Saturday, March 30, 2019

சொற்களை சேர்த்து எழுதுதலில் இலக்கண நூல்கள் காட்டும் நெறி


சொற்களை சேர்த்து எழுதுவது...பிரித்து எழுதுவது குறித்து தமிழில் முறையான இலக்கண வரையறைகள் உண்டு,,, ஆனால் பலர் இதை முறையாக பின்பற்றுவது இல்லை

நல்ல பெண் , நல்ல வேலை , நல்ல வெயில் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன,,, இதை இப்படியும் சொல்லலாம்.. பண்பான பெண் , கவுரவமான வேலை , கொடூரமான வெயில்... இப்படி வெவ்வேறு விதமாக வார்த்தைகளை சேர்த்து , வெவ்வேறு காம்பினேஷன் களில் எழுதுவது நெகிழுந்த்தன்மையுடனான சொற்சேர்க்கை ஆகும்

ஆனால் சிலவற்றை அப்படி மாற்ற முடியாது,,, நல்லபாம்பு , பல்கலைக்கழகம், இளங்கலை , கணிப்பொறி , எழுதுகோல்

இவற்றை பிரித்து எழுதினாலும் தனிச்சொற்களின் அர்த்தம் மாறாது எனினும் இவற்றை சேர்த்துதான் எழுத வேண்டும்...

இவை உறுதியான சொற்சேர்க்கைகள் ஆகும்

திருச்சிராப்பள்ளி , கேட்டுப்பார் , சொல்லித்தா,,, என்பது மேலும் சில உதாரணங்கள் ஆகும்

ஒன்பது வகையான கூட்டுச்சொற்கள் குறித்தும் அவற்றின் இயல்பு குறித்தும் நம் இலக்கண நூல்கள் அழகாக விவரித்து உள்ளன

மேலும் சில சொற்சேர்க்கைகளை மட்டும் பார்ப்போம்

கூட்டு வினையெச்சங்கள்

செய்யாதிருந்து,, ( செய்யா திருந்து அல்ல,,,, செய்யாது இருந்தும் அல்ல,,, செய்யாதிருந்து ) செய்யாமலிருக்க , செய்யாவிட்டால் , சொன்னபடி , பேசியவண்ணம் என்றே எழுத வேண்டும்

( தொடரும் )

Friday, March 29, 2019

பூமணியின் அம்பாரம்

ஒர் எழுத்தாளரின் அத்தனை சிறுகதைகளையும் ஒரு தொகுப்பாக ஒரே நூலாக படித்து முடிப்பது என்பது ஒரு சவாலாகும்.. காரணம் சில கதைகளை முடித்ததுமே ஒரு பேட்டர்ன் பிடிபட்டு விடும்.. எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருப்பதால் பாதியிலேயே மூடி வைத்து விடுவோம்.

பூமணியின் அம்பாரம் சிறுகதை தொகுப்பு இந்த சவாலை அழகாக சந்தித்து வெல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை..

முற்போக்கு எழுத்துகளுக்கு என ஒரு பாணி உண்டு,,, அந்த பாணியிலான கதைகள் என்றுதான் நினைத்து படிக்க ஆரமபித்தேன்.. படிக்க படிக்க பூமணியின் எழுத்து, அவர் பாணி,,, அவர்தம் அழகியல்,,, என்னை ஈர்த்து மயக்கி விட்டது.

இசை , நடனம், காபியின் நறுமணம் , எதிர்பால் ஈர்ப்பு என்று இவர் எழுத்து பயணிக்கவில்லை.. ரத்தம், சாதிய கொடுமை , வறுமை, கொலை என்றுதான் பேசுகிறது,, ஆனால் அதை படிக்க வைக்கும் நேர்த்தியுடன் , சிறுகதை என்ற வடிவை புரிந்து கொண்டு கச்சிதமாக வாசகன் முன் வைப்பதில் பூமணி ஒரு முன்னுதாரண எழுத்தாளராக மிளிர்கிறார்

தேவையின்றி ஓர் எழுத்து கூட இல்லாத கச்சிதமான நடை இவருடையது...   ஒரு வரியை ஸ்கிப் செய்தால் கூட , அந்த கதை புரியாமல் போய் விடும்

ஒரு மிகப்பெரிய கொலை , மரணம் , அழிவு சர்வசாதாரணமாக ஒரு வரியில் சொல்லப்பட்டு விடும் என்பதால் ஒவ்வொரு வரியுமே அதீத கவனத்தை கோருகிறது

பொதுவாக ஒரு தொகுப்பில் இருக்கும் ஒரு சிறுகதையின் தலைப்பையே நூலுக்கு தலைப்பு ஆக்குவார்கள்.. அல்லது இன்னாரின் சிறுகதைகள் என தலைப்பு இருக்கும்.,... ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் அம்பாரம் என வட்டார வழக்கை ஒட்டியும் , சிறுகதையில் வரும் சொல்லை வைத்தும் , சிறுகதை குவியல் அல்லது மதிப்பு மிக்க பொருள் குவியல்  , பொக்கிஷம் , களஞ்சியம் என பொருள் வரும்படி அம்பாரம் என பெயர் வைத்திருப்பது அழகு

ஒரு முடிவை மனதில் உருவாக்கிக்கொண்டு அதை நோக்கி கதையை உருவாக்குவது ஒரு பாணி.. கதையின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி வந்தால் கதை முடிவதற்குள் அது வெடிக்க வேண்டும் என்பது ஒரு கருதுகோள்... அப்படி எல்லாம் எந்த பார்முலாவும் இல்லாமல் நிஜமான வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ அப்படி இவரது கதைகள் நம் கண் முன்  நிகழ்கின்றன

ஒரு தாயையும் அவள் சின்னஞ்சிறு மகனையும் ஒருவன் அவர்கள் தலைகளை வெட்டி கொல்கிறான் என்பதை எவ்வளவு உருக்கமாக கொடூரமாக எழுதலாம்,, அந்த பெண்ணின் பார்வையில் கொலைகாரன் பார்வையில் எவ்வளவு விரிவாக எழுதலாம்

ஆனால் இவரது கசிவு கதையில் அது ஒரே ஒரு வரியில் வருகிறது

அவர் சாவும் மிகச்சுருக்கமாக சொல்லப்படுகிறது

அவர் லேசாக வாயசைத்தார்

கா ளி ய ப்பன் ம க ன்

அவனை அழைத்து அருகில் அமர வைத்தனர்

அவர் அவன் கழுத்தையே தடவிக்கொண்டு இருந்தார்

கை சோர்ந்தது... கடைக்கண்ணோரம் குளிர்ந்து போயிற்று

அவருக்கு சாவு வந்தது

--

எழுத்தாளன் தன் உணர்வுகளையோ விமர்சனங்களையோ எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் நடப்பதை அப்படியே பதிவு செய்யும்போது கிடைக்கும் பாதிப்பு செயற்கையான வர்ணனைகளில் இருப்பதில்லை

கசிவு கதை உலகின் சிறந்த கதைகளில் ஒன்று

நகைச்சுவை எள்ளலும் கூட இப்படி இயல்பாக இருந்தாக் சுவை அதிகம்

ஏட்டு ஒருவரும் கான்ஸ்டபிளும் உரையாடுவது ஓர் உதா

கடற்கரை போயிருந்தேன். அந்த அழகுல மயங்கி நேரம் போனதே தெரியல

கரண்ட் போஸ்ட்ல சாஞ்ச்சு தூங்கி இருப்பீங்க அதை மறைக்க இப்படி ஒரு கதையா'

அட அறிவு கெட்டவனே. அந்த இடத்துல எப்படிடா தூங்க முடியும்
'
உங்களுக்கு எந்த இடம்னு இருக்கு,,,ஒண்ணுக்கு இருந்துட்டு வரதுகுள்ள ஒறக்கம் போட்டு எந்திருச்சுருவீங்க்ளே

ஒருத்தன் காபி வித்துட்டு வந்தான்.,.. ரெண்டு தடவை வாங்கி குடிச்சேன்...துட்டு கொடுத்துட்டேன்

நான் அதை கேட்டேனா

உன் முழியே சரி இல்லையே

இப்படி இயல்பான உரையாயடல்களால் சித்திரிப்புகளால் நகர்கிறது கதை.

மட்டம் என்றொரு கதை

சாதி பிரச்சனை காரணமாக ஒரு சாராரை கோயிலில் நுழைய அனுமதிப்பதில்லை .. காலப்போக்கில் உரிமை குரல் எழுகிறது,, சண்டை கலவரம் என நடந்து ஒரு வழியாக அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகின்றனர்

ஆனாலும் சண்டையை இரு தரப்பாலும் மறக்க முடியவில்லை... இந்த சூழலில் இரு தரப்பிலும் மூத்தவர்கள் இருவர் ஒரு ரயில் பாதை அருகே தற்செயலாக சந்திக்கின்றனர்

தம்மை எதிராளி தாக்கிவிடுவானோ என இருவருக்குமே அச்சம். தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.. ஒரு ரயில் இருவருக்கும் நடுவே சென்று சில நிமிடங்கள் அவர்கள் பார்வையை மறைக்கிறது..ரயில் சென்றதும் ஒருவர் கையிலும் கல் இல்லை என்பதால் தாக்கும் எண்ணம் இல்லை என்பது புரிகிறது

பக்கத்து குளத்தில் கால் கழுவுகின்றனர்

ஆலய நுழைவை எதிர்த்தவர் இயல்பாக பேச்சை ஆரம்பிக்கிறார்

குளம் வத்திப்போச்சு.. குளம் நிரம்பினால்தால் வீட்டுல கிணறு நிரமபும்

அப்படி இயல்பாக பேச்சு தொடர்கிறது

ஆமா.. இரண்டிலும் நீர் மட்டம் நல்லா இருந்தால்தான் விவசாயம நல்லா  இருக்கும்

இபப்டி நட்புறவுடன் பேச்சு தொடர்கிறது

வற்றிக்கிடக்கும் குளத்தின் நீர் மட்டம் உயரர வேண்டும்...மன உயர்வு வேண்டும் என்பது போன்ற பல எண்ணங்கள் சிறுகதையை படிக்கையில் தோன்றியது

நாக்கு என்று ஒரு கதை..   அப்பாவியாக அமைதியாக இருக்கும் ஒருவன் நாக்கை பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் போலிஸ் வெட்டி விடுகிறது

அவனுக்கு நிகழ்ந்தற்கு பதிலடியாக இந்த சமூகத்தை திட்ட அவனிடம் நாக்கு இல்லை.. ஆனால் அவனே . அவன் இருப்பே நாக்கு ஆகி விடுகிறது,.. முரடனாகி வன்முறையில் ஈடுபாடு கொண்டவனாக மாறி விடுகிறான்..

பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த தொகுதியில் 51 கதைகள் உள்ளன.. ஒவ்வொன்றைப்பற்றியுமே விரிவாக பேசலாம்,

நீங்களும் படியுங்கள்..விவாதிப்போம்

Wednesday, March 27, 2019

எமமுகவும் பாக்யராஜும்


அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது என செய்தியில் படித்து இருப்பீர்கள்

அமமுக என்பது சசிகலா / தினகரன் கட்சி..ஓகே?

எமமுக என ஒரு கட்சி ... கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்

அப்படி ஒரு கட்சி இருந்தது

எமமுக - எம்ஜிஆர்  மக்கள் முன்னேற்ற கழகம்


எம் ஜி ஆர் மறைவுக்குப்பிறகு தங்கள் கட்சிதான் உண்மையான அதிமுக என சொல்லிக்கொண்டு பல கட்சிகள் உருவாகின..

பண்ருட்டியார் , அரங்க நாயகம் , நெடுஞ்செழியன் , திரு நாவுக்கரசர் , என பலரும் கட்சி நடத்தினர்

அதில் ஒரு கட்சிதான் எம முக...

இதன் தலைவர் பாக்யராஜ்.. கொள்கைப்பரப்பு செயலாளர் அவர் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த மண்ணாங்கட்டி என்பவர்

அண்ணன் சினிமாவில் பிசி என்பதால் , என்னதான் மக்கள் என்னை முதல்வராக்கினாலும் நீதான் செயல் முதல்வர் என ஆசை காட்டி கட்சியில் சேர்த்தார்..

கட்சியில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தாலும் அடுத்த முதல்வர் நான்தான் என நம்பிக்கையுடன் இருந்த இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்தன... அரசியல் செல்வாக்க்கும் உயரவில்லை

கட்சியை கலைத்து விட்டு , தன்னை காமெடியனாக பிராண்டிங் செய்து கொண்டு , கெட்ட கனவாக கட்சியை மறந்து விட்டார்

அப்போது அவர் சொன்ன அரசியல் ஆருடங்கள் , பிறகு திமுக ஆதரவாளராக மாறி அதையும் தோற்கடிதத வரலாறு என பல விஷ்யங்கள் யார் நினைவிலும் இல்லாமல் மறைந்து விட்டன

Monday, March 25, 2019

இரிடியம் நிப் - சில உண்மைகள்


பேனா ரசிகர்களுக்கு இரிடியம் நிப் என்றால் மிகவும் பிடிக்கும்., எளிதில் தேயாது.. நல்ல லைஃப் வரும்..,, எழுதுவதற்கு சூப்பராக இருக்கும்

அப்ப நான் ஒரு இரிடியம் நிப் வாங்குகிறேன் என்கிறீர்களா?

உண்மையில் இரிடியம் நிப் என்பது உலகில் இல்லை... ஒரு காலத்தில் இருந்தது... அதுவும் உலோக கலைவையின் ஒரு சின்ன பகுதியாகவே இரிடியம் இருக்கும்

அதுவும் நிப்பின் நுனிப்பாகம் மட்டுமே..

கொஞ்சூண்டு இரிடியம் இருந்தாலும் இரிடியம் நிப் என அழைத்தார்கள்.. இப்போது இரிடியமே இல்லாமல் , இரிடியம் நிப் என்கிறார்கள்

அப்படி என்றால் ஏமாற்றுகிறார்களா என்றால் இல்லை... நகல் எடுப்பதற்கு பொதுவான பெயராக ஜெராக்ஸ் இருப்பது போல , தரமான நிப் என்பதன் பொதுப்பெயராக இரிடியம் ஆகி விட்டது.. தரமான நிப் தான்.. ஆனால் அது இரிடியம் இல்லை

இரிடியம் என்பது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகமாகும்... உலகில் வெகு குறைந்த அளவே கிடைக்கிறது

இதை பயன்படுத்திதான் பல மோசடிகள் நடக்கின்றன.. அபூர்வமான இரிடியம் சிலை , ரைஸ் புல்லர் என்றெல்லாம் சதுரங்க வேட்ட பாணியில் பல இடங்களில் மோசடி நடக்கிறது

விண் கல் ஒன்று பூமியில் மோதியதாகவும்  அதனால்தான் டைனோசர் உள்ளிட்ட பல உயிர்கள் அழிந்ததாகவும் சொல்வார்கள்...

அந்த விண்கல் இரிடியத்தால் ஆனது என ஒரு தியரி உண்டு.. இப்போது பூமியில் கிடைக்கும் இரிடியத்தை விட , அந்த விண்கல்லில் இருந்த இரிடியத்தின் அளவு அதிகம்


ஒரு நண்பர் என்னிடம் தன் பென்னை கொடுத்து எழுதிப்பார்க்க சொன்னார்..,,  நன்றாக எழுதியது

இரிடியம் நிப் என்றார் பெருமையுடன்.... அவர் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாமல் , அறிவியல் உண்மையை மறைத்தேன்...


Friday, March 22, 2019

ஆல்வின் காளிச்சரண் சொன்ன அற்புத நிகழ்ச்சி


கிரிக்கெட் உலக வரலாற்று நாயகர்களில் ஒருவரான ஆல்வின் காளிச்சரண் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை ஹிந்து  நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது

அவர் எழுதி வெளியாக இருக்கும் கலர் ப்ளைண்ட் ( நிறக் குருடு ) நூலுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி இது

 பெரிய விளம்பரங்களோ அறிவுப்புகளோ இன்றி  நூல் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டமா என ஆச்சர்யமாக இருந்தது’

கேள்விகள் நிகழ்ச்சியின்போது  , பார்வையாளர்கள் ஷார்ப்பாக சுருக்கமாக கேள்விகள் கேட்டது ஆச்ச்ரயமாக இருந்தது

குறித்த நேரத்தில் ஷார்ப்பாக நிகழ்ச்சியை ஆரம்பித்தது  குறித்த நேரத்தில் பார்வையாளர்கள் அனைவரும் வந்திருந்து அரங்கை நிரப்பியது , அப்புறம்டா மச்சி என போனில் மொக்கை போடாதது என அதிசயத்து அமர்ந்து இருந்தேன்..

அதே தமிழ் நாடு.. அதே தமிழக மக்கள் ,   ஆனால் தமிழ் நூல் நிகழ்ச்சிகளில் இவர்களது வேறு விதமாகவும் ஆங்கில நூல் நிகழ்ச்சிகளில் வேறு விதமாகவும் இருப்பது ஏன் என  காரணம் தெரியவில்லை


கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய மற்ற பணிகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஏராளம் .. புலம்பெயர்ந்து கஷ்டப்பட்டு அவமானங்களை சந்தித்து மரணங்க்ளை சந்தித்து அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக மாறிப்போனவர்கள் பலர்.. மனதில் ஆழத்தில் தமிழ் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.. அந்த உணர்வை நாம் புரிந்து கொள்வது கடினம்


ஆல்வின் காளிச்சரண் பல சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்,... அவை எல்லாம் நூலில் வெளி வரக்கூடும்.. வராவிட்டால்  நான் எழுதுவேன்..


நிகழ்ச்சியில் என் ராம் அவருடன் உரையாடியது அழகு என்றால் விவி குமாரின் பேச்சும் அவர் நினைவுகூர்ந்த தகவல்களும் அருமை..

காளிச்சரண் குறிப்பிட்ட ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று

ஒரு முறை தென் ஆப்ரிக்காவில் சிலரால் கடத்தப்பட்டார் அவர்.. அப்ப்படி கடத்தப்படுபவர்கள் உயிருடன் மீள்வது அரிது... அவரிடம் இருந்த பணத்தை எடுக்க சொன்னார்கள்..  அவர் தலை மீது துப்பாக்கியை வைத்து இருந்தனர்

சங்கிலியை கழட்ட சொன்னார்களாம்.. அது சத்ய சாய் பாபா அளித்த சங்கிலி அது... பார்த்து விட்டு கொடுத்து விட்டார்கள்...என்ன தோன்றியதோ...அவரை அப்படியே விட்டு விட்டு , எதையும் திருடாமல் விட்டு விட்டனர்


பிறகு இந்தியா வந்தபோது சாய் பாபாவை சந்த்தித்தார்...

ஸ்வாமி...என் உயிரை காத்தமைக்கு நன்றி என்றார்

பாபா சொன்னாராம்... “ எந்த சம்பவத்தை சொல்கிறாய்..தலை மீது துப்பாக்கி வைத்தார்களே..அதுவா ? “ என்றாராம்

நம்மை சுற்றி எத்தனையோ அற்புதங்கள்..ஆனால் நன்றியுடன் வாழ்பவர்கள் சிலரே...

Thursday, March 21, 2019

தம் படங்களை பார்க்க கூடாது என ஆணையிட சிவாஜியும் , எம்ஜிஆரும் - வினோத வரலாறு


அசோகனுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த சிவாஜியின் பெருந்தன்மை குறித்து எழுதினேன் அல்லவா..

ஆனால் அசோகன் அந்த நன்றியையோ மரியாதையையோ காட்டவில்லை... எம் ஜி ஆரிடம் நல்லபேர் வாங்க வேண்டும் என்பதற்காக சிவாஜியை தரக்குறைவாக பேசினார்.. தனியாகவும் சரி.. மேடைகளிலும் சரி.. இப்படி பேசி வந்தார்

அப்படி இருந்தும்கூட , வேறொரு சம்பவத்தில் எம் ஜி ஆரின்  கோபத்துக்கு ஆளானார்..

அசோகன் தயாரிப்பில் உருவாகி வந்த , தான் நடித்த  நேற்று இந்த நாளை படத்துக்கு தன்னால் முடிந்த இடைஞ்சல்களை செய்தார் எம் ஜி ஆர்

படம் ரிலிசான பிறகும் , தொல்லைகள் தொடர்ந்தன.. தான் நடித்த படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை.. அசோகன் அழிய வேண்டும் என நினைத்து தன் படத்தையே ஃபிளாப் ஆக்கினார் எம் ஜி ஆர்.. அந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு ஆணையிட்டார்

இது ஓரளவு பலருக்கு தெரிந்த கதைதான்

சிவாஜியும் இப்படி தன் படத்தை பார்க்க வேண்டாம் என சொன்னதும் , விளம்பரமே கொடுத்ததும் பலருக்கு தெரியாது... அதை பார்ப்போம்

சிவாஜி நெகட்டிவ் நாயகனாக நடித்த படம் திரும்பி பார்.. கலைஞர் வசனத்தில் உருவான படம்.. நேருவை செம கிண்டல் செய்திருப்பார்கள்

(படம் குறித்த என் பார்வை)

சிவாஜிக்கு நல்ல பேர் கிடைத்த படங்களில் ஒன்று இது

சில ஆண்டுகளில் சிவாஜி காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்...

காங்கிரஸ் காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங் என்றும் செயல்பட்ட காலம்.. காமராஜர் விசுவாசியாக இருந்த சிவாஜி , அந்த கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் பொருட்டு , மாபெரும் கூட்டங்களில் பேசலானார்..

அவர் கூட்டங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து அனுமதி அளித்தாலும் பெருங்கூட்டம் கூடும் அளவுக்கு செல்வாக்கு இருந்தது


சிவாஜியின் இந்த வீச்சை குறைக்க கலைஞர் திட்டம் தீட்டி ஒரு பிரமுகருக்கு யோசனை அளித்தார்.. அந்த பிரமுகர் அதன்படி , திரும்பி பார் படத்தின் வினியோக உரிமையை பெருந்தொகைக்கு வாங்கினார்..

இப்போதெல்லாம் எந்த படமும் ஒரு வாரத்துக்கு பின் தியேட்டர்களில் கூட்டத்தை ஈர்ப்பதில்லை...காரணம் நிறைய தியேட்டர் ரிலீஸ் , டிவி வெளியீடு என பல

ஆனால் அந்த காலத்தில் , ஒரு படம் இரண்டாம் முறை ரிலிசானாலும் நல்ல கூட்டம் வரும்...

எனவே பெருந்தொகைக்கு படத்தை வாங்கிய அவர் , ஊர் முழுக்க இப்படி விளம்பரம் செய்தார்

நய வஞ்சகன் ,  பெண் பித்தன் , தீமையின் உருவம்... உங்களை காண வருகிறான்... வந்து பாருங்கள்... திரும்பிப் பார்


படத்துக்கு விளம்பரம் கொடுப்பதுபோல கூட்டங்களுக்காக சுற்றுப்பயணம் செய்யும் சிவாஜியை கேலி செய்தார் அவர்

இப்படி செய்தால் படம் நல்ல வசூல் செய்யும்தான்,.. சிவாஜிக்கு ஒரு நடிகராக அது நல்லதுதான்.. ஆனால் காங்கிரஸ் பாதிப்படையும்

எனவே தன் தொழில் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என சிவாஜி விளம்ப்ரம் கொடுத்தார்

திரும்பிப்பார் படம் - யாரும் பார்க்காதீர்கள்

இதை எதிர்பாராத வினியோகஸ்தர் பயந்து போய் மன்னிப்பு கேட்டு , தன் இழிவான விளம்பரத்தை வாபஸ் பெற்றார்







Tuesday, March 19, 2019

என் ஆர் தாசன் - எழுத்துகள்


 தமிழில் நல்ல எழுத்துகள் எத்தனையோ உண்டு... பலர் எதையுமே படிப்பதில்லை...

நமக்கு முன்னால் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டால்தான் அதை விட மேலே சென்று அடுத்த கட்டத்துக்கு பயணிக்க முடியும்.. மீண்டும் மீண்டும் எழுதியவற்றையே எழுதுதல் தேவை இல்லாதது.. நமக்கு அது புதிதாக இருக்கலாம்.. ஆனால் இலக்கிய உலகுக்கு அது பழையதாக இருக்கும் என்பதால் புறக்கணித்து விடும்..

எழுத்தாளர் என் ஆர் தாசன் குறித்தும் அவரது சிறுகதைகள் குறித்தும் முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன்,,,

அவரது கவிதைகள் , உருவக கதைகள் அடங்கிய நூலில் இருந்து சில பகுதிகள்

-----

என் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை

மீண்டும் கேட்கிறேன்

எங்கிருந்து வந்தாய்

புன்னகை செய்கிறாய்

நட்சத்திரங்கள் பார்க்கிறாய்

பதில் மட்டும் இல்லை

மீண்டும் கேட்கிறேன்

எங்கிருந்து வருகிறாய்

வெகு நேரம் கழித்து பதில் வருகிறது

எங்கு இருந்தேன் ? வருவதற்கு ?

--------


உன் வீணையில் மட்டும் ஏன்
இவ்வளவு இனிய இசை?
பலா மரத்தாலான வீணை என்கிறாய்..

உன் பேச்சிலும் அசைவிலும் அமுத ஸ்வரங்கள்

எந்த மரத்தாலான வீணை நீ

------

Monday, March 18, 2019

ருத்ரம் எனும் அரு மருந்து


பொங்கல் முடிந்து விட்டால் , இனி வறட்சியான காலம் , பண்டிகைகள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டன என தோன்றும்

ஆனால்  நம் மக்கள் வாழ்க்கையை கொண்டாடுபவர்கள்.. அர்த்தமற்ற கேளிக்கைகள் என இல்லாமல் அனைவருடன் அன்பை பகிர்ந்து கொள்ளும்வண்னம் கொண்ட்டாட்டம் , விழா , பண்டிகை இருக்கும்

சிவராத்திரி அன்று இரவு முழுக்க உணவையும் அறிவையும் ஞானத்தையும் பரிமாறினார்கள்

பிரதோஷம் அன்று ஒவ்வொரு கோயிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது

 நான் கூட்டம் குறைவாக இருந்த , ஒரு புராதான ஆலயம் சென்றேன்... அதிர்வு மிக்க ஆலயம்..

ருத்ரம் அந்த அமைதியான சூழலில் அற்புதமாக இருந்தது

வேதங்களின் இதயம் ருத்ரம் என சொல்லப்படுகிறது
வேதம் என்பது இறை சக்தியை ஒலி வடிவாக்கி உணர முயல்தல்...  உச்சரிப்பு முக்கியம் ..   வேதம் இரண்டு காண்டங்களை கொண்டது... கர்ம காண்டம்.. ஞான காண்டம்

உப நிஷத் என்பது ஞான காண்டம்..

வேதத்தில் நான்கு பாகங்கள் இருக்கும்.. சம்ஹிதை , பிரம்மாணம் , ஆரன்யகம் கடைசியாக உபனிஷத்

ருத்ரம் என்பது ஞானத்தை சொல்லும் உப நிஷத்துவில் இல்லை... கர்ம காண்டத்தில் உள்ளது.. ஆனால் ருத்ரோபனிஷத் என அழைக்கப்படுகிறது

அதாவது ஞானத்துக்கும் கர்மத்துக்கும் பாலமாக இருப்பது ருத்ரம் மட்டுமே

பல் வேறு அரிய மந்திரங்களில் தொகுப்புதான் ருத்ரம்.. எதை எதை எப்படி எதற்கு எப்போது எங்கு சொல்ல வேண்டும் என முறை இருக்கிறது.

அதை போக போக பார்ப்போம்

காசி ஆனந்தன் கவிதை நூல் - ஒரு பார்வை


கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்

இலங்கை படுகொலைகளை பலரும் மறந்து விட்டு காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாறி விட்ட சூழலில் , இன்றும்கூட காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் சிலரில் இவரும் ஒருவர்..

அவர் கவிதைகள் பலவும் பிரபலமானவை என்றாலும் , காசி ஆனந்தன் நறுக்குகள் என்ற கவிதை நூல் தனித்துவம் வாய்ந்தது என்பதால் அனைவரும் வாங்கிப்படிக்கலாம்

அதற்கு முக்கிய காரணம் , இவரது முன்னுரை.. சிறுகதை , புதுக்கவிதை போன்றவை ஆங்கிலத்தில் இருந்து இங்கு வந்தன என்ற கருதுகோளே தவறு என ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்... ஆங்கிலம் என்ற மொழி தோன்றுவதற்கு முன்பே , தமிழில் கவிதைகள் வந்து விட்டன என ஆதாரங்கள் தருவது ஆச்சர்யம் அளிக்கிறது

பாரதிதாசனை ஏற்போர் சிலர் பாரதியை ஏற்பதில்லை..இவரோ இருவரையும் ஏற்கிறார்..அதுதான் கவிதை மனம்,, இருவரைப்பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார்

இன்னொரு சிறப்பம்சம் , திகசி யின் அணிந்துரை

சிறப்பு மேல் சிறப்பாக இன்னொரு சிறப்பு , வல்லிக்கண்ணனின் சிறப்புரை

வீர சந்தானம் அவர்களின் ஓவியம் கூடுதல் சிறப்பு

கண்டிப்பாக படியுங்கள்

நூல் : காசி ஆனந்தன்  நறுக்குகள்




சில கவிதைகள்



முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!


நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி



கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.


தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்


பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர் 


வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…
எரிந்ததுஅடுப்பல்ல-சேரி


வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு . 


சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம். 


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்
மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….


மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.


அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது


மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்


பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.


கொடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.


திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்


கொலை..
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு


அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்


உலகமைதி..
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.


அடி ..
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.


ஆணாதிக்கம்..
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்


வேலி..
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா


காலம்..
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.


கடற்கரை..
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்


நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.


இருள்..
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?


தாஜ்மஹால்..
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?


புலமை..
கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!


பால்..
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


அரண்..
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.


தேர்தல்..
மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.


குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.


ஏழ்மை..
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்


கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்


நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?


கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்


மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?


குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்

Sunday, March 17, 2019

எதிரிக்கு நடிப்பு சொல்லி தந்த சிவாஜி


அந்த காலத்தில் எம் ஜி ஆரும் சிவாஜியும் இரு துருவங்களாக இருந்தனர்.. நடிப்பு பாணியில் மட்டும் அல்ல.. இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் , சக நடிகர்கள் என அனைத்து துறையினருமே இப்படி பிரிந்து இருந்தனர்

உதாரணமாக தேவர் ஃபில்ம்ஸ் சிவாஜியை வைத்து படம் எடுக்காது.,, அது முழுக்க முழுக்க எம் ஜி ஆர் ஆதரவு அணி.. அதுபோல பீம்சிங் போன்ற பலர் சிவாஜி அணியை சேர்ந்தவர்கள்

அசோகன் எம் ஜி ஆர் ஆதரவாளர் என்றாலும் , சிவாஜி படத்தில்( உயர்ந்த மனிதன் ) அசோகன் ஒப்பந்தம் ஆனார்... இது இருவருக்குமே பிடிக்கவில்லை என்றாலும் ஏ வி எம் என்ற பெரிய நிறுவனம் படம் என்பதால் சேர்ந்து நடித்தனர்

அதில் ஒரு காட்சியில் உணர்ச்சிகரமாக பேசி விட்டு அசோகன் மரணம் அடைவது போல ஒரு காட்சி... அசோகன் நடிப்பு இயக்குனருக்கு அவ்வளவாக பிடிக்காததால் ரீ டேக் வேண்டும் என்றார்

அசோகனை தனியாக அழைத்த சிவாஜி , அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக்காட்டினார்..

   நம் எதிரிக்கு நம் மேல் என்ன அக்கறை என அசோகனுக்கு குழப்பம்.. தப்பாக அட்வைஸ் கொடுத்து தன்னை வைத்து காமெடி செய்கிறாரோ என இயக்குனரிடம் கேட்டார்

சிவாஜி அப்படிப்பட்ட ஆள் இல்லை... அவர் சொன்ன மாதிரி செய்யுங்க என சொல்லி விட்டார் இயக்குனர்

சிவாஜி இயக்குனரிடம் சொன்னார்

அசோகனெல்லாம் ஓர் ஆள்.. அவனை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனாலும் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவனுக்கு உதவ வேண்டியதாகி விட்டது என்றார்

எது எப்படியோ . காட்சி நன்றாக வந்தது.. ஒளிப்பதிவு  நடிப்பு , வெளிச்சத்துக்கு முக்கியம் கொடுத்து பதிவு செய்துள்ள நேர்த்தி என பலராலும் பாராட்டப்பட்ட காட்சியை நீங்களும் பாருங்கள்

அசோகன் நடிப்பு

வலைச்சரம் சீனா இயற்கை எய்தினார்- அஞ்சலி

இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும் என நம்பிய , அதற்காக முயற்சிகளை செய்தவர்களுள் முக்கியமான ஒருவர் , சீனா என பரவலாக அறியப்பட்ட சிதம்பரம் அவர்கள்

வலைச்சரம் என்ற வலைப்பூ மூலம் பல வலைப்பதிவர்களை அறிமுகம் செய்தார்.. வலைப்பதிவர்களுக்கிடையே நல்லதோர் உறவை ஏற்படுத்தினார்

என் எழுத்துகளையும் படித்து இருக்கிறார் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.. அவருடன் பேசியது என் பெரும் பேறு...

அவருடன் பேசும்போதே எனக்கு அவர் உயர்வு தெரியும் என்பதால் அந்த உரையாடல்களை முழுமையாகவும் கவனமாகவும் பயன்படுத்திக்கொண்டேன்..  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டோமே என்ற வருத்தம்  இல்லை

அவர் போன்றவர்கள் உருவாக்கிய மாண்புகளும் , இணைய நாகரிகமும் , இணைய நெறிறைகளும் இன்றும்கூட பலரை வழி நடத்துகிறது

கரையான் கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தது போல , இணைய எழுத்து பிரபலமாக தொடங்கியதும் , மலினமான எழுத்துகளும் பல்கிபெருகி இணையத்துக்கான மரியாதையை குறைத்து விட்டாலும் , அவர் வழிகாட்டலால் , மீண்டும் இணைய எழுத்து புத்துயிர் பெறும் என நம்புகிறேன்

அதுதான் அவருக்கு மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும் என நினைக்கிறேன்




Friday, March 15, 2019

பேட்ட நாகரிகம் , பெண்கள் விஷயத்திலும் தேவை





பேட்ட படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதன் அட்டகாசமான கிளைமேக்ஸ்,..

படம் முடிந்து விட்டது என நினைத்து , சீட்டிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் ரசிகனை மீண்டும் உட்கார வைத்து ஒரு ட்விஸ்ட்டுடன் படம் முடியும்..

இதில் என்ன ஒரு குறிப்பிடத்தக்க விஷ்யம் என்றால் , படம் குறித்து இணையத்தில் எழுதிய யாருமே - ஒருவர் கூட - அந்த சஸ்பென்சை வெளிப்படையாக இங்கே எழுதாமல் ரகசியம் காத்தனர்

ரஜினியை திட்டியவர்கள் , பேட்ட படத்தை பிடிக்காதவர்கள் எழுதும்போதுகூட சஸ்பென்சை உடைக்கவில்லை

சஸ்பென்சை இங்கு உடைத்தால் படம் தோல்வி அடையப்போவதில்லை.. ஆனாலும் ஒரு நாகரிகம் கருதி அதை யாரும் செய்யவில்லை

அரசின் மிரட்டல்களோ , சட்டங்களோ செய்ய முடியாததை இயல்பாக உருவாகி வந்த ஒரு நாகரிகம் சாதித்தது..

இது போன்ற நாகரிகத்தை பெண்கள் பாதிக்கப்படும் விஷயங்களில் கடைபிடிக்க வேண்டும்

நம் சகோதரி ஒருவர் , சில மிருககங்களால் பாதிகப்பட்டால் , கிராமத்தை பெண்ணை நாசமாக்கிய சம்பவம் ... பெண்ணை சீரழித்தனர் என்றோ எழுதக்கூடாது

  நாசமாய் போனது நம் சமூகம்தான்.. சீரழிந்தது ஆண் வர்க்கம்தான் ..

அந்த பெண்ணின் புனிதம் கெட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது போல எழுதக்கூடாது

கற்பழிப்பு விவகாரம்.. புதிய வீடியோ ரிலீஸ் என்றெல்லாம் யாரேனும் வாட்சப் அனுப்பினால் உடனடியாக அவர்கள் நட்பை துண்டிக்க வேண்டும்

கற்பை வேறு யாரும் அழிக்க முடியாது... கற்பு என்பது அவரவர் மனம் சார்ந்தது....

பெண்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்ப்போம்

ராஜம் கிருஷ்ணன் படைப்புலகம்


இலக்கிய மதிப்பால் , கலை நேர்த்தியால் கவனம் பெறும் படைப்புகள் உண்டு..

சுவாரஸ்யத்தை வைத்து கவனம் பெறும் படைப்பாளிகள் உண்டு

சில எழுத்தாளர்களின் முதன்மை அடையாளம் என்பது செயல்பாட்டார்கள் என்பதும் போராளிகள் என்பதும்தான்.. இவர்கள் எழுத்துகளுக்கு ஆவண மதிப்பு உண்டு...

இதில் ராஜம் கிருஷ்ணன் அவர்களை எப்படி வகைப்படுத்துவது?

ஒரு கடையில் ஒரு பெண் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு இருந்தார்.. ரமணி சந்திரன் , முத்துலட்சுமி ராகவன் என பெண் எழுத்தாளர்கள் புத்தகங்களை பார்த்து பார்த்து செலக்ட் செய்தார்.. ராஜம் கிருஷ்ணன் நூல்களை லாகவமாக தவிர்த்து விட்டார்

அவரை பெண்ணிய எழுத்தாளர் என்று நினைத்து பல ஆண்களும் படிப்பதில்லை

எனவேதான் அவர் எழுத்தாளர்களால் மதிக்கப்பட்ட , தலைவர்களால் நேசிக்கப்பட்ட , இயக்கங்களால் சக போராளியாக கருதப்பட்ட ஆளுமையாக அவர் இருந்தாலும் , சராசரி வாசகனிடம் புகழ் பெற்ற வெகு ஜன எழுத்தாளராக அவர் இல்லை..


அவர் எழுத்துலகை அலச வேண்டுமானால் நிறைய எழுதியாக வேண்டும்.. காரணம் ஏராளம் எழுதிக்குவித்தவர் அவர்

எனவே அனைத்தையும் அலசாமல் ஒரே ஒரு சிறு கதை தொகுதியை மட்டும் அலசுவோம்.. அதை வைத்து அவர் எழுத்து பாணியின் டிரண்டை புரிந்து கொள்ளலாம்


கனவு என்ற சிறுகதை தொகுப்பை பார்ப்போம்..    ( தாகம் பதிப்பகம் )

இதில் கனவு , பசுமை , வந்த காரியம் , மின்னி மறையும் வைரங்கள் , காட்டுக் கோழி , ஆற்றோட்டம் , சேதப்பட்டபோது , கூண்டுக்கடிகாரம் , மல்லிகைப்பூ , மழை , ஒளிரும் நுண்ணிழை , பங்கி , பணம் வேண்டுமா, வேர்கள் ,பவுடர்


ஆகிய கதைகள் இதில் உள்ளன

வறுமை , உறவுச்சிக்கல்கள் , ஆன்மிக தேடல் , இளமை வேகம் , மனிதம் அடையும் உச்சங்கள் வீழ்ச்சிகள் , காதல் என பேசு பொருட்கள் பலவாக உள்ளன

எந்த விறுவிறுப்போ , கலை அம்சமோ இல்லாமல் நேரடியாக இருக்கும் “ சேதப்பட்டபோது “ கதை முதல் , பூடகமான கதை சொல்லல் முறையில் அமைந்துள்ள வேர்கள் வரை கதைகள் பல தளங்களில் அமைந்துள்ளன

பவுடர் என்று ஒரு கதை.. ஒரு இளம் பெண் குடும்ப விழா ஒன்றுக்கு செல்ல வேண்டும்.. வறுமையில் வாழும் அவள் ஓரளவு நல்ல ஆடை அணிந்து செல்லும் நிலையில் இருக்கிறாள்.. ஆனால் பவுடர் போடாமல் வெற்று முகத்தோடு செல்ல விரும்பவில்லை... அது அநாகரிகமாக தோன்றும்.. இது போன்ற சிக்கல்களை கடந்த காலத்தில் பல விதங்களில் சமாளித்து இருக்கிறாள்,,,// கேஷுவலாக அண்டை வீட்டுக்குப்போய் பேசுவது போல பேசி , தற்செயலாகவோ தெரியமலோ கொஞ்சம் பவுடரை எடுத்துக்கொள்வது , நேரடியா கேட்டு வாங்குவது என பல வழிகள்.. ஆனால் இன்று எதுவும் செல்லுபடியாகவில்லை

காரணம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.. கடைசியாக தோழி ஒருவள் வீட்டுக்கு போகிறாள்..அவள் கணவன் மட்டுமே இருக்கிறான்.. அவள் இல்லாதபோது , அவள் வீட்டுக்குபோவது தவறு என்றாலும் பவுடர் வெறி அவள் கண்ணை மறைக்கிறது என்பது கதையின் சாரம்

இன்று நம்மிடம் அந்த அளவு வறுமை இல்லாது இருக்கலாம்.. பவுடர் என்பது வழக்கொழிந்து போய் இருக்கலாம்

ஆனால் பவுடர் என்ற இடத்தை எத்தனையோ விஷ்யங்கள் பிடித்து வைத்துள்ளன என்பதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம்.. மனம் கசிந்து கண்ணீர் விடுகிறோம்..

ஆக , அந்த கதை அன்றைய கதை மாந்தரை வைத்து புனையப்பட்டாலும் என்றைக்கும் உரிய கதையாக மிளிர்கிறது... அதுதான்  எழுத்தின் வெற்றி

காட்டுக்கோழி கூண்டுக்கடிகாரம் போன்றவை அழகான குறியீட்டுக்கதைகள்

மல்லிகைப்பூ என்றொரு கதை

மலம் அள்ளும் தொழில் ஒழிந்து அதை இயந்திரமயமாக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமூக உணர்வோடு பதிவு செய்துள்ளார்

ஆனால் இப்போதைய சூழல் , அந்த தொழிலும் எளிது அல்ல.. அதிலும் போட்டிகள் உண்டு... இது பலருக்கு தெரியாது...

இதை கதை பதிவு செய்தாலும் கதையின் சாராம்சம் அது அல்ல... அந்த தொழிலில் இருப்பவனின் வாசம் சார்ந்த உயர் ரசனைதான் கதை

இப்படி பல்வேறு பார்வைகள்... அணை கட்டுதல் , தனி ஊசல் ஃபார்முலா என பெண் எழுத்தாளர்கள் என்று அல்ல.. பல ஆண் எழுத்தாளர்களே தொடாத விஷ்யங்கள் என மிளிர்கிறது தொகுப்பு

இலக்கிய கூட்டங்களில் இவர் குறித்த விவாதங்கள் நடத்தி மீள் வாசிப்பு செய்யவேண்டியது நம் கடமை

Wednesday, March 13, 2019

ராஜம் கிருஷ்ணன் - அன்பு சூழ் உலகில் வாழ்ந்த அற்புதம்


ராஜம் கிருஷ்ணன் அவர்கள் ஒரு நாவலாசிரியாக அறியப்பட்டு இருந்தாலும் அவர் நல்ல சிறு கதை எழுத்தாளரும்கூட

எழுத்து என்பதை மானுடத்தை உயர்த்தும் ஒரு கருவியாக நினைத்தவர் அவர்.. அகச்சிக்கல்கள் , மன சிடுக்குகள் போன்றவற்றை விட புறக்காரணிகளை அதிகம் அலசியவர் அவர்

ஆனால் நாவல் , சிறுகதை ஆகியவற்றை விட அவரது கட்டுரைகளில்தான் இலக்கிய அம்சம் கூடுதலாக புலப்படுகிறது

மதம் , சமூகம் , பண்பாடு என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்க முயலும் மனப்பாங்கை அழகாக அவர் எழுத்து சொல்கிறது -ஆதாரப்பூர்வ தரவுகளுடன்

இன்று அறிவியலும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதையே செய்ய முனைவது மாபெரும் துன்பவியல் நிகழ்வாகும்

எழுத்து சமூகத்தை மாற்றுமா என்பது ஒரு நிலையான கேள்வி

இவரைப்பொறுத்தவரை , சமூகம் இவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது

பாரம்பரிய குடும்ப சிந்தனைகளோடு லட்சியவாத சிந்தனைகளோடு ஆரம்பித்த இவர் எழுத்துப்பயணம் விளிம்பு நிலை மக்களுடனான பழக்கம் , சோவியத் யூனியன் பயணம் போன்றவைகளால் நிறைய மாறியது... கம்யூனிட் மண்ணில் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பும் , உரிமையும் இவரை நிறையவே மாற்றியது

அனைத்து தரப்பினருனே இவர் மீது மரியாதை வைத்து இருந்தனர்... உயிருடன் இருந்தபோதே இவர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன,,,

இவர் உடல் நலம் குன்றி சுய நினைவு இழக்கத்தொடங்கிய கடைசி நாட்களில் எழுத்தாளர்கள் சிலர் சேர்ந்து அவரை வரவழைத்து ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தினர்,, நாற்காலியில் அமர்ந்தபடி அவர் ஆழ் உள்ளம் அதைக்கண்டு மகிழ்ந்தது... ஓர் எழுத்தாளருக்கு இப்படிப்பட்ட அன்பான சுற்றம் அமைவது அரிது

தன் செல்வங்களை எல்லாம் பிறருக்கே செலவிட்ட்டவர் இவர்... ஏழைச்சிறுவர்கள் , குடிசைவாசிகள் பலரை தன் காசில் படிக்க வைத்தவர்.. அதற்கு அவர் கணவரும் ஆதரவாக இருந்தார்


இந்த தர்மம் அவரை கை விடவில்லை.. கடைசி வரை அவர் பிறரால் பேணப்பட்டவராக இருந்தார்,., ராமச்சந்திரா மருத்துவமனையில் நல்ல மதிப்புடன் கடைசிக்காலத்தில் கவனிக்கப்பட்டார்

உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் முழுக்க முழுக்க நண்பர்களால் , சக எழுத்தாளர்களால் ஆதரவுடன் ஒரு பெண் வாழ்ந்தார் என்றால் அதற்கு காரணம் அவரது எழுத்து ... அவரைச்சுற்றி இருந்த நல் உள்ளங்கள்

இருக்கும்போது தன் உழைப்பை  , செல்வத்தை பிறருக்காக செலவிட்ட இவர் இறந்த பின்ன்னும் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனை ஆராய்ச்சிக்காக கொடுத்து விட்டே சென்றார்

மீள் வாசிப்பு செய்து அடிக்கடி நினைவுகூரப்பட வேண்டிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

Tuesday, March 12, 2019

சாருவின் மயான கொள்ளை நாடகம் - என் பார்வையில்


சிவராத்திரி என்பது ஒரு தனித்துவமான இரவு...

ஆலயங்களில் ஆகம முறைப்படி இறைவனை வழிபடுவது ஒரு விதம் என்றால் , மயானங்களில் சிற்றாலயங்களில் நடக்கும் சிவபூஜை வேறு விதம்

உண்மையான பக்தியுடன் ஒரு புறம் , உக்கிரமான பக்தியுடன் ஒரு புறம் என இரண்டுமே நடக்கின்றன

( சினிமா பார்த்து சிவராத்திரி அனுசரிக்கும் விளையாட்டுத்தனத்தை இதில் சேர்க்கவில்லை )

சிவ ராத்திரிக்கு பக்திபூர்வமான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும்  திரு நங்கைகளுக்கும் சிவராத்திரிக்குமான தொடர்பை விளக்கும் கதை சற்றே வித்தியாசமானது

அந்த காலத்தில் வல்லாளன் என்றொரு அரசன் இருந்தான்.. பேராசை மிக்கவன்..பதவி வெறி தவிர எதுவும் அறியாதவன்

கடும் தவம் இயற்றி சிவனே தன் மகனாக பிறக்க வேண்டும் என்ற வரத்தை பெற்று விட்டான்

கொஞ்ச நாட்களில் அவன் மனைவி கர்ப்பம் தரித்தாள்..

அவளைப்பார்க்க ஒரு குறி சொல்லும் பெண் வந்தாள்...

அரசனே.. உன் மனைவியின் வயிற்றில் இருப்பது அழிக்கும் கடவுள் சிவன்,,, அவன் பிறந்ததும் முதலில் அழிக்கப்போவது உன்னைத்தான் என்றாள் அந்த குறி சொல்லும் பெண்

பயந்த அரசன் , அரசியை சிறைவைத்தான்... குறிசொல்லும் பெண் தன் உருவத்தை பணியாள் போல மாற்றிக்கொண்டு அரசியின் சிறைக்கு சென்றாள்.

அரசியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்தாள்

அந்த குழந்தை சிவனாக மாறி அரசனை அழித்தது... அந்த ஊரை அழித்தது,,, அந்த ஊரே ஒரு சுடுகாடாக மாறியது

அந்த குழந்தை சிவ வடிவம் எடுத்தது,, பணிப்பெண் பார்வதி ஆனாள்.. இருவரும் ஓருடல் ஆகினர்,,, ஆண் பாதி பெண் பாதி என திரு நங்கை எனும் குலம் உருவானது

ஆணும் பெண்ணும் கலந்தவர்கள்தான் நாம் ஒவ்வொருவரும்... இதை மறந்து பெண்களுக்கு எதிராக செயல்பட ஆண்கள் ஆரம்பித்தால் ஊரே சுடுகாடு  ஆவதை யாரும் தடுக்க முடியாது... ஒரு பெண் பாதிக்கபடுகிறாள் என்றால் அவள் மீது அன்பு கொண்ட  ஆணும்தான் அழுகிறான்...

பாதிக்கப்படாத சிலர் இருக்கலாம்... பிரச்சனைகளை எப்படி அரசியலாக்கலாம்,,, வக்கிரமாக செய்திகளை பரப்பி கிளுகிளுப்பு அடையலாம் என நினைப்போரும் அக்கிரமக்காரர்களின் இன்னொரு வடிவம்தான்

அனைவரும் சேர்ந்து அழிவார்கள் என்பது இயற்கை விதி

இதைத்தான் மயான கொள்ளை கதை சொல்கிறது


இந்த தொன்மத்தை வெகு அழகாக மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் சாரு

 பின் நவீனத்துவம் என்பது நாடக வடிவில் தமிழில் வந்ததில்லை.. நம் ஊரில் நாடகம் என்றால் நகைச்சுவை தோரணங்கள் அல்லது ஏதாவது ஒரு பிரச்சாரம்...

கலை வடிவில்  ஒரு தமிழ் நாடகத்தை பார்ப்பது புதிய அனுபவம்

 கல்பனா என்ற பெண் திரு நங்கையர் மீது பரிவு கொண்டு அவர்களை பேட்டி காண வருகிறாள்

எங்கள் மீது பரிவு காட்டுவது நல்லதுதான்... ஆனால் உன் நிலை எப்படி இருக்கிறது என்பதை யோசித்து இருக்கிறாயா என அவளை அவளுக்கே காட்டுகின்றனர் அவர்கள்

கடைசியில் அவள் எப்படி மாறுகிறாள்...என்ன முடிவு எடுக்கிறாள் என்பது ஒரு அற்புதமான சிறுகதையில் நிகழும் உச்ச வெடிப்பு போல இந்த நாடகத்தில் நிகழ்கிறது

சாரு என்ற எழுத்தாளனை கடுமையாக தண்டிங்கள் என ஆணை இடுகிறான் அர்சன்

முடியாது அரசே..அவன் இப்போது தமிழ் நாட்டில் இருக்கிறான் என்கிறார் அமைச்சார்

அப்படியா,, அதை விட கொடிய தண்டனையை நம்மால் கொடுக்க முடியாது என்கிறான் அரசன்

பொதுவாக இந்த வரிகள் நம்மை சிரிக்க வைக்கும்,, ஆனால் இன்று நடக்கும் சம்பவங்களை - பெண்களுக்கு எதிரான குற்றங்களை காணும்போது இந்த வரிகள் கண் கலங்க வைக்கின்றன


 திரு நங்கையரின் வலி , அவர்கள் சந்திக்கும் துன்பங்கள் என திருங்கையர் குறித்த படைப்பாக தோன்றினாலும் இது மானுட மனசாட்சியை நோக்கி பேசும் படைப்பு

அனைவரும் படிக்க வேண்டிய நாடகம் - மயான கொள்ளை -

எழுதியவர் சாரு நிவேதிதா




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா