Pages

Friday, November 30, 2018

ரஜினி + ஷங்கர் + ஜெயமோகன் = இலக்கிய தரத்தில் ஒரு சினிமா


டெக்னாலஜி வளர்ச்சி  என்பது ,மனிதனின் அதிமுக்கிய சாதனைகளுள் ஒன்று.. ஆனால் மனிதனின் இந்த அறிவு , வளர்ச்சிக்கு மட்டும் அல்ல. சக மனித உயிராகிய நியாண்டர்தால் மனிதன் போல பல உயிரிகளின் அழிவுக்கும் காரணமாகி உள்ளது..

எனவே டெக்னாலஜி வளர்ச்சியை கவனமாக கையாள வேண்டும் என்பது நியாயமான எண்ணம்.

ஆனால் நல்ல விஷ்யமான டெக்னாலஜி வளர்ச்சி எப்படி தீமைக்கு காரணமாகிறதோ அதே போல , டெக்னாலஜி வளர்ச்சியில் கவனம் தேவை என்ற நியாயமான எண்ணமும்கூட தீமைக்கு காரணமாகலாம்.. எத்தனையோ நல்ல போராட்டங்கள் திசை மாறி போவதை பார்த்திருக்க்க்றோம் அல்லவா.

 நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராட்டத்தைத்தான் சினிமாக்களில் பார்த்திருப்போம்..  டெக்னாலஜி வளர்ச்சி என்ற நன்மைக்கும் , அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற நன்மைக்கும் இடையேயான போராட்டம்தான் 2.0

வழக்கமாக இலக்கியங்களில்தான் இப்படிப்பட்ட அறச்சிக்கல்களை பார்த்திருப்போம்.. முதன் முறையாக சினிமாவில் அறச்சிக்கலை பார்க்கிறோம்

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூலிழைதான் வித்தியாசம்.. இபப்டி ஒரு நடு நிலை பார்வையுடன் நூல்கள் படித்திருப்போம்...  துரியோதனன் வில்லன் தான்..  ஆனால் யாரோ ஒரு தேரோட்டி மகனுக்கு அரசாட்சி அளித்தபோதோ , என்னதான் பீஷ்மரை சூழ்ச்சியால் வீழ்த்தினீர்கள் என்றாலும் அவருக்கு மரியாதை செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று அறிவித்தபோதோ அவனை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்க முடியும்


  நன்மையே உருவான ஹீரோ...தீமையே உருவான வில்லன் என்றுதான் சினிமாவில் பார்த்திருக்கிறோம்

ஏதாவது பிரச்சனை செய்தால் , உன் உயிருக்கு சமமான புறாவை கொன்று விடுவேன் என மிரட்டும் ஹீரோவும் அதற்கு கண்கலங்கி அஞ்சும் இளகிய மனம் கொண்ட வில்லனும் ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு இதுவே முதல் முறை

 வில்லனுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் என்பதும் நாம் பார்த்திராத ஒன்று

 படம் எடுக்கப்பட்ட விதம் இந்தியாவுக்கு புதிது..


  • பின் வாங்குவது என்பது என் சாஃப்ட்வேரில் கிடையாது
  • வாங்கடா செல்ஃபி பிள்ளைங்களா
  • நம்பர் ஒன் நம்பர் டூ இதெல்லாம் குழந்தை விளையாட்டு
  • பசிக்குதே என்பதற்காக கையை வெட்டி சாப்பிட முடியாது
  • குறைந்த பட்சம் பறவைகளுக்கு தண்ணி வைங்க
  • மெசேஜ் ஃபார்வார்ட் பண்றது என்பது சமூக சேவை அல்ல
என பல இடங்களில் கைதட்டல்கள்

  • வடை போச்சே
  • ( போனில் முத்தம் கொடுக்க முற்படும்போது போன் பறந்து விடுகிறது ) இதுதான் ஃபிளையிங் கிஸ்ஸா?
  • காதலுக்கு மரியாதை யா?
  • நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை
  • ( unknowncallar என மெசேஜ் வருவதைப்பார்க்கும் அமைச்சர் ) யாருயா அது உன்னி கிருஷ்ணன்?
இப்படி படம் முழுக்க மெலிதான நகைச்சுவை... ரஜினி , அக்சய் , எமி ஜாக்சன் மட்டும் அல்ல .. மயில்சாமி  கலாபவன் சஜான் உட்பட அனைவருமே ஷங்கரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளனர்

அமைச்சர் பாத்திரத்துக்கு கலாபவன் தான் வேண்டும் என ஷங்கர் உறுதியாக இருந்து , அவர் கால்ஷீட்டுக்கு காத்திருந்து அவர் காட்சிகளை எடுத்தார்.. 

3- டி வெகு வெகு சிறப்பு

படம் முடிந்து 3 டிக்காகவே ஒரு பாடல் காட்சி என்பது நாம் பார்த்திராதது.. அற்புதம்... பாடல், பின்னணி என அனைத்திலுமே ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் இசைப்புயல் .


  பட்சிராஜன் என்ற பெயர் முதல் ஆன்மிக விளக்கங்கள் வரை ஜெயமோகனின் இருப்பு தெரிந்து கொண்டே இருக்கிறது/ ..இலக்கியம் சினிமாவுடன் கைகுலுக்குவதால் கிடைக்கும் நன்மைக்கு எடுத்துக்காட்டாக படம் இருக்கிறது

பறவைகளை , இயற்கையை நாம் அழித்துக்கொண்டே சென்றால் , ஒரு கட்டத்தில் இயற்கை கோபம் அடைந்து நம்மை திரும்ப தாக்க ஆரம்பிக்கும் என்பதை வெகு அழகாக குறியீட்டுரீதியாக காட்சிப்படுத்தி இருப்பது இலக்கியத்தரத்துக்கு ஓர் உதாரணம்

வரலாற்றில் இடம் பெறும் படம்.. 



Monday, November 12, 2018

சாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும்



சாய் பாபா , காஞ்சிப் பெரியவர் ,  விசிறி சாமியார் , ஓஷோ , ஜேகே என ஒரே கால கட்டத்தில் பல்வேறு ஆன்மிக ஆளுமைகள் பிரபலமாக இருந்தது ஒரு வரலாற்று அபூர்வம்

இதில்  புட்டபர்த்தி சாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும் பக்தி மார்க்கத்துக்கு இடம் கொடுத்த வகையில் தனித்து நிற்க கூடியவர்கள்

 இருவருமே உயரிய ஆன்மிக தத்துவங்களைப் பேசியவர்கள் .. பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்கள்

ஆனால் இருவருக்கும் வேறுபாடுகளும் ஏராளம்

தன்னை சன்னியாசியாகவும் மடத்தின் தலைவராகவும் சொல்லிக்கொண்டவர் பெரியவா

ஒரு பாவனைக்காககூட பிற தெய்வங்களை வணங்காமல் , தன்னையே கடவுள் என முன் வைத்தவர் சாய் பாபா

அரசினால் செய்ய முடியாத தண்ணீர் திட்டங்கள்  , கல்விப் பணிகள் , மருத்துவ சேவைகள் என ஏராளமான சமூக சேவைகள் செய்தாலும்கூட , அதை எல்லாம் தாண்டி சாய் பாபா தன்னை கடவுளாகவே  , அவதாரமாகவே முன் வைத்தார்


பெரியவர் தன்னை கடவுள் என சொல்லா விட்டாலும் , அவரிடமும் தெய்வீக ஆற்றல் வெளிப்பட்டதாக தகவல்கள் உண்டு


எம் எஸ் சுப்புலட்சுமி , ரா கணபதி என இருவரையுமே தெய்வமாக போற்றியவர்களும் ஏராளம்


சரி,, சாய்பாபாவும் மகா பெரியவரும் ஒருவரை ஒருவர் எப்படி மதிப்பிட்டனர்?


தனக்காக எதையும் செய்ய தயாராக இருந்த , தன்னுடனேயே வசிக்க விரும்பிய ரா கணபதியை , இந்து மதத்தின் ஆவணமாக திகழவிருக்கும் “ தெய்வத்தின் குரல் “ நூலை எழுதுவதுதான் முக்கியம்... காஞ்சிப்பெரியவர் கூடவே இருந்து அதை செய்து முடி..என் ஆசிகள் என கூறி காஞ்சிக்கு அனுப்பி வைத்தவர் பாபா;.. அதிகாரபூர்வமாக வெளிப்படையாக காஞ்சிப்பெரியவரின் மேன்மையை சாய் பாபா ஏற்றுக்கொண்டுள்ளார்

ஆனால் காஞ்சிப்பெரியவர் நிலை வேறு... தன் பக்தர்கள் சிலரை சாய் பாபாவிடம் அனுப்பி உங்கள் குரு அவர்தான் என கூறினாலும் , அவை எல்லாம் தனிப்பட்ட கருத்துகளாகவே இருந்தன.. ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக சாய் பாபாவின் மேன்மையை இவர் சொன்னதில்லை

அதற்கு காரணங்கள் உண்டு

பாரம்பர்யத்தை கறாராக கடைபிடிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர் மகா பெரியவர். சாய் பாபாவோ அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்...  ஜாதி வேற்றுமை , மத வேற்றுமை இன்றி செயல்பட்ட பாபாவை , ஆச்சாரசீலரான பெரியவர் அதிகாரபூர்வமாக ஏற்க இயலாது

அதேபோல அவதாரம் என்பதை தனிப்பட்ட முறையில் பெரியவா ஏற்கலாம்.. ஆனால் அவரது மடத்தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு எப்படி ஏற்க இயலாது


இது போன்ற காரணங்களால் இருவரும் ஒன்றிணைவது சாத்தியமின்றி போனாலும் இருவரையுமே வணங்கியவர்கள் , இருவருக்குமே நெருக்கமானவர்கள் என இருந்தவர்கள் பலர்

  என் பார்வையில் இருவரும் எப்படி ?

  மொழி ஆளுமை , சொற் சிலம்பம்  , சொற்பொழிவு போன்றவற்றில் பாபாவுக்கு நிகர் பாபாதான்

  இந்திய ஞான மரபு , பாரம்பரிய தொடர்ச்சியை நிலை நாட்டுதல் போன்றவற்றில் பெரியவா , பெரியவாதான்


பாபாவிடம் ஜாதி வேற்றுமை கிடையாது...  பெரியவரிடம்ஜாதி துவேஷம் இல்லை என்றாலும் ஜாதி வேற்றுமை உண்டு


    இருவருமே ஞான விளக்குகள் என்றாலும் அணுகு முறைகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு

அந்த வித்தியாசங்களையும் மீறி இருவரையும் ரசிப்பவர்களும் உண்டு.. இருவரையுமே வெறுப்பவர்களும் உண்டு







Sunday, November 11, 2018

சூப்பர் ஸ்டாரை பேட்டி கண்ட சூப்பர் ஸ்டார்- ரஜினி அசத்தல்


 அந்த காலத்தில் அரசு தொலைக்காட்சிகளும் , அரசு வானொலிகளும்தான் கோலோச்சி வந்தன...

   அவர்கள் சிறப்பான சேவை செய்து வந்தாலும் , அவர்கள் வரம்புக்குட்பட்ட முறையிதான் பேச முடியும் என்பதால் இயல்புத்தன்மை குறைவாக இருப்பதாக சிலர் கருதினர்

அந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சிகள் பிரபலமாகின.. வாய்ப்புகள் தேடிக்கொண்டிந்த பல திறமைசாலிகள் வெளிச்சத்துக்கு வந்தனர், அவர்களுள் முக்கியமானவர் அர்ச்சனா.. சன் டிவியில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தன..

அதன்  பின்வணிகமயமாகி விட்ட ஊடக சூழலில் தனித்துவம் மிக்கவர்கள் அரிதாகிப்போனார்கள்.. ஆங்கிலம் கலந்து பேசுவது , மேக் அப் , ஈர்ப்பான ஆடைகள் போன்றவற்றையே பலர் நம்ப ஆரம்பித்தனர்

இந்த சூழலில் ரஜினியை அர்ச்சனா பேட்டி காண்கிறார் என்பது மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தியது,, சினிமாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் தொகாவில் அர்ச்சனா சூப்பர் ஸ்டார்தான்.. சூப்பர்ஸ்டாரை , சூப்பர் ஸ்டார் பேட்டி எடுப்பது அரிதான் ஒரு நிகழ்வு என்பதால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இது இருந்தது

 நிகழ்ச்சி , எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே சொல்ல வேண்டும்.. பேட்டி எடுப்பவர் , கொடுப்பவர் என இருவருமே இயல்பாகவும் மனதில் இருந்தும் பேசினர்

   மாறுவேடத்தில் சென்று கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் தலைவா என அழைத்ததை கேட்டு பதறி விட்டேன்... எப்படி கண்டு பிடித்தார் என குழப்பமாக இருந்தது.. கடைசியில் பார்த்தால் அவர் என்னை அழைக்கவில்லை ..யாரோ ஒருவரை தலைவா என அழைத்திருக்கார்.. ஹாஹா.. என வெகு இயல்பாக பேசியது ரஜினிக்கே உரித்தான எளிமை


எம் ஜி ஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்திருந்தால் நான் முன்னுக்கு வந்திருக்க முடியாது,,, கமலுடன் முதன் முறை காரில் பயணித்தபோது அதை நம்ப முடியாமல் கைகளை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன் என்றெல்லாம் வெகு தன்னடக்கமாக பேசினார்

கனவில் இருக்கும் சந்தோஷம்  நிஜத்தில் இருக்காது.. கல்யாணம் உட்பட.. ஹாஹா ஹா.. என ஒரு சராசரி மனிதர்களில் ஒருவராக தன்னைக்காட்டிக்கொண்டார்
ஆனால் என்னதான் அவர் சராசரி மனிதனாக தன்னைக்காட்டிக்கொண்டாலும் அறிவார்ந்த நூல்களைப் படிக்கும் உணர்வே பேட்டியில் வெளிப்பட்டது

அவுட்லையர்ஸ் என்றொரு புத்தகம்... மனிதனின் வெற்றிக்கு அவன் பிறந்த சூழல் , பிறந்த கால கட்டம் என பல விஷ்யங்கள் காரணிகளாக இருக்கின்றன என்பது புத்தகத்தின் செய்தி

அதை ரஜினி சுட்டிக்காட்டினார்.. வெற்றி பெற ஆரம்பித்த ஆரம்ப கால கட்டத்தில் தான் ஒரு தனி பிறவியோ என்றெல்லாம் நினைத்ததாகவும் , பிறகுதான் எல்லாம் ஒரு காலம் என்ற தெளிவு ஏற்பட்டதாகவும் கூறியது வேறு லெவல்

அதே போல எளிமை குறித்த பார்வையும் அபாரம்...  எளிமை என்பது மனம் சார்ந்தது...  சில நேரங்களில் சில சூழலில் ஏஸி என்பது இன்றியமையாத தேவையாக இருக்கும்.. ஏஸி என்பது ஆடம்பரமாக இருப்பதும் உண்டு.. எனவே ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் வைத்து எளிமையை வரையறுத்து விட முடியாது என்ற பார்வை ஜே கிருஷ்ணமூர்த்தியை ஒத்திருந்தது


ஃபடாபட் ஜெயலட்சுமியை ராதிகாவை குறிப்பிட்டு கூறியது சிறப்பாக இருந்தது

 அர்ச்சனாவின் துணைக்கேள்விகளும் எதிர் வினைகளும் அழகு... 

மொத்தத்தில் வெகு சிறப்பான நிகழ்ச்சி




Saturday, November 10, 2018

ஓர் எழுத்தில் மாறும் அர்த்தம் - இளையராஜா குறித்து மேத்தா ருசிகரம்


கவிதை உலகில் மு மேத்தாவுக்கு என தனி இடம் உண்டு.. புதுக்கவிதைகளுக்கு என தனி இடம் உருவாக்கி கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்

அதே நேரத்தில் அற்புதமான திரை இசை பாடல்களும் தந்தவர்


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ



படிச்சவங்க விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
படிக்காதவன் விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
புத்தகம் உள்ளது பையில அங்க
வித்தைகள் உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுஷன தாண்டா



கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்



என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு

என பல அற்புதமான வரிகள் தந்தவர் இவர்

..
--------------------------

இளையராஜாவின் செல்லப்பிள்ளை இவர்,,, அவருடனான சில சுவையான நிகழ்வுகள்

ஆகாய கங்கை படத்தில் இளைய ராஜா இசையில் எழுதினார்..


தேனருவியில் நனைந்திடும் மலரோ,,, என பாடல் ஆரம்பிக்கும்... 
அந்த பாடலில் இளையராஜா ஒரு மாற்றம் செய்தார்

 நீ நிலவோ... ஏன் தொலைவோ என்பது இவர் எழுதிய வரி,

 நீ என்ன நிலவோ... எட்ட முடியா தொலைவில் இருக்கின்றனயே என பொருள் தருகிறது,,, கவித்துவமாக இருக்கிறது...   ஒரு கவிதையாக சிறப்பாக இருக்கிறது...  ஒரு தனி கவிதை என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்

ஆனால் இது பாடல்.. அதுவும் பிரிவைப்பற்றிய பாடல்...   நிலவின் குணாதிசங்களை விட பிரிவைச் சொல்வதுதான் முக்கியம்

எனவே இதை இப்படி மாற்றினார் ராஜா... 

ஏன் தொலைவோ,.... நீ நிலவோ

ஏன் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறாய்?  நீ குளிர் பொருந்திய இனிமையான நிலவு என்பதால் இந்த தொலைவோ,,,

நச் என பொருந்துகிறது அல்லவா


இதே போல இன்னொரு சம்பவம்

சிறையில் மோகன் இருக்கிறார்.. ரேவதி வெளியில் இருந்து பாடுகிறார் , 

 நிலவைப்பார்த்தபடி மோகனுக்கும் பொருந்தும்படி பாடுகிறார்

பாடு நிலாவே.. தேன் கவிதை,, பூ மலர    என்பது அவர் எழுதிய வரி

இளையராஜா கேட்டார்,.. நல்ல வரிதான்.. ஆனால் சிறையில் இருக்கும் மோகன் இதை எப்படி பாட முடியும்,, அவருக்கு நிலா தெரியாதே 

ஒரே ஒரு எழுத்து மாற்றம் இந்த சந்தேகத்தை போக்கியது

இப்படி மாற்றப்பட்டது

பாடும் நிலாவே.. தேன் கவிதை... பூ மலரே

ஹீரோயின் பாடும்போது , பூ மலர்வதற்காக பாடுவாய் நிலவே என்ற அர்த்தம் வருகிறது

ஹீரோ பாடும்போது , ஹீரோயினை நிலவு என்றும் மலர் என்றும் வர்ணிப்பது போல வருகிறது’

தமிழ் அழகு,.. இசை இனிது.... மு மேத்தா இளையராஜா போன்றோரின் திறமை இனிது






எம் ஜி ஆர் திரைப்படங்களும் அரசியலும்


சினிமா மூலம் எம் ஜி ஆர் வளர்ந்ததாக நினைத்து பலர் அரசியல் படங்கள் எடுக்கின்றனர்..

ஆனால் இந்த ஃபார்முலா ஒரு போதும் வெற்றி அடைந்ததில்லை.. எம் ஜி ஆரே கூட , தன் படங்களில் அரசியல் விளக்க படங்களாக எடுத்தது கிடையாது..

தன் படங்கள் நன்றாக இருக்க வேண்டும் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது.. அவர் முதல்வராக ஆசைப்பட்டு இருந்தால் , அண்ணா மறைவுக்கு பின் எளிதாக அதை அடைந்திருக்கலாம்.. அவருக்கு சினிமாதான் முக்கியமாக இருந்தது

அவரது ரசிகர்களுக்கு திமுக தொல்லை கொடுக்க ஆரம்பித்தபோது ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கிதான் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

தேர்தலில் வென்ற பின்பும் கூட , படப்பிடிப்பை முடித்த பின்புதான் முதல்வராக பதவியேற்றார்...

முதல்வரான பின்பும்கூட ஒரு படம் நடக்க பேச்சு நடந்தது... விளம்பரங்களும் வெளியாகின.. இசை : இளைய ராஜா...

அந்த அளவுக்கு சினிமாவை காதலித்தார் அவர்

இப்போது பலர் சினிமாவை , அரசியலுக்கான ஒரு விசிட்டிங் கார்டாக நினைக்கின்றனர்

அப்படி நினைத்து எடுக்கப்படும் படங்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை... இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன







Friday, November 9, 2018

குடியின் கேடு- கண்ணதாசன் வாழ்வில் ருசிகரம்


மாபெரும் கூட்டம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது.. பெரிய தலைவர்கள் , வி ஐ பிகள்,. திரை உலக பிரபலங்கள் குழுமி இருந்தனர்

ஆனால் நிகழ்ச்சி தொடங்கவில்லை.. கண்ணதாசன் வந்துதான் துவக்க உரை ஆற்ற வேண்டும் என்பதால் காத்திருந்தனர்..

அனைவருக்கும் டென்ஷன்   கோபம்

இரண்டு மணி நேரங்கள் தாமதமாக அவர் வந்தார்

வந்ததும் மன்னிப்பு கேட்டார்

- நண்பர்கள்.. இவ்வளை மக்களை  பெரியோர்களை காத்திருக்க செய்தது மாபெரும் தவறு .. மன்னித்து விடுங்கள்.. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காரணம் குடிதான்.. நேற்று இரவு முழுக்க குடி.. அதனால்தான் தாமதம்.. மதுவின் தீமைக்க்கு நானே ஓர் உதாரணம் என்பதை கண்கூடாக பார்த்து விட்டீர்கள்

தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள்... நானும் குடிக்க மாட்டேன் என்றார்

அனைவரும் கைதட்டினர்

- ஆனால் ஒன்று.. இப்போது நான் துவக்க உரை ஆற்ற வேண்டும்.. கொஞ்சம் சரக்கு உள்ளே போனால்தான் என்னால் பேச முடியும்.. தயவு செய்து இன்று மட்டும் குடித்துக் கொள்கிறேன்.. நாளை முதல் குடிக்க மாட்டேன் என்றார்

கூட்டத்தில் பயங்கர சிரிப்பு கைதட்டல்


அதன் பின் லேசாக சரக்கு அடித்து விட்டு , அதன் பின் சிறப்பாக பேசினார்

பிரச்சினைகளுக்கு தீர்வு யாதென கேட்டேன் - பிரசுரம் ஆகாத கண்ணதாசன் கவிதை



 கேவலமான சாலைகளுக்கு

தீர்வு யாதெனக் கேட்டேன்

ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு

அபராதம் போடுவோம் என்றார்

அரசாங்க பிரதிநிதி

ஆலைகள் , புகை என சுற்றுச்சூழல்

சீர்கேடுகளுக்கு தீர்வு என்ன என்றேன்

தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும்

குழந்தைகளை சிறை வைப்போம் என்றார் அரசு அதிகாரி

வேலை இல்லா திண்டாடத்துக்கு தீர்வு கேட்டேன்

வேலை இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்க

யோசிக்கிறோம் என்றார் அவர்


பிளாஸ்டிக் குப்பை மலைகளை

எப்படி சமாளிப்பீர்கள் என கேட்டேன்

பிளாஸ்டிக் பையில் பொருட்கள் வாங்க

கூடுதல் கட்டணத்தை உங்கள் மீது திணிப்போம் என்றார் அவர்

தக்காளி... எல்லா பிரச்சனைகளுக்கு பலி ஆடுகள் நாங்கள் என்றால்

அரசு என ஒன்று எதற்கு என கேட்டேன்

அரசாங்க பிரதி நிதி அருகே வந்து ரகசியமாய் சொன்னார்..


அந்த பிரச்சனைகளை உருவக்குவதற்கு ஆள் வேண்டாமா

அவற்றை உருவாக்குவதே நாங்கள்தானே 

Thursday, November 8, 2018

பேனா - சில சிந்தனைகள்


  ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்..  ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கினார்..    நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்ப்போது அவரிடம் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டார்.. பேனா கொடுங்க என அவர் அருகில் இருந்தவர்களிடம் கை நீட்டினார்..  யாரிடமும் இல்லை.. பேனா என்பதே சற்று வழக்கொழிந்த சாதனமாகி விட்டது என்பதால் பலரிடம் இல்லை...

எனது இங்க் பேனாவை எடுத்து கொடுத்தேன்... எனக்கு ஒரு நண்பர் பரிசளித்த அழகான இங்க் பேனா அது...  அதில் கையொப்பம் இட்டார்.. அந்த பேனா குறித்த விபரங்கள் கேட்டார்..சொன்னேன்..

அத்தனை பேருக்கு நடுவில் பேனா சரியாக எழுதாமல் தகராறு செய்திருந்தால் , தர்ம சங்கடமாக போயிருக்கும்...  ஆனால் என் பேனா தகராறு செய்யாது என நன்கு தெரிந்திருந்தால்தான் அதை அளித்தேன்

 பந்து முனைப்பேனாவுக்கும் இங்க் பேனாவுக்கும் இதுதான் வித்தியாசம்..  பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவோம்.. ஆனால் இங்க் பேனா பல மாதங்களாக  நம்முடன் இருப்பவை,,, பல ஆண்டுகளாக ஒரே பேனாவை பயன்படுத்துவோரும் உண்டு... எனவே நம் பேனா குறித்து நமக்கு நன்றாக தெரியும்.. ஒரு வித உறவு அல்லது நட்பு அல்லது புரிதல் அதனுடன் ஏற்பட்டு விடும்

இங்க் பேனாவை முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கையில் சற்று முரண்டு பிடிக்கும்.. எழுத எழுத நம் கைகளின் அழுத்தம் , எழுதும் கோணம் , வேகம் என பலவற்றை அது புரிந்து கொள்ளும்.. அதற்கேற்ப அதன் நிப் மாறும்.. நாமும் பேனாவை புரிந்து கொண்டு அதற்கேற்ப எழுதுவோம்..

இந்த உறவு பந்துமுனைப்பேனாவில் இல்லை.. ஆனால் பந்து முனைப்பேனாவுக்கு என சில பயன்பாடுகள் உண்டு.. எனவே அதை தவிர்க்க இயலாது.. உதாரணமாக டெலிவரி சலான், பில் போன்றவை எழுதும்போது கார்பன் நகல் சரியாக வருவதற்கு பந்து முனைப்பேனாவின் அழுத்தம் முக்கியம்

  ஆனால் சிறப்பான சேவையை தருவது மசி பேனாக்கள்தான்... இங்க் பேனா வாங்கினால் ஒருபோதும் மலிவானவற்றை வாங்க கூடாது.. அது எழுதும் இன்பத்தையே கெடுத்து விடும்.. தரமானவற்றை மட்டுமே வாங்க வேண்டும்..

பைக் , கார் போன்றவற்றை அவ்வப்போது சர்வீஸ் செய்வது போல , பேனாவை மாதம் ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்...  ஒருவர் பயன்பாட்டில் பேனா இருக்க வேண்டும்

ஐந்து அல்லது 10 ரூபாய் விலையில் கிடைக்கும் பந்து முனைப் பேனா ஒன்றை ஓசி கொடுப்பதற்கு என வாங்கி வைத்து கொள்ள வேண்டும்

வெளியூர் செல்கிறோம்.. ரொம்ப நாள் பயன்படுத்தப்போவதில்லை என்றால் முழுமையாக மசியை வெளியேற்றி வைக்க வேண்டாம்.. இல்லாவிட்டால் மசி அடைப்பு ஏற்படலாம்

பேனா வாங்கும்போது , ஒல்லி பேனாவா  குண்டு பேனாவா என நம் கை வாகுக்கு ஏற்றபடி வாங்க வேண்டும்

இப்படி கவனமாக தேர்ந்தெடுத்து ஒழுங்காக பராமரித்தால் கை எழுத்து மாறாமல் சிறப்பாக இருக்கும்.. கல்லூரி தேர்வெழுத பயன்படுத்திய பேனாவை , பணிகளில் பயன்படுத்துவோர் உண்டு என்பது ஆச்சர்யமான உண்மை





Friday, November 2, 2018

கலைஞரின் பெருந்தன்மை


எந்த தகுதியும் இன்றி யாரும் வாழ்வில் உயர முடியாது...   வாழ்வில் வென்றவர்களின் நற்பண்புகளை கவனித்து , அவற்றை நாமும் பின் பற்ற முயல வேண்டும்


கார்ட்டூனிட்  மதி பல்வேறு அரசியல் கார்ட்டூன்களுக்காக புகழ் பெற்றவர்.. பல்வேறு பத்திரிக்கைளில் வரைந்தாலும் இவரது துக்ளக் கார்ட்டூன்களுக்கு தனி இடம் உண்டு....

இவர் பல கட்சியினரை கேலி செய்வது போல , இவரையும் அரசியல் தலைவர்கள் கேலி செய்வதுண்டு.. மதி கெட்டவர்.. அறிவற்றவர் என பலர் விமர்சிப்பது வழக்கம்தான்


 திமுகவை இவர் சற்று அதிகமாகவே விமர்சித்துள்ளார்

இவரது கார்ட்டூன்களின் தொகுப்பு நூல் திமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்டது,, நூலை வெளியிட , முதல்வர் கலைஞரை இவர் அழைத்து கடிதம் அனுப்பினார்

 நூலை படித்த கலைஞர் பதில் அனுப்பினார்


  நூலில் பல்வேறு கட்சிகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.. அதில் திமுகவும் உண்டு... அதில் வருத்தமில்லை

எங்களை விமர்சித்துள்ள நூலை வெளியிட்டுப் பேசுவதில் ஒரு முதல்வராக எனக்கு எனக்கு பிரச்சனை இல்லை

ஆனால் நூலின் அட்டைப்படத்திலேயே அழகிரி நாடு, ஸ்டாலின் நாடு’ எனக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இதை நான் வெளியிட்டால் எனது கழக உடன்பிறப்புகள், ‘தலைவரே இதை வெளியிடலாமா?’ என வருத்தப்பட வாய்ப்பு உண்டு

இது தர்மசங்கடமான சூழலை உருவாக்கும்... எனவே நூலை வெளியிட முடியாத நிலையில் உள்ளேன் என தன் மறுப்பை தெரித்தார்

நூல் வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள் முரசொலியில், `வசைபாடும் கார்ட்டூனிஸ்ட் மதிக்கு வாழ்த்துகள்' என ஒரு பெரிய தலையங்கம் வடிவில் கட்டுரை எழுதி, பாராட்டி யிருந்தார்  ,, அதில் நாசூக்கான கேலிகளும் இருந்தன


 தன்னை விமர்சித்த நூலுக்கான வெளியீட்டு விழா அழைப்பை , அவர் மறுக்க எல்லா உரிமையும் உண்டு,,, அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை.. அவர் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் , அந்த அழைப்பு தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து கோபப்பட்டு இருப்பார்

ஆனால் கலைஞரோ  தன் மறுப்பை நாகரிகமான சொன்னது மட்டும் அன்றி. இதை நினைவு வைத்து முரசொலியிலும் எழுதி இருக்கிறார்

  இவர் போன்ற ஒரு தலைவர் இனி பிறப்பதரிது என எஸ்கேப் ஆகாமல் , அவரது நற்பண்புகளை பிறரும் பின்பற்ற வேண்டும்