Pages

Tuesday, January 10, 2017

மறக்க முடியாத குமரகுருபரன் கவிதை


குமரகுருபரனின் ஞானம் நுரைக்கும் போத்தல் நூல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்காக நான் திட்டமிட்டிருந்த உரை , நேரமின்மை காரணமாக அங்கு பேச முடியவில்லை..இங்கே பதிவேற்றுகிறேன்

-----

அனைவர்க்கும் இனிய மாலை வணக்கம்..

குமரகுருபரன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.. நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதையை வாசித்து ஏன் பிடித்திருக்கிறது என சொல்லுங்கள் என ஆணையிட்டு விட்டு என் சம்மதத்துக்குக்கூட காத்திராமல் லைனை கட் செய்து விட்டார் கவிதா..

அங்கு வருபவர்கள் எல்லாம் இலக்கிய ஜாம்பவான்கள்... அப்படிப்பட்ட இரும்புக்கடையில் இந்த ஈக்கு என்ன வேலை என ஒரு கணம் நினைத்தேன்.. இன்னொன்று ..குமார் கவிதைகள் அனைத்துமே பிடிக்கும்.. இதில் எதை பேசுவது என்றும் குழப்பம்.. சரி. கவிதை எல்லாம் வாசிக்கவில்லை.. வறேன்.. பஃபே டின்னர் சாப்பிட்டு விட்டு கவிதைகளை கேட்டு விட்டு நண்பர்களைப் பார்த்து பேசி விட்டு கிளம்புகிறேன் என சொல்ல நினைத்தேன்.. ஆனால் அவர் போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை...அவள் அப்படித்தான் என நினைத்துக்கொண்டேன்.

 நண்பர்களே... அவர் கவிதைகள் எல்லாம் பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட கவிதையை சொல்ல விரும்புகிறேன். அவரது சில கவிதைகளை அவ்வபோது ரிலாக்ஸ் செய்ய படிக்கலாம்..சில கவிதைகளை சற்று மன தளர்ச்சியின்போது படித்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.. சிலவற்றை மகிழ்ச்சியான தருணங்களில் அந்த சந்தோஷத்தை கவிதையுடன் கொண்டாடலாம். சில கவிதைகளை ப்ரிண்ட் எடுத்து கண்ணில் படும்படி ஒட்டி தினமும் படிக்கலாம்.. அப்படிப்பட்ட கவிதை இது.
----------------------------------------------------------
சிதைந்து போன கனவுகளில் ஒன்று 
எழுந்து போகாமல் அருகிலேயே 
அமர்ந்திருந்தது.

வெகு நேரமாய் அது பேசாமல் இருக்கவும் 
அந்த கனவு உருவான தருணம் குறித்த
ஓவியமொன்றை வரைந்து அளித்தேன்.

தன் முழுமை
தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு.

இருக்கலாம்
அதற்குள் நானும் நீயும் நம்பிக்கையுடன்
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும்
அல்லவா என்றேன்.

கனவற்று போன நொடியும்
அதற்குள்ளாகத் தானே இருக்கிறது
என்றது சிதைந்த கனவு.

உன் கனவுக்குள்
உன் கனவு உட்கார்ந்திருந்த சமயமும்
அதற்குள் தான் என்றேன்.

புதிதாக ஒன்றைக் கனவு காண் என்றது

சிதைந்த கனவொன்றை
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன் என்றேன்.

மயில் ஆட மறப்பினும்
மயில் இறகு ஆடும்.

சிதைந்த கனவு எழுந்து
எனக்குள் மறுபடியும் வந்தது.

இந்த முறை
நான் அமைதியாக அதனை
அணைத்துக் கொண்டேன்.

கனவின் சிதைவும் கனவே
காணீர்


----------------------’’

இது ஆயிரம் வாசல் இதயம்..அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். நம் கனவுகள் எத்தனை எத்தனை..

நண்பர்களே.. நானும் சில நண்பர்களும் முழுக்க முழுக்க இயற்கை வழியில் நடக்கும் விவசாயம் ஒன்றை கனவு கண்டோம்.. விவாதித்தோம்..உழைத்தோம்...எத்தனை இனிமையான நினைவுகள்.. ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை.. கெமிக்கல் உரங்களுக்கு மாறினோம்..இன்று நன்றாக நடக்கிறது.. ஆனால் அந்த கனவு சிதைந்து விட்டது...

இதனால் நான் வருந்திய இரவுகள் ஏராளம்..
ஆனால் இக்கவிதை என்னை மீட்டெடுத்தது

சிதைந்த கனவொன்றை 
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன்
நானும் நீயும் நம்பிக்கையுடன் 
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும் 
அல்லவா

இவ்வரிகள் என்னை ஏதோ செய்தன....   அந்த கனவு சிதைந்து இருக்கலாம்.. ஆனால் அந்த கனவின் ஆரம்பன கணங்களில் அது கொடுத்த நம்பிக்கை...அதன் இனிய நினைவுகள் அப்படியேதான் இருக்கின்றன...அந்த கணத்தை ஒரு பொக்கிஷம் போல , மயிலிறகாக்கி காப்பாற்ற வேண்டாமா என இக்கவிதை என்னிடம் வினவியது

அந்த கனவு உருவான தருணத்தை ஓவியமாக்கி என் முன் உலவ விட்டது கவிதை

இபப்டி உலவ விட்டால் நான் என்ன கேட்பேன் என்பதையும் எனக்காக குமார் யோசித்து என் சார்பில் எழுதுவார்

தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை 
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு

அந்த இனிய நினைவுகளை நினைக்கையில் அதன் அழிவும் நினைவுக்கு வருமே

-வரட்டுமே..அந்த நம்பிக்கையும் இனிய நினைவுகளும் அதற்குள்தானே இருக்கின்றன

-இதற்கு மேல் பேச முடியாமல் அந்த இனிய நினைவுகள் என்னுள் படர்தன

மயில் ஆட மறப்பினும் மயில் இறகு மறக்குமோ

என்னவொரு ஆழமான படிமம்

நம் மனம் இயங்க மறப்பினும் ஆழ் மனம் , ஆழ மனத்தை கடந்த நான்.. ஆன்மா... துரிய நிலை என எங்கேயோ அழைத்துச் செல்கிறது இந்த வரிகள்

கனவு சிதைவுமேகூட கனவுதான்..

பிக் பாங்க் மூலம் உலகம் உருவான அந்த முதல் கணத்திலேயே , அது எப்படி வளர வேண்டும் ..எப்படி சிதைய வேண்டும் போன்ற்வை தீர்மானிக்கப்பட்டு விட்டன

சிதைவு என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல...அதுதான் வளர்ச்சி... நிலை மறுத்தல் , நிலை மறுத்தலை நிலை மறுத்தல் என க்ம்யூனிச நூல்களில் சொல்கிறார்களே.. எண்ட்ரோபி என அறிவியலில் சொல்கிறார்களே... விதையின் சிதைவுதான் கோதுமை.. கோதுமையின் சிதைவுதான் மீண்டும் விதை

விதை சிதைந்து மீண்டும் கோதுமை சிதைந்து விதை ஆகும்போது , முன்பு இருந்ததைவுட பல மடங்கு விதை உற்பத்தி ஆகி இருக்கும்..

கனவின் சிதைவும் கனவே கண்டீர்


அமைதியாக நம் கனவுகளை அணைக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வில் ஏது துயரம்.. ஏது வன்முறை.. ஏது ஆசிட் வீச்சுகள்.. வன்முறைகள் ..தற்கொலைகள்

லைஃப் இஸ் அ செலப்ரேஷன்.. செலப்ரேட் இட்..லைஃப் இஸ் அ கேம்..ப்லே இட்.. என கற்றுத்தரும் இக்கவிதை ப்ரிண்ட் செய்யபட்டு ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் லாமினேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இப்போதைய என் கனவு என சொல்லி விடைபெறுகிறேன்.    நன்றி... வணக்கம்



2 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]