Friday, March 29, 2019

பூமணியின் அம்பாரம்

ஒர் எழுத்தாளரின் அத்தனை சிறுகதைகளையும் ஒரு தொகுப்பாக ஒரே நூலாக படித்து முடிப்பது என்பது ஒரு சவாலாகும்.. காரணம் சில கதைகளை முடித்ததுமே ஒரு பேட்டர்ன் பிடிபட்டு விடும்.. எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருப்பதால் பாதியிலேயே மூடி வைத்து விடுவோம்.

பூமணியின் அம்பாரம் சிறுகதை தொகுப்பு இந்த சவாலை அழகாக சந்தித்து வெல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை..

முற்போக்கு எழுத்துகளுக்கு என ஒரு பாணி உண்டு,,, அந்த பாணியிலான கதைகள் என்றுதான் நினைத்து படிக்க ஆரமபித்தேன்.. படிக்க படிக்க பூமணியின் எழுத்து, அவர் பாணி,,, அவர்தம் அழகியல்,,, என்னை ஈர்த்து மயக்கி விட்டது.

இசை , நடனம், காபியின் நறுமணம் , எதிர்பால் ஈர்ப்பு என்று இவர் எழுத்து பயணிக்கவில்லை.. ரத்தம், சாதிய கொடுமை , வறுமை, கொலை என்றுதான் பேசுகிறது,, ஆனால் அதை படிக்க வைக்கும் நேர்த்தியுடன் , சிறுகதை என்ற வடிவை புரிந்து கொண்டு கச்சிதமாக வாசகன் முன் வைப்பதில் பூமணி ஒரு முன்னுதாரண எழுத்தாளராக மிளிர்கிறார்

தேவையின்றி ஓர் எழுத்து கூட இல்லாத கச்சிதமான நடை இவருடையது...   ஒரு வரியை ஸ்கிப் செய்தால் கூட , அந்த கதை புரியாமல் போய் விடும்

ஒரு மிகப்பெரிய கொலை , மரணம் , அழிவு சர்வசாதாரணமாக ஒரு வரியில் சொல்லப்பட்டு விடும் என்பதால் ஒவ்வொரு வரியுமே அதீத கவனத்தை கோருகிறது

பொதுவாக ஒரு தொகுப்பில் இருக்கும் ஒரு சிறுகதையின் தலைப்பையே நூலுக்கு தலைப்பு ஆக்குவார்கள்.. அல்லது இன்னாரின் சிறுகதைகள் என தலைப்பு இருக்கும்.,... ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் அம்பாரம் என வட்டார வழக்கை ஒட்டியும் , சிறுகதையில் வரும் சொல்லை வைத்தும் , சிறுகதை குவியல் அல்லது மதிப்பு மிக்க பொருள் குவியல்  , பொக்கிஷம் , களஞ்சியம் என பொருள் வரும்படி அம்பாரம் என பெயர் வைத்திருப்பது அழகு

ஒரு முடிவை மனதில் உருவாக்கிக்கொண்டு அதை நோக்கி கதையை உருவாக்குவது ஒரு பாணி.. கதையின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி வந்தால் கதை முடிவதற்குள் அது வெடிக்க வேண்டும் என்பது ஒரு கருதுகோள்... அப்படி எல்லாம் எந்த பார்முலாவும் இல்லாமல் நிஜமான வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ அப்படி இவரது கதைகள் நம் கண் முன்  நிகழ்கின்றன

ஒரு தாயையும் அவள் சின்னஞ்சிறு மகனையும் ஒருவன் அவர்கள் தலைகளை வெட்டி கொல்கிறான் என்பதை எவ்வளவு உருக்கமாக கொடூரமாக எழுதலாம்,, அந்த பெண்ணின் பார்வையில் கொலைகாரன் பார்வையில் எவ்வளவு விரிவாக எழுதலாம்

ஆனால் இவரது கசிவு கதையில் அது ஒரே ஒரு வரியில் வருகிறது

அவர் சாவும் மிகச்சுருக்கமாக சொல்லப்படுகிறது

அவர் லேசாக வாயசைத்தார்

கா ளி ய ப்பன் ம க ன்

அவனை அழைத்து அருகில் அமர வைத்தனர்

அவர் அவன் கழுத்தையே தடவிக்கொண்டு இருந்தார்

கை சோர்ந்தது... கடைக்கண்ணோரம் குளிர்ந்து போயிற்று

அவருக்கு சாவு வந்தது

--

எழுத்தாளன் தன் உணர்வுகளையோ விமர்சனங்களையோ எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் நடப்பதை அப்படியே பதிவு செய்யும்போது கிடைக்கும் பாதிப்பு செயற்கையான வர்ணனைகளில் இருப்பதில்லை

கசிவு கதை உலகின் சிறந்த கதைகளில் ஒன்று

நகைச்சுவை எள்ளலும் கூட இப்படி இயல்பாக இருந்தாக் சுவை அதிகம்

ஏட்டு ஒருவரும் கான்ஸ்டபிளும் உரையாடுவது ஓர் உதா

கடற்கரை போயிருந்தேன். அந்த அழகுல மயங்கி நேரம் போனதே தெரியல

கரண்ட் போஸ்ட்ல சாஞ்ச்சு தூங்கி இருப்பீங்க அதை மறைக்க இப்படி ஒரு கதையா'

அட அறிவு கெட்டவனே. அந்த இடத்துல எப்படிடா தூங்க முடியும்
'
உங்களுக்கு எந்த இடம்னு இருக்கு,,,ஒண்ணுக்கு இருந்துட்டு வரதுகுள்ள ஒறக்கம் போட்டு எந்திருச்சுருவீங்க்ளே

ஒருத்தன் காபி வித்துட்டு வந்தான்.,.. ரெண்டு தடவை வாங்கி குடிச்சேன்...துட்டு கொடுத்துட்டேன்

நான் அதை கேட்டேனா

உன் முழியே சரி இல்லையே

இப்படி இயல்பான உரையாயடல்களால் சித்திரிப்புகளால் நகர்கிறது கதை.

மட்டம் என்றொரு கதை

சாதி பிரச்சனை காரணமாக ஒரு சாராரை கோயிலில் நுழைய அனுமதிப்பதில்லை .. காலப்போக்கில் உரிமை குரல் எழுகிறது,, சண்டை கலவரம் என நடந்து ஒரு வழியாக அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகின்றனர்

ஆனாலும் சண்டையை இரு தரப்பாலும் மறக்க முடியவில்லை... இந்த சூழலில் இரு தரப்பிலும் மூத்தவர்கள் இருவர் ஒரு ரயில் பாதை அருகே தற்செயலாக சந்திக்கின்றனர்

தம்மை எதிராளி தாக்கிவிடுவானோ என இருவருக்குமே அச்சம். தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.. ஒரு ரயில் இருவருக்கும் நடுவே சென்று சில நிமிடங்கள் அவர்கள் பார்வையை மறைக்கிறது..ரயில் சென்றதும் ஒருவர் கையிலும் கல் இல்லை என்பதால் தாக்கும் எண்ணம் இல்லை என்பது புரிகிறது

பக்கத்து குளத்தில் கால் கழுவுகின்றனர்

ஆலய நுழைவை எதிர்த்தவர் இயல்பாக பேச்சை ஆரம்பிக்கிறார்

குளம் வத்திப்போச்சு.. குளம் நிரம்பினால்தால் வீட்டுல கிணறு நிரமபும்

அப்படி இயல்பாக பேச்சு தொடர்கிறது

ஆமா.. இரண்டிலும் நீர் மட்டம் நல்லா இருந்தால்தான் விவசாயம நல்லா  இருக்கும்

இபப்டி நட்புறவுடன் பேச்சு தொடர்கிறது

வற்றிக்கிடக்கும் குளத்தின் நீர் மட்டம் உயரர வேண்டும்...மன உயர்வு வேண்டும் என்பது போன்ற பல எண்ணங்கள் சிறுகதையை படிக்கையில் தோன்றியது

நாக்கு என்று ஒரு கதை..   அப்பாவியாக அமைதியாக இருக்கும் ஒருவன் நாக்கை பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் போலிஸ் வெட்டி விடுகிறது

அவனுக்கு நிகழ்ந்தற்கு பதிலடியாக இந்த சமூகத்தை திட்ட அவனிடம் நாக்கு இல்லை.. ஆனால் அவனே . அவன் இருப்பே நாக்கு ஆகி விடுகிறது,.. முரடனாகி வன்முறையில் ஈடுபாடு கொண்டவனாக மாறி விடுகிறான்..

பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த தொகுதியில் 51 கதைகள் உள்ளன.. ஒவ்வொன்றைப்பற்றியுமே விரிவாக பேசலாம்,

நீங்களும் படியுங்கள்..விவாதிப்போம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா