திண்ணை இதழில் வெளியான இணைய எழுத்தாளர்களும் ரமணிச்சந்திரனும் என்ற கட்டுரை சார்ந்த விவாதம்
வ.ந.கிரிதரன் says:
May 28, 2020 at 5:45 am
ஆசிரியருக்கு வணக்கம்,
இது பிச்சைக்காரனின் ‘ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை’ என்னும் கட்டுரை பற்றிய சுருக்கமான எனது எதிர்வினை.
முகநூலில் அனைத்துப்பிரிவினருமுள்ளனர். சாதாரண மனிதர்கள் முதல் பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் வரையிலுள்ளனர். முகநூலில் யார் யாருடன் நண்பர்களாகவிருக்க வேண்டுமென்பது முக்கியம். எழுத்தாளர் ஒருவர் கலை, இலக்கியத்துறையில் நாட்டமுள்ளவர்களுடன் நட்பாகவிருக்கலாம். தன் உறவினர்கள், நண்பர்களுடன் இன்னுமொரு குழுவில் இருக்கலாம். அவ்விதமில்லாமல். ஒரு குழுவில் அனைத்துப்பிரிவினரையும் உள்ளடக்கியிருந்தால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். இவரைப்போன்றவர்கள் முகநூலை எவ்விதம் ஆரோக்கியமாகப்பாவிக்கலாம் என்பதைப்புரிந்துகொண்ட பின்னர் அதனைத்தம் தேவைகளுக்கேற்பப்பாவிக்க வேண்டும். அவ்விதம் பாவிக்காவிட்டால் இவர்கள் பார்வையில் ரமணிசந்திரன், முகநூல் எழுத்தாளர்கள் எல்லோரும் ஒரே தட்டில்தான் தெரிவார்கள்.
இவர் முகநூல் ‘லைக்ஸ்’ பற்றிக் கூறுவது, பெரும்பாலான முகநூல் எழுத்தாளர்கள் பற்றிக் கூறுவதில் உண்மைகள் இல்லாமலில்லை. அவை விவாதத்துக்குரியவை. அதே சமயம் நாடறிந்த எழுத்தாளர்கள் பலர் முகநூலிலுள்ளார்கள். தம் எழுத்துகளை , கருத்துகளைப்பகிர்ந்துகொள்கின்றார்கள். அவை ஆரோக்கியமானவை.
இணைய இதழ்கள், இணைய எழுத்துகளையும் ஆரம்பத்தில் இவ்விதமே கூறினார்கள். ஆனால் இன்று இணையத்தின் பயனை எழுத்தாளர்கள் பலரும் உணர்ந்து விட்டார்கள்மதே சமயம் இன்னும் வலைப்பூக்களில் தம் படைப்புகளைப்பதிவேற்றாத எழுத்தாளர்களும் பலருள்ளனர். எவ்விதம் இணையத்தை ஆரோக்கியமாகப்பாவிக்கலாமோ அவ்விதமே முகநூலையும் எவரும் ஆரோக்கியமாகப்பாவிக்கலாம். முகநூலிலுள்ள முக்கியமான நன்மைகளிலொன்று உடனுக்குடன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விரைவில் தொடர்பு கொள்ளலாம். எங்குமே கிடைக்காத படைப்புகள் பலவற்றை இவ்விதமான தொடர்புகள் மூலம் பெற்றுக்கொள்ளும் சாத்தியங்களுள்ளன. சந்தேகங்கள் பலவற்றை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முடிகின்றது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். எனவே முகநூலை அவ்வளவு சாதாரணமாகக் கருதிவிட முடியாது. அதனால் பெறக்கூடிய பயன்களைப்பெறுவதன் மூலம் அதனை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவதே சிறப்பான செயற்பாடாகவிருக்க முடியும்.
Reply
பிச்சைக்காரன் says:
May 29, 2020 at 2:52 am
முகநூல் என்பதே தீமை என்பதல்ல. இலக்கியத்தில் தமது முத்திரை பதித்த எழுத்தாளர்கள் உட்பட பல்துறை மேதைகள் முகநூலில் இயங்குகிறார்கள். அது வரவேற்கத்தக்கது
ஆனால் சிலர் முகநூலில் தமது நண்பர்களின் பின்னூட்டத்தை வைத்தே தம்மை இலக்கியவாதிகள் என நினைத்துக்கொள்ள தலைப்படுகிறார்கள். ” போர்ஹெஸ் எழுத்தை மிஞ்சி விட்டீர்கள். கொர்த்தசார் மாதிரியே இருக்கிறது. மாபசானெல்லாம் உங்கள் முன் தூசு ” என்பது போன்ற பின்னூட்டங்களைப்பாரத்து மயங்கி விடுகிறார்கள். முகநூல் தொடர்புகளை வைத்து புத்தகங்களும் வெளிவந்து விடுகின்றன. ரமணிசந்திரன் , ராஜேஷ்குமார் போன்றோர தம்மை இலக்கியவாதிகளாக முன்வைப்பதில்லை. குறிப்பிட்ட பகுதி வாசகர்களை திருப்திபடுத்துகிறோம் என்ற தெளிவு அவர்களிடம் இருக்கிறது. முகநூல் எழுத்தாளர்களுக்கும் இந்த தெளிவு தேவை. லைக்குகளுக்காக எழுதினால் சந்தோஷம். இலக்கிய வாசகனுக்காக எழுதுவது என தீர்மானித்தால் அதற்கேற்ப உழைப்பை நல்க வேண்டும். பின்னூட்டங்களில் மகிழாமல் முகநூல் தொடர்புகளை நம்பாமல் , தனது பிரதியை பொதுவான தளத்தில் விமர்சனத்துக்கு உட்படுத்தி சுயபரிசீலனை செய்ய வேண்டும். இப்படி முகநூல் மூலம் அறிமுகமாகி , தமது தகுதியால் முத்திரை பதித்தோரும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால் பெரும்பாலானோர் தகுதி ஏதும் இன்றி இணைய அரசியல் மூலம் பிரபலமாக இருப்பதும் நடக்கிறது. இந்த தாழ்வுணர்ச்சியை மறைக்க ராஜேஷ்குமார் , ரமணிசந்திரன் போன்றோரை விமர்சித்து , அவர்களைவிட தாங்கள் மேல் என காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இது தேவையற்றது. முகநூல் எழுத்து , வணிக எழுத்து , கேளிக்கை எழுத்து என எதுவுமே இழிவு கிடையாது. இலக்கிய தகுதி இன்றி இலக்கியம் என பம்மாத்து செய்வதுதான் தவறீ
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]