கட்டும் மரபு ஒழிக்கப்பட்டுவிட்டது
என்பதை பொய்யென நிரூபித்தது மட்டுமல்ல, அது இன்னும் தமிழக கிராமங்களில் நடைமுறையில்
இருக்கிறது என்பதை சொன்னது செடல். அதோடு சாதாரண மக்களுடைய கலையாக இருந்த தெருக்கூத்துப்
பற்றியும், அதனுடைய அழகியல் கூறுகளையும், மேன்மைகளையும் கலைத்தன்மையோடு விவரிக்கிறது
நாவல். சிலப்பதிகாரத்திற்குப் பிறகு தமிழில் கூத்துக் கலையின் அடவுமுறைகளைப்பற்றி விரிவாக
பேசிய இலக்கியப் படைப்பு செடல் நாவல்தான். செடல் என்னுடைய ஊர்க்காரர். என்னுடைய இளமைக்காலத்திலிருந்து
அவருடைய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கரிநாள் அன்று "பொங்க காசு கொடுங்க"
என்று கேட்டு வந்தபோதுதான் செடலைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.
எங்கதே நாவல் உங்க்ள் நாவல்களில் சற்று வித்தியாசமானது.. ஆனால் முழுக்க முழுக்க ஆண் பார்வையிலான நாவல் என்ற விம்ர்சனம் குறித்து ?
சங்க
காலத்திலிருந்து இன்றைய காலம்வரை காதலால், காதலின் ஏமாற்றத்தால், காதல் கைக்கூடாததால்,
பெண்கள்தான் ஏங்குவார்கள், அழுவார்கள், காத்திருப்பார்கள் என்று இலக்கியங்களின் வழியே
கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதை சமூகமும் முழுமையாக நம்பி வந்திருக்கிறது. இலக்கியங்கள்
உருவாக்கிக்காட்டுகிற துயரமும், சமூக நம்பிக்கையும் முழுஉண்மை அல்ல என்பதை சொல்கிறது
"எங் கதெ" நாவல். காலம்காலமாக
இலக்கியப் படைப்புகள் கட்டமைத்த மதிப்பீட்டிற்கு, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு எதிராக எழுதப்பட்டிருப்பது "எங் கதெ". மரபை உடைத்திருக்கிறது
இந்த நாவல். காதலில் ஆணும் ஏமாற்றப்படலாம், துயரப்படலாம், கண்ணீர் சிந்தலாம், ஏங்கலாம்,
காத்திருக்கலாம், அவஸ்தைப்படலாம் இதுவும் சாத்தியம்தான், உண்மைதான் என்பதை சொல்கிறது
எங் கதெ நாவல். ஆணின் வலியை அழுகையை, ஆணினுடைய பார்வையில் சொல்வதுதானே பொருத்தம்?
சுய சரிதையை சிலர் நாவல் என்கிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தீர்கள். ஆட்டோஃபிக்ஷன் என்பதும் இலக்கிய வகைகளில் ஒன்றுதானே..
ஆட்டோ
ஃபிக்ஷன் இலக்கிய வகைகளில் ஒன்றுதான். நாவலுக்கும், தன்வரலாற்றுக்கும், தன்வரலாற்றுக்கதை
நாவலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடு எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும்
தெரியாமல் இருப்பதுதான் விநோதம். தெரியாது என்பதைவிட தெரிந்தே செய்கிறார்கள் என்பதுதான்
ஆச்சரியம். நாவலை - நாவல் என்றும், தன்வரலாற்றை தன்வரலாறு என்றும், தன் வரலாற்றுக்கதை
நாவல் என்பதை, தன் வரலாற்றுக்கதை நாவல் என்றும் எழுதுங்கள், வெளியிடுங்கள் என்பதுதான்
என் வேண்டுகோள். தன்வரலாற்றை நாவல் என்று போடாதீர்கள். அப்படிப்போட்டால் அது இலக்கிய
மோசடி. இந்த மோசடியை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் சேர்ந்தே செய்கிறார்கள். இப்படி
ஏன் செய்கிறீர்கள் என்று வாசகனும் கேள்வி கேட்பதில்லை என்பது இன்னும் மோசம். நம் எழுத்தாளர்களுக்கு
எழுதத் தெரியவில்லை, நம் வாசகர்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தமாகிறது.
இது மொழிக்கு இழிவு அல்லவா?
எழுத்துப்பிழைகளை கண்டு கொள்ளாதீர்கள்.... கருத்தை மட்டும் பாருங்கள் என சில நாவலாசிரியர்கள் சொல்கிறார்களே..
. அப்படி
சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எழுத்துப்பிழை முக்கியமில்லையா? அப்படியென்றால்
எது முக்கியம்? கருத்துப்பிழை, வாக்கியப்பிழை, காலக்குழப்பம் முக்கியமில்லையா? படைப்பு
சொல்ல வந்த கருத்து மட்டும்தான் முக்கியமா? இலக்கியம் மொழியால்தானே உருவாக்கப்படுகிறது.
இலக்கியப்படைப்பிற்கு அடிப்படையே மொழிதானே. அதுவே சரியில்லையென்றால் எப்படி? இது ஒரு
மனிதனுக்கு உயிர் மட்டும்தான் முக்கியம் என்று சொல்வதுபோலிருக்கிறது. ஒரு மனிதனுக்கு
உயிர்மட்டும் இருக்கிறது, காது கேட்கவில்லை, கண்தெரியவில்லை, கைகால்கள் ஊனமாக இருக்கின்றன
என்றால் அந்த மனிதனை எப்படி சொல்வீர்கள்? ஊனமானவர், குறை உடையவர் என்றுதானே. அப்படித்தான்
இலக்கியப்படைப்பும். எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை, கருத்துப்பிழை, காலக்குழப்பம் இருந்தால்
அது ஊனமான படைப்புத்தான். குறை உடைய படைப்புத்தான். ஒரு இலக்கியப்படைப்பின் வழியே எழுத்தாளன்
கதையை மட்டும் சொல்வதில்லை. மொழியை உருவாக்குகிறான். மொழியைப் புதுப்பிக்கிறான். மொழிதான்
எழுத்தாளனுக்கான ஆயுதம். அதன் மூலம்தான் அவன் ஒரு வாழ்வை உருவாக்கிக் காட்டுகிறான்.
கதவை திறந்துகொண்டுதான் வீட்டிற்குள் செல்ல முடியும். ஒரு படைப்பிற்குள் செல்வதற்கு
கதவைப்போன்றது மொழி.மொழியே சரியில்லை என்றால் எப்படி? எழுத்துப் பிழை, கருத்துப் பிழை,
வாக்கியப் பிழை, காலக்குழப்பத்துடன் எழுதப்படுவதுதான் தூய, அதி உன்னத இலக்கியமா?
தலித்திய பெண்ணிய எழுத்துகளுக்கான தேவை குறித்து ?
தலித்திய,
பெண்ணிய, மார்க்சிய, முற்போக்கு, விளிம்புநிலை, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம், இருத்தலியல்
போன்ற அடையாளங்களுடன் இலக்கியப்படைப்புகள் உருவாக்கப்படுவது ஏற்புடையது அல்ல. அடையாளங்கள்
சிறந்த படைப்பிற்கு தடையாக இருக்கும். எழுதுவதற்கும், படிப்பதற்கும். சார்பு தன்மை
இருந்தால் அது படைப்பை ஊனப்படுத்தும். கொள்கைகளையும், கோட்பாடுகளையும் முன்னிருத்தாமல்
வாழ்வையும், அதனுடைய போக்கையும், மாற்றத்தையும் அதனுடைய இயங்கியல் போக்கிலேயே அணுகி
எழுதவேண்டும். தலித்திய, பெண்ணிய, மார்க்சியம் போன்ற அடையாளங்கள் எழுத்தாளருக்கும்
நல்லதல்ல, படைப்பிற்கும் நல்லதல்ல. அடிப்படையில் இலக்கியப்படைப்பு அடையாளங்களுக்கு,
வரையறைகளுக்கு, முத்திரை குத்தப்படுவதற்கு எதிரானது. அடையாளங்களை எழுத்துக்கான பெருமையாக,
எழுத்தாளனுக்கான பெருமையாகக் கொள்ளக்கூடாது. அப்படிக்கொண்டால் அது குறிப்பிட்ட படைப்பிற்கான,
படைப்பாளிக்கான வீழ்ச்சியல்ல. மொழிக்கான பெரும் வீழ்ச்சி.
அருமை
ReplyDelete