Wednesday, July 15, 2020

நாயன்மாரை புகழ்ந்து பாடிய ஆழ்வார் - ஆன்மிக வினோதம்

 நாயன்மார்கள் என்பவர்கள் சிவ பக்தர்கள் ..

ஆழ்வார்கள் விஷ்ணு பக்தர்கள்

இன்று இரண்டுமே இந்து மதம் என ஒன்றாகி விட்டாலும் , அந்த காலத்தில் சிவமும் வைணவமும் தனித்தனியாக இயங்கின..

இப்படி ஒரு சூழலில் , நாயன்மார்களில் ஒருவர் குறித்து ஆழ்வார் ஒருவர் பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ( எனக்கு ஆச்சர்யமாக இருந்தது)

கோச்செங்கட்  சோழ நாயனார்..

இவர் சோழ அரசனாக இருந்தவர்...

இவர் பிறப்பே ஆச்சர்யமானது...இவரை கருவில் சுமந்திருந்தபோது , ஒரு ரிஷி இவர் தாயாரிடம் ( அவர் சோழ அரசி ) நான் குறிப்பிடும் நேரத்தில் குழந்தை பிறந்தால் , குழந்தை புகழ் பெற்ற அரசனாக வாழ்வான். கடைசியில் இறைவனையும் அடைவான் .. என நேரம் குறித்து கொடுத்தார்

        அந்த அரசிக்கு  அந்த நேரம் வருவதற்கு சில நாழிகைகள் முன்பாகவே பிரசவ வலி ஏற்பட்டது.. குழந்தை பிறப்பதை தாமதப்படுத்துங்கள். என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் என தன் தாதியர்க்கு ஆணையிட்டாள் மகாராணி..

         இப்படி குழந்தை பிறப்பு தாமதமாக்கப்பட்டு , உரிய நேரத்தில் குழந்தை பிறந்தது.. இப்படி ஒரு கடுமையான சூழலுக்கு தன்னை உட்படுத்திய அரசி மரணம் அடைந்தாள்

பிறந்த குழந்தைக்கு கண்கள் சிவப்பாக இருந்தன.. எனவே கோ செங்கண்ணன் என பெயரிடப்பட்டது

தெய்வ அருளால் பிறந்த குழந்தை என்பதால் , வெற்றி மீது வெற்றி பெற்றான்.. புற நானூறில் இவனது வெற்றி பதிவாகியுள்ளது


உலகியலில் வெற்றிகளை குவித்த இவனுக்கு ஆன்மிக வெற்றியைத்தர இறை முடிவு செய்தது

வெற்றிகளையே குவித்த இவன் ஒரு போரில் தோல்வியுற்றான்..

தோல்வியில் துவண்டு போய் இருந்த அவனை , ஒரு ரிஷி சந்தித்தார்

“  நான் தான் உன் தாய்க்கு நேரம் குறித்து கொடுத்தவன்.. நீலகண்டன் என் பெயர்.. நீ விஷ்ணுவை நோக்கி தவம் செய்.. ஒரு திருப்பத்தை காண்பாய் “ என்றார்

திரு நரையூர் என்ற இடத்தில் தவம் செய்து விஷ்ணுவிடம் இருந்து ஒரு தெய்வ வாளை வரமாக பெற்றான்.  அந்த வாள் அவனுக்கு வெற்றி அளித்தது.  தோற்கடித்த மன்னனை வீழ்த்தினான்


அந்த ஊரில் விஷ்ணுக்கு ஆலயம் எழுப்பினான்


 நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை  அவனுக்கு அந்த சம்பவம் உணர்த்தியது.ஒரு நன்றிக்காக விஷ்ணு ஆலயம் கட்டினாலும் அவன் மனம் ஏனோ வைணவத்தில் லயிக்கவில்லை

அப்போது மீண்டும் அந்த ரிஷி வந்தார்

இறை என்பதன் எல்லா வடிவமும் ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தவே உன்னை விஷ்ணுவை வழிபடச்செய்தேன்
உண்மையில் நீ சிவ அம்சம்..  சிவ கணங்களில் ஒருவனாக இருந்தாய்.. இன்னொரு சிவ கணத்துடன் , பக்தியில் சிறந்தவன் யார் என்ற மோதல் ஏற்பட்டது.. இதனால் சிவன் உங்களை பூமியில் பிறக்க வைத்தார்


நீ சிலந்தியாகவும் அவன் யானையாகவும் பிறந்தீர்கள்


சோழ நாட்டில் ஒரு சிவலிங்கத்தை அந்த யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்து அர்ச்சித்து வழிபட்டது...  அதை அறியாமல் சிலந்தி தன் வாயில் சுரக்கும் நூலால் அலங்காரம் செய்து வழிபட்டது

சிவலிங்கத்தில் சிலந்திக்கூடு கட்டும் சிலந்தி மீது யானைக்கும் , லிங்கம் மீது வாய் கொப்பளிக்கும் யானை மீது சிலந்திக்கும் கடும் கோபம்.. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து இம்சித்தது. வலி தாங்கவொண்ணா யானை , தும்பிக்கையை கோபமாக பாறையில் அடித்தது.. விளைவாக இரண்டுமே இறந்தன

யானைக்கு இறைவன் முக்தி அளித்தான்.. சிலந்தியை மன்னனாக பிறக்க வைத்துள்ளான்

இதுதான் உன் கதை என்றார் அவர்

இதைக்கேட்டதும்தான் தன் மனம் ஏன் இறையை நாடினாலும் , வைணவத்தின்பால் செல்லவில்லை என புரிந்து கொண்டான்..

ஏற்கனவே சில ஆலயங்கள் அமைத்து இருந்தாலும் , அதன் பின் முழு வீச்சாக ஆலயங்கள் அமைத்தார் அவர் .. எழுபதுக்கும் மேல் ஆலயஙகள் எழுப்பி கடைசியில் இறைவனடி சேர்ந்தார்..  கோச் செங்கட் சோழ நாயனார் என ஆலயங்களில் வீற்றிருப்பார்.. அடுத்த முறை கவனியுங்கள்


இவர் அமைத்த திரு நரையூர் பெருமாள் கோயிலைப்பற்றி திருமங்கை ஆழ்வார் ஏராளமாக பாடியுள்ளார்

கோச் செங்கட் சோழ நாயனாரைப் பற்றியும் கடவுளிடம் இருந்து வாள் பெற்றதையும் , அவர் சிவனுக்கு கோயில்கள் கட்டியதையும் பாடியுள்ளார்

இப்படியாக , நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வைணவ நூலில் சிவனும் , சிவனடியாரும் இடம் பெற்ற அபூர்வ நிகழ்வு நடந்தேறியது


திருமங்கை ஆழ்வாரின் எல்லா பாடல்களும் தமிழ்ச்சுவை மிக்கவை..

விளக்கம் தேவையில்லாத இப்பாடலைப் பாருங்கள்


அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.


இப்படி அனைத்தையும் சொல்வதை விட  , இந்த கட்டுரை சம்பந்தமான ஒரு பாடலை பார்த்து முடித்துக்கொள்வோம்

பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


கடலையே ஆடையாகவும் , பூமியை திருவடிகளாகவும் , வாயு மண்டலத்தை உடலாகவும் , பேரண்டத்தை தலையாகவும் கொண்டுள்ள பிரமாண்டமான இறை சக்தியை உணர விரும்புகிறீர்களா?

ஆரவாரமாக படை பலத்துடன் எதிர்த்து வந்த மன்னர்களை தெய்வ வாள் துணை கொண்டு வீழ்த்திய சோழ மன்னன் உருவாக்கிய திரு நரையூர் ஆலயம் வாருங்கள்  , அங்கு உறையும் இறையை இறைஞ்சுங்கள்


முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


மலர் போலும் கனி போலும் சிவந்த இதழ்களைக்கொண்ட நப்பின்னை தாயாரின் கணவனும் , நெறி மீறும் அரசர்களின் சிரம் அறுக்கும் திறன் உடையவனுமான பெருமாளின் திருவடிகளை உங்கள் தலையில் சூட விருப்பமா?

வேதம் ஓதுகின்ற சிவனுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைத்த சோழன் கட்டிய ஆலயத்தை வந்தடையுங்கள்












Monday, July 6, 2020

நகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்


நல்ல எழுத்து அல்லது  நல்ல ஓவியம் அல்லது நல்ல இசை போன்றவை நம்மிடம் ஒன்றை சொல்லி சொல்ல முடியாமைக்கு எடுத்துச் செல்லும் தன்மை கொண்டவை

   முதலில் அவை நம் வெளி மனதுடன் தர்க்கப்பூர்வமாக உரையாடி சற்று நேரத்தில் ஆழ் மனதுடன் பேசத்தொடங்கும்.. சொல்லில் விளங்காதவதற்றை சொலவ்தற்கு நாவல் , சிறுகதை போன்றவற்றை பயன்படுத்திக் கொண்ட மேதைகள்

இப்படிப்பட்ட பாவனைகள் இன்றி நேரடியாக ஆழ் மனதுடன் உரையாட முயல்பவை நகுலனின் எழுத்துகள்

நாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும் , சம்பவங்கள் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் இல்லாமல் கதை மூலம் சம்பவங்கள் மூலம் கிடைக்கக்கூடிய உச்சட்ட அபோத நிலையை நேரடியாக தரக்கூடிய ஒரு  நாவல்தான் நகுலனின் “ இவர்கள் “ என்ற நாவல்

மனித்ன் என ஒருவன் தான் உண்டு. துரைசாமி , ராம்சாமி , கிருஷ்ணசாமி என்பவை எல்லாம் வெறும் லேபிள்கள் மட்டுமே. எல்லோரும் எல்லோரிடமும் இருக்கிறார்கள் என்  நாவலில் ஒரு இடம் இருக்கிறது


ஒரு கதையை கதாசிரியன் உருவாக்கி அதை வாசிப்பவனாக வாசகனை மாற்றாமல் வாசகனையும் பிரதியில் பங்கேற்கச்செய்கிறார் நகுலன்


எஸ் ராமகிருஷ்ணனின் நாவல் நெடுங்குருதி நாவலில் , வேம்பலை என்ற கிராமத்தின் நிழலாக ஒரு கிராமம் வரும் . வேம்பலையில் அழிந்தவையும் இற்ந்தவையும் அந்த நிழல் கிராமத்தில்  வாழும்

அதுபோல , ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிழல் உண்டா , இன்றைய நிழல் கடந்த காலத்தில் வீசுகிறதா என் மிஸ்டிக் ஆன கேள்வியுடன் நாவல் ஆரம்பிக்கிறது

நனவோடை யுக்தியில் , தானாக தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் எழுத்தாக இந்த நாவல் அமைந்திருப்பது ஒரு வகை திடுக்கிடலை உருவாக்குகிறது

மனதின் ஆழத்தை அறிவின் குறுக்கீடுகள் இன்றி தரிசிப்பது அரிதான ஓர் அனுபவம்

உண்மையில் இப்படி திட்டமிட்டு எழுதமுடியாது.. ஓர் அரிய கணத்தில் இப்படி எழுத்து பீறிட்டு வந்தால்தான் உண்டு

அந்த வகையில் நகுலனின் இவர்கள் நாவல் முக்கியத்துவமானது.

அவரது நினைவுப்பாதை மற்றும் நாய்கள் நாவலை விட இவர்கள் நாவல் ஒரு தன்னிகற்ற நாவலாக அமைந்துள்ளது

நாவலில் வரும், நவீனன் தான் ந்குலன் என யாரும் நினைத்து விடக்கூடாது என கவனம் செலுத்தி இருந்தாலும் , நவீனன் நகுலன் அல்லன் என்றாலும் நகுலனின் நிழலாக அவன் இருக்கக்கூடும் என கூர்ந்து வாசிக்கையில் புலப்படுகிறது


உலக உலக்கியமும் இந்திய வேதாந்தமும் கைகுலுக்குவதும் ,  தமிழ் காதலும் சமஸ்கிருத ஞானமும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொள்வதும் ஒரு வித்தியாசமான ஃபிளாவரை தருகிறது


ராம நாதன்  , நல்ல சிவம் பிள்ளை ,  , தனது அப்பா , அம்மா , ஆகியோர் நவீனனின் மனவோட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள்


ராம நாதன் தான் படித்த நூல்களைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்/

மௌனி கதைகள்  ஜேகே , காசியபன் கவிதைகள் என்றெல்லாம் நல்ல சிவம் பிள்ளை பேசுகிறார்

நான் என்ற குறுகிய பார்வைதான் , விசாலமான பார்வையை மறைக்கிறது. நான் என்பது மறையும்போதுதான் உண்மையாக வாழத்தொடங்குகிற்றோம். என்பார் ஜே கிருஷ்ணமூர்த்தி

இந்த நானற்ற நிலையை வாழ்ந்து காட்டுபவர் அவரது அம்மா.. 

  நானற்ற நிலை வேறு.. நான் என்பதை மதிக்காத கண்மூடித்தனம் வேறு.. இதற்கு உதாரணமாக இருப்பவர் அப்பா

இந்த நால்வர் குணாதிசயங்களையும் இப்படி சுருக்கமாக அனாயசமாக காட்டி இருப்பார் நகுலன


நல்ல சிவன் பிள்ளை சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்
ஊமையாக இருந்திருப்பார்

ராம நாதன் ?  ஒரு நாளைக்கு ஒன்பது நூல்கள் வாசித்து இருப்பார்


அப்பா ? பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லி விட்டு கள்ளுக்கடைக்குப் போய் இருப்பார்

அம்மா ? அனைத்தையும் அதிசயம் போல பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள்


கலை என்பது என்ன ,, அதன் நோக்கம் ,,  என பல இடங்களில் விவாதிக்கிறார்


உடலின் பிரதிபலிப்பு நிழல்..   மனதின் பிரதிபலிப்பு எழுத்து..


அம்மாவின் சென்ஸ் ஆஹ் ஹ்யூமரை அவள் சொன்ன விதம் என் பார்வையில் படவில்லை ,, ராம நாதன் பார்வையில் பட்டது

எனக்கு நிழல்கள் இருப்பதால்தான் நான் எழுத்தாளனோ


நமக்கு நம் நிழல்களே பேய் ஆகி விடுகின்றன

என பல  விதங்களில் சொல்பவர் , ஒருகட்டத்தில் சொல்ல முடியாமையின் திகைப்பையும் சொல்லின் மூலம் காட்டுகிறார்


தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்கிறதம்மா என தான் கண்ட கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் ஊமையின் தவிப்பை சொல்வதன்மூலம் , அவன் கண்டது என்ன என்பதன் நிழலை நம்மை தரிசிக்க செய்து விடுகிறது  நிழல்கள்


முதலில் பரிசுத்த ஆவியாக இருந்து பிறகு நிழல் ஆகி அதன் பின் பேய் ஆக மாறும் நவீனனனும் , முழுக்க முழுக்க அறிவால் கலையை வசப்படுத்த முயனறு தோற்பவனும் கலைக்கு களப்பலி ஆகின்றவனும் எழுத்தின் வசீகரத்துக்கு சான்றாக நிற்கின்றனர்

Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா