ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த , புலிகள் ஆதரவாளர்கள் பலருக்கும் அதை நம்பவே முடியவில்லை.
ஏன் இதை செய்தார்கள் ? இது ஈழப்போராட்டத்துககு மிகப்பெரிய பின்னடைவு அல்லவா ? புலிகளை கடுமையாக எதிர்த்து வந்த ஜெயலலிதாவுக்கல்லவா அது சாதகமாகும் ? இனியும் அவர்களை எப்படி ஆதரிப்பது என்றெல்லாம் திகைத்தனர்
உண்மையில் அவர்கள் ஏன் அதை செய்தார்கள் என்பது அதை செயல்படுத்தியவர்களுக்கே தெரியாது.
தமக்கு கிடைத்த ஆணையை கண்ணைமூடிக் கொண்டு பின்பற்றி உயிர் நீத்தவர்களைப்போல , அவர்கள் தலைமையும் பிறர் ஆணைகளை பேரங்களை நம்பி ஏமாந்தார்களா என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்
ஜெயமோகனின் உலோகம் நாவல் , ஈழ அரசியல் குறித்துப் பேசாமல் , ஒரு தலைவரை கொல்வதற்காக இந்தியா அனுப்பப்பட்ட, சார்லஸ் என்ற இயக்கஉறுப்பினர் குறித்தும் , அவன் தன் இலக்கை அடைவது குறித்தும் மட்டுமே பேசும் நாவல்
அமெரிக்க அதிபரைக் கொல்லும் முயற்சி , அதை தடுக்கும் முயற்சிகள் போன்ற ஆங்கில த்ரில்லர்களை வாசித்திருப்போம்
அது போன்ற ஒரு களம்தான். ஒரு தலைவரை கொல்வதற்கான திட்டமும் , இடர்ப்பாடுகளும்தான் கதை.
ஆனால் அதை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கதையாக எழுதாமல் , கொல்பவன் , அவனது நண்பன் , நண்பனின் மனைவி , கொல்லப்பட இருக்கும் தலைவர் , அவர் மனைவி , மகய் என அனைவரையும் ரத்தம், சதை , உணர்வுகள் கொண்ட மனிதர்களாக படைத்திருப்பது வழக்கமான சாகச கதைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. அதே நேரத்தில் சாகச கதைகளுக்குத் தேவையான பாயி்ண்ட் டூ பாயிண்ட் பேருந்து போன்ற பிசிறுகளற்ற, டைவர்ஷன்கள் அற்ற விறுவிறுப்பையும் தக்க வைத்துள்ளது
ஒரு துப்பாக்கிச்சூட்டில் பாய்ந்த குண்டு , அவன் உடம்பிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகிறது. அதுதான் உலோகம். அவன் ஒரு, குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கி என்பதற்குமேல் ஒன்றும் இல்லை . யாரைக்கொல்வது யாரை மன்னிப்பது என்பது துப்பாக்கியின் தேர்வு கிடையாது. அதை யார் கையாள்கிறார்களோ அவர்களது முடிவைத்தான் துப்பாக்கி செயல்படுத்த முடியும்.
கொலையாளி அலெக்ஸ் பார்வையில் கதை செல்கிறது. ஈழ இயக்கங்களைப்பற்றிய கதை என்றாலும் ஈழ அரசியலோ இயக்கங்கள் குறித்த விமர்சனமோ கதையில் இல்லை
தமிழகம் மற்றும் இந்திய அரசியலே அதிகம் விமர்சிக்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் கதை என்ற தெளிவுடன் கச்சிதமாக தன் எல்லைகளை அமைத்துக் கொண்டது சிறப்பு
விமானச்சத்தம் கேட்டு மனம் பதறுவதும் , இந்தியாவில் விமானச்சத்தம் என்பதற்கு வேறு பொருள் என அமைதி அடைவதும் நுணுக்கமான பதிவு
நம் மக்கள் ஷேவ் செய்யும்போது ஷேவிங்பிளேட் கிழித்திருக்கலாம். கத்திக்காய அனுபவம்கூட இருக்கும். எனவே யாராவது பிளேடு அல்லது கத்தியைக்காட்டினால் பயமாக இருக்கும். ஆனால் துப்பாக்கியை பார்த்திருக்கமாட்டார்கள். அது என்ன செய்யும் என்ற தெளிவும் இருக்காது. ;
எனவே கத்திக்கு பயப்படுவதுபோல துப்பாக்கிக்கு பயப்பட மாட்டார்கள்.
வேடிக்கை பார்க்கத்தான் நினைப்பார்கள்
இருவரை கொன்றுவிட்டு ஓடும்போது, அதன் சீரியஸ்னஸ் புரியாமல் வேடிக்கை பார்க்கும் மக்களைக்கண்டு , கொலையாளி தலையில் அடித்துக் கொள்ளும்காட்சி நல்ல பிளாக் ஹ்யூமர்
வேலையில்லாமலோ, வேலையில் ஓய்வு பெற்றோ சாலை ஓரங்களில் , டீக்கடைசிகளில் ஒரே மாதிரி முகபாவத்துடன் பலரை தினம்தோறும் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளுமே கடைசி நாளாக இருக்கக்கூடும் என்ற நிலையில் வாழ்பவன் பார்வையில் அவரககள் எப்படி தெரிவார்கள் என்பது போன்ற விவரணைகள் வெகு யதார்த்தம்
அமிர்தலிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இயக்கத்தினர் வந்தனர். அவர்களை சோதனையிட காவலர்கள் முயன்றபோது , அவர்கள் நண்பர்கள்தான், சோதனை வேண்டாம் என்கிறார் அமிர்தலிங்கம்
அவர்களை வரவேற்று , தேநீர் தயாரிக்கும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு , இன்முகத்துடன் பேச ஆரம்பித்த அவரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர் விருந்தினர்கள். நம்பி அழைத்தவரை இப்படி துரோகம் செய்து கொன்ற அந்த இயக்கம் , வேறு சிலரின் துரோகத்தால் அழிக்கப்பட்டது வரலாறு
எது துரோகம் , எது ராஜதந்திரம் என்பவற்றையெல்லாம் வெல்பவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்
கலைஞரே கெஞ்சிக்கேட்டபோதும் ஸ்றீசபாரத்தினத்தை கொன்றனர். டெலோ இயக்க சிறுவர்களை உயிருடன் எரித்தனர். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த டெலோ இயக்க தலைவர்களை கொன்று குவித்தனர்
இதை சிலர் ராஜதந்திரம் என கூறக்கூடும்
கடைசிப்போரின்போது, சரணடைய நினைத்த இவர்களை அரசு ராணுவம் கொன்றதை அரசு தரப்பினர் ராஜதந்திரம் என கூறலாம்
உண்மையில் இவையெல்லாம் தெரிந்தே சொல்லும் பொய்கள். ஹென்றி போர்டு சொன்னதுபோல வரலாறு என்பது ஒரு குப்பை , அரத்தமற்ற ஒன்று
தனக்கு இடப்பட்ட கட்டளைக்கிணஙகக அந்த தலைவரை சுட்டுக் கொல்கிறான் அலெக்ஸ். அவர் அவனை முழுமையாக நம்பியவர். நீயா சுடுகிறாய் என்ற அதிர்ச்சி நிறைந்த கண்களுடன் பிணமாக சாய்கிறார் அவர்
அந்த பிணத்தின் தலையை எட்டி உதைக்கிறான் அவன்
துப்பாக்கி ஒரு கொடூரமான கொலைக்கருவிதான். ஆனால் ஒருவன் சாவில் அது மகிழாது. பிறரது இறப்பை இழிவு செய்யாது
அவன் எட்டி உதைப்பதுடன் கதை முடிகிறது
எந்த ஒரு கொலைக்கருவியைவிடவும் , கொடூர மிருகத்தை விடவும் கீழான இடத்தை அடையும் சாத்தியம் ஒவ்வொரு மனிதனுளும் இருக்கிறது என்ற கோணம் நம்மை திகைக்க வைக்கிறது
ஒரு த்ரில்லர் நாவல் இப்படி யோசிக்க வைப்பது ஆச்சர்யமான ஒன்று
Truth is like the sun! It will come out anyway!
ReplyDelete