சில பாடல்களின் பொருள் நமது வாசிப்பால் புதிதாக ஒரு பொருளைத்தருவதுண்டு
கீழ்க்கண்ட பாடலைப்பாருங்கள். அப்பர் ( திருநாவுக்கரசர் ) தேவாரப்பதிகம்
வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே
ஐந்து கள்வர் ஒரு ஆமையைப்பிடித்து நீரில் போட்டு அடுப்பிலேற்றினர். சற்று நேரத்தில் சாகப்போகிறோம் என்பதறியாது, அவ்வாமை இதமான சூட்டின் வெதுவெதுப்பை முட்டாள்தனமாக ரசித்து மகிழ்ந்தது. அது"போன்ற முட்டாளாக நானும் இருக்கிறேனே.. ஐந்து புலன்கள் தரும் உலகின்பத்தை நிலையென ரசித்து மகிழ்ந்து வரப்போகும் மரணம் குறித்த அறிவின்றி இருக்கிறேனே என்பது மேலோட்டமாக நமக்குத் தெரியும் பொருள்
ஆனால் உள்ளார்ந்த பொருள் வேறு
ஆமை ஒன்று குளிரில் உறைந்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறது
அப்போது ஒருவன் அதைப்பாரத்து, சமைத்து தின்ன முடிவெடுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தில் அதைப் போட்டு அடுப்பிலேற்றினான்
அந்த வெப்பத்தால் ஆமைக்கு உணர்வுகள் திரும்பின. உயிர் வந்தது. மகிழ்ந்தது
சில நிமிடங்கள் முன் ஒரு ஜடம். அதில் விழிப்புணர்வில்லை
சில நிமிடங்களுக்குப்பிறகு மரணம் . அதிலும் விழிப்பில்லை
இதோ ..கிடைத்திருக்கும் இந்த கணங்கள்தான் வாழ்வின் உச்சம். அதை உணர்ந்து நீருக்கு அடுப்புக்கு தனக்கு வாழ்வு தந்தவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கும் தெளிவின்றி , மரணத்துக்கு வருந்தி கிடைத்த கணத்தை வீணாக்கும் மூடனாக அது இருந்தால் அது எப்படி இருக்கும்..
நான் அப்படி இருந்துவிடலாகாது.. உலக வெற்றிகளுக்கு சராசரி இன்பங்களை துறந்து வறண்ட வாழ்க்கை வாழந்தால் ஆமை குளிரில் இறப்பது போல் ஆகிவிடும்
உலக இன்பங்களில் திளைத்து அதையே பெரிதென நினைப்பின் கொதிநீரில் வெந்து அவிந்த ஆமை நிலை வந்து விடும்
துறத்தல் திளைத்தல் இரண்டுக்குமிடையே ஒரு நடுநிலையை பேணும் ஞானம் வேண்டும் என்ற பார்வையையும் இப்பாடல் அளிக்கிறது
அருமையான பார்வை.... பற்றில்லாத் தன்மை கடினமானது...ஆனால் நம்மால் பின்பற்ற முடியும் என நம்புகிறேன்.
ReplyDeleteஇதேபோல் எனக்கு தோன்றிய ஒரு குறளை பகிர்ந்து கொள்கிறேன்.
*நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.*
பொருள்:
ஆவியாகும் கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
அதே போல, மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
வேறு ஒரு வகையில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
பெருங்கடலானது தனது தன்மையை இழந்து சற்று வேதனையை அனுபவித்து ஆவியாகி திரும்பவும் மழையாகி உயிர்களை உய்விக்கிறது.
அது போல தன்னை இழந்து வேறு ஒரு பரிமாணத்தில் செய்யப்படும் எந்த பணியும் அனைத்து உயிர்களுக்கானது
அற்புதமான சிந்தனை மனப்பூர்வமான நன்றி.. இதுபோன்ற ஆரோக்யமான விவாதங்கள் நடக்க வேண்டிய இணையத்தை சிலர் வீணடிப்பது வருந்தத்தக்கது
ReplyDeleteநன்றி ஐயா... தங்களின் எழுத்து கற்றுத் தருகிறது.
Delete