ஒருவர் சாதிக்கிறார் என்றால் அதில் அவர் பிறந்த கால கட்டம் , பிறந்த ஊர் , பிறந்த குடும்ப சூழல் என பல விஷ்யங்கள் அடங்கி இருக்கின்றன என்கிறார் மால்கம் கிளாட்வெல் , தனது அவுட்லயர்ஸ் நூலில்..
உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் தென்னிந்திய கிராமம் ஒன்றில் ஏழை பெற்றோருக்கு பிறந்து இருந்தால் , வெளிச்சத்துக்கு வந்து இருப்பாரா என்பது கேள்விக்குறியே.. அவர் பிறந்த மா நிலம் , குடும்ப சூழல் , பிறந்த கால கட்டம் என பல விஷ்யங்கள் சேர்ந்துதான் அவரை உருவாக்கியது... ஆனால் அதே மா நிலத்தில் , அதே குடும்ப சூழலில் , அதே கால கட்டத்தில் பிறந்த பலர் சோபிக்க முடியவில்லை.. இயல்பான திறமை , உழைப்பு அடிப்படை தேவை... அத்துடன் மற்ற விஷ்யங்கள் சேரும்போதுதான் வரலாற்று நாயகர்கள் உருவாகுகிறார்கள்
அப்படிப்பட்ட ஒரு வரலாற்று நாயகர்க்ளில் ஒருவர்தான் டாக்டர் டி எஸ் சௌந்திரம் அம்மையார் அவர்கள்..
தலை சிறந்த காந்தியவாதிகளில் ஒருவர் , சின்னாளப்பட்டியில் இருக்கும் காந்தி கிராமம், மதுரையில் இருக்கும் காந்தி அருங்காட்சியகம் போன்றவைகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்... தலித் மக்களுக்காக பாடுப்பட்டவர் ( குறிப்பாக அவர்கள் கல்விக்கு உழைத்தவர் ) சட்டமன்ற உறுப்பினர் , மத்திய அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் என இவரைப் ப்ற்றி சொல்லிகொண்டே போகலாம், காந்தியுடன் நெருங்கிப்ப்ழகியவர் , காந்தியால் பல பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட்டவர் , நேருவால் அமைச்சராக்கப்பட்டவர் , இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி என இவரது வாழ்க்கை சுவையானது மட்டும் அல்ல,... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட
அறம் வளர்த்த அம்மா என்ற பெயரில் வெளிவந்துள்ள டாக்டர் டி எஸ் சௌந்திரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு முக்கியமான வரலாற்று ஆவணமாகும்
இதை எழுதியவர் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி பேராசிரியர் பி எஸ் சந்திரபிரபு
தொழிலதிபர் டி வி சுந்தரம் அய்யங்கார் , சமூக சேவகர் லட்சுமி அம்மையார் ஆகியோருக்கு பிறந்தவர் இவர்
செல்வாக்கு மிக்க குடும்பம் என்பதால் தரமான கல்வி , தன்னம்பிக்கை , தலைவர்கள் தொடர்பு , பெரிய மனிதர்கள் நட்பு , தைரியமான பேசும் பண்பு போன்றவை சின்ன வயதிலேயே கிடைத்து விட்டன
இந்த அனைத்து சாதகமான அம்சங்களும் பதவி பொன் பொருளை சேர்ப்பதற்கு பயன்பட்டு இருந்தால் , வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு உலகில் வாழ்ந்து மறையும் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக மறைந்து இருப்பார்
ஆனால் அவரது இந்த சாதகமான அம்சங்கள் அனைத்தும் தேச தேவை , பெண் விடுதலை , தலித் கல்வி , சாதி ஒழிப்பு , ஏழ்மையை ஒழித்தல் என பயன்பட்டதால் , வரலாற்று நாயகராக நிற்கிறார் என பல சுவையான தகவல்களுடன் பதிவு செய்கிறது நூல்
இவரது 12 வயதிலேயே திருமணம் ஆகி விடுகிறது.. கணவரும் தேச சேவையில் ஆர்வம் கொண்டவர்.. அவர் ஒரு டாக்டர் என்பதால் , ஒரு முறை பிளேக் நோயால் ஊரே பாதிக்கப்பட்ட சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகலாக சிகிச்சை அளித்தார் .. அப்போது கையுறையில் இருந்த ஓட்டை காரணமாக பிளேக் நோய் இவரையும் தாக்கி உயிரைப்பறித்தது
கலங்கிப்போனார் சௌந்திரம்.. அந்த காலத்தில் எல்லாம் கணவன் மறைந்து விட்டால் வாழ்க்கையே முடிந்தாற்போலத்தான்,. ஆனால் இவர் கணவரின் ஆசைப்படி , டாக்டராகி சமூக சேவை செய்யும் பொருட்டு கடுமையாக படித்தார் .. டெல்லியில் மெடிக்கல் சீட் கிடைத்தது.. அங்குதான் சுசீலா நய்யார் என்பவரின் நட்பு கிடைத்தது.. அவரது குடும்பம் காந்தியுடன் நல்ல பழக்கம் கொண்டிருந்தது,..எனவே காந்தி டெல்லிக்கு வரும்போதெல்லாம் சுசீலா நய்யாருடன் சேர்ந்து காந்தியை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு அடிக்கடி கிடைத்தது.. காந்தியுடன் நேரடி அனுபவம் கிடைத்தது
அங்கே காந்தியிடம் நேரடிப் பயிற்சி எடுத்து தலித் மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருந்த ராமச்சந்திரன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது... ரசனை , சமூக சேவை , காந்திய ஈடுபாடு போன்றவற்றில் இருக்கும் ஒற்றுமை காரணமாக இருவரும் மணப்பது நன்மையாக இருக்கும் என முடிவெடுத்தனர்.. காந்தி தன் பாணியில் சோதனை வைத்த பின் , காதலை ஏற்றார்... குடும்பத்தினர் காதலை ஏற்கவில்லை என்றாலும் காந்தியே நேரடியாக இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்ற அபூர்வமான செய்தியை பதிவு செய்கிறது நூல் . இது மகிழ்ச்சிக்குரிய நாள் ,, இன்று மதிய உணவுடன் பாயசம் வழங்க்ப்படும் என அறிவித்து சேவா கிராம ஊழியர்க்ளை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் காந்தி
இந்த திருமணம் அந்த கால கட்டத்தில் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த திருமணமாகும்
- அந்த கால சூழலில் விதவை மறுமணம் என்பது வெகு அபூர்வம்
- இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள்.
- வெவ்வேறு மா நிலங்களை சேர்ந்தவர்கள்
- வெவ்வேறு தாய்மொழிகளை பேசுபவர்கள்
இப்படி காந்திய தம்பதிகள் திரும்ணம் மூலம் புரட்சி செய்தனர
இந்த தம்பதியர் செய்த சேவைகளுக்கு உருவாக்கிய அமைப்புகளுக்கு நிகராக வேறொரு தம்பதியினரை பார்ப்பது மிகவும் அபூர்வம்.. அந்த அளவுக்கு கருத்தொற்றுமையுடன் பல் வேறு மக்கள் நலப்பணி ஆற்றினர்
மதுரையில் பணியாற்றிய முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் இவர்..
அன்னிய தேச துணிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆடை களைந்து அப்போதைய போலிசார் அவமானப்படுத்தியதையும் அதற்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தத்தையும் இந்தியன் படத்தில் காட்சிப்படுத்து இருப்பார்கள்
அது நடந்தது இவர் வசித்த ஊரில்தான்..இவரது சம காலத்தில்தான்.. அந்த கொடுமைக்கு எதிராக மக்களை திரட்டி கண்டன கூட்டங்கள் நடத்தினார் இவர்
ஆணும் பெண்ணும் பேசினால் ஃபைன் என இன்றும்கூட அவ்வப்போது சில பள்ளிகளில் காமெடிகள் நடக்கின்றன.. ஆனால் காந்திய இயக்கம் , ஆண்களும் பெண்களும் அறிவாற்றலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்..பயப்படக்கூடாது என்பதை ஒரு நிபந்தனையாகவே வைத்து இருந்தது என்பது சுவையான செய்தி
சேவை நிமித்தம் கிராமங்களுக்கு சென்றால் இரவாகி விடுகிறது... ஒரு பெண் எப்படி இரவில் தனியாக வருவது என கேட்கும் பெண்களிடம் , இதில் என்ன பயம்... அண்ணா.. தாமதமாகி விட்டது... இரவில் தங்க்கிக்கொள்ளலாமா என சகோதர உரிமையுடன் யாரிடமாவது கேட்டு நிலைமையை சமாளியுங்கள் என உற்சாகப்படுத்துகிறார் அம்மையார்... போலிஸ் பாதுகாப்பு கேட்கும் பெண்களிடம் போலிஸ் எல்லா இடங்களுக்கும் வர முடியுமா... நாம் தான் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என தைரியப்படுத்தி , இரவு பகலாக பயணித்து சேவை செய்த பெண் சேவகர்களை எந்த அசம்பாவிதங்களும் இன்றி வழி நடத்திய அம்மையாரைப்பற்றி படிக்கும்போது வியப்பாக இருக்கிறது
இதில் இன்னொன்றும் இருக்கிறது.. பெண்ணுக்கு துணிச்சல் வேண்டும் என்றாலும் தேவைப்படும்போது ஆணுடன் இணைந்து பணியாற்ற தெரிந்து இருக்க வேண்டும்
கஸ்தூரிபா நிதி அமைப்பு ஒன்று அமைக்கப்ப்ட்டு இருந்தது..இதை பயன்படுத்தி மாதிரி கிராமங்கள் அமைத்து சேவை புரியுமாறு சொல்லி இருந்தார் காந்தி
சென்னைக்கு அருகே அழகான கிராமம் ஒன்றில் இடம் தர சிலர் முன் வந்தனர்//// அனைத்தையும் சென்னையிலேயே அமைக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் போல அல்லாமல் , இதை தென் மாவட்டத்தில் தான் அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார்... ( சென்னைக்கு அருகே காட்டப்பட்ட கிராமத்தில் மருத்துவ மனை அமைக்கப்பட்டது )
அப்படி அமைந்ததுதான் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தி கிராமம்... இதற்கு தேவையான உதவிகளை செய்தவர் இலகுமையா என்ற செல்வந்தர் செய்தார்
இவர் குறித்து ஒரு ஃபிளாஷ்பேக்
1946ல் காந்தி ரயிலில் மதுரை சென்று கொண்டு இருந்தார்.. சின்னாளப்பட்டி அருகில் உள்ள அம்பாத்துரை ரயில் நிலையத்தில் அவரைப்பார்க்க தொண்டர் வெள்ளம் காத்திருந்தது
ஆனால் அங்கு ரயில் நிற்காது என சொல்லி விட்டனர்
இலகுமையா ஒரு திட்டம் போட்டார்.. ரயில் அம்பாத்துரயை நெருங்கும்போது திடீரென கைகாட்டி மரத்தின் கை இறக்கப்பட்டது... ரயில் நின்று விட்டது... அனைவரும் காந்தியை கண் குளிர பார்த்தனர்
அந்த பகுதியில்தான் கஸ்தூர்பா நிதியில் கஸ்தூர்பா கிராமம் அமைக்க திட்டமிட்டனர்
சௌந்திரம்தான் இதற்கு அந்த பெயர் வேண்டாம்.. காந்தி கிராமம் என பெயர் வைப்போம் என்றார்,...
காரணம் கஸ்தூர்பா நிதி வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பது காந்தியின் விருப்பம்.. ஆனால் ஆண்கள் பங்களிப்பு இன்றி ஒரு அமைப்பு பெரிய அளவில் வளராது என்று நினைத்த இவர் காந்தி கிராமம் என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என வாதிட்டார்...
அனைவரும் இதை ஏற்றனர்,.. காந்தியும் ஏற்றார்
மருத்துவர்களாகிய நாம் கல்லூரிகளில் கற்றதை வைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.. மக்களிடமும் கற்று சேவையை பலப்படுத்த வேண்டும் என்ற இவர் அறிவுரை அனைவருக்கும் ஊக்க மருந்தாக பயன்பட்டது
இரு முறைகள் சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்றார்... ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகி நேருவால் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார்
இவரது ஐந்தாண்டு பதவிகாலத்தில் நேரு , லால் பகதூர் சாஸ்த்ரி , இந்திரா காந்தி என மூவர் மந்திரி சபை அமைத்தனர்... மூன்றிலுமே இவர் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது’
அயல் நாட்டு உறவு , மொழி பெயர்ப்பு , நீர்ப்பாசனம் என இவர் தொடாத துறைகள் இல்லை
எல்லாவற்றையும் விட இவரது முக்கிய பங்களிப்பு ஒடுகப்பட்டோர் கல்வி பெறுவதில் இவர் காட்டிய நேரடி அக்கறைதான்
சர்வோதய தலைவர் கிருஷ்ணம்மாள் ஜகனாதன் , தன்னளவில் மிகப்பெரிய தலைவர்... அவர் சௌந்திரம் அம்மாவால் உருவாக்கப்பட்டவர்களில் ஒருவர்தான்
பட்டிக்காட்டில் இருந்து சென்ற என்னை ஆவலோடு அணைத்துக்கொண்டார்...தாயுடன் சேர்ந்த கன்றுபோல அவருடன் இணைந்தேன்.. பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து நான் அணியும் உடையில் கூட அக்கறை செலுத்திய அன்பு இன்னும் பசுமையாக நினைவுள்ளது... என நினைவுகூர்கிறார் கிருஷ்ணம்மாள்
முதுகுளத்தூர் சாதி கலவரம் உட்பட பல சாதி கலவரங்களில் இவர் தலைமையிலான காந்திய இயக்கம் அமைதிக்கான பணிகளை சிறப்பாக செய்துள்ளதை நூல் பட்டியலிட்டுள்ளது
நமக்கு வில்லன்களாகவும் கோமாளிகளாகவும் அயோக்கிய அரசியல்வாதிகளால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல நல்லவர்கள் நூல் முழுதும் ஆங்காங்கு வருகின்றனர்.. ஆர் வெங்கட்ராமன் , காமராஜர் , ராஜாஜி போன்ற அரசியல்வாதிகள் மட்டும் அல்ல.. அரசியலில் இல்லாத பல பிரமுகர்களின் அறிமுகமும் கிடைக்கிறது
இவருக்கு சிலை வைத்து பாராட்ட சிலர் முயன்ற போது , அப்படி சிலை வைத்தால் அந்த சிலை அருகில் உண்ணா விரதமிருந்து உயிர் விடுவேன் என கண்டிப்பாக சிலை முயற்சியை கைவிட வைத்தவர் இவர்... எனக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க.. ஆனால் இவ்வளவு தூரம் சொல்றீங்க ..ஹிஹி என்ற இப்போதைய போலித்தன மறுப்பை பார்த்த நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது
தலித் எழுத்தாளர் , தலித் இலக்கியம் என சொல்லக்கூடாது , தலித்துகளின் இலக்கியமே உண்மையான இலக்கியம்.. மற்றவர்கள் எழுதுவதற்கு வேண்டுமானால் சிறப்பு பெயர் இடுங்கள்.. என கோரிக்கைகள் என எழும் சூழலில் வாழும் நமக்கு , இவர் பள்ளிகளில் வசிப்பிடங்களில் சிறப்பு பெயர் இடுவதை தடுக்க குரல் கொடுத்தார் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது... அதாவது தலித் பள்ளி , தலித் மருத்துவமனை என்பதெல்லாம் வேண்டாம்.. பொதுவான பெயர் வேண்டும் என குரல் கொடுத்தார்
தன் மரணத்துக்கு பின் , தன் உடலுக்கு மாலை மரியாதை கூடாது.. அழக்கூடாது.. தன் கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லி அவை நடப்பதை உறுதி செய்யும் வண்ணம் ஏற்பாடுகள் செய்து விட்டுதான் க்ண் மூடினார்.. உண்மையிலேயே தன் காலத்தை மீறி சிந்தித்த யோசித்த முற்போக்குவாதி இவர்..
அம்மா என அன்புடன் அழைக்கப்பட்ட இவர் செய்தவற்றைத்தான் உண்மையான புரட்சி என்றும் இவரைத்தான் புரட்சித்தலைவி என்றும் அழைக்க வேண்டும்
வாய்ப்பு கிடைப்பின் கண்டிப்பாக படியுங்கள்
அறம் வளர்த்த அம்மா
- பி எஸ் சந்திரபிரபு