Pages

Wednesday, June 7, 2017

விஜயகாந்த் அழைப்பை மறுத்த குமரகுருபரன்....குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா சிறப்புப் பேட்டி …

   

தமது நண்பர்களை ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் பொருட்டு ,  தமக்கு சம்பந்தம் இல்லாத பெரிய எழுத்தாளர்  பெயரில்
சிலர்விருது கொடுப்பது தமிழ்ச்சூழலில் ஒரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.. இந்த விருதுகள் சிலர் பெறும் டாக்டர் பட்டம் போன்றது… எங்கும் அதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள இயலாது..
ஆனால் விஷ்ணுபுரம் விருது கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்படுவது… அந்த விருதைப் பெறுவது முக்கிய அங்கீகாரமாக உருவாகி உள்ளது…
கவிஞர் குமரகுருபரன் தமிழகத்தின் முக்கியமான அடையாளங்களில் – டிரெண்ட் செட்டர்களில்- ஒருவர்.. கவிஞராக அல்லர்… கவிதையாகவே வாழ்ந்தவர்,,, கொண்டாட்டமான ஒரு கவிஞர்,,, வாழ்வின் உன்னத கணங்களை உள்ளத்தால் தொட்டு உணர்ந்து எழுத்தால் வடிவம் கொடுத்தவர்..
இந்த இருவரின் பெயரால் குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது" வழங்கப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டபோது சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல இருந்தது,…
 நிறைவானது  வரும்போது குறைவானது ஒழிந்து போம் என்கிறது பைபிள்…  அதுபோல இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கையில் கீழ்மையான சில முயற்சிகள் அவைகளாகவே காணாமல் போய் விடும் என்பதால் இந்த அறிவிப்பு அனைவருக்குமே உற்சாகம் அளிப்பதாக இருந்தது..
இந்த விழா குறித்து குமரகுருபரனின் முதன்மை ரசிகரும் அவரை அனுதினமும் ஆராதனை செய்பவருமான கவிதா சொர்ணவல்லியுடன் பேசினால் இன்னும் சில விபரங்கள் கிடைக்குமே என எண்ணினோம்.. அவருடன் பேசியதில் இருந்து…
 

( முன் குறிப்பு… அன்பின் மிகுதியால் குமரகுருபரனை குமார் என்றும் அவன் இவன் என்றும் பேசுவது கவிதாவின் இயல்பு… எனவே அவர் சொன்னது அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.. குமரகுருபரன் நண்பர்களும் வாசகர்களும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )


  



விருது அளிக்கும் எண்ணம் எப்படி உருவானது?


- விருதுகள் என்றில்லாமல், பொதுவாகவே திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது குமாரின் எண்ணம். அதை வெற்று எண்ணமாக மட்டுமே வைத்திருக்காமல், செயல்படுத்தியதிலும் குமார் அதீதன். அவனுடைய கல்லூரி காலங்களில் இருந்தே அதை முன்னெடுத்திருக்கிறான் ஊடகங்களில் பெரிய பொறுப்புகள் வகித்தபோது, அவன் தேர்வு செய்து பணி வழங்கிய ஏராளமானோர் இன்று பெரிய பொறுப்புகள் வகித்து வருவதே குமாரின் "அங்கீகார மனதிற்கு" சான்று.


இந்த எண்ணத்துக்கான விதை குமார் போட்டதுதான்..

குமரகுருபரன் பெயரில் விருது வழங்கும் இந்த சூழலில் அவர் பெற்ற விருதுகள் குறித்து சொல்லுங்களேன்  


"ஞானம் நுரைக்கும் போத்தல்" கவிதை நூலுக்கு "ராஜ மார்த்தாண்டன்" விருது கிடைத்தது. அது முதல் விருது. ஆனால், அப்போது இந்தியா முழுவதும் கருத்துரிமைக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட "விருது திருப்பியளிப்பு போராட்டத்திற்கு" ஆதரவளிக்கும் வகையில் "ராஜ மார்த்தாண்டன்" விருதை ஏற்க குமார் மறுத்துவிட்டான்.

அடுத்ததாக "மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது" கவிதை நூலுக்காக "கனடா இலக்கியத் தோட்டம்" விருது கிடைத்தது.

அவரும் நீங்களும் இதை.செய்ய வேண்டும் என ஏதாவது விவாதித்து இருக்கிறீர்களா...


நிறைய ஆன்லைன்தான் ஊடகத்துறையின் எதிர்காலம் என்று பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே விகடனில் எழுதியவன் குமார். ஆன்லைன் பத்திரிக்கைகள், ஆன்லைன் செய்திதளங்கள் என்பதில் குமாருக்கு ஆர்வம் இருந்தது. பத்திரிகையாளன் என்பதால் அரசியல் என்பது குமாருடைய எதிர்கால திட்டமாக இருந்தது. ஒரு முறை விஜயகாந்துடனான நேரடி பேட்டி முடிந்த தருணத்தில், கட்சியில் சேருமாறு அவர் அழைக்க அதை தன்மையாக மறுத்து திரும்பி இருக்கிறான். குமார் திமுகவின் அனுதாபி என்பதால், அரசியலில் ஈடுபடுவது பற்றி பேசி இருக்கிறோம். சினிமாதான் உலகம் என்பதால் அதிகம் சினிமா பற்றிதான் பேச்சுக்களே. நல்ல சினிமா ஒன்று என்பது குமாரின் லட்சியம். வாசிப்பு என்பது சுவாசம். அயராது வாசிப்பான். ஆங்கிலம், தமிழ் என்று புத்தகங்களால் நிறைந்திருக்கும் வீடு. நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்வான். அது பற்றி விவாதிப்போம். இப்படி நிறைய.

தோழியுடன் இணைந்து இணையதள கனவை நனவாக்கி இருக்கிறோம். இலக்கியத்திற்கு செய்வதற்கான நேரம் இப்போது கூடி இருக்கிறது. மற்றவைகள் எப்படி என்று இப்போதைக்கு தெரியவில்லை



விருது குறித்து ஜெயமோகன் அறிவித்தார்,, நீங்கள் தீவிர ஜெயமோகன் வாசகர் என்பதை அறிவோம்…  இந்த அறிவிப்புக்கு இதுதான் காரணமா ?

வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் நேர்ந்த தருணங்களில் எல்லாம், ஜெமோவின் எழுத்துக்களை கைப்பற்றியே, அதனை கடந்திருக்கிறான் குமார். அதனாலேயே ஜெமோ மீது அதீத வாஞ்சையும், பிரியமும் குமாருக்கு உண்டு. அதனால்தான் அவன்
பெயரிலான விருதை ஜெமோவே அறிவிக்க வேண்டும். அவர்தான் அதற்கு முழுவடிவம் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

இருந்தாலும், முதலில் ஜெமோவிடன் இதை கொண்டுபோகவில்லை. அரங்காவிடம்தான் பேசினேன். அரங்கா - ஜெமோவிடம் பேசினார்.



இது குறித்து எங்கு எப்போது பேசப்பட்டது




 ஜெமோவை நேரில் பார்த்து பேசியது சாரு மகன் திருமண வரவேற்பின்போதுதான். விருது பற்றிய எண்ணம் மட்டுமே நான். அதனை முழுமையாக உருவாக்கியதில் முழுப்பங்கு ஜெமோவிற்கே.

"குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது" முதலில் யாருக்கு வழங்கப்பட இருக்கிறது ?

கவிஞர் சபரிநாதன் இந்த ஆண்டுக்கான "குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது (அதாவது முதல் விருதை) பெறுகிறார்.

விழா எங்கு நடைபெறுகிறது ? இடம் நேரம் நாள் ?


விழா சென்னையில் வைத்து நடைபெறுகிறது. வடபழையின் உள்ள பீமாஸ் ஹோட்டலில். வரும் சனிக்கிழமை ஐந்து மணிக்கு.


 குமரகுருபரனின் நூல் வெளியீட்டு விழாக்கள் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான பிரத்யேக விழாவாக நடந்தன.. இந்த விழா ?


இல்லஇல்ல. இது எல்லாருக்குமான விழாதான் எல்லோரும் வரலாம்.
அனைவரையும் வரவேற்கிறோம்

------------------


சபரி நாதன் கவிதைகளில் சில
------------------------------------------


ஒரு மழைப்பூச்சியை அறிதல்

பழைய அலமாரியிலிருந்தெடுத்த
ஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்
நசுங்கிக் காய்ந்திருந்தது மழைப்பூச்சியொன்று
அருகே சென்று பார்த்தபோது தான்
அதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது
அதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன
அதன்கீழே  இரு பொடி கன்னங்கருவிழிகள்
வரிவரியாயிருந்த அதன் இரைப்பை புடைத்த பொற்பொதியென மினுங்கியது
சற்றும் எதிர்பார்த்திராதது
அதற்கு தன் உடலைப் போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது
ஒளிகொள் சிறகுகள்
நின்று பார்வை அகலும்
கணத்தில் காண்கிறேன்
அதற்கு உயிர் இருக்கிறது


முள்
கனிந்த குலைத்திராட்சையைக் கொய்யும் கரமென
தரையிறங்குகிறது இரவு கருவேலங்காட்டிற்குள்
பகல்முழுதும் எச்சமிட்ட குயில்கள் செட்டையடித்துப் போனபின்
ஓணான்முட்டைகளுக்கென நிழலற்றிய முட்செடி அசைவை நிறுத்துகிறது
முன் ஜென்மத்தில் அது மூன்றுபத்தி வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தது
பவளமல்லிக்கும் கொடிவீசும் பிச்சிக்கும் மஞ்சள்ரோஜாவிற்குமிடையே
அதிகாலையில் அவற்றோடு உசாவிச்செல்லுமது
களைத்து வீடுதிரும்பி சாய்வுநாற்காலியில் விழுந்து
தன்னுடல்பூத்த முட்கள் ஒவ்வொன்றாய் ஒடித்துப்போடும் ஒவ்வொரு ராவிலும்
இப்போது அதன் வேர்முடி ஒளியைக்கண்டு அஞ்சியோடுகிறது
எந்தச் சாளரமும் எட்டாத தொலைவில் அது தூக்கத்தை விளிக்கிறது


விழிப்படைந்த கத்தி
நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி
தவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது
இப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.
இனி அதற்கு எதுவும் தேவை இல்லை
தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்
குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்
சட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத்த கருணை;
பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி
சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.
நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது
மழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்
காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.


தானியங்கி நகவெட்டி
முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது
சீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்
ஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன
சமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்
விலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது
என்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்
அதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது
அலறும்:நான் ஏ..ன் பிறந்தேன்?
நகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.
***


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]