Pages

Saturday, April 11, 2020

சுஜாதா தேசிகனின் அபுனைவுகள்


கல்லூரி ஹாஸ்டலில்தான் , முதன்முதலாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சகவயதினருடன் பழகும் வாய்ப்பு பெரும்பாலானோர்க்கு கிடைக்கும்.

அங்கிட்டு, இங்கிட்டு , ஏனுங்க ,கீது என்பது போன்ற வட்டாரச் சொற்கள் மற்ற பகுதியினருக்கு வேடிக்கையாகத் தோன்றும். விளையாட்டாக கேலிகள் நடக்கும்.  காலப்போக்கில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பல சொற்களை கற்றுவிடுவார்கள். ஒருவரது வட்டார வழக்கத்தை இன்னொருவர் ரசிப்பார்கள்

இன்றைய தகவல் தொடர்பு,வளர்ச்சியில் வட்டார சொற்களை பயன்படுத்துவதை தகுதிக்குறைவு என நினைத்து பலரும் பொது தமிழையே முயல்கின்றனர். இதன்விளைவாக பல்வேறு அழகிய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருந்து மறைகின்றன

யார் எழுத்தைப் படித்தாலும் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. அதே அரசியல் , அதே சினிமா கிசுகிசு , அதே பாலியல் சீண்டல்கள் என ஒரு நபரின் நகலாகவே பலரும் எழுதுகின்றனர்.

இதில் பிராமணர்கள் சற்று வேறுபட்டவர்கள்.  தாங்கள் பிராமணர்கள் இல்லை என காட்டிக் கொள்வதே அவர்களது முழு நேரம் வேளையாக இருக்கும். நானெல்லாம் மூணு,வேளையும் கறி தின்பவன் , அந்த தள்ளுவண்டில பீப் பிரை போடுவான். என்ன டேஸ்ட் தெரியுமா என்றெல்லாம் பேசி தமது அடையாளத்தை மறைக்க முயல்வார்கள்

இவையெல்லாம் தேவையேயில்லை. நம் பிறப்பு என்பது நம் சாதனை அன்று. அது குறித்து பெருமிதம் அடையவோ அதை மறைக்க முயல்வதோ அவசியமற்றது.

நாம் யார் என நேர்மையாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான் வலுவான சொல்லாடலின் முதல் படி என்கிறார் அரிஸ்டாட்டில்

சுஜாதா தேசிகனின் என் பெயர் ஆண்டாள் என்ற நூலின் முன்னுரையில் எழுத்துலக பிதாமகரான கடுகு இதை குறிப்பிட்டுள்ளார்.  எழுத்தின் நடை நூலாசிரியர் ஒரு கணிப்பொறியாளர் என்பதைக் காட்டிக கொடுக்கிறது என்கிறார் அவர்  ;

இதை எழுத்தாளனின் முத்திரையாகப் பார்க்க வேண்டும். அவரது ஆன்மிக தேடல் , தொழில் சார்ந்து கிடைக்கும் பரந்துபட்ட அனுபவம் , தமிழார்வம் , சுஜாதா மீதான காதல் , பிரபந்த அறிவு , அறிவியல் வேட்கை , நகைச்சுவை உணர்வு என அனைத்தும் கலந்து நல்லதொரு வாசிப்பனுபவம் அளிக்கிறது.

 நண்பர் தேசிகன் என சுஜாதா எழுதியதை படித்தபோது அந்தப்பெயரையும் , சுஜாதா நண்பர் என்பதையும் வைத்து , சுஜாதாவின் சமவயதினர்போல என்றுதான் நினைத்தேன்.

இது இயல்புதான். பெயர் உருவாக்கும் மனச்சித்திரம் குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது.  அட ஆமால , என வியக்க வைக்கும் கட்டுரை.  எழுத்து அந்தரத்தில் தொங்ககூடாது. மண்ணில் நடக்க வேண்டும் என்பார் சுஜாதா.   அதற்கு நல்ல உதாரணம் இதில் உள்ள கட்டுரைகள்

பையனுக்கு பெயர் வைக்க யோசிக்கும்போது , வேதாந்த் என்று வைக்கலாம் என மனைவி யோசனை கூறுகிறார். வேதாந்த தேசிகன் என புகழ் பெற வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அசர வைத்தார் என்ற வரியைப்படித்து வாய்விட்டு சிரித்து விட்டேன்
இப்படி ஆங்காங்கு மிளிரும் நகைச்சுவை , எதிர்பாரா திருப்பங்கள் போன்றவை வெகு அழகு

நடக்கும்போது பூக்களைப் பார்த்தேன். ஆனால் பறிக்கவில்லை என்று படிக்கும்போது , இயற்கை நேசர் போல என மனம் ஒரு நொடியில் அதை புரிந்து கொள்கிறது. பறிக்காததற்கு காரணம் அவை எட்டாத தூரம் என அடுத்த வரியை படிக்கையில் புன்னகையை தவிர்க்க முடியாது

லைட் ரீடீங் என்றால் கள்ளக்காதல் , கிசுகிசு போன்ற தரமற்ற எழுத்து என சிலர் புரிந்து வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள்

லைட் ரீடிங் என்பது உயர்ந்த விஷயங்களை இலகுவான நடையில் சொல்வது

பல்வேறு பிரபந்தங்களை அதன்  தமிழ்ச்சுவையை தமிழ்ச்சொற்களை எளிதாக இந்நூல் நமக்கு கற்பித்து விடுகிறது.  பொழுதுபோக்கு நடையில் இப்படி எஜுகேட் செய்வது பெரிய விஷயம்

அவரது கதையில் ஒரு மறக்க முடியாத கதை.  அருமையான குறும்படம்
பையன் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறான். அப்பாவை அழைத்து வந்து டிசி வாங்கிச் செல் என கண்டிப்பாக சொல்கிறார்.

அடுத்த நாள் பையனும் அப்பாவும் செல்கின்றனர். தலைமையாசியரிடம் தனியாக ஏதோ பேசுகிறார் தந்தை. அதன்பின்  பிரச்சனை சால்வ்,ஆகிறது
பையனை உணவகம் அழைத்து சென்று அவனுக்கு தோசையும் தனக்கு இட்லியும் ஆர்டர் செய்கிறார். தோசை விற்கும்விலையில் அதை சாப்பிட தன் சம்பாத்தியம் இடமளிக்கவில்லை. நன்றாக படித்தால்தான் சம்பாதிக்கமுடியும் என்கிறார்
ஆண்டுகள் செல்கின்றன. அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.
அதே ஹோட்டல் செல்கின்றனர். இப்போது தனக்கு தோசை ஆர்டர் செய்துகொள்கிறார் அப்பா
அன்னிக்கு தலைமைஆசிரியரிடம் என்ன சொல்லி சமாளிச்சீங்க கேட்கிறான் பையன்
ஒரே ஒரு பொய் சொன்னேன் என்கிறார் அப்பா

அழுத்தமான அற்புதமான கதை

தனது ஒரு,மாத சம்பளத்தின் கணிசமான பகுதியை பையனின் ஓவிய ஆர்வத்துக்காக , உபகரணங்கள் வாங்க அவனையே எடுத்துக் கொள்ளும் சம்பவம் குறித்த கட்டுரை நெகிழ வைத்தது.  அந்த கதை அற்புதமாக அமைந்த காரணம் புரிந்தது

ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தும் நேரில் சென்ற அனுபவம் அளித்தன.  உடல் நலம் , தேச நிலை எல்லாம் சாதகமாக இருக்கும்போதே பார்த்தால்தான் உண்டு என்ற உணர்வு ஏற்பட்டது

ஸ்டெம் செல் குறித்த கட்டுரை வெகு அளிமையாக விஷயத்தை விளக்கியது

நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. எழுத்தின் மூலம் மட்டுமே பல வாழ்க்கைகளை அறிய முடியும். அதுதான் எழுத்தின் சிறப்பு.

ஆனால் பிற சாதியினர் பற்றிய ஒரு சித்திரம் எழுத்தில் வருவது அரிதாக மாறி வருகிறது. சாதிப்பெருமிதமோ , சாதி குறித்தான தன்னிரக்கமோ இல்லாமல் இயல்பான ஒரு சித்திரத்தை அளிப்பது அவசியமான அறிவியக்க செயல்பாடுகளில் உண்டு.

அந்தவகையில் இந்த நூலின் பல விஷயங்கள் வெகு இயல்பாக இன்பர்மட்டிவாக இருந்தன

நூலாசிரியர் பணி நிமித்தம்வெளிநாடு
செல்கிறார். அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் தேவையான உதவிகளை பணிவுடன் செய்கிறார். பணி முடிந்து கிளம்பும்போதுதான் அவர் யாரென தெரிகிறது. அந்த கடைசி வரி ஒரு சிறுகதைத்தன்மையை அற்புதமான அனுபத்தை அளிக்கிறது

சுஜாதா பற்றிய கட்டுரைகள் அனைத்தும் அரிய ஆவணங்கள்.

மொத்தத்தில் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நூல்

குறை என்று பாரத்தால் இவ்வளவு அற்புதமான தமிழாளுமை கொண்ட நூல்களில் ஆங்காங்கு ஒருமை பன்மை பிழைகள். தட்டச்சும்போது ஏற்படும் கவனப்பிழை.  நூலின் மதிப்பை இதை பாதிக்காது என்றாலும் பல பத்திரிக்கைகளே எழுத்துப்பிழைகளை பொருட்டாக நினைப்பதில்லை என்றாலும் சுஜாதா மாணவர் என்ற முறையில் , ப்ரூப் பார்ப்பதில் கவனம் தேவை
பெங்களூர் பெண்களைப் பார்க்கையில் வைரமுத்துவின் பாடல்வரி ( வெளியில் சொல்லமுடியாத வரி)மனதில் ரீங்காரமிட்டது என்ற வாக்கியம் ஒட்டுமொத்த நூலின் தொனிக்கு சம்பந்தமற்று துருத்துகிறது

காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டிருந்தால் , இலக்கியவிழாக்கள் , மேடைகள் என பதினைந்து நிமிட புகழ் பெற்றிருக்கலாம்

சமரசமற்ற தேசிகன் எழுத்து அற்ப புகழை நாடாமல் நீண்ட நெடிய தமிழ் எழுத்து பாரம்பர்யத்தில் இடம் பெற விழைகிறது.









No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]