திண்ணை இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது
..........
முகநூல் எழுத்து என்பது அழகான கனவு. அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு.
..........
முகநூல் எழுத்து என்பது அழகான கனவு. அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு.
ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான நண்பர்கள். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்குகள் குவியும் . பலர் அதை பகிர்வார்கள். பாராட்டி பலர் பின்னூட்டம் போடுவார்கள் . ஒருமுறை தனது,நூல் வெளியீட்டு விழாவுக்கு தன் ரசிகர்களை அழைத்தார். சூப்பர் தல, சுற்றம்சூழ வந்து விடுகிறோம் என பலர் பின்னூட்டம் போட்டார்கள். லைக்குகள் குவிந்தன
கடைசியில் பார்த்தால் விழாவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர்தான். இருவரும் அவருக்கு நேரடி நண்பர்கள். நல்லவேளையாக சிறப்பு பேச்சாளருக்கென வந்த கூட்டத்தால் விழா சமாளித்துக கொண்டது
கூட்டம் கூட்டும் திறன் என்பது இலக்கிய தகுதிக்கான அளவுகோல் என்பதல்ல நம் வாதம். தாம் வாழ்ந்தகாலத்தில் அதிகம் அறியப்படாமல் வாழ்ந்து மறைந்த மேதைகள் பலர் உண்டு. அது வேறு விஷயம்
முகநூலில் கிடைக்கும் வரவேற்பு வேறு,யதார்த்த உலகம் வேறு என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டியது
தமிழ்,நாட்டில் வாசிப்பு பழக்கம் குறைவு என நினைக்கிறோம். எம் எஸ் உதயமூர்த்தியின் நூல்கள் எண்பது பதிப்புகளுக்குமேல் கண்டுள்ளன. திருட்டு pdfகளால் அவற்றின் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. பொன்னியின் செல்வன் , சுஜாதாவின் நூல்கள் , பாலகுமாரன் நூல்கள் போன்றவை எப்போதுமே பெஸ்ட் செல்லர்கள்தான்
ஆனால் முகநூல் எழுத்தாளர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களது விமர்சனத்துக்கு அவ்வப்போது ஆளாகுபவர் இன்னொரு பெஸ்ட் செல்லரான ரமணி சந்திரன்தான்
இந்த விமர்சனத்தால் அவர் விற்பனை பாதிக்கப்படப்போவதில்லை. அவரோ அவரது வாசகர்களோ இத்தகைய இணைய விவாதங்களில் ஆர்வமற்றவர்கள்.
எனவே இந்த முகநூல் எழுத்தாளர்கள் உரையாடுவது ரமணி சந்திரனுடன் அன்று. இவர்கள் உரையாடுவது தங்கள் ஈகாவை திருப்தி செய்து கொள்ளவும், சக முகநூல்வாசிகளை மகிழ்விக்கவும்தான்
இதில் எப்படி இவர்கள் ஈகோ திருப்தி அடைகிறது ?
முகநூல் எழுத்தாளர்கள் பலருக்கு ஒரு தேவையற்ற காம்ப்ளக்ஸ் இருக்கிறது..
இவர்கள் பெரும்பாலும் எழுத்து வாய்ப்பை பெறுவது முகநூல் தொடர்புகளால்தான். இவர்களது பதிப்பாளர்கள் , வாசகர்கள் , விமர்சகர்கள் என அனைவருமே முகநூல் பயனாளிகள்தான். என்ன அரசியல் நிலைப்பாடு எடுத்தால் எந்த இதழ்களுக்கு எந்த பதிப்பகங்களுக்கு பிடிக்கும் என்ற அறிவுதான் இதில் முதலீடு.
இப்படி இருப்பதோ தவறோ என்ற காம்ப்ளகஸ் காரணமாக பிரபலஸ்தர்களை அவ்வப்போது த சீண்டுவதன் மூலம் தாங்கள் அவ்வகை எழுத்துக்கு எதிர்தரப்பினர் என்ற பிராண்ட் இமேஜ் பெற முயல்கின்றனர்
இலக்கியத்தில் பிராண்ட் இமேஜ் அர்த்தமற்றது. எழுத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் இங்கு நிற்க முடியும். ஒரு காலத்தில் இன்னார் பெயரைச் சொன்னாலே விற்பனை எகிறும் என்ற நிலையில் இருந்த பலரின் நூல்கள் இலவசமாக கொடுத்தால்கூட படிக்க ஆள் இல்லாத நிலையைப் பார்க்கிறோம்
முகநூல் எழுத்து என்பதற்கான தாழ்வுணர்ச்சி தேவையற்றது
அந்த காலத்தில் குஜிலி இலக்கியம் என அறியப்படும் மலிவு விலை நூல்கள் ஒரு சிறிய பரப்பில் இயங்கி வந்தன. மெல்லிய தாளில் , மலிவான அச்சில் , குறைவான விலையில் அச்சிடப்பட்டன. அந்தந்த வட்டார செய்திகள் , அவர்களுக்கே உரிய கிசுகிசுக்கள் , அவரகளது வேட்கைகள் என பிரத்யேக பிரதியாக அவை திகழ்ந்தன. பக்கத்து ஊர்க்காரர் படித்தால் அவருக்கு அது சுவாரஸ்யமாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் ஒரே ஊர்காரர் என்றாலும் பொருளாதாரத்தில் மேம்பட்டவருக்கு அது சரிப்படாது
அப்படி குறுகிய , தேர்ந்தெடுக்கபட்ட வாசகர்களுக்காக உருவான குஜிலி இலக்கியம் இன்று பொதுவான வாசகனால் மீள்வாசிப்பு செய்யப்படுகிறது
இப்படிப்பட்ட niche எழுத்துகளுக்கான தேவை என்றுமே இருந்து வருகிறது
ரமணி சந்திரன் எழுத்துகள் அவ்வகையில் வெகு முக்கியமானவை. குறிப்பிட்ட மனநிலையில் குறிப்பிட்ட மதிப்பீடுகளில் குறிப்பிட்ட சூழலில் இருக்கும் பெண்களுக்காக அவர் எழுதுகிறார். அவரது வாசகர்வாகள் பலர் நிறுவன மேலாளர்களாக , அவரவர் துறை நிபுணர்களாக , இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள். கிடைக்கும் சற்று ஓய்வு நேரத்தில் இளைப்பாறுதலை பெறுவதற்காக ரமணிசந்திரனை வாசிக்கிறார்கள். அதற்குமேல் தேடிச் சென்று வாசிக்க தேவையான நேரம் அவர்களுக்கு இருப்பதில்லை.
இவர்களை விட சற்றே அதிக நேரம் கொண்ட பெண்களின் பரப்பும் அதிகமே. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பாலகுமாரன் இவர்களது வாசிப்புத் தேவையை பூர்த்தி செய்தார்
உண்மையில் பெண்களில் இன்னும் பல உட்பிரிவுகள் உண்டு. அவர்களுக்கான எழுத்துகளெல்லாம் வரவே இல்லை
எல்லோருக்கும் பொதுவான எழுத்து என்ற கருதுகோள் தவறானது.
குழந்தைகளுக்கு , பதின்பருவத்தினருக்கு ,ஆண்களுக்கு , பெண்களுக்கு , பணக்காரர்களுக்கு , ஏழைகளுக்கு என அவரவரக்கு ஏற்ற எழுத்துகளுக்கான தேவை என்றுமே இருக்கிறது. சீனாவில் பெண்களுக்கு என பிரத்யேகமான ரகசிய மொழியே இருக்கிறது.
ஆனால் பெண்களுக்கு என ரமணிசந்திரன் வகை எழுத்துகள் , இணைய பயனாளர்களுக்கென முகநூல் எழுத்துகள் ஆகிய சில மட்டுமே பிரபலமாக இருக்கின்றன.
குழந்தை இலக்கியம் , சிறுவர் இலக்கியம் , பதின்பருவ இலக்கியம் , அறிவியல் இலக்கியம்என பல பிரிவுகளில் வெற்றிடம் இருக்கிறது.
இதுபோன்ற சிறுபிரிவு எழுத்துகள் தம்மளவில் முழுமையானவை என்றாலும் பொதுவான மானுடத்தைப் பேசும் உலக இலக்கியத்தையும் இவர்களில் ஒரு சிறு தரப்பினர் நாடி வருவது நல்லது.
ரமணி சந்திரனின் வாசகர்களில் சிலராவது அசோகமித்திரன் , லாசரா , சுரா , புதுமைப்பித்தன் என முயன்று பார்க்க வேண்டும்
முகநூல் எழுத்தாளர்களில் சிலராவது தமது தொடர்புகளை பயன்படுத்தாமல் , தமது எழுத்தின் பலத்தால் மட்டுமே நிற்க முடியுமா என சுய சவாலை நிர்ணயித்துக் கொண்டு மோதிப் பார்க்க வேண்டும்
இப்படி நிகழாவிட்டாலும் பரவாயில்லை. முகநூல் எழுத்து , ரமணிசந்திரன் எழுத்து என ஆயிரம் பூக்கள் மலரட்டும். தகுதியானவை எஞ்சட்டும்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]