Pages

Friday, May 29, 2020

சுப்ரபாரதிமணியன் இயல்புவாத கலைஞன்


  சுப்ரபாரதி மணியன் போன்ற எழுத்தாளர்களை அணுகுவதில் ஒரு தர்மசங்கடம் உண்டு.

உதாரணமாக ஒரு தனுஷ் படமோ விஷால் படமோ பார்த்தால் நன்றாக நடித்தீர்கள் என கைகொடுத்துப் பாராட்டலாம். ஆனால் சிவாஜி கணேசன் படத்தை பார்த்துவிட்டு அவரை பாராட்டுவது என்பது சற்றே சங்கடமானது. காரணம் அவர் பார்க்காத பாராட்டா, அவர் பார்க்காத விமர்சனமா?

அதுபோல சுப்ரபாரதிமணியன் பல ஆண்டுகளாக பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி வருபவர். பல்வேறு இலக்கியமேடைகளைக் கண்டவர்.  வணிக இதழ்கள் முதல் இலக்கிய இதழ்கள்வரை இவருக்கு பலதரப்பட்ட வாசகர்கள் உண்டு
முற்போக்கு மேடைகளில் இவரை அவ்வப்போது குறிப்பிட்டு பேசுவார்கள்
ஆனால் இவரை முற்போக்கு எழுத்தாளர் என்பதைவிட , பிரச்சார தொனியற்ற ஆசிரியரின் குறுக்கீடு அவ்வளவாக இல்லாத இயல்புவாத எழுத்தாளர் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும்

இந்த புரிதலோடு கச்சிதமாக தொகுக்கப்பட்ட சிறுகதை தொகுப்புதான் காவ்யா வெளியீடாக வந்துள்ள " ஆழம்" சிறுகதை தொகுப்பு

ரேகைக்காரன் , மிச்சம் , தீர்ப்பு , கசிவு ,இடம் பிடித்தவர்கள் , வேளை , மூன்றாவது வரம் , தீட்டு , மினுக்கம் , வாசம் , கடைசிப்பார்வை , புகை , நசுக்கம் , ஆழம் ஆகிய கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இவற்றுள் ரேகைக்காரன் மற்றும் மூன்றாவது வரம் ஆகிய கதைகள் , கைதேரந்த எழுத்தாளர்கள் யார் வேண்டுமென்றாலும் எழுதிவிடக்கூடிய சுவையான கதைகள்

மற்றவை அனைத்துமே சுப்ரபாரதிமணியன் மட்டுமே எழுதக்கூடிய பிரத்யேக கதைகள். ஒவ்வொரு கதையும் ஜோடனைகளோ அலங்காரபாங்களோ ஏதுமின்றி , கதாசிரியரின் தலையீடு இன்றி நடப்பதை நடந்தவாறு , அவை நிகழும் இயல்பான வேகத்திலேயே நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது

கதையை சுவாரஸ்யப்படுத்த சில சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுப்பது , நகாசு வேலைகள் செய்வது , கதாசிரியனின் பார்வையை முன்வைப்பது , விமர்சிப்பது போன்ற யதாரத்தவாத பாணி தவிர்க்கப்பட்டுள்ளது


இயல்புவாதத்தை தவிர பிறவற்றுக்கு தான் எதிரியல்ல என காட்டுவதற்காக முன்பு குறிப்பிட்ட இரு கதைகளை சேர்த்துள்ளாரோ என்னவோ?

தொழில் சார்ந்த நகரம் மனிதனை மனித உணர்வுகளை ஆன்மிகத்தை எப்படி எல்லாம் இயந்திரமயமாக்குகிறது. அதற்குள்ளும் மனிதம் எப்படி இயங்குகிறது என்பதை பல கதைகளில் பார்க்கிறோம்

 ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படங்கள் சில உண்டு. அதுபோல சில கதைகள்.  கேமிராவை ஒரு இடத்தில் வைப்பதோடு கதாசிரியர் வேலை முடிந்து விடுகிறது. கதையின் போக்கில் குறுக்கிடுவதோ சுவையை கூட்டுவதற்கு அழுத்தம்கொடுப்பதோ இல்லை. தயவுதாட்சண்யம் அற்ற அந்த உண்மை நம்மை நிலைகுலைய வைக்கிறது

    புகை என்றொரு கதை. பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் பையன் தர்மராஜ். சக தொழிலாளி கெளசி அவன் அக்கா போன்றவள். ஒரு நாள் யாரோ வருகிறார்கள் என்பதற்காக இருவரும் வேலை முடிந்தபின்னும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். வந்தவன் யார் என்று பாரத்தால் முதலாளிக்கு வேண்டியவன். முன்பு"ஒரு முறை அவளிடம் தவறாக நடக்க முற்பட்டு அவளிடம் அறை வாங்கியவன்.
இப்போது அவளை தனியாக சந்திக்க நேர்ந்ததில் அவனுக்கு குரூர திருப்தி.
இவளோ முன்பு இருந்த கோபக்காரி அல்ல. இது போன்றவற்றை இயல்பாக ஏற்க வேறு வழியின்றி வேதனையுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்

இந்த சூழலில் அந்த ஆள் இவளிடம் தவறாக பேசுகிறான். அது அவளுக்குப்பிடிக்காவிட்டாலும் இவற்றை எல்லாம் எதிர்க்க முடியாது அன்பதை வாழ்க்கை அவளுக்கு கற்றுத்தந்துள்ளது
அவன் இவளை வித்தியாசமாக பழி வாங்க நினைத்து,அந்த அப்பாவி பையனான தர்மராஜை இதில் ஈடுபடுத்த முனைகிறான். அந்த கணத்தில் அவளிடம் மாற்றம் நிகழ்கிறது. இந்த வக்ரத்தில் இருந்து தர்மராஜை காப்பாற்றி அவனை தப்பித்தோட செய்து விட்டு , அவன் முன் கோபமும் எரிச்சலுமாக அசைக்க முடியாத குத்துக்கல்லாக நின்றாள் என முடிகிறது என முடிகிறது கதை.
மனதை உலுக்கிவிடுகிறது இந்த நிகழ்வு

வேலையோ காசோ இல்லாமல் சாலையில் நடை போடும் ஒரு தொழிலாளி , அந்த சிறிய கணப்பொழுதில் எப்படி குற்றவாளியாக மாறுகிறான் என்பதை துல்லியமாக பதிவு செய்யும் கதை ஒன்று அது சொல்லப்படும் விதத்தால் மனதில் தைக்கிறது

நான் லீனியர் பாணி என்பதை ஒரு யுக்தியாக  பயன்படுத்தக்கூடாது. அதற்கு தேவை இருக்க வேண்டும். பிரதி,அதை கோர வேண்டும்
ஆழம் என்ற கதை உண்மையிலேயே அடியற்ற ஆழத்துக்கு நம்மை பயணிக்க வைக்கிறது

மோகன் ,கீர்த்தி , சிந்தாமணி , கீதா ,கந்தசாமி ஆகிய பாத்திரங்களின் மேலடுக்குகள் ஆழங்கள் என பயணித்திருப்பது இந்த தொகுப்பிலேயே வித்தியாசமான கதை.தலைப்புக்கதையாக இதை தேர்ந்தது சிறப்பு. மினுக்கம் கதையும் வித்தியாசமானதுதான்

தொழிற்சாலை , வெயில் , வெப்பம் , வறட்சி , வறுமை என்ற தளத்தில் நின்று வாசிப்பின்பத்தை தருவதற்கு உண்மையிலேயே மேதைமை தேவை

மதுக்கடையில் கிடைக்கும் உயர்ரக வாசம் , சாவதற்கு உதவாமல் போய்விட்டோம்போலயே என்ற குழப்பம் , சாமிக்கு பலி கொடுப்பதில் தந்திரம் என வாழ்வின் நகைமுரண்களைப் படிக்கும்போது அன்றாடம் பல விஷயஙககளை தவற விடுகிறோம்போலயே என தோன்றுகிறது.
  நடைத்துணைக்காக வாங்கும் கைத்தடியால் வாழ்க்கையே இருளில் சிக்குவதும் , பாதிக்கப்பட்டவரின் இடத்தை கைத்தடி பிடிப்பதும் அழகான படிமம் ( இடம் பிடித்தவர்கள்)

இவ்வளவு வறுமையிலும் நோய்மையிலும் அன்பு துளிர்விடும் கதையான வேளை சிறுகதை வெகு வெகு யதார்த்தம்

உண்மையை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இவரது எழுத்துகள் தனித்துவம் வாய்ந்தவை என்பதை இநகத சிறுகதை தொகுப்பும் உணர்த்துகிறது





















No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]