கவிஞர் வாலி தன் கட்டுரையொன்றில் இங்கனம் குறிப்பிடுகிறார்
------------------------
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?
# 2 ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!”
எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?
# 3 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்’ என்று மெல்லிய குரலில் சொன்னார்.
# 4 சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.
ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.
‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.
அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.
காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-
கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.
என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.
நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் – தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் – திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.
இவர்களைவிடவா நான் மேலானவன்?
அன்று முதல் நான், ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!
--------------
வறுமையில் தள்ளப்பட்ட கலைஞர்களைப்பார்த்தபின் சந்தர்ப்பவாதம் என்பது தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்ககது..
அந்தக்காலத்தில் திமுக ஆட்சி நடந்தபோது இனியொரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்ததுபோல வீராணம் ஊழல் , மஸ்டர் ரோல் ஊழல் , பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் , குளோபல் தியேட்டர் மோசடி என புகுந்து விளையாடினர்
அப்போது கலைஞரை விமர்சித்து வாலி எழுதிய பாடல் இது
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
இப்படி எம்ஜிஆர் படத்தில் எழுதினார்.
எம்ஜிஆர் மறைந்தபின் திமுக ஆட்சிக்கு வந்தபின் கலைஞரைப் பாராட்டி இப்படி எழுதினார்
நீ பாலுாட்டும் தாயானாய்
நான் வாலாட்டும் நாயானேன்
இப்படி சந்தர்ப்பவாதமாகப்பேசி கடைசி"வரை வளமாக வாழ்ந்தார்
,.......
தியாகராஜபாகவதரும் இப்படி நடந்து கொண்டிருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம்
அம்பிகாபதி படத்தில் நாயகனாக நடித்தவர் அவர். பிற்காலத்தில் அதே படம் சிவாஜியை நாயகனாக வைத்து எடுக்கப்பட்டது. அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க கோரி அவரை அணுகினர்.
நான் நாயகனாக நடித்த கதையில் சிறு வேடத்தில் நடிக்க மாட்டேன் என சுயமரியாதையுடன் மறுத்துவிட்டார். அவர் நாயகனாக நடித்தபோது பெற்ற ஊதியத்தைவிட அதிகம் தர முன்வந்தும் ஏற்கவில்லை
சந்திரபாபு என்ற அருங்கலைஞனும் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசியதால் வறுமைக்கு ஆளானார்
அந்த கட்டுரையில் வரும் சாவித்திரியும் இளங்கோவனும் சுயமரியாதைமிகு கலைஞர்கள்
அவர்கள் வரலாற்று நாயகர்கள். வாலியோ வறுமைக்கு அஞ்சி சந்தர்ப்பவாதி ஆகி விட்டார்.
இன்று திமுகவைப் பாராட்டினால் ஊடக வாய்ப்புகள் , பிஜேபியைப் பாராட்டினால் அரசு விருதுகள் என்ற தற்கால சூழலில் பெரும்பாலான படைப்பாளிகள் திமுக அல்லது பிஜேபி சார்பு நிலைக்கு சென்று விட்டனர் கைமேல் பலனும் பெறுகின்றனர்.
ஆனால் உண்மையான"படைப்பாளிகளுக்கு பாரதியின் இவ்வரிகளே வேதம்
பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
− பாரதியார்
பாராட்டினால் அரசு விருதுகள்////...எஸ்.ரா, இமையம் போன்றோர் அப்படிதான் விருது பெற்றனரா? திமுக தொடர்பாக நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் பிந்தைய கருத்து பிழையானது
ReplyDeleteஎஸ்ரா , இமையம் போன்றோர் மிகச்சிறந்த படைப்பாளிகள். விருதுகளுக்குத் தகுதியானவர்கள். இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இமையம் வெளிப்படையாகவே திமுக ஆதரவாளர். ஆனாலும் நாளை தமிழக அரசு அவருக்கு வழங்கினால் அதை அரசியலாக்குவது தவறு. காரணம் விருதுக்காக அவர் அரசியலில் இல்லை. ஆனால் வாலி அப்படி அல்ல. சில ஆதாயங்களுக்காகவே அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தார். அந்த சந்தர்ப்பவாதத்தை மறந்து விட்டால்,வாலி மிகச்சிறந்த கவிஞர்தான்
Delete