Pages

Wednesday, April 29, 2020

பொய் தெய்வங்கள். ஜெயமோகனின் " கைமுக்கு "

ஜெயமோகனின் கைமுக்கு சிறுகதை வெகுவாக யோசிக்க வைத்தது

கைமுக்கு என்றால் என்ன?

அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சித்திரவதை முறை. குற்றம் சாட்டப்பட்டவர் , கொதிக்கும் எண்ணைய்க்குள் கையை விட்டு, அதில் போடப்பட்டு இருக்கும் சின்ன,அனுமன் சிலையை எடுத்துக்காட்ட வேண்டும். கையில் காயமின்றி சிலையை எடுத்தால் நிரபராதி என கருதப்படுவார்.

இந்தப்பின்னணியில் துவங்குகிறது கதை.
தற்போதையை சித்தரவதை முறைகளைப் பற்றி பேசும் முன்னாள் போலிஸ்காரர் , தனது வாழ்வில் இப்படி ஒருவனை அடித்து வெளுத்த நிகழ்வைச் சொல்கிறார்

    ஜாப் ரைட்டிங் செய்து வருமானம் ஈட்டும் ஏழை ஒருவர் , கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைக்கிறார்

பையன் படித்து , நல்ல வேலை கிடைத்து , வீடு வாங்கி , திருமணம் செய்து, குழந்தை பெற்று வசதியாக செட்டில் ஆகிறான்.

தந்தையையும் தன்னுடன் அழைத்துக கொள்கிறான்.

எல்லாம் நல்லபடியாக செல்கிறது. எதிர்பாரா விதமான சம்பவம் ஒன்றில் பையன் சிக்கியபோதுதான் , அவன் படிப்பு , வேலை எல்லாம் பொய் என தெரிகிறது. அவன் ஒரு திருடன் என தெரிந்து தந்தை நிலைகுலைந்து போகிறான். அவன் மனைவி அவனை,விட்டு விலகி விடுகிறாள்

அப்போதுதான் அந்த போலிஸ்காரர் அவனை அடித்து துவைக்கிறார். ஒரு தந்தையின் நம்பிக்கையை அழித்து,விட்டானே என்பதுதான் அவர் கோபம்

சில வருடங்கள் கழித்து அவனை சந்திக்கிறார். அவன் மகிழ்ச்சியுடன் வசதியாக இருக்கிறான். நல்ல வக்கீல்களும் பணமும் இருப்பதால் பயமின்றி திருட்டை தொடர்கிறான். தந்தையும் அவனது இந்த வாழ்க்கைக்கு பழகி சந்தோஷமாக இருக்கிறார்

அவன் ஏன் திருடன் ஆனான் என்பதுதான் மேட்டர்.

சரியான ஆடை இல்லை. நல்ல"காலணி இல்லை. காசு இல்லை. நல்ல பையன் , அறிவாளி, ஆனால் வறுமை தாளாமல் லேசாக திருட ஆரம்பித்து அப்படியே பழக்கமாகி விட்டது.
இனி அதை விடும் வாய்ப்பு கிடையாது
புலி வாலை பிடித்த கதை

இதில் கைமுக்கு என்பதை போலிஸ் அடியுடன் ஒப்பிட்டு அந்த போலிஸ்காரர் சொன்னாலும் , கைமுக்கு என்பது நம்மை வாட்டி வதைக்கும் சோதனை நெருப்பின் குறியீடு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

அந்த கைமுக்கு சோதனையை , அரசன் பரிதாபப்பட்டு நிறுத்திவிட்டான். ஆனால் வாழ்க்கைக்கு அந்த இரக்கம் கிடையாது. life is not  fair. அது கைமுக்கு சோதனையை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது

எந்த அளவு உயர்வை நாம் நாடுகிறோமோ அந்த அளவு வேதனைகளை வாழக்கை கொடுக்கிறது. அதை சகித்துக் கொண்டுதான் , கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அனுமனை எடுக்க வேண்டியிருக்கிறது

அந்தக்கால கைமுக்கு சோதனையில் வெற்றி பெற ஒரு குறுக்குவழி உண்டு. அதிகாரிகளை கவனித்து விட்டால் போதும். கையில் போலி சிலை ஒன்றை கொடுத்து விடுவார்கள். கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிடுவது போல போக்கு காட்டிவிட்டு , போலி சிலையை காட்டி வெற்றி பெற்று விடலாம்;

உண்மை தெய்வத்தை தேடுவதன் வலிகளை தாங்க முடியாமல் பொய் தெய்வத்திடம் சராணகதி அடைவதைத்தானே அன்றாடம் பார்க்கிறோம்
   எளிய உதாரணம் உண்டு. இணையத்தில் தமிழ் எழுத முடியும் என்ற வாயப்பு வந்தபோது அது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மையான ஆர்வத்துடன்தான் பலர் எழுதினர்

ஆனால் அப்படி உண்மையாக எழுதி , அமுத்த கட்டத்துக்கு நகர்வது உழைப்பைக் கோரும் வேலை என பலருக்கும் புரிந்து கொண்டனர்

  பெரும்பாலான இதழ்கள் , ஊடகங்கள் எந்த கட்சியினரின் கைகளில் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டு , அதற்கேற்ற அரசியல் சார்புகள் எடுத்து , அதற்கேற்ப தொடர்புகளை வளர்த்துக் கொண்டு , இணைய எழுத்து என்பதில் இருந்து அடுத்த கட்டம் நகர்ந்தனர். இப்படி விளையாட்டாக இறங்கிய அரசியலை இன்று உண்மையாக நம்பத் தொடங்கி அதில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டு விட்டனர்

உண்மையில் கொஞ்சம் சோதனைகளை சமாளித்து இருந்தால் , உண்மை தெய்வத்தையே பார்த்திருக்கலாம். அதாவது தமது தகுதியாலேயே உரிய இடங்களை அடைத்திருக்கலாம்

   இந்த கதையில் வரும் மகன் அந்த கல்லூரி கால அவமானங்களில் இருந்து தப்ப பொய்தெய்வத்தை ஏற்கிறான் என்றால் அது அவன் மட்டும் செய்யவில்லை.
அவனது திருட்டுத் தொழிலுக்காக அவனை விட்டு விலகும் முதல் மனைவி , அவனது திருட்டு சொத்தை அனுபவிக்க தயங்குவதில்லை. நல்ல வேலை என பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்தது அவளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனைதான். அதைக்கடக்க அவள் கண்டுபிடித்த , அவளுக்கு ஆறுதல் தரும்பொய் தெய்வம் அந்த சொத்துகள்

அவனை பிடிப்பதில் நேர்மையான முனைப்பு காட்டிய போலிஸ் அதிகாரி , ஒரு கஷ்டமான சூழலில் பொய் தெய்வத்திடமே சரணடைகிறார்

தனது மகன் குற்றவாளி என அறிந்து துடிக்கும் தந்தையும் மன சமாதானத்துக்கு தயாராகிறார்

  சரி..  பொய் தெய்வம் என்றால்தான் என்ன ? அவர்கள் ஜெயித்து விட்டார்களே . அந்த சந்தோஷம் போதுமே .   என நினைக்கலாம்

   ஆனால் சோதனைகளை சமாளிக்க அஞ்சி , பொய் தெய்வங்களால் வெற்றி பெற்று , பொய் தெய்வங்களால் சூழப்பட்ட ஒரு உலகை , கொதிக்கும் எண்ணெய்க்கடியில் மறைந்தபடி உண்மை தெய்வம் கவனித்துக கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]