Sunday, June 10, 2018

கியாரே செட்டிங்கா -காலா வசனகர்த்தாபேட்டி


கா லா  படத்துக்கு வசனம் எழுதியவர்களில் ஒருவரான மகிழநன் விகடனுக்கு வழங்கியபேட்டி


 . 
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல் கண்ணோட்டம் இங்கே இருந்த பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகலை. பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்ற மகிழ்நனிடம் சில கேள்விகள்.  


காலா
"இயக்குநர் ரஞ்சித்துடனான பழக்கம்..?"
"தோழர் ரஞ்சித் எனக்கு முகநூல் நண்பர். அவ்வப்போது நான் எழுதுவதைப் படித்திருக்கிறார். அப்பப்போ போன்ல பேசியிருக்கோம், பின்னர் உற்ற நண்பர் ஆனார். 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி இயக்குநர் என்ற தோரணை எதுவுமே அவரிடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. 'கபாலி' முடிந்ததும் ஒருநாள் போன் பண்ணி, 'தோழர் வாங்க, தாராவி போயிட்டு வருவோம்'னு சொன்னார். இணை இயக்குநர்கள் பார்த்தி, ஜெனியோடு போய் அங்கே நாங்க சந்திச்ச மனிதர்கள்தான், 'காலா' கதாபாத்திரங்கள் ஆனார்கள். 


நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் யார்னு சொல்ல முடியும். உதராணத்துக்கு, செல்வி கதாபாத்திரம் பல தாராவி பெண்களோட பிரதிபலிப்பாக இருந்தது. ஆரம்பத்துல என்னை வசனம் எழுதச் சொல்வார்னு தெரியாது. எனக்கு ரஞ்சித் தோழரை ரொம்பப் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேலை செய்யணும்னுதான் அவர்கிட்ட கேட்டேன். 'கொஞ்சம் பொறுங்க, உங்களுக்குனு ஒரு வேலை இருக்கு'னு சொன்னார். பிறகு, கதை விவாதத்துல இணைச்சுக்கிட்டார். வசனம் எழுதுறதுக்கு ரஞ்சித், ஆதவன் தோழர்களோடு நானும் சேர்ந்துக்கிட்டேன்." 
"நீங்க தாராவியைச் சேர்ந்தவர்னுதான் வசனம் எழுத வச்சாங்களா?"
"படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஏன் வசனம் எழுதுற வேலை கொடுத்தார்னு புரிஞ்சது. ரஞ்சித் தோழர்கிட்ட தாராவியைப் பத்தி நான் பல விஷயங்கள் பேசியிருக்கேன். நான் பேசுற தமிழும் திருநெல்வேலி ஸ்லாங்கும்கூட காரணமா இருக்கலாம். படத்துல இயக்குநர் காட்சிக்குத் தேவைப்படுற வசனங்களைக் கேட்பார். அவருக்குத் தேவையான வசன ஆப்ஷன்ஸ் கொடுக்கிறதுதான் என் வேலை. நல்ல வசனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்ததும் திருத்தினதும் இயக்குநர்தான்." 


காலா காட்சியில் மகிழ்நன்
" 'கியாரே... செட்டிங்கா' வசனம் உருவான விதத்தைச் சொல்லுங்க, படத்துல பன்ச் வசனங்கள் கம்மியா இருக்கக் காரணம் என்ன?" 
"பாம்பேல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ரஞ்சித் தோழர், 'ஒரு பன்ச் வசனம் எழுதனும்'னு சொன்னார். எனக்கு ரஜினி சாருக்கு பன்ச் எழுதுற டென்ஷனைவிட, தோழருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு டென்ஷன். சில ஆப்ஷன்ஸ் கொடுத்தேன். அதுல, இயக்குநர் ரஞ்சித் தேர்ந்தெடுத்ததுதான், 'கியாரே செட்டிங்கா' வசனம். மக்களோடு மக்களாக இருக்கிற காலா பன்ச் வசனங்களைவிட, மக்களோட உணர்வுகளைப் பேசணும். கதையோட எல்லையும் அதுதானே!"


"தாராவி மக்கள்ல ஒருத்தனா நீங்க சந்திச்ச பிரச்னைகளைப் படத்துல ரஜினி பேசுனதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது?"
"தாராவில நான் 10x10 ரூம்லதான் பிறந்தேன். பெரும்பாலான இரவுகள்ல வீட்டுக்கு வெளியே உறங்கும் நிலைதான் எனக்கு. காலா கதாபாத்திரம், தாராவி பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் பல இளைஞர்களோட பிரதிபலிப்புதான். படத்தில் பேசும் அரசியல், துண்டு பிரசுரம் கொடுப்பது, சமூகம் சார்ந்து பேசுற பசங்க... என எல்லாம் நிஜ தாராவியில் நடக்கும் விஷயம்தான். சமுத்திரக்கனி கதாபாத்திரம்கூட தாராவியில் இருக்கும் பல மனிதர்களோட பிரதிபலிப்புதான்."  
தாராவி


"படத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வசனங்கள் உள்ளதா?"            
"ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி தாராவியை டாப் ஆங்கிள் ஷாட்டில் எடுத்தார்கள். அதை எனக்குப் போட்டுக் காட்டும்போது என் கண் கலங்கிடுச்சு. படத்துல செல்வி கதாபாத்திரம் பேசுற பல வசனங்கள் எங்க அம்மா என்னை எப்படித் திட்டுனாங்கனு கேட்டு எழுதுனேன். சில இடங்களில் காலா பேசுற 'எரிச்சாலும் புதைச்சாலும் இங்கதான். இது இந்த இடத்தில வளந்த மரம்'னு சொல்லும்போது, எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. பல பசங்களுக்கு அந்த 'விழித்திடு இளைஞர் இயக்கம்' பெயரைப் பார்த்துட்டு, தாராவி பசங்க நடத்துற விழித்தெழு இளைஞர்  இயக்கத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. என் அக்கா பையன், லெனின் கதாபாத்திரத்தோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுனு சொன்னான். காலா மக்களை ஒன்றுதிரட்டி, 'உடம்புதான் நம்ம ஆயுதம்'னு  சொல்லும்போது, ரொம்ப உணர்வுபூர்வமாய் இருந்தது." 
'' 'காலா' படத்துல தாராவியின் அரசியல் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கா?"
"தாராவி மிகப்பெரிய ஏரியா. அதுல பல அரசியல் இருக்கு. தாராவி ஒரு ரியல் எஸ்டேட் ஹப் மாதிரிதான். நிறைய பில்டர்ஸ் அணுகுறாங்க. அங்கே இருக்கிற எல்லோருக்கும் ஒரு நல்ல கட்டடம், வீட்டுக்குள்ளேயே டாய்லெட்னு எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அதுக்காக நிலத்துல பாதியைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிற திட்டத்தோடதான் வர்றாங்க. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து மக்கள் உருவாக்கிய நிலம் அது. அது மொத்தமும் தாராவி மக்களுக்குத்தான் சொந்தம். அந்த வகையில, 'காலா' தாராவியைப் பற்றி யாரும் பேசாத அரசியலைப் பேசியிருக்குனுதான் சொல்வேன். இப்படம் தாராவி மக்களுக்கே தாராவியைப் பற்றி எடுத்துச் சொல்ல பெரிதும் உதவியிருக்கிறது!"  என்கிறார் மகிழ்நன்.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா