Pages

Sunday, February 9, 2020

மோகவாசல் .. இயல்பான குரல்

அரசியல் என்பது திரள்களுக்கானது. இலக்கியம் என்பது திரள்களை உடைப்பது.

இரண்டுமே தேவைதான். தேச விடுதலை , சமூக நீதி , மொழியுரிமை போன்ற பல விஷயங்கள் அரசியல் நடவடிக்கைகளால்தான் சாத்தியமாகின. திரளின் ஆற்றல் மதிப்பு மிக்கது. ஆனால் இலக்கியத்தில் திரள் அழிந்து தனித்துவம் நிற்க வேண்டும்

இன்றைய இணைய உலகில் எல்லோரும் ஒற்றைத்திரளின் சிறு துளிகளாக மாறி விட்டனர்

அதே சமூகபார்வைகள் , மொக்கையான தமிழ் நடை , காதல் குறித்த பம்மாத்துகள் , போலி பெருமிதம் , மூத்த எழுத்தாளர்களுக்கு இலவச ஆலோசனைகள் என ஒரு டெம்ளேட்டிலதான் அனைவரும் எழுதுகின்றனர்

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதும் , அதை வெளிப்படுத்துதலும் பிரத்யேகத்தன்மையுடன் இருப்பதுதான் இயல்பு. இதை எழுத்து பிரதிபலித்தால் அது வெற்றி பெற்று விட்டது என பொருள். ஆனால் நம் ஆட்கள் சாரு , ஜெ , எஸ் ரா , சுஜாதா போல எழுதுவதில் சுகம் காணுகிறார்கள்

இணைய பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்களும் உண்டு.

பிரத்யேக பார்வை , பிரத்யேக சொல்லும் முறைக்கு உதாரணமாக இயம்பும்வகையில் மோகவாசல் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு படிக்க நேர்ந்தது

ஈழ எழுத்தாளர் ரஞ்சகுமார் படைப்பில் 1989ல் வெளியான தொகுப்பு

சற்றும் பிரச்சார நெடியின்றி கலாப்பூர்வமாக ஈழப்போர் காலகட்டம் எளிய குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பை ஒரு கதையில் சொல்கிறார். அதே நேரத்தில் , சிங்கள தீவிரவாத இயக்கத்தின் செயல்பாட்டையும் கபரகொய்யா என்ற சிங்களமண்ணில் வாழும் முதலைவகை உயிரியை குறியீடாக வைத்து சொல்கிறார்

பெண்ணின் ஆளுமையை , ஆற்றலை , பலவீனத்தை அரசி என்ற கதையில் படம் பிடிக்கிறார்

காமத்திலிருந்து கடவுளுக்கு என்றொரு கருதுகோள் உண்டு. காமத்தின் வாசலை கடந்து விட்டால் , காட்சிதர கடவுளோ அல்லது ஞானமோ காத்துக்கிடக்கவில்லை. அப்படி எல்லாம் ஏமாற்றிக் கொள்ள தேவையில்லை என ஒரு கதையில் ஓஷோவையும்,அவர் வழித்தோன்றல்களான கார்ப்பரேட் குருக்களையும் மறை முகமாக சாடுவது போல ஒரு கதை . அற்புதம்

இலங்கைத்தமிழ் வெகு சுகம்.

தங்கை எங்கே என்ற கேள்விக்கு உங்கேதான் எங்கேயாவது போயிருப்பாள் என பதில் சொல்கிறார் அம்மா.

உங்கே என்ற அழகான வார்த்தையை தமிழகம் இழந்து விட்டாலும் ஈழ இலக்கியத்தில் வாழ்கிறது

நூல்  .. மோகவாசல்

எழுதியவர்   .. ரஞ்சகுமார்



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]